
'பி.எம்.ஜெ., - பிரிட்டிஷ் மெடிக்கல் ஜெர்னல்' - உலகின் பல நாட்டு மருத்துவர்களின் சாதனைகள், கீதை, குரான், பைபிளில் காணப்படும் மருத்துவ குறிப்புகள், மருத்துவத் துறையின் புதிய கண்டுபிடிப்புகள், ஆய்வுகள், மருத்துவர்கள் சந்தித்த சவால்கள், அவற்றை எதிர்கொண்டு ஜெயித்த முறை என, மருத்துவர்களுக்கு தேவையான அனைத்தும், இந்த இதழில் இருக்கும்.
அதில், குறிப்பிடப்பட்டுள்ள ஒரு சர்வே பற்றி, விலாவாரியாக கூறினார் டாக்டர் நண்பர் ஒருவர். ஆய்வு நடத்தப்பட்ட, 21 வயதுக்குப்பட்ட பெண்களில், பாதிக்கும் மேற்பட்ட பெண்கள், பருவமடைந்த, வெகு சீக்கிரத்திலேயே, தமது, கன்னித் தன்மையை இழந்தது குறித்து, வருந்துகின்றனர். இதில், 16 வயதுக்கு முன், கன்னித் தன்மையை இழந்ததால், மூன்றில் இரண்டு பங்கு பேர் வருந்துகின்றனர். ஆனால், இதே காலக்கட்டத்தில், உள்ள ஆண்களில் ஆறு பேருக்கு, ஒருவர் என்ற விகிதத்தில், வருந்துகின்றனராம்.
'அது என்ன?' எனத் தெரிந்து கொள்வதில் இருந்த ஆர்வமே, பொதுக் காரணமாக, பெரும்பாலும், இருபாலரும் கூறியுள்ளனர்.
பெண்கள், தம் கன்னித் தன்மையை, பெரும்பாலும், 16 வயதினிலும், ஆண்கள் 17 வயதிலும் இழந்துள்ளனராம். மேலே சொன்ன கணக்குகளெல்லாம், காதலர்களுடையது அல்ல; காதல், கீதல் எல்லாம் கிடையாது... பள்ளித் தோழி, அடுத்த வீட்டுப் பெண், பக்கத்துத் தெரு சிறுவன்... இவர்களுடையது.
நிஜமாகவே, ஒருவரை ஒருவர் ஆழமாகக் காதலிப்பவர்களில், 16 சதவீதம் ஆண்கள், 'காதலே எங்கள் கற்பு பறி போனதற்குக் காரணம்...' எனக் கூறுகின்றனராம்.
'உணர்ச்சி மேலீட்டால், 'தப்பு' செய்து விட்டோம்...' என, 13 சதவீத பெண்களும், ௬ சதவீதம் ஆண்களும் கூறியுள்ளளனர்.
போதை தான், முதன் முதலாக கன்னித்தன்மை இழந்ததற்கு காரணமாக அமைந்தது என, 10 சதவீதம், இருபாலரும் கூறியுள்ளனர்.
எதை இழக்கப் போகிறோம் என்பதை, நன்கு அறிந்து, தம் சுய உணர்வுடன், கன்னித் தன்மையை இழந்ததாக, 14 சதவீதம் ஆண்களும், 5 சதவீதம் பெண்களும் கூறியுள்ளனர்.
ஆண்களை விடப் பெண்களே, தம் தோழியரின் நடத்தையால், அதிக அளவு பாதிப்படைந்துள்ளனர். 6 சதவீத ஆண்களும், தம் நண்பர்கள், 'இதில்' ஈடுபடுகின்றனரே... நாம் ஏன் கூடாது என்ற எண்ணத்தில் விழுந்ததாகக் கூறியுள்ளனர்.
-இவற்றை லென்ஸ் மாமாவிடம் கூறி, 'நம் நாடு எவ்வளவோ பரவாயில்லை...' என்றேன்.
'அட, போப்பா... நம்ம நாட்டில் இது போன்ற, 'சர்வே'க்கள் நடத்தப்படவில்லை. நடத்திப் பார்க்கட்டும்... அப்புறம், 'பரவாயில்லை'ன்னு சொல்லு...' எனக் கூறி, என் வாயை மூடினார்.
அந்த அன்பரை, மிக நீண்ட காலத்திற்குப் பின், பொது நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்தேன். ஒரு காலத்தில், மிக நெருக்கமாக இருந்தவர் தான்... அவரின் செயல், போக்கு எனக்கு ஒத்து வராமல் போனதால், ஒதுங்க ஆரம்பித்தேன்.
அவரது தோற்றம், டோட்டலாக மாறிப் போயிருந்தது. காவி மேல் சட்டை, கழுத்தில் ருத்ராட்சக் கொட்டை, நெற்றியில் பட்டை, கன்னங்களில் தாடி என காட்சியளித்தார். விசாரித்ததில், இந்து இயக்கம் ஒன்றில், அவர் ஐக்கியமாகி விட்டது தெரிய வந்தது.
நைசாக ஒதுங்கி, வெளியே வந்தேன்... அந்த சந்திப்பு நடந்து இரண்டு, மூன்று தினங்களாகி இருந்தாலும், அவர் அணிந்திருந்த ருத்ராட்சக் கொட்டை, ஏனோ, என் கண் முன் வந்து கொண்டே இருந்தது.
அதைப் பற்றி தெரிந்து கொள்ள நடுத்தெரு நாராயணனை அணுகி, விபரம் கேட்டேன்...
