
மதுரை செல்ல வேண்டிய அவசியம்... மதியம், மணி 12:20க்கு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம். எல்லாரும் விமானத்தில் அமர்ந்தாகி விட்டது. என் பக்கத்து இருக்கையில் குப்பண்ணா.
மணி, 12:45 ஆகியும் விமானம் கிளம்பும் வழியைக் காணோம். மொத்த பயண நேரமே, 45 நிமிடங்கள்; இதில், தாமதத்திலேயே, 25 நிமிடங்கள் கடந்து விட்டன.
சும்மா உட்கார்ந்திருந்த குப்பண்ணா, 'சீனா போயிட்டு வந்தியே... அருகே உள்ள திபெத்துக்கு போய் வந்தியா... லாமாக்கள் பற்றி ஏதாவது தெரியுமா?' என்று கேட்டார்.
தலாய் லாமா, திபெத்திலிருந்து ஓடி வந்து, இந்தியாவில் தஞ்சம் புகுந்தார் என்றும், அவருக்கு, இந்தியா அடைக்கலம் கொடுத்ததால் தான், இந்தியா - சீனா போர் ஏற்பட்டது என்றும் கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர, இந்தச் சீனப் பயணத்தின் போது திபெத்துக்குச் செல்லவில்லை என்பதுடன், லாமாக்களைப் பற்றி முழுமையாக தெரியாது என்பதால், குப்பண்ணாவின் கேள்விக்கு, 'தெரியாது' என்பது போல தலை அசைத்தேன்.
குப்பண்ணா ஆரம்பித்தார்: 'திபெத்தை சீனாக்காரன் பிடித்து கொண்டதும், அந்நாட்டை ஆண்ட தலாய் லாமா, இந்தியாவுக்கு தப்பி வந்தார்.
திபெத்தின் அரசராக இருந்த போது, 1956ல் சென்னை வந்தார் தலாய் லாமா. அதன்பின் தான், திபெத்தை சீனாக்காரன் பிடித்துக் கொண்டான்.
இமயமலைச் சாரலில், காடும், மேடும் பள்ளத் தாக்கும் நிரம்பிய பூமி திபெத். இங்கிருந்து, லாமாக்கள் என கூறப்படும் அந்த நாட்டு மத தலைவர்கள், வெளிநாடுகளுக்கு செல்வது கிடையாது. 1956ல் சென்னை வந்தனரே... அது தான், அரசியல் முறையில் அவர்கள் வந்த முதல் வெளிநாட்டு பயணம்!
அவர்கள் வெளிநாடுகளுக்கு செல்லாதது மட்டுமல்ல, அன்னியர்களை திபெத்துக்குள் அனுமதிப்பதும் இல்லை. இதனால், திபெத்தை, 'தடுக்கப்பட்ட பூமி!' என்று அழைப்பர். அன்னியர்களின் நாகரிகமும், பழக்க வழக்கங்களும் தங்களது கலாசாரத்தோடு கலந்து விடக்கூடாது என்பது தான் இதற்கு காரணம்.
மாவீரன் என்று சரித்திரம் புகழும், கூப்ளேகான் சீனாவில் முதல் சக்ரவர்த்தியாக இருந்த காலத்தில், (கி.பி., 1216 - 96) திபெத்திலிருந்த லாமாவை, தன் அரச சபைக்கு அழைத்தான். கூப்ளேகானை, புத்த மதத்தைத் தழுவும்படி செய்திருக்கிறார் லாமா. அதற்கு பதிலாக கூப்ளேகான், திபெத்தை சீனாவிலி ருந்து பிரித்து, தனி நாடாக வாழும் உரிமையை அளித்தான். அது முதல் திபெத், 'ஆண்டி கோல அரசர்களின்' ஆட்சியின் கீழ் வந்தது.
மன்னன் மகன் மன்னன் என்ற முறையில், லாமாக்கள் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. ஒரு லாமா இறந்ததும், அவர் இறந்த கொஞ்ச நேரத்துக்கெல்லாம், நாட்டின் பிற பகுதியில் எங்கெங்கே குழந்தை பிறந்துள்ளது என்று ஆட்கள் மூலம் விசாரிப்பர். சில சமயங்களில், இறக்கும் லாமாக்கள், எந்த திசையில் அடுத்த லாமா உள்ளார் என்பதையும் சொல்லி விடுவர். அங்கு போய்த் தேடி, அக்குழந்தையின் முன், பல்வேறு பொருட்களோடு, லாமாவின் சில பொருட்களையும் சேர்த்து வைப்பர். மற்ற பொருட்களை விட்டு விட்டு, லாமா உபயோகித்தவைகளை மட்டும் குழந்தை பொறுக்கினால், 'அடுத்த லாமா கிடைத்து விட்டார்...' என்ற ஆனந்தத்தோடு, திபெத்தின் தலை நகர் லாசாவுக்கு, அக்குழந்தையை அழைத்து வருவர்.
