PUBLISHED ON : செப் 29, 2013

அந்த இளவயது தாய்க்கு, வயது, 28-29 இருக்கும். இரண்டு குழந்தைகள். காதல் திருமணம் - பெற்றோர் சம்மதத்துடன்! கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார்.
அவ்வப்போது, அலுவலகம் வந்து சந்திப்பார். கம்ப்யூட்டர் பற்றிய லேட்டஸ்ட் சமாசாரங்கள், தான் பார்த்த வெப்சைட்டில் கிடைத்த, சுவையான தகவல்களை, என்னுடன் பகிர்ந்து கொள்வார்.
கடந்த வாரம், என்னை சந்திக்க வந்தபோது, மிக சோகமாகக் காட்சியளித்தார். 'என்ன விஷயம்?' என விசாரித்தபோது, தன் கணவரைப் பற்றி குற்றப் பத்திரிகை வாசித்தார். அவரது கணவருக்கும், திருமணமாகாத இளம் பெண் ஒருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு, இவர் முன்னிலையிலேயே, அப்பெண்ணுடன் மொபைல் போனில், காதல் மொழிகளை, தன் கணவர் பேசுவதாகக் கூறி, வருத்தப்பட்டார்.
அந்த சோகக் கதை ஒரு பக்கம் இருக்கட்டும்... தான் விசிட் செய்த வெப்- பேஜ் ஒன்றில் கிடைத்த உபயோகமான தகவல் ஒன்றை, 'பிரின்ட் - அவுட்' போட்டு எடுத்து வந்திருந்தார்.
அதில் இருந்த தகவல், 'தண்ணீரை மருந்து' எனக் கூறியது. இதோ அந்தத் தகவல்கள்...
ஆறு டம்ளர், 1.5 லிட்டர், சுத்தமான தண்ணீரை தினசரி குடித்தால், டாக்டர், பரிசோதனை, மருந்து, மாத்திரை, ஊசி எதுவுமே தேவையில்லை... வியாதிகள் பறந்தோடி விடும். நீங்களே சுயபரிசோதனை செய்து கொண்டாலன்றி, இதை நம்பமாட்டீர்கள்...
'வாட்டர் தெரபி' எனப்படும், இந்த சிகிச்சை முறையால், தலைவலி, ரத்தக் கொதிப்பு, ஹைபர் டென்ஷன், ரத்தசோகை, மூட்டு வலி, தசைவலி, தலை கிறுகிறுப்பு, இருமல், ஆஸ்துமா, நெஞ்சுச் சளி, டி.பி., மெனிஞ்சிட்டீஸ், சிறுநீரகக் கல், அசிடிட்டி, வாயுத் தொல்லை, சீதபேதி, மலச்சிக்கல், சர்க்கரை வியாதி, கண்நோய், மாதவிடாய் பிரச்னைகள், வெள்ளை அணு குறையும் பிரச்னை, பெண்களின் கர்ப்பப்பை, மார்பகப் புற்றுநோய் என, மொத்தம் 31 வியாதிகளைக் குணப்படுத்த முடியும்.
அதிகாலையில் எழுந்தவுடன் பல் விளக்காமல், முகம் கழுவாமல், 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும். எத்தனை கிளாஸ் தண்ணீர், 1.5 லிட்டர் ஆகும் என்பதை, முன்னமே அளந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த சிகிச்சை முறையை, 'உஷா (அதிகாலை) பான சிகிச்சை' எனப் பெயரிட்டு அழைத்துள்ளனர் நம் முன்னோர்.
ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடித்து முடித்தபின் தான் பல் விளக்கி, முகம் கழுவ வேண்டும்.
தண்ணீர் குடிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னும், பின்னும் ஜூசோ, வேறு எந்த உணவோ சாப்பிடக் கூடாது.
முந்தைய இரவில், 'தண்ணி' அடித்திருந்தால் இந்த சிகிச்சையை மேற்கொள்ளக் கூடாது.
உங்கள் ஏரியாவில் சுத்தமான குடிநீர் கிடைக்கவில்லையென்றால், நீரைக் காய்ச்சி வடிகட்டி பயன்படுத்தலாம்.
