
உலகம் முழுவதும் சுற்றி, தம் பயண அனுபவங்களை புகைப்படத்துடன் தொகுத்து, புத்தகமாக வெளியிடும் வெள்ளைக்கார அன்பர் ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு, சமீபத்தில் கிட்டியது.
கிரிகோரி ஸ்டாக் என்பது அவர் பெயர். சென்னையில் உள்ள பெயர் பெற்ற புகைப்படக்காரர்களை சந்திக்க விரும்பி, தகவல் அனுப்பினார். அந்த வகையில், லென்ஸ் மாமாவிற்கும் அழைப்பு வர, அவருடன் நானும் ஒட்டிக் கொண்டேன்.
சென்னை அடையார் பார்க் ஓட்டலில் சந்திப்பு நிகழ்ந்தது. அப்போது வெள்ளைக்காரர் கூறிய விஷயம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
குஜராத் மாநிலம் கிர் வனப் பகுதியில், 'சீதி' என்ற பிரிவினர் வாழ்கின்றனராம். இவர்கள் உருவத் தோற்றத்திலும், ஆட்டம், இசை போன்றவற்றிலும் ஆப்ரிக்க இன மக்களை நினைவூட்டுவதாக உள்ளனராம். இவர்கள் குறித்த ஆய்வுகளை, பழங்குடியின ஆய்வாளர்கள் மேற்கொண்டபோது, இவர்களின் மூதாதையர்கள் ஆப்ரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்டவர்கள் என்பது தெரிய வந்ததாம்.
பதினாறாம் நுாற்றாண்டு முதல், உலகம் எங்கும் பிரிட்டன் நாடு ஆதிக்கம் செலுத்தி வந்தது. ஒவ்வொரு நாடாக பிடித்து, பிரிட்டனின் ஆட்சிக்குள் கொண்டு வருவதுதான் வெள்ளைக்காரர்களின் வேலையாக இருந்தது.
ஜனத்தொகை அதிகமற்ற நாடுகளில் குடியேறுவது, அங்கு வாழும் பழங்குடியின மக்கள், மண்ணின் மைந்தர்களை, துப்பாக்கியால் மிரட்டி அடிமைகளாக்கி, தங்களது குடியேற்ற காலனிகள் உள்ள இடங்களுக்கு அனுப்பி, வேலை செய்யச் சொல்வது போன்றவை, வெள்ளைக்காரர்களின் வழக்கமாக இருந்தது.
நம்நாடு போன்று செல்வச் செழிப்பும், பயிர் வளமும் மிக்க நாடுகளிலும், ஆட்சியாளர்களிடையே இருந்த வேற்றுமைகளை பயன்படுத்தி, அந்த நாடுகளின் செல்வங்களை பிரிட்டனுக்கு அனுப்பி, வயிறு வளர்த்து வந்தனர்.
காடுகளாக உள்ள நாடுகளில், பழங்குடியினரின் கடுமையான உழைப்பை கொண்டு, பயிர் வளத்தை பெருக்கி, அந்த செல்வங்களையும், சுரங்கச் செல்வங்களையும் பிரிட்டனுக்கு அனுப்பி வைத்தனர்.
இப்படி அடிமைகளாக ஆப்ரிக்காவிலிருந்து, இந்தியாவிற்கு வெள்ளைக்காரர்களால் கொண்டு வரப்பட்டவர்கள் தான் இந்த, 'சீதி'கள் என்றார்.
பிரேசில் மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளில் கரும்பு தோட்டம் அமைக்கவும், மலேசியா, சிங்கப்பூர், பிஜி நாடுகளுக்கும் இவ்வாறு ஆப்ரிக்கர்கள் மற்றும் இந்தியர்கள் அனுப்பப்பட்டனர்.
அமெரிக்காவிற்கும் ஏராளமான ஆப்ரிக்கர்கள் அடிமைகளாக அனுப்பப்பட்டனர். அமெரிக்கா மற்றும்  மேற்கு இந்தியத் தீவுகள் போன்ற நாடுகளில் உள்ள ஆப்ரிக்கர்கள் ஓரளவு பணவசதியுடன் வாழ்கின்றனர்.
இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் உள்ள சீதிக்கள் மட்டும் ஏழ்மையில் வாடுகின்றனர். அதற்கு இந்திய பொருளாதாரம், தொழில் வளர்ச்சியின்மை, சமுதாய அமைப்பு போன்றவையும் முக்கிய காரணமாக அமைந்துள்ளது என்றார்.
அவர் காட்டிய புகைப்படங்களைப் பார்த்தபோது, மூக்கில் விரல் வைக்கத் தோன்றியது.
அது ஒரு வியாழக்கிழமை... 
எழுத்தாள நண்பர் ஒருவர் அலுவலகம் வந்திருந்தார். அவர் கையில், வித்தியாசமான பெயர் கொண்ட ஒரு புத்தகம் இருந்தது.
'புக்கை கொடுங்க சார்... படிச்சுட்டு நாளைக்கு தர்றேன்...' என்றேன்.
பின், புத்தகத்தை புரட்டிய போது அதில் ஒரு கட்டுரை... அதிலிருந்து ஒரு பகுதியை இங்கே தருகிறேன்...
'சிறு பத்திரிகை உலகத்தைப் போல் அரை வேக்காடுகள் நிரம்பிய உலகம் எதுவும் இல்லை என்பது அடியேனின் தாழ்மையான கருத்து.
'ஆங்கிலம் தெரிகிறதோ இல்லையோ, கையில் ஒரு ஆங்கிலப் புத்தகம்... ஜோல்னா பை, பழைய ஸ்டைல்! ஆழ்ந்த சிந்தனையில் இருப்பது போன்ற ஒரு பாவனை; மூக்கு நுனியில் காத்திருக்கும், 'நான்' இவை தான், இந்த, 'சிட்டிசன்' களின் தனிச் சிறப்புகள்.
'இரண்டு நாட்களுக்கு முன், சென்னை, ஜெமினி மேம்பாலத்திற்கு அருகில் உள்ள ஒரு புத்தகக் கடைக்கு போயிருந்தேன். புத்தகங்களை நோட்டம் விட்டபடி நகர்ந்து கொண்டிருந்த போது, ஒரு புத்தகம் கண்ணில் பட்டது. சுந்தர ராமசாமியின், 'புளிய மரத்தின் கதை' ஆங்கிலத்தில்... பென்குயின் வெளியீடு.
'எடுத்துப் புரட்டினேன்... 'மேஜிகல் ரியலிசம்' என்ற பதம் பரவலான புழக்கத்திற்கு வருவதற்கு முன்பாவே, அதை முயற்சி செய்து பார்த்திருக்கிறது என்ற வகையில், இந்த நாவல் சற்று வித்தியாசமானது...' என்ற வாசகங்கள் தென்பட்டன.
'சாமீ... பேத்தலுக்கு ஒரு அளவில்லையா? சாய்பாபா ஸ்டைலில், சு.ரா., உள்ளங்கையை உயர்த்தினால், மேஜிகல் ரியலிசம் கொட்டுகிறது. பக்த கோடிகள் புல்லரித்து பொட்டு வைத்துக் கொள்கின்றனர்...'
இதே ரீதியில் கட்டுரை தொடர்கிறது.
- அங்கீகாரம்,  புகழ் ஆகியவற்றிற்கு சிறு பத்திரிகையாளர்கள், உண்மையிலேயே அலைகின்றனர். ஆனால், வெளியில் அவ்வாறு இல்லை என பிதற்றித் திரிந்து, புகழ்பெற்ற எழுத்தாளர்களை சாடுவதும், தமக்குள்ளேயே அடித்துக் கொள்வதுமாக பொழுதை கழிக்கின்றனர். பெரிய பத்திரிகை ஒன்று இவர்களுக்கு ஆதரவளித்து விட்டால், இவர்களின் பம்மாத்து மறைந்து, ஓடி விடுகிறது என்பதே உண்மை என, நினைத்துக் கொண்டேன்!
