
'மணி, இங்க பாரு...பாரு...' என, பீச் மணலைக் காட்டி, அவசரப்படுத்தினார் லென்ஸ் மாமா... 'சட்'டெனத் திரும்பிப் பார்த்தேன். மாமா காட்டிய திசையில், 16 வயது மதிக்கத்தக்க சிறு பெண்... அவள் தோளை அணைத்தபடி, அவளை விட இரண்டு வயது பெரிய இளைஞன் ஒருவன்.
அந்த சிறு பெண், வெட்கத்துடன் தலையைக் குனிந்து, சுரிதாரின் மேல் துணியால், தன் முகத்தை பாதி மறைத்து, (தெரிந்தவர் கண்ணில் பட்டுவிடக் கூடாதாம்!) கால்கள் பின்ன, நடந்து சென்று கொண்டிருந்தாள். கையில், பைல் ஒன்றும் இருந்தது. கம்ப்யூட்டர் கிளாஸ், அந்த கிளாஸ் இந்த கிளாஸ் என, ஏதாவது ஒன்றைச் சொல்லி, வீட்டை ஏமாற்றி விட்டு வந்திருப்பாள் போலும்...
'அலையுதுங்க... இந்த வயசுலேயே என்ன காதல், கத்திரிக்கா எல்லாம்... அவ்ளோ அவசரமுன்னா, வீட்டிலே சொல்லி, கல்யாணம் கட்டிக்க வேண்டியது தானே...' என்றார் லென்ஸ் மாமா.
மாமாவின் கமென்ட்டைக் கேட்ட, பெரியசாமி அண்ணாச்சி, 'யோவ்... லென்ஸ்... 16ல், திருமணம் செய்யுறதெல்லாம், நம்ம காலத்தோட முடிஞ்சு போச்சு...' என, ஆரம்பித்து, தொடர்ந்து ஒரு, 'லெக்சர்' கொடுத்தார்...
'பதினாறும் நிறையாத பருவ மங்கை காதல் பசியூட்டி, வசமாக்கும் ரதியின் தங்கை'ன்னு ஒரு சினிமா பாட்டு கேட்டு இருக்கீருல்லா... கா.மு.ஷெரீப் எளுதுன பாட்டு. 16 வயது பசியூட்டினாலும் சரி; ருசியூட்டினாலும் சரி; அந்த வயதுப் பொண்ணை கட்டுனா, உள்ளே தள்ளிடுவாங்க. பொண்ணுக்கு கல்யாண வயது 21ன்'னு எல்லா ஆட்டோவிலேயும் எளுதி இருப்பதை பார்த்திருப்பீருல்ல...
நம்ம நாட்டுல, 'பால்ய விவாக' வழக்கம் முன்பு இருந்துச்சுல்ல... இந்த பால்ய விவாகத்துல சீர்திருத்தத்தை ஏற்பாடுத்தணுமுன்னு, 1925ல் ராய் சாகோப்பு அரி பிலால் சாரதாங்கற பெண் எம்.பி., இந்த பால்ய விவாகத்துல சீர்திருத்த சட்டம் கொண்டு வந்தாங்க. அந்தம்மா பேராலயே சாரதா சட்டமுன்னு வச்சுட்டாங்க...
இந்தச் சட்டம் போடுறதுக்கு முன்னெல்லாம், பொட்டப் புள்ளகளுக்கு கொடுமல்லா நடந்திச்சு... பொட்டப்புள்ள குந்துறதுக்கு முன்னாலயே வெதவ ஆன கொடுமல்லப்பா நடந்துச்சு. சில இடத்துல, வயசுக்கு வராத சின்னப் புள்ள, தாம்பத்தியத்துக்கு கட்டாயப்படுத்துனதுனாலே, பொட்டப் புள்ள பலதும், செத்துப் போவுமுல்லா... பொறவு தான், 'சம்மத வயது சட்ட'முன்னு கொண்டு வந்தாங்க. பத்து வயசுக்குள்ளாற இருக்கற பொண்டாட்டிய, பலவந்தம் செய்யும் கணவனுங்க, தண்டிக்கப்படுவாங்கன்னு சட்டம் சொல்லிச்சு. பொறவு, பத்து, பன்னெண்டாச்சு... 12ம் அப்புறம் பதிமூணாச்சு...
பதிமூணு வயசுக்குள்ளாற உள்ள பொட்டப்புள்ளய, கல்யாணம் பண்ற, 18 வயசுக்காரனுக்கு, பதினைஞ்சு நாள் சிறை தண்டன; 23 வயசுக்குள்ள இருக்கற ஆம்பளைக்கு மூணு மாசம்; சின்னப் புள்ளையல கல்யாணம் செஞ்சுவக்கிறவங்க ஆம்பளயா இருந்தா, மூணு மாச சிறைத் தண்டனையும், அதோட, ஆயிரம் ரூவா அபராமுன்னு சாரதா சட்டம் போட்டாங்க...' என்றார் அண்ணாச்சி.
ஆனாலும், இந்தியாவின் தமிழ்நாடு உட்பட, பல மாநிலங்களில், பால்ய விவாகம் நடை பெற்று கொண்டு தான் இருக்கிறது.