எல்லாம் சரி... ஒன்றரை லிட்டர் தண்ணீரை, ஒரே நேரத்தில் குடிக்க முடியுமா என்ற சந்தேகம் வருகிறது அல்லவா... குடிக்க முடியும்! இரண்டு, மூன்று நாட்கள் திண்டாட்டமாகத்தான் இருக்கும். ஆனால், 'சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்' என்பதுபோல், பழக, பழக சுலபமாகி விடும்.
ஆரம்பத்தில், நான்கு கிளாஸ் தண்ணீரை அடுத்தடுத்து குடியுங்கள். இரண்டு நிமிடம், இடைவெளி விட்டு, மீதமுள்ள இரண்டு கிளாசை குடியுங்கள்.
இவ்வளவு தண்ணீரையும் குடித்தபின், ஒரு மணி நேரத்துக்கு இரண்டு, மூன்று முறை சிறுநீர் கழிக்க வேண்டியதிருக்கும்... கொஞ்ச நாட்களுக்குப் பின், சகஜ நிலை வந்து விடும்.
சோதனை செய்து பார்த்ததிலும், பயிற்சி செய்ததிலும் கீழ்க்கண்ட வியாதிகள் எத்தனை நாட்களில் குணமாகி உள்ளன என்று, கண்டறியப்பட்டுள்ளது...
* மலச்சிக்கல் — ஒரு நாள்
* அசிடிட்டி — இரண்டு நாள்
* சர்க்கரை நோய் — ஏழு நாள்
* ரத்தக்கொதிப்பு, ஹைபர் டென்ஷன் — நான்கு வாரம்.
* கேன்சர் — நான்கு வாரம்.
* டி.பி., — மூன்று மாதம்.
ஆர்த்தரிட்டீஸ், ருமாட்டிசம் நோய் உள்ளவர்கள், காலை, பகல், இரவு என, மூன்று வேளையும், உணவுக்கு ஒரு மணி நேரம் முன், ஒரு வாரம் இச்சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். பின்னர், காலை, இரவு என, இருவேளை மட்டும் மேற்கொள்ள வேண்டும்.
இந்த சிகிச்சை, மனித உடலை சுத்தப்படுத்துகிறது. புதிய ரத்தம் உடலில் உற்பத்தியாக உதவுகிறது. இதற்கு ஆங்கில மருத்துவத்தில், 'ஹெமட்டோ போயிசிஸ்' என்கின்றனர். இந்த சிகிச்சை பெருங்குடலை சுத்தப்படுத்தி, நன்மை பயக்கிறது. சுத்தமான ரத்தமே நோய்களை குணப்படுத்தி, மனிதனை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
— இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
'அலோபதி டாக்டர்கள், ஒருவருக்கொருவர் தமக்குள்ளே ஒத்துப் போக மாட்டார்கள்... அவர்களிடம் இருந்து, அர்ச்சனை கிடைக்கப் போகிறது உனக்கு...' என, இதைப் படித்து பார்த்த லென்ஸ் மாமா கூறினார்.
ஆப்ட்ரால் தண்ணீர் தானே... செலவு கிடையாது; முயற்சித்துப் பாருங்களேன் — பலன் தெரிந்தால், எனக்கு எழுதுங்களேன்!
***
'அயல்நாடுகளில், குறிப்பாக, அரபு நாடுகளில் - சமஸ்கிருதத்தின் பெருமையைப் புரிந்து, அதற்கு முஸ்லிம்கள் செய்த சேவை, ரொம்ப பாராட்டத்தக்கது. ஆனால், இந்தத் தொடர்பு இந்தியாவில் முஸ்லிம்களின் ஆட்சி நின்றதோடு அற்று விட்டது...' என்றார் குப்பண்ணா.
'முஸ்லிமும், சமஸ்கிருதமுமா? அப்துல் காதருக்கும், அமாவாசைக்கும் ஏதோ சம்பந்தப்படுத்துகிறீரே...' என்றேன்.
