PUBLISHED ON : அக் 05, 2014

'மணி... மாமி தொல்ல தாங்கலே...'பொண்ணுக்கு பாடம் சொல்லிக் குடு, இந்தி லெசன் எடு'னு, உயிர வாங்குகிறா. கணக்கு வழக்கு, ஸ்கூல் பாடமெல்லாம் எனக்கு வேப்பங்காயாச்சே... பொறுப்பு கிட்ட, 'பர்மிஷன்' வாங்கு... நாலு நாள் புதுச்சேரிக்கு ஓடிடலாம்...' என்றார் லென்சு மாமா.
பொ.ஆ., நல்ல மூடில் இருந்த போது, மணக்க மணக்க காபி போட்டு, பதமாக சீனி இட்டுக் கொடுத்து, 'பர்மிஷன்' வாங்கினேன். உடன் சேர்ந்து கொண்டனர் எழுத்தாள நண்பர்கள் சிலர்.
ஓட்டலில் ரூம் புக் செய்து, கும்பலாய் புதுச்சேரியை அடைந்தோம்.
எழுத்து, இலக்கியம், அரசியல், நாட்டு, உலக நடப்பு என, ஒரே வாதப் பிரதிவாதங்கள்!
கடலை ஒட்டிய மணற்பரப்பில் நாற்காலிகள் போட்டு, விவாதம் நடந்து கொண்டிருக்க, ஆங்கில இதழ் ஒன்றை ஒரு கையிலும், மறுகையில் கண்ணாடி கோப்பையையும் வைத்துக் கொண்டு, படிப்பில் மூழ்கி இருந்தார் லென்சு மாமா...
அப்படி என்னத்த ஆர்வமாக படிக்கிறார் என, எட்டிப் பார்த்தேன். என் ஆவலைப் புரிந்து கொண்ட லென்சு மாமா, 'வளர்ப்பு மகன் திருமணத்தைப் பற்றியே எல்லாரும் பேசுறோமே... அதே போலவும், அதை மிஞ்சும் விதமாக, வட மாநிலங்களில் திருமணங்கள் நடக்கின்றனவாம்... இதோ, இந்த பத்திரிகையிலே எழுதி இருக்காங்க...' என்றவர், கோப்பையை வாயில் சரித்து, ஒரு மிடறு விழுங்கினார். அதே வேகத்தில், அருகே, சின்ன கரி அடுப்பின் மீது வைக்கப்பட்டிருந்த மண் பாத்திரத்தின் உள்ளே, சூடாக இருந்த, 'பிஷ் டிக்கா' ஒன்றை மரக்குச்சியால் எடுத்து, லாவகமாக வாயினுள் தள்ளிக் கொண்டு பேச ஆரம்பித்தார்...
'மும்பையில் ஒரு ஆசாமி, தன் மகளின் திருமண அழைப்பிதழை, 'கிரானைட்' கல்லில் பதித்து, அதை, வெல்வெட் துணியில் சுற்றி அனுப்பி வைத்தாராம்... ஒவ்வொரு அழைப்பிதழின் மதிப்பும், 550 ரூபாயாம்...
'இன்னொரு ஆசாமி, மரகதங்கள் பதித்த பெட்டியில், வெள்ளியால் செய்யப்பட்ட ரோஜா மலரில் அழைப்பிதழை செதுக்கி அனுப்பி வைத்தாராம்...
'அடுத்தவங்களை விட புதுமையா, 'காஸ்ட்லி'யா செய்யணுமுன்னு ஒவ்வொருவரும் இப்போ ஆசைப்பட ஆரம்பிச்சுட்டாங்களாம். கல்யாணம்ன்னா அந்தக் காலம் மாதிரி, உறவுக்காரங்க முன்கூட்டியே வந்து, ஆளுக்கொரு பொறுப்பை எடுத்து நடத்துற சமாசாரமெல்லாம் இப்போ மறைஞ்சு போச்சு... அதனால, எல்லா வசதியும் உள்ள, 'பைவ்ஸ்டார்' ஓட்டல்களைத் தான் பணக்காரங்க தேடி ஓடுறாங்களாம்...
'மும்பையில், பைவ் ஸ்டார் ஓட்டல்களில், 500 முதல் 1,000 பேருக்கு ஒரே நேரத்திலே சாப்பாடு போடுற வசதிகளும் இருக்குதாம்...
'இது தவிர, 36 மணி நேரத்திற்கு தாஜ் ஓட்டலில் கல்யாண ஹால் வாடகை, 15 லட்சம் ரூபாயாம். இதுவே, மெட்ராஸ் தாஜ் ஓட்டல்ல, சாப்பாடு ஆர்டர் அவங்ககிட்ட குடுத்துட்டா, ஹாலுக்கு வாடகை கிடையாதாம்.
