sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

பாலும் தெளிதேனும்!

/

பாலும் தெளிதேனும்!

பாலும் தெளிதேனும்!

பாலும் தெளிதேனும்!


PUBLISHED ON : செப் 13, 2015

Google News

PUBLISHED ON : செப் 13, 2015


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''பால் கேனை வண்டியில ஏத்தணும்; எங்கடி உன் மவன்,'' என்று, தன் மனைவி தனலட்சுமியிடம் குரல் கொடுத்தான் கோவிந்தன்.

''காலேஜ் அப்ளிகேஷன் வாங்கணும்ன்னு, இப்பத் தான் டவுனுக்கு கிளம்பி போனான்,'' என்று கூறி விட்டு, உள்ளே சென்றாள்.

''டேய் வேலு... ஒரு கை பிடி.'' தன் நண்பன் வேலுவின் உதவியோடு, அந்த, 40 லிட்டர் பால் கேனை, டெம்போவில் ஏற்றினான் கோவிந்தன்.

''மொத்தம் எத்தனை கேன்?''

''இப்போ உன்னோடத சேத்தா, 14!''

இருவரும் டெம்போவில் ஏறிக் கொள்ள, வண்டி, சந்தை கடை மைதானத்தை நோக்கி ஊர்ந்தது. அங்கே, 'டிவி' சேனல் கேமராக்களும், செய்தித்தாள் நிருபர்களுமாக, இவர்கள் வரவை எதிர்நோக்கி காத்திருக்க, அத்தனை கேன்களும் இறக்கப்பட்டன.

பால் உற்பத்தியாளர் சங்கத்தலைவர் தம்பிரான், போராட்டத்தை துவங்கும் வகையில், நீட்டப்பட்ட 'டிவி' மைக்குகளின் நடுவே பேசினார்...

''எங்களின் அதிருப்தியை தெரிவிக்கும் வகையில், கொள்முதல் செய்ய மறுக்கப்பட்ட, பாலை, இந்த மைதானத்தில் கொட்டுவதை தவிர, எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை; ஏழை பால் உற்பத்தியாளர்களின் சோகத்தை போக்கிட, அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்ற அறிவிப்பை தொடர்ந்து, ஒவ்வொருவரும் தங்களின் பால் கேன்களின் மூடியை திறந்து, பாலை மைதானத்தில் கொட்ட, அந்த மைதானமே பாலாறு போன்று பெருகி ஓடியது.

அந்த பால் வெள்ளத்தை, கேமரா படம் பிடித்துக் கொண்டிருக்க, கோவிந்தனும், உற்சாகமாக கேமராவை பார்த்தபடி, தன் கேனை திறந்து கவிழ்க்க, அதிலிருந்து வெளிப்பட்ட துர்நாற்றத்தை தாங்க முடியாமல், அனைவரும் மூக்கை மூடினர்.

கோவிந்தனின் கேனிலிருந்த சாக்கடை தண்ணீர், வெள்ளைவெளேர் என்றிருந்த பால் குளத்தை களங்கப்படுத்தி, எல்லாரையும் திகைக்கச் செய்தது.

உடனே, கேமராக்கள் படம் எடுப்பதை நிறுத்தின.

அதிர்ச்சியடைந்த தலைவர், ''யோவ் கோவிந்தா... என்ன இப்படி மானத்தை வாங்கிட்ட... பொது ஜனங்களுக்கும், பத்திரிகை, 'டிவி'காரங்களுக்கும் என்ன பதில் சொல்லுவேன்; மூஞ்சியிலே காறி துப்புவாங்களே...'' என்று, கத்தி தீர்த்தார்.

''தலைவரே... கேன்ல எப்படி சாக்கடைத் தண்ணீ வந்துச்சுன்னு எனக்கு தெரியல; என் மவனும், நானும் தான் விடிகாலையில கேன்ல பாலை நிரப்பினோம். அப்புறம் ஒரு குட்டி தூக்கம் போட்டுட்டு, டெம்போ வந்ததும் ஏத்திட்டு வர்றேன். இடையிலே என்ன நடந்ததுன்னு தெரியல. இதை யார் செஞ்சிருந்தாலும், என் மவனாய் இருந்தாலும், அவன கொல்லாம விட மாட்டேன்,'' என்று, தன், மானம் பறி போய் விட்ட நிலையில், கோபப்பட்டு புலம்பினான் கோவிந்தன்.

ஆனால், எதிர்பாராத திருப்பமாக ஒரு சேதி வந்தது.

''யோவ் கோவிந்தா... உன் மவன் பாலிடால் குடிச்சிட்டு, ஆஸ்பத்திரியில சாகக் கிடக்கிறானாம்; என் புள்ளை சொல்லிட்டு ஆஸ்பத்திரிக்கு ஓடிட்டு இருக்கான்,'' என, கோவிந்தனின் பக்கத்து வீட்டுக்காரர் சொல்ல, இதைக் கேட்டதும் நிலைகுலைந்து போன கோவிந்தன், ''ஐயையோ ராசா... உனக்கென்னடா குறை வைச்சேன்; ஏன் இப்படி செய்துட்டே...'' என்று அலறினான். சகாக்கள் அவனை கைத்தாங்கலாக பற்றி, அழைத்துச் சென்றனர்.

