தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : ஏப் 20, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 20, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை வாசகி ஒருவர் வித்தியாசமான சிந்தனையுடன், ஒரு கடிதம் எழுதியுள்ளார். கடிதம் இதோ:

...பெண் விடுதலை, பெண்ணியம், பெண்மை... என்று பேசும் ஆண், பெண் பேச்சாளர், எழுத்தாளர் முயற்சிகள் வீண் விரயமாக முடிவதற்கு காரணம், அவர்கள் செக்கு மாட்டைப் போல, ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்ளே நின்று கொள்வதால் தான்.

பழமை, புதுமை இரண்டையும் விடாத இருவாழ்வுதான் இதற்கு காரணம். ஏனெனில், கணவன் அல்லது சமுதாயம் தம்மை ஒதுக்கி விடுமோ என்று, அஞ்சுகின்றனர்.

தற்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் வரைமுறைகளை அமைத்தவர் யார்? ஒரு காலத்தில், முன்னேற வேண்டுமென்று உண்மையாகவே நினைத்த சில பேர் தாம்! அதை, புரட்சி என்று கொள்வதில், அர்த்தமில்லை.

அவர்கள் யோசித்து செயல்படுத்தியவற்றில், சில குறைபாடுகள் இருக்கலாம். உதாரணமாக, வேதங்கள் யார் சொல்லியோ அல்லது யார் மூலமாகவோ தோன்றியவைதாம். (எல்லா மத வேதங்களையும் சேர்த்து தான்!) ஏவாளின் குற்றத்தினாலேயே, ஆதாம் பாவம் செய்து, மனித இனம் பாடுபட வேண்டியதாயிற்று என்பது, இன்றும் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது தான். ஆனால், அது உண்மையா என்று, நாம் யோசிப்பது இல்லை.

ஏவாள், ஆதாமின் வலது கை போல இருந்ததால், சைத்தான் அவளை முதலில் வெற்றி பெற இவ்வாறு செய்திருப்பான் என்றோ, சிறு பிள்ளைகள் சண்டைப் போடும் போது, பெரியவர்களிடம், 'அவன் தான் முதலில் அடித்தான் அல்லது இவன் தான் அடித்தான்' என்றோ சொல்வது போல, கடவுளிடம் ஆதாம் ஏன் முறையிட்டிருக்க மாட்டான் என்பதை, யோசிக்கக் கூட அஞ்சுகிறோம்.

சொல்பவரையும், 'சாமி கண்ணைக் குத்தி விடும்' என்ற கதை தான். 'வடையும், காகமும்' கதை மாறியது போல, இதுவும் என்று மாறும்? மாறாது என்றே உறுதியாக கூற முடியும். ஏனெனில், வேதமென்ற அடிப்படை பயம்.

ஆண் மேல், பெண் கீழ் என்றொரு பிரச்னை ஆரம்பமானதற்கு காரணமே, மேலே சொன்ன சிறு சண்டைதான். தான் கஷ்டப்படுவதற்காக மனிதன் கவலைப்பட்டான்; அதற்கு காரணம், பெண் என்று அவனுள் ஒரு ஆதங்கம். அதன் தாக்கமே, இப்போதைய நிலை. ஒரு வகையில், இதை மனக்கோளாறு என்று கூறலாம். அதை நிவர்த்தி செய்ய அப்போது யாருமில்லை. விளைவு கடவுளின் சாபத்தோடு, மனிதன் கொடுத்த தண்டனையும் சேர்த்து, ஏவாளை ரெட்டிப்பு தண்டனை பெற்றவளாக்கி விட்டது.