'அத மாதிரி கல்யாண, 'டிரஸ்'களுக்கும் எக்கச்சக்கமா செலவு செய்யறாங்களாம்... விமல் துணிகள் தயாரிக்கிற, 'ரிலையன்ஸ் குரூப்' கம்பெனி அதிபர் அம்பானியின் மகன், இந்தி நடிகை, டீனா முனீமை கல்யாணம் செஞ்சுக்கிட்டார் இல்லியா... அப்போ, டீனா அணிஞ்ச கல்யாண டிரஸ் விலை என்ன தெரியுமா?
'எட்டு லட்சம்... எட்டே எட்டு லட்சம் ரூபாய் தான்!
'வட மாநில ஆண்கள், முன்னப் போல கோட்டு, சூட்டு போட்டு கல்யாணம் பண்ணிக்கிறது இல்லை. 'ஷெர்வாணி'ங்கற டிரஸ் தான் போட்டுக்கிறாங்களாம்... இதோட விலை குறைஞ்ச பட்சம், 20 ஆயிரம் ரூபாயிலிருந்து அதிக பட்சம், ரெண்டு லட்சம் ரூபா வரையாம்!
'நம்மூர் பொண்ணுகளும் வெளுத்துக் கட்றாங்களாம்... வைர ஊசி சேலைன்னு மார்க்கெட்டுல இருக்குதாம்...
'இன்னொரு புது, 'டிரெண்ட்' நம்மூர் பொண்ணுங்ககிட்ட வந்திருக்குதாம்... இந்தப் பொண்ணுங்களுக்கு, அவங்க பாட்டி போட்டிருந்த நகை டிசைன் தான் இப்போ பிடிச்சிருக்குதாம்...'
— இப்படியே அடுக்கிக் கொண்டு போனார்.
'நாம் ஏழை நாடு என்கிறோம்... ஆனால், ஜவுளிக்கடை வாசலிலும், நகைக் கடை வாசலிலும், ரேஷன் கடை, 'கியூ' போல் ஜனங்கள் மொய்த்து நிற்பதைப் பார்த்தால், நம் நாடு ஏழை நாடு தானா என்ற சந்தேகம் எழுகிறது...' என, ஒரு எழுத்தாளர் எழுதியிருந்தது தான் நினைவுக்கு வந்தது.
உலக சாதனைகளை வெளியிடும் கின்னஸ் நிறுவனம், வியாபார சாதனைகள் பற்றி, 'கின்னஸ் புக் ஆப் பிசினஸ் ரிக்கார்ட்' என்ற புத்தகத்தை வெளியிட்டிருக்கிறது. சாம்பிளுக்கு சில வியாபார சாதனைகள்:
* உலகில் மிக அதிகமானவர்களை வேலையில் வைத்திருக்கும் நிறுவனம்,
'இந்திய ரயில்வே!'
* அதிகமானவர்கள் பணிபுரியும் தொழிற்சாலை: அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார்ஸ்; ஏழு லட்சம் பேர் இத்தொழிற்சாலையில் பணியாற்றுகின்றனர்.
* உலகில் மிகவும் பழைய நிறுவனம்: மரம், உலோகப் பொருட்களை விற்கும்,'ஸ்டோரா கோப்பார் பெர்க் பெர்க்ஸ்லாக்' என்ற நிறுவனம். ஆயிரம் ஆண்டுகளாக நடந்து வரும் இந்நிறுவனம், ஸ்வீடன் நாட்டில் உள்ளது.
* உலகில் அதிகமான பொருட்கள் கண்டுபிடித்து, பேடண்ட் ரிஜிஸ்டர் செய்து இருப்பவர்; தாமஸ் ஆல்வா எடிசன்! 1069 பொருட்கள் ரிஜிஸ்டர் செய்துள்ளார். மின்சாரம், சினிமா புரொஜக்டர் போன்றவை இதில் அடங்கும்.
* அதிக சொத்துகள் உள்ள நிறுவனம்: ஜப்பானின், 'ப்யூஜி பாங்க்!'
* உலகில் முதல் பில்லியனர்: அமெரிக்காவின் ஜான்.டி.ராக் பெல்லர். 1918ல் 1.25 பில்லியன் டாலர்கள்.
* இதுவரை உலகில் மனித இனத்தால் குடிக்கப்பட்ட கோக்கோ கோலா எவ்வளவு தெரியுமா? உலகின் மிகப் பெரிய நீர்வீழ்ச்சியான நயாகரா நீர்வீழ்ச்சியில், 38 மணி 2 நிமிடங்களில் தொடர்ந்து கொட்டிக் கொண்டிருக்கும் நீரின் அளவு.
* உலகிலேயே இதுவரை நடந்த மிகப் பெரிய பண்ட மாற்றுதல் என்ன தெரியுமா?
கடந்த, 1984 ஜூலை மாதம், ராயல் சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ், 36 மில்லியன் பீப்பாய் பெட்ரோல் கொடுத்து, பத்து போயிங் 747 விமானங்களை பெற்றது தான்.