அக்குழந்தையின் பெற்றோருக்கு நிறைய வெகுமதி தருவர். விரும்பினால், குழந்தைக்கு அருகில், தனி வீட்டில், பெற்றோரும் வசிக்கலாம்; குழந்தைக்கு, ஆறேழு வயது வரும் வரையில் தன் உடன் பிறந்த அண்ணன், தம்பிகளுடன் விளையாடவும் அனுமதி உண்டு. ஆனால், தங்கைகளுக்கு அந்த உரிமை கிடையாது; பெண்ணைப் பற்றிய உணர்வு வரக் கூடாது என்பதால்!
ஆனால், ஆறாவது லாமாவாக வந்தவருக்கு பழைய சம்பிரதாயங்களில் பற்று இல்லை. வாழ்க்கையில் பல ரசங்களும் அவருக்குப் பிடித்திருந்தன. மது, மங்கை, மதுரகீதம், இம்மூன்றிலும் அவர் லயித்தார். அவருக்கு கவிதை பாடும் திறனுண்டு. 'ஏனிங்கு வந்தேன்... எனக்கு ஏனிந்த வாழ்வு?' என்று ஏங்கி, அவர் வடித்தெடுத்த கவிதைகள், இன்றும் திபெத்தில் பிரசித்தம்.
தான் லாமாவாக ஆக்கப்பட்டதால், மற்றவர்களைப் போல வாழ முடியவில்லையே என்று நொந்து போனார் இவர். மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு அதன்படி நடக்காமல், தன்னிஷ்டப்படி காரியங்களைச் செய்வதைக் கண்டு, மதவாதிகள் எரிச்சல் அடைந்தனர்.
இதனால், 1706ல், இவர் பலவந்தமாக அதிகார பீடத்தை விட்டு வெளியேற்றப்பட்டு. அவருக்குப் பதில், 25 வயதுள்ள ஒருவரை தலாய் லாமா ஆக்கியது சீன அரசு. ஆனால், அவரை ஏற்க மறுத்தனர் திபெத்தியர். இதன் காரணமாக, சீனர்களுக்கும், திபெத்தியர்களுக்கும் இடையில் போர் மூண்டு, சீனர்கள் வெற்றி பெற்றனர். அது முதல், திபெத்தில் சீனாவின் ஆதிக்கம் துவங்கியது.
'சீனா வைத்தது சட்டமாயிற்று. தலாய் லாமாக்களும், சீனாவின் விருப்பத்திற்கேற்றவாரே பொறுக்கப்பட்டனர். இதன் காரணமாக, பல தலாய் லாமாக்கள் காரணம் கண்டுபிடிக்க முடியாமலே இறந்தனர். 9வது லாமா, 11வது வயதிலேயே இறந்தார். அடுத்தவர், 23வது வயதில், 11வது லாமா, 17வது வயதில், 12வது லாமா, 20 வயதில் இறந்தனர். இதற்கெல்லாம் காரணம், பதவி ஆசை கொண்ட, 'ஏஜன்டு'கள் மற்றும் சீன அரசு என்று கூறப்படுகிறது.
அடுத்தபடியாக, 13வது லாமா, (1876 - 1933) அனுபவித்த அல்லல்கள் அதிகம். இரு முறை அவர் நாட்டை விட்டு ஓட நேர்ந்திருக்கிறது. 1904ல், திபெத்தில், ரஷ்யாவின் செல்வாக்கு அதிகரித்த போது, அங்கிருந்து, இந்தியாவைத் தாக்க ரஷ்யா திட்டமிடுகிறது என்று பிரிட்டிஷாருக்கு சந்தேகம் ஏற்பட்டதால், திபெத்துடன் நேச உடன்படிக்கை செய்து வர ஒரு குழுவை திபெத்துக்கு அனுப்பினர்.
அன்னியர்கள் தான் திபெத்துக்குள் வரக் கூடாதே... அதை காரணம் காட்டி, 13வது தலாய் லாமா அக்குழுவை, 'லாசாவுக்குள் வரக் கூடாது...' என்று தடுத்தார். இந்த குழு ராணுவ குழுவாக மாறி, லாசாவுக்குள் செல்லவே, மங்கோலியாவுக்குள் ஓடி சரணடைந்தார் தலாய் லாமா. இதன் காரணமாக, திபெத்தில் வெள்ளையர்களின் செல்வாக்கு ஏற்படலாயிற்று...' என்று குப்பண்ணா கூறிக் கொண்டிருந்த போது, விமானத்தினுள் சலசலப்பு ஏற்பட்டது.