இதே மனக்கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு (மெஸ்மரிசம் என்று கூட சொல்லலாம்!) வளர்க்கப்பட்டவர்களாகவே ஆண்களும், பெண்களும் இன்றளவும் இருக்கின்றனர். சொல்லப் போனால், தாழ்வு மனப்பான்மையின் தாக்கம், ஆரம்பம் முதல் இன்று வரை பெண்களிடம் வழி வழியாய் தொடர்கிறது. அதை பெரிதுபடுத்த நடைபெறுகிற நிகழ்ச்சிகள், பெண்களுக்கு அநேகம். தாம் குற்றம் செய்தவர் என்ற இந்த நிலை, ஆயுள், மரண தண்டனை கைதிகளின் நிலையை விட கொடுமையானது. இதை, தம் வாரிசுகளுக்கு மகிழ்ச்சியுடன் அள்ளி அள்ளி வழங்குவதில், பெண்களுக்கு நிகர் பெண்களே!

ஆசிரியருக்கு பயத்தோடு கூடிய மரியாதை தருவது அந்த காலம். அன்புடன் கூடிய போதனையை எதிர்பார்த்து, அதே அன்போடு கூடிய மரியாதையை, ஆசிரியருக்கு தருவதையையே இன்றைய மாணவர் சமுதாயம் எதிர்பார்க்கிறது. எனவே தான், அம்மாதிரியான முற்போக்கு கருத்துகளை கொண்ட பள்ளிகள் துவங்கப்பட்டு வருகின்றன.

இதை போலவே தான், பெண் வர்க்கமும் எதிர் நோக்கியுள்ளது என்பதை, ஓரளவு நாம் புரிந்து கொண்டாலும், வழிவிட மட்டும் நம் மனம், முழு சம்மதத்தையும் வழங்குவதில்லை.

இதைப் போக்க கல்வியால் முடியும் என்றால், அது தவறு. அது, ஒரு அடிப்படை; ஒரு ஊன்றுகோல் தானே தவிர, அதுவே, இதை நீக்கும் வழியாகி விடாது. ஏனெனில், கல்வி கற்றவர் எத்தனை பேர் முற்போக்குவாதிகள்? அதனால் தானே நாம், 'டிவி'யிலும், வானொலியிலும், 'உதவி செய்; உன் மனைவிக்கு, பெண் குழந்தையை காப்பாற்று; பெண்ணாய் பிறப்பதற்கு நீயும் ஒரு காரணம்...' என்று ஒலி, ஒளிபரப்ப வேண்டியுள்ளது.

எனவே, மனரீதியான மாற்றத்தை இவ்வுலகில் புகுத்தினால் தவிர, சம அந்தஸ்து என்ற நிலை வராது; நீ பெரியவன், நான் பெரியவன் என்ற தர்க்க ரீதியான நிலையே தொடரும் என்று, நினைக்கிறேன். இம் மனரீதியான மாற்றத்தை எவ்வாறு செய்யலாம் என்பதை, தங்கள் கருத்துகளின் மூலம் அறிய விரும்புகிறேன். மேற்கண்ட கருத்துகளில், தவறுகள் இருப்பின் ஒப்புக் கொள்கிறேன். தங்கள் கருத்தை அறிய ஆவலாக இருக்கிறேன்...

- என்று எழுதியுள்ளார். இவரது எண்ணம் பற்றி, உங்கள் கருத்து என்னவோ?

அமெரிக்கர்களுக்கு, பொதுவாக உலக அறிவு கம்மி. இதே போலவே கூட்டல், கழித்தல்களில் கூட, 'சீரோ!' என் சொந்த அனுபவத்தில், இதைக் கண்டு இருக்கிறேன். ஒரு முறை நியூயார்க் நகரில், டாக்சியில் பயணம் செய்து, பணம் கொடுக்கும் போது, சர்வீஸ் சார்ஜ் கட்டணத்திற்கு, பத்து சதவீதம் கொடுக்க வேண்டும்; மனக்கணக்காக அதை கணக்கிட்டு டாக்சி டிரைவரிடம் அளித்தேன். கால்குலேட்டரில் கணக்கிட்டுக் கொண்டிருந்தவர், புருவம் உயர, 'இந்தியக்காரங்க கெட்டிக்காரங்கப்பா...' என்றபடியே, கட்டணத்தை வாங்கிச் சென்றார்.