அவர் சொன்னார்:
ருத்ராட்சம் என்றதும் அனைவருக்கும், சிவனும், சிவனடியார்களும் தான் நினைவுக்கு வருவர். ருத்ராட்ச கொட்டையும், விபூதிப் பட்டையும் சிவனடியார்களின் சின்னங்கள்; ஆனால், அதன் அருமை, பெருமைகளை அறிந்தவர்கள் சிலரே!
சிவனுறையும் கைலாசம் எனும் இமயமலைப் பகுதிகளில் மட்டுமே இது விளைகிறது. காட்டுப் பயிரான இது, தோட்டமிட்டு வளர்க்கப்படுவதில்லை.
ஆதிகாலத்தில், முனிவர்கள் மட்டுமே இதை அறிந்து, பயன்படுத்தி வந்தனர். மூலிகை வகையைச் சேர்ந்த ருத்ராட்சம், மனிதர்களுக்கு மன அமைதியை வழங்குகிறது. மூச்சுக் கோளாறு, மூட்டு வலி, தூக்கமின்மை, மன உளைச்சல் ஆகியவற்றிலிருந்து குணமளிக்கிறது.
மோக இச்சை, துறவறம் மேற்கொண்டவர்களுக்கு, உணர்ச்சி ஏற்படாமலிருக்கவே ருத்ராட்ச மாலைகளை அணிந்தனர். ஆண்மை உணர்வை ருத்ராட்சம் குறைத்து விடும். இதனால், இதைக் குடும்ப வாழ்வில் ஈடுபட்டிருப்போர் அணியலாகாது; சிறு குழந்தைகளும், முனிவர்களும் அணியலாம்.
ருத்ராட்சக் கொட்டைகளை, இரவில், செப்புப் பாத்திரத்தில், தண்ணீரில் ஊற வைத்து, காலையில், வயிற்று கோளாறு உள்ளவர்கள், அந்த நீரை அருந்த, அனைத்துக் குறைபாடுகளும் நீங்கும்.
ருத்ராட்சத்தை, 24 நாட்கள் நல்லெண்ெணயில் ஊற வைத்து, பின், அந்த எண்ணெயை, மூட்டுப் பகுதிகளில் தேய்க்க, மூட்டு வலி பூரண குணமாகும்.
ஏட்டுச் சுவடிகளில், ருத்ராட்சம் முதுமையைத் தவிர்த்து, இளமையைத் தரும் இனிய மருந்து என்று, குறிப்பிடப்பட்டுள்ளது.
உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதயக் கோளாறுகளை ருத்ராட்சம் குணப்படுத்துகிறது.
பித்தம், கபம், வாத குணங்களைக் கட்டுப்படுத்தவும், பெண்களின் மாதவிடாய் பிரச்னைகளை குணப்படுத்தவும் ருத்ராட்சத்திலிருந்து, ஆயுர்வேத மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.
சீனாவின் அக்குபஞ்சர் முறையும், ருத்ராட்சமும் ஒரே வகையைச் சேர்ந்தவை. இவை இரண்டுமே, மனித நரம்புகளை தூண்டி புத்துணர்ச்சி அளிக்கிறது என்று, மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ருத்ராட்சத்தில், 38 வகைகள் உள்ளன. 'ஒரு முக ருத்ராட்சம்' என்பது, உயர் வகையைச் சேர்ந்தது. வட மாநிலத்தவர் குடும்பங்களில், தங்கள் மூதாதையர் பயன்படுத்திய ருத்ராட்ச மாலைகளை, பூஜையில் வைத்து காலம், காலமாகப் போற்றி வருகின்றனர்.
ஒரு முக, மூன்று முக, நான்கு முக, ஐந்து முக, ஆறு முக, ஏழு முக ருத்ராட்சம் என்று, பல வகைகள் உள்ளன.
நவமுக ருத்ராட்சம் எதிரிகளை வீழ்த்தி, வெற்றியைத் தரும் என்று சொல்லப்படுகிறது. வழக்குகளில் வெற்றி பெற, இந்த வகை ருத்ராட்சத்தை அணிந்து கொள்வர் சிலர்.
ருத்ராட்சங்கள் பல வண்ணங்களில் கிடைக்கின்றன... சிவப்பு, இளஞ்சிவப்பு, மஞ்சள் ஆகிய வண்ணங்களில் காணப்படும் இவற்றை, அமாவாசை, பவுர்ணமி, சூரிய, சந்திர உதயம் இவற்றை ஆதாரமாகக் கொண்டு, அவற்றுக்கு ஏற்றபடி, துறவிகள் அணிகின்றனர்.
பூமிக்கும், மோட்ச உலகிற்கும் இடையிலான தொடர்பு சாதனமாக, சாமியார்கள், ருத்ராட்சத்தை நம்புகின்றனர்.
ருத்ராட்சங்களில், தரக்குறைவானவைகளும் உண்டு. இவற்றை அணிவதால், முழுமையான பலன் கிடைப்பதில்லை. தரமற்ற ருத்ராட்சங்களை எப்படி கண்டறிவது? இதை தண்ணீரில் போட்டால் மிதக்கும்; தரமானவை - நீரில் அமிழ்ந்து விடும். தரமற்றவை எளிதில் விரிசல் விட்டு விடும்; உயர்ந்த வகை, விரிசல் விடாது.
இந்தியாவிலிருந்து ருத்ராட்ச மாலைகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகிறது...
-இப்படி ஒரு பெரிய விளக்கம் கொடுத்தார்... ருத்ராட்சத்தின் அவசியம் எனக்கில்லை என்பது, புரிந்து போனது.