விமானப் பணிப் பெண்ணிடம், பயணி ஒருவர், 'என்னம்மா... மணி, 2:15 ஆச்சு... இந்நேரம் மதுரையை நெருங்கி இருக்கலாமே... நாங்கள் எல்லாம் முட்டாள்களா?' என, ஓங்கிய குரலில், ஆங்கிலத்தில் ஆவேசமாகக் கேட்டார்.
'இல்லை... நாங்கள் தான் முட்டாள்கள்...' எனப் பணிவுடன் ஆங்கிலத்தில் பணிப்பெண் பதிலளிக்கவும், தன்னை கிண்டல் செய்கிறாளோ எனக் கருதிய பயணி, 'சாமி' வந்தவர் போல ஆடியபடி, பைலட் அறைக்குள் பாய்ந்தார். வெளியே வந்த பைலட், 'உங்களது கேள்விகளுக்கு எங்களது, 'கமர்ஷியல் ஸ்டாப்' பதிலளிப்பார்...' என்றார்.
நடந்த விஷயம் இது தான்:
விமானத்தில் பயணம் செய்ய வேண்டிய இரண்டு பயணிகள் வந்து சேரவில்லை. டிக்கெட்டை விற்ற, 'கமர்ஷியல் ஸ்டாப்'கள் விமானத்தை நிறுத்தி விட்டனர். பயணிகள் வந்து விட்டனர். ஆனால், குறிப்பிட்ட நேரத்தில் விமானத்தைக் கிளப்பாததால், மற்ற விமானங்களுக்கு, 'ரன்வே'யை ஒதுக்கி விட்டனர் விமான நிலைய அதிகாரிகள். அவை அனைத்தும் பறந்த பின்பே, விமான ஓடுதளம் காலியானவுடன் நேரம் ஒதுக்கப்பட்டது. மற்ற தனியார் விமானங்களில் இந்த கூத்துக்கள் கிடையாது. விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார் குப்பண்ணா...
சீனப் புரட்சியின் போது (1911) ஒருவாறாக சீனர்களின் ஆதிக்கத்திலிருந்து திபெத்தியர்கள் விடுபட்டு, தனியரசாக்கினர். 13வது லாமா, 1933ல் இறந்தார்.
அவருக்குப் பின், லாமா ஆக்கப்பட்டிருப்பவரே இப்போது இந்தியாவில் தஞ்சம் புகுந்து வாழ்பவர். 13வது லாமாவுக்குப் பின், அடுத்த லாமாவை தேட மிகவும் பிரயாசைப்பட்டு கடைசியில், 1937ல் ஒரு விவசாயி வீட்டில் இவரைக் கண்டுபிடித்தனர்.
இந்த லாமாவின் பெற்றோர் இருந்த இடம் சீனாவின் எல்லைக்குள் இருந்ததால், சீனாவின் அப்பகுதி கவர்னர், நல்ல தொகை கொடுத்தாலொழிய குழந்தையை எடுத்துச் செல்ல அனுமதிக்க முடியாதென்று கூறி விட்டார். இது பற்றி ஓராண்டு காலம் பேச்சு வார்த்தை நடைபெற்று, கடைசியில், 1939ல் லாசாவுக்கு குழந்தையை கொண்டு வந்தனர். 1952 வரை அவர், 'மேஜரா'காமல் இருந்ததால், ஏஜன்டுகளே அரசு காரியங்களை செய்து வந்தனர்.
ஆனால், 1959ல் திபெத்தின் மீது சீனா படை எடுத்து பிடித்துக் கொண்டது. தோல்வி அடைந்த தலாய் லாமா, இமயமலை வழியாக தப்பி, இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அவருக்கு நம் நாட்டில் புகலிடம் அளித்தார் நேரு.
'தஞ்சம் அளிக்காதே...' என, இந்தியாவைக் கேட்டுக் கொண்டது சீனா. உலக அரங்கில் தன்னை சமாதானப் புறா, தயவாளன், கருணை சீலன் எனக் காட்டிக் கொள்ள தஞ்சமளித்தார் அன்றைய பிரதமர் நேரு. கடுப்படைந்த சீனா, சமயம் பார்த்து நம்மைப் போட்டுத் தள்ளி விட்டது...' எனக் கூறி முடித்தார் குப்பண்ணா!
— ஒரு மணி நேரம் தாமதமாக மதுரையை அடைந்தது விமானம்!