'இல்லை இல்லை... நான் சொல்வது உண்மை தான். அந்த சரித்திரம், ரொம்பப் பேருக்குத் தெரியாது. சமஸ்கிருத இலக்கியத்தில், 'இதோபதேசம்' (பஞ்ச தந்திர கதைகள்) என்னும் பெயர் பெற்ற நூலை, 'குலைலா திம்னா' என்ற பெயரில் அரபு மொழியில், அப்துல்லா மாக்பா என்பவர் மொழி பெயர்த்திருக்கிறார். இவர் பாக்தாத் காலிபின் ஆஸ்தானப் புலவராக இருந்தவர். இதே நூலை, கி.பி. 1400ல், அபுல் மவுல்வி என்பவர் பாரசீக மொழியில் மொழி பெயர்த்தார்.
'கஜினி முகமதுவைப் பற்றி சமஸ்கிருதத்தில் காலிங்க அரசன் புகழ்ந்து எழுதிய, செய்யுள் நூலை, முதலில் பாரசீக மொழியில் மொழி பெயர்த்தனர். ஆனால், கஜினி முகமது, அடுத்த முறை போரிட வந்த போது, இந்த அரசனின் கோட்டையை முற்றுகையிட்டான். ஓடி ஒளிந்து கொண்டான் அரசன். ஆனால், அவன் எழுதிய காவியத்தை படித்து ரசித்தான் கஜினி முகமது. அதனால், அந்த அரசனுக்கே கோட்டையை விட்டுக் கொடுத்து விட்டுச் சென்றான்.
'புகழ் பெற்ற சரித்திர ஆசிரியரும், ஜோதிடருமான அல்பர்னியா, சமஸ்கிருதம் பயில்வதற்காக, முல்தானில் 16 வருடங்கள் தங்கினார். அந்தக் காலத்தில் முல்தான், சமஸ்கிருத வித்யாகேந்திரமாக இருந்தது.
'அலாவுதீன் கில்ஜி காலத்தில், அஸ்ஸாமை சேர்ந்த முஸ்லிம் ஸுபிகளில் ஒருவர், கவுமாரர் எழுதிய, 'அமரகுண்டம்' என்ற, சமஸ்கிருத நூலை, பாரசீக பாஷையில் மொழி பெயர்த்தார். அதன் கையெழுத்துப் பிரதியான, 'பஹ்ருல் ஹயாத்' இப்போதும் அகமதாபாத்தில் உள்ள ஹஸ்ரத் பீர் முகமது ஷாவின் புத்தக சாலையில் இருக்கிறது.
'முகமது பின் துக்ளக்கின் ஆட்சிக் காலத்தில், 'கோகசேதி' என்னும் வடமொழி நூலை, 'டூட்டி நாமா' என்னும் பெயரில், மொழி பெயர்த்தனர்.
'அக்பரின் காலத்தில், 'சதாலங்கார சிம்ஹாசனபதிசீ' என்னும் பிரபலமான வடமொழி நூலின் மொழி பெயர்ப்பு வேலை நடந்தது. அக்பருடைய தர்பாரில் இருந்த, க்வாஜா ஸுசேன் என்பவர், இவற்றைக் காவிய வடிவில் பாரசீக மொழியில் மொழி பெயர்த்தார். ஆனால், வேலை முடிவதற்குள் அவர் இறந்து விட்டார். முல்லா அப்துல் காதர் பதினி, மீதிப் பகுதியை, வசன ரூபத்தில் இயற்றி முடித்தார்.
'அதர்வண வேதத்தை, பாரசீகத்தில் மொழி பெயர்த்தார் ஷேக் பதன் என்பவர். இவர் பிறப்பால் பிராமணராக இருந்து, பிறகு இஸ்லாத்துக்கு மதம் மாறியவர். பிரசித்தி பெற்ற, 'லீலாவதி' என்ற கணித நூலை, பாரசீக மொழிக்கு மாற்றினார் அப்துல் பைஜீ.
'நசாப்கான், மவுலானா அப்துல் காதர் பதினி, ஷேக் சுல்தான், தானேசரி ஆகிய நான்கு புலவர்கள் மேற்பார்வையில், ராமாயணத்தை, பாரசீகத்திற்கு மொழி மாற்றம் செய்தனர்.
'இன்னும் சமஸ்கிருதம் கற்ற முகமதிய பண்டிதர்கள் பலர், இரு மொழிகளிலும், உழைத்து, சேவை செய்திருக்கின்றனர். உபநிஷத்தையும், பாரசீகத்திற்கு மொழி மாற்றம் செய்தனர்...' என்று கூறி முடித்தார் குப்பண்ணா.
***