கம்ப்யூட்டர் உலகம் என்று, பெருமை பேசிக் கொண்டிருக்கிறோம்; ஆனால், உண்மை நிலையோ...
சமீபத்தில், ஒரு அதிரடி புத்தகம் படித்தேன். ஆங்கிலப் புத்தகம் என்பதால், அவ்வப்போது, அர்த்தம் சொல்லி விளக்கினார் லென்ஸ் மாமா. புத்தகத்தின் விலை, ஆயிரம் ரூபாய். விலையைப் போலவே, உள்ளே இருந்த விஷயங்களும் மலைப்பை ஏற்படுத்தின.
புத்தகத்தின் பெயர்: சகியானி. பழங்காலம் மற்றும் இன்றைய இந்தியாவில், 'லெஸ்பியன்' - ஓரினச் சேர்க்கை பற்றிய ஆராய்ச்சி புத்தகம்!
பெண்களுக்குள் நடக்கும், 'விவகாரத்தின்' ஆங்கிலப் பெயர் தான், 'லெஸ்பியன்!'
அமெரிக்காவிலும், கனடாவிலும், 'ஹோமோ செக்ஸ்' ஆட்களுக்கென்றே தனி ஊர்களும், அச்சகங்களும், புத்தக கடைகளும் உண்டு. அவர்களுக்கு என்றே, தனி டெலிபோன் டைரக்டரியும் உண்டு என்றால், பார்த்துக் கொள்ளுங்களேன்! (அதற்கு அங்கே, 'பிங்க் பேஜஸ்' என்று பெயர்).
இந்த புத்தகத்தை எழுதியிருப்பவர், கீதி தடானி என்ற இந்தியப் பெண். டில்லியில், 'சகி' என்ற, லெஸ்பியன் சங்கத்தின் தலைவி. இந்தப் புத்தகத்தை, பத்து வருட ஆராய்ச்சிக்குப் பின், எழுதியிருப்பதாகச் சொல்கிறார் தடானி.
அவர் சொல்லும் சில கருத்துகள்: இந்தியாவில், லெஸ்பியன் பழக்கம், வேத காலத்திலிருந்தே இருந்து வருகிறது. ஆனால், அது வெளியே தெரியாமல், தொடர்ந்து, மறை முகமாகவே நடக்கிறது. இதற்கு, இவர், பல பழங்கதைகளை உதா ரணமாக காட்டுகிறார்.
ஆதியில், பெண் கடவுள்கள் மட்டுமே இருந்தனர். பிறகு தான், அப்பெண் கடவுள்களுக்கு, ஆண் கடவுள்களை இணைத்து வைத்தனர் என்றும் கூறுகிறார்.
இதற்கு ஆதாரமாக, பல புராண காலச் சிலைகளையும், சிற்பங்களையும், ஓவியங்களையும் புகைப்படம் எடுத்து, இந்த புத்தகத்தில் இணைத்திருக்கிறார் தடானி.
இரண்டு பெண்கள், ஒருவிதமான போசில் உள்ள சோழற்காலச் சிற்பத்தையும், பல பெண்கள், ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்திருப்பது போன்று காணப்பட்ட ஒடிசாவிலிருந்து கிடைத்த சிற்பம் என, இப்படி பல ஆதாரங்கள்!
மனு சாஸ்திரத்திலிருந்தும் ஒரு ஆதாரத்தை காட்டியுள்ளார்.
ஒரு பெண்ணானவள், 'இதை' மற்றொரு பெண்ணிடம் செய்தால், 200 பணம் அபராதமும், தடியால், பத்து அடிகளும் கொடுக்க வேண்டுமாம்.
ஆகவே, தண்டனை இருந்திருக்கிறது என்றால், அந்த பழக்கமும் இருந்திருக்கிறது என்று தானே அர்த்தம்?
இதை, நான் கேட்கவில்லை; தடானி கேட்கிறார்.
இந்திய குற்றவியல் சட்டத்தின் படி, இந்த லெஸ்பியன் சமாச்சாரத்திற்குத் தண்டனை உண்டு.
ஆனால், இப்போது, 'ஓரினச் சேர்க்கையை தடை செய்யும் இந்திய தண்டனைச் சட்டத்தின், 377வது பிரிவு, அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமைகளை மீறிய செயல். எனவே, அந்தச் சட்டப் பிரிவு செல்லாது...' என, டில்லி ஐகோர்ட் அறிவித்துள்ளது. இதன் மூலம், ஓரினச் சேர்க்கை, சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
புத்தகத்தின் முடிவில், இதன் ஆசிரியரான தடானி, சக, 'சகி'களுக்கும், நமக்கும் ஒரு அறைகூவல் விடுக்கிறார். அதாவது, 'நீங்கள் (சமுதாயம்) எவ்வளவு தான் அடக்கி ஒடுக்கினாலும், 'லெஸ்பியன்' விஷயத்தில், எங்கள் உரிமையைப் பறிக்க முடியாது...' என்று. லென்ஸ் மாமா படித்துக் காட்டியதும், எனக்கு தலை சுற்றுவது போலிருந்தது.