அன்று, பீச் மீட்டிங்கில் நண்பர்கள் கடலில் குளிக்கச் சென்று விட்டனர். நான் கையோடு எடுத்துச் சென்றிருந்த ஜெ.கே., என அழைக்கப்படும் ஜெ.கிருஷ்ண மூர்த்தியின் சிந்தனைகள் என்ற நுாலைப் படிக்க ஆரம்பித்தேன்.
அவர் சொல்கிறார்...
வெளிப்படையாக, நாம் நாசூக்கான வர்களாக, கண்ணிய மானவர்களாக தெரியலாம்; ஆனால், உள் மனதில் வெறுப்பு, பொறாமை, துவேஷம், வன்முறை ஆகியவற்றை கொண்டிருக்கிறோம்.
மிருகத்தை தட்டிக் கொடுத்து நல்லவிதமாக நடத்தும் வரை, அது நம்மிடம் நட்புறவோடு இருக்கும். அதை பகைத்துக் கொள்ளும்போது, அதன் உண்மையான வன்முறை ரூபம் நமக்கு புலப்படும்.
நாமும் அத்தகைய மிருக சுபாவத்தை தான் அடிப்படையில் பெற்றிருக்கிறோம். நம் விருப்பும், வெறுப்பும் தான் வன்முறையின் அடிப்படை.
'நீ கிறிஸ்தவன்,  நீ இந்து,  நீ இஸ்லாமியன்' போன்ற பிரசாரங்கள், ஆழ்மனதில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
மனிதனை, மனிதனாக நோக்காமல், தனிப்பட்ட ஒருவனை, மற்றவனது நோக்கில் ஆராயும்போது தான், நம்மையே நாம் புரிந்து கொள்ள முடியாமல் முரண்பாடுகள் உண்டாகின்றன.
வன்முறை, இயற்கையின் ஒரு வெளிப்பாடு. ஆன்மிகமே இல்லாத பல ஆன்மிக நிறுவனங்கள், மனிதனை அடக்கி, சாத்வீகம் உள்ளவனாக்க முயன்று தோற்றுவிட்டன.
மதங்கள், போர்களைத் தான் தோற்றுவித்துள்ளன. 'நான் இந்த சமுதாயத்தைச் சேர்ந்தவன், நான் தான் உயர்ந்தவன்...' இப்படி பல விதமான சண்டைகள்... போர்கள்!
நாம் எந்த சமுதாயத்தின் அங்கமாக இருக்கிறோமோ, எந்த சமுதாயத்தில் வாழ்கிறோமோ அதன் விருப்பு, வெறுப்புகள், சந்தோஷங்கள், பயங்கள் ஆகியவற்றின் பிரதிபலிப்பான ஆழ்ந்த வன்முறை, நம்மிடம் படிந்து கிடக்கிறது.
நாம் அமைதியாக வாழ வேண்டுமானால், இத்தகைய வன்முறையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். வன்முறையின் அடிப்படை, பாதுகாப்பற்ற மனநிலை தான்!
அனுபவத்தால், அறிவால், நம்பிக்கைகளால் மனதில் ஏற்பட்டுள்ள தீர்மானங்களுக்கு பங்கம் வரக்கூடாது என்று நினைப்பதாலும், 'இது இப்படித்தான்... எனக்குத் தெரியும்...' போன்ற நிலைகளுமே வன்முறைக்கு அடிப்படை. இத்தகைய படிந்து போன எண்ணங்கள், தீர்மானங்கள் ஆகியவற்றில் இருந்து விடுபட்டு, தெளிவாக, ஆரோக்கியமாக மனம் எண்ணுமானால் வன்முறை தானாக மறையும்!
அமைதியான வாழ்க்கை முறை தான் இதற்கெல்லாம் பதிலாகும்!
- புத்தகத்தை மூடி, எழுந்தேன். மனது நிர்மலமாக இருந்தது. நண்பர்கள் தூரத்தில் கடலில் நீராடிக் கொண்டிருந்தனர்.

