
சமீபத்தில், அமெரிக்காவிலிருந்து வாசகி ஒருவர் கடிதம் எழுதி இருந்தார். இ-மெயில் பெருகி விட்ட இந்தக் காலத்தில், பேப்பரில் எழுதி, அஞ்சல் உறையிலிட்டு, ஸ்டாம்ப் ஒட்டி அனுப்பி இருக்கிறாரே என, ஆச்சரியப்பட்டு, கடிதத்தைப் படித்தேன்...
டியர் அந்துமணி,
நான் பல ஆண்டுகளாக உங்கள் எழுத்துகளின் தீவிர ரசிகை. இப்போது, அமெரிக்கா வந்தும், 'நெட்' மூலமாக, தொடர்ந்து, பா.கே.ப.,வைப் படித்து வருகிறேன். என்னை உங்களுக்குத் தெரியாவிட்டாலும், உங்களை, என் உற்ற தோழனாகவே மதித்து, இக்கடிதத்தை எழுதுகிறேன்.
நான் தமிழ்நாட்டில், கல்லூரியில் படிக்கும் போது, சக மாணவர் ஒருவர் என்னை காதலித்தார். முதலில் நான் அதற்குச் சம்மதிக்கவில்லை. பிறகு, நாளாக நாளாக, எப்படியோ என்னை அறியாமலேயே, அவர் காதலை ஏற்றுக் கொண்டேன். ஆனால், படிப்பில், என் கவனத்தை எப்போதுமே சிதற விட்டதில்லை. அதனால், பல்கலைக்கழகத்திலேயே முதலாவதாக வந்து, பாராட்டும், பதக்கமும் பெற்றேன்.
மேலும், அமெரிக்காவில் வேலை கிடைத்து, இங்கே வந்தேன். வருவதற்கு முன், எனக்கும், என் காதலருக்கும் திருமணம் நடந்தது. என்னுடனேயே கணவரையும் அமெரிக்கா அழைத்து வந்தேன். திருமணத்திற்கு முன் வரை என்னை, 'கண்ணே, மணியே' என்று கொஞ்சிக் கொண்டிருந்த என் கணவர், இங்கே வந்ததும், வேறு மாதிரி நடக்க ஆரம்பித்தார். 'வேலையில்லாமல் வீட்டில் இருப்பதால், ஏற்பட்ட தாழ்வு மனப்பான்மையாக இருக்கலாம்; வேலை கிடைத்ததும், சரியாகி விடும்...' என்று நினைத்து, அவருக்கு நானே வேலை தேடினேன்.
வேலையும் கிடைத்தது; ஆனால், துரதிர்ஷ்டவசமாக அந்த வேலையே எனக்கு பிரச்னையாகவும் அமைந்தது. வேலை கிடைக்கும் வரை, என்னை மனதளவில் துன்புறுத்திய என் கணவர், இப்போது, வேலை கிடைத்ததும் உடல் அளவிலும் துன்புறுத்த ஆரம்பித்து விட்டார். தினமும் அடி, உதை தான்.
காரணம்... சந்தேகம். 'எவன் மூலமாக, எனக்கு வேலை வாங்கினாய்? அதற்காக, நீ என்ன கொடுத்தாய்?' இந்தக் கேள்வியை, அவர் என்னிடம் கேட்காத நாளே கிடையாது.
இது மட்டுமல்ல, அலுவலகம் முடிந்த அடுத்த கணம், வீட்டில் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், 'எவனோடு ஊர் சுற்றி விட்டு வருகிறாய்?' என்ற கேள்வி வரும். இன்னும் அசிங்கமாகக் கேட்பார்; எனக்குத்தான் எழுதுவதற்குக் கூச்சமாக உள்ளது.
திருமணம் ஆகிவிட்டால், காதல் காணாமல் போய் விடுமா... திருமணத்திற்கு முன்னும், பின்னும் நான் ஒரே மாதிரி தான் இருக்கிறேன்; ஆனால், அவரிடம் மட்டும் ஏன் இந்த மாற்றம்?
எத்தனையோ முறை, அவரிடம் எடுத்துச் சொல்ல முயற்சி செய்தேன்; அதற்கு அவர் இடம் கொடுக்கவில்லை; எதற்கெடுத்தாலும் அடி, உதை தான்.
இவ்வளவு பிரச்னைக்கும் இடையில், என் துயரத்தை யாரிடமாவது பகிர்ந்து கொள்ளலாம் என்றால், என் பெற்றோர் தமிழ்நாட்டில் உள்ளனர். அவர்களுடன் தொலைபேசியில் பேசலாமே என்று நீங்கள் கேட்கலாம்; அது முடியாது! காரணம், நான் சம்பளம் வாங்கியதும், அதை முழுமையாக அவரிடம் கொடுத்து விட வேண்டும்.