லண்டனில் உள்ள கல்லூரி ஒன்றில்,

விரிவுரையாளராக பணிபுரியும் ஒருவரை சமீபத்தில் சந்தித்தேன். அவர்களது கல்லூரி, அமெரிக்க மாணவர்கள், இங்கிலாந்தில், தம் கல்லூரியில் மேற்படிப்பு படிக்க, நுழைவுத் தேர்வு நடத்தியதாம்...

ஒரு மாணவன், படு புத்திசாலியாக எல்லா கேள்விகளுக்கும், 'டக் டக்'கென்று, பதில் சொல்லிக் கொண்டிருந்தானாம். அவனை தேர்ந்தெடுத்து விட்டனர். அந்த பையன் ஒரு சந்தேகம் கேட்டுள்ளான்... என்ன சந்தேகம் தெரியுமா? 'நான் இங்கிலாந்து வந்து மேற்படிப்பு படிக்கத் தயார்; ஆனால், இங்கிலாந்தில் எனக்கு மொழி பிரச்னை இருக்குமே... என்ன செய்வது?'

இங்கிலாந்தின் மொழியும் ஆங்கிலம் தான் என்பதுகூட, மாணவனுக்குத் தெரியவில்லையாம்!

- இது எப்படி இருக்கு!

'லாங்குவேஜஸ் ஸ்போக்கன் அட் ஹோம் அண்ட் எபிலிட்டி டு ஸ்பீக் இங்கிலீஷ் பார் யுனைட்டெட் ஸ்டேட்ஸ், ரீஜன்ஸ் அண்ட் ஸ்டேட்ஸ்' - என்னென்ன மொழிகள், அமெரிக்காவில் பேசப்படுகின்றன, மற்ற மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்களிடம், ஆங்கிலம் பேசும் திறமை எப்படி உள்ளது என்பது குறித்த ஆய்வு அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது; ஆங்கிலத்தில் தான்! உ.ஆ., உதவியுடன் அதைப் படித்த போது, கிடைத்த தகவல்கள் இவை:

ஆங்கிலம் தவிர, மற்ற 50 மொழிகள் குறித்து ஆய்வு நடந்துள்ளது. இந்த, 50 மொழி பேசுபவர்களில், 14வது இடத்தில், இந்தி உள்ளதாக ஆய்வு கூறுகிறது. குஜராத்தி மொழி, 26வது இடத்தையும்; பஞ்சாபி, 39வது இடத்தையும்; பெங்காலி, 44வது இடத்தையும்; மலையாளம், 48வது இடத்தையும் பிடித்துள்ளன. இது, அமெரிக்க நாட்டின் ஒட்டு மொத்த கணக்கு. இக்கணக்கில் தமிழ் இடம் பெறவே இல்லை. மாநில வாரியாக எடுக்கப்பட்ட கணக்குகளில், தமிழ் இடம் பெற்றுள்ளது.

முதல் இடத்தை பிடிக்கும் மொழி ஸ்பானிஷ்! அடுத்து பிரஞ்ச். இதன் பின்னே வரிசைக் கிரமமாக வரும் மொழிகள்: ஜெர்மன், இத்தாலியன், சைனீஸ், தகலாக், போலீஷ், கொரியன், வியட்நாமீஸ், போர்த்துகீஸ், ஜப்பானீஸ், கிரீக் மற்றும் அராபிக்!

கடந்த, பத்து ஆண்டுகளில், மலையாளம் பேசுபவர்களின் அளவு, அமெரிக்காவில், 198.2 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது, அவ்வளவு மலையாளிகள் அமெரிக்கா சென்று குடியேறி உள்ளனர் எனப் பொருள். இதே போல பெங்காலிகள், 189 சதவீதம், குஜராத்தியினர், 178 சதவீதம், பஞ்சாபியினர், 159 சதவீதம் அதிகரித்துள்ளனர்.

மொத்தத்தில், கடந்த, பத்து ஆண்டுகளில் இந்தியர்களின் ஜனத் தொகை, அமெரிக்காவில், 125 சதவீதம் அதிகரித்துள்ளது!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us