சம்பளத்தில் ஒரு டாலர் குறைந்தாலும், 'என்ன செலவு?' என்று கேட்பார். குடும்ப நிர்வாகம் அனைத்தும் அவர் கையில். மேலும், தமிழ்நாட்டில் தனிமையிலுள்ள பெற்றோரிடம், என் வேதனையைக் கூறி, அவர்களை துன்பப்படுத்த என் மனம் இடம் தரவில்லை.
இப்போது நான் உங்களிடம் யோசனை கேட்கிறேன்... என் கணவரை விவாகரத்து செய்து விட்டு, புதியதொரு வாழ்வைத் துவங்கலாமா?
மற்றொரு முக்கியமான விஷயத்தையும் குறிப்பிட வேண்டும். என் கணவருக்கு அன்பு செலுத்த தெரியாதது போலவே, செக்ஸ் ரீதியாகவும், 'வீக்!' திருமணம் ஆகியும், நான் கன்னியாகவே வாழ்ந்து வருகிறேன்.
நீண்ட கடிதம் என்பதால், உங்களுக்கு இ-மெயிலில் இதை அனுப்பாமல், ரெகுலர் தபாலில், வானஞ்சலில் அனுப்பியுள்ளேன். ஆனால், இதற்கு தங்களின் பதிலை, தபாலில் அனுப்பி விட வேண்டாம் . எனக்கு வரும் தபால்களை பிரித்துப் படிக்கும் பழக்கம் என் கணவருக்கு உள்ளது. எனவே, பதிலை மின்னஞ்சல் மூலம் அனுப்பவும் அல்லது பா.கே.ப.,விலேயே எழுதினால், நான் புரிந்து கொள்வேன்.
- இப்படிப்பட்ட கடிதங்கள், எனக்கு, சமீப காலத்தில், அதிக அளவில் வர ஆரம்பித்துள்ளன; பெரும்பாலும், வெளி நாட்டில் வாழும் பெண்களிடமிருந்து சொல்லி வைத்தது போல், எல்லாக் கடிதங்களும் ஒரே மாதிரியாக உள்ளன. அவை:
1. கணவர் அடிக்கிறார்.
2. தொலைபேசியில் பேசுவதற்குக் கூட பணம் இல்லை.
3. கடிதங்களைப் பிரித்துப் படிக்கிறார்.
அமெரிக்காவில், குழந்தையை பெற்றோர் அடித்து, குழந்தை புகார் செய்தால், பெற்றோருக்கு, சிறை; அதே போல் கணவர் அடிக்கிறார் என்று மனைவி புகார் செய்தால், அடுத்த நிமிடம் போலீஸ் வந்து விடும். அப்படிப்பட்ட நாட்டில் தான், நம் தமிழ்ப் பெண்கள் இவ்வாறு அல்லல்படுகின்றனர்.
'தாலி' சென்டிமென்ட், நம் பெண்களை என்ன பாடுபடுத்துகிறது பாருங்கள்... அதுவும் அமெரிக்காவில், கை நிறைய சம்பாதித்து சுயமாக, தம் காலில் நிற்கும் தகுதி படைத்த பெண்களிடமும்!
*****************
சினிமா நாடக நடிகர் டெல்லி கணேஷ், மிகுந்த நகைச்சுவை உணர்வு கொண்டவர். லென்ஸ் மாமாவும், அவரும் மாலை வேளைகளில் சந்தித்துக் கொண்டனர் என்றால், ஒரே, 'உற்சாகம்' தான்!
அன்றும் அப்படித் தான்...
'ஒயிட் அண்ட் மேக்கே' உற்சாகத்தை தந்து கொண்டிருக்க, ஒரு சம்பவத்தைச் சொன்னார் கணேஷ்...
வெளியூர் ஒன்றில், நாடகம் நடத்திட்டு, நாடகக் கொட்டகையில் இருந்து கிளம்பிக்கிட்டு இருந்தேம்பா... வந்தான், ஒருத்தன்... 'சார்... நீங்க மனோகர் தானே... ஒங்க நாடகம்ன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். நிறைய நாடகங்கள் பார்த்து இருக்கேன் சார்...' என்றான்.
எப்படி இருக்கும் எனக்கு... 'ஆமாம்பா... நான் ஆர்.எஸ்.மனோகரே தான்... தலையில் கிரீடம் வச்சு, ராஜா டிரஸ் போட்டு நடிக்கிற அதே மனோகர் தான்... ஆனா, இப்ப என் கையில வாளும் இல்லே, துப்பாக்கியும் இல்லே...'ன்னேன். ஓடியே போயிட்டான் என்றார்.
'கொல்' என சிரித்த நான், 'ஈகோ' பங்சர் ஆனால், மனிதர்கள் எப்படி நடந்து கொள்கின்றனர் என, நினைத்து, வியந்து கொண்டேன்!