''ராசா... என்னை வுட்டுட்டு போயிடாதடா... நேத்து ஏதோ என் கஷ்டத்திலே அப்படி சொல்லிட்டேன்... நீ பிளஸ் 2வுலே நல்ல மார்க் வாங்குனதால இன்ஜினியரிங் சேரணும்ன்னு ஆசைப்பட்டு கேட்ட... எனக்கு இருந்த பண முடையில என்ன செய்றதுன்னு யோசிச்சுக்கிட்டு இருந்த போது, 'பெத்து வளத்தா போதுமா, ஆசைப்பட்ட படிப்பை படிக்க வைக்க வேணாமா'ன்னு நீ கேட்டதும், எனக்கு கோபம் பொத்துட்டு வந்துடுச்சி.

'ஏன் பெத்தன்னு கேட்கறயா... அத்தினி செலவு செய்து படிக்க வைக்க முடியலங்கிற காரணத்துக்காக, உன் கழுத்தை நெரிச்சி கொல்லவா சொல்றன்னு நானும் தாறுமாறா பேசிட்டேன்பா... என் நாக்குல அந்த வார்த்தை வந்திருக்கக் கூடாது ராசா. அதுக்கு இப்படியா செய்துப்ப...' என, வழி நெடுக அவன் புலம்பியது, கூட வந்து கொண்டிருந்தோரையும் கலங்க வைத்தது.

எதை எதையோ கற்பனை செய்து, படபடப்போடு வீட்டை நெருங்கிய கோவிந்தனுக்கு, அங்கே இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அவனுடைய ஒரே மகன் தயாளன், முழுசாக வீட்டு வாசலில் நின்று, அவர்களை வரவேற்றான்.

மகனை உயிருடன் பார்த்ததும், பெரும் நிம்மதியும், மகிழ்ச்சியும் ஊற்றெடுக்க, ''என் ராசா... என் வயத்திலே பாலை வார்த்தியே... என் உசுரே திரும்பி வந்தது போல் ஆச்சுடா... ஏன்டா இப்படி செய்த... கலங்கி போயிட்டேன்டா மவனே... இப்படி மண்ணோட மண்ணா போகவா பெத்து வளக்குறோம்,'' என, மகனை தழுவி, கண்ணீர் பெருக்கினான் கோவிந்தன்.

''அப்பா... என்னை மன்னிச்சுடு; நீ நினைக்கிற மாதிரி நான் பாலிடால் சாப்பிட்டு; ஆஸ்பத்திரியில, 'அட்மிட்' ஆகல,'' என்றான் நிதானமாக தயாளன்.

''பின்ன எதுக்குடா இந்த கூத்தெல்லாம்...''

தான் ஏமாற்றப்பட்டதில், இப்போது லேசாக கோபம் எட்டிப் பார்த்தது கோவிந்தனுக்கு!

''சும்மா ஒரு ஷாக் ட்ரீட்மென்ட்தாம்பா... இப்போ என் உசிருக்கு ஆபத்துன்னு தெரிஞ்சதும், இப்படி மண்ணோட மண்ணா போகவா பெத்து வளக்கறோம்ன்னு புலம்பினியே... இன்ஜினியரிங் படிக்க வைக்க, உன்கிட்ட வசதி இல்லங்கிற ஒரே காரணத்துக்காக, நீ உண்டு பண்ணிய உசுரை பலி கொடுக்கறதிலே எத்தனை நியாயமில்லயோ, அதுபோல தாம்பா இயற்கையா பசுக்கிட்டயிருந்து கறந்ததை, கீழே ஊத்தறதுலேயும் துளியும் நியாயமில்ல... நேத்து நீ என்கிட்ட சொன்னது மாதிரி, எனக்கு இன்ஜினியரிங் படிப்பை விட்டா வேற எத்தனையோ நல்ல படிப்பு படிக்க வழியிருக்கு. அதுபோல தான், இப்படி அத்தனை பாலையும் யாருக்கும் உபயோகம் இல்லாம கொட்டி, உங்க எதிர்ப்பை தெரிவிக்கிறதை விட, அதை வேறு உபயோகமா பயன்படுத்த எத்தனையோ வழியிருக்கு.

''அதனால தான் உனக்கு பாடமா இருக்கட்டும்ன்னு விடியற்காலையில நீ தூங்கும் போது, அத்தனை பாலையும் வேற கேன்ல ஊற்றிட்டு, இதுலே சாக்கடை தண்ணிய நிரப்பி வைச்சோம் நானும், என் நண்பர்களும்! ஏன் தண்ணிய நிரப்பியிருக்கலாமேன்னு நீ கேட்கலாம். தண்ணீர் இயற்கை கொடுத்த கொடை; அதை வீணாக்க, நமக்கு உரிமையில்ல. நானும் என் நண்பர்களும் சேர்ந்து, டவுன்ல ராமா ஸ்வீட்காரர்கிட்ட நஷ்டப்படாத விலைக்கு பாலை வித்துட்டோம்.

''அவர் பால்கோவா, பால் ஸ்வீட் செய்து, எல்லா இடத்துக்கும் சப்ளை செய்றதால, எவ்ளோ பால் கொண்டு வந்தாலும் பயன்படுத்திக்கிறேன்னு சொல்லியிருக்காரு. கூடவே, அந்த பால் ஸ்வீட் செய்ற பக்குவத்தையும், அதுக்கு உண்டான கருவிகளையும் தந்து, இத்தொழிலை கத்துக் கொடுக்கிறதா சொல்லியிருக்காரு.

''எல்லாத்துக்கும் அரசை எதிர்பார்க்கறதும் தப்பு தானேப்பா... இதையெல்லாம் ஏதோ அறிவுரை மாதிரி சொன்னா நீ கேட்டுக்க மாட்ட. அதனால தான், இந்த நாடகம்,'' என்றபடி, தன் தந்தையிடம் பணக்கட்டை நீட்டினான் தயாளன்.

''அப்பா... இது ஸ்வீட்காரர் கொடுத்த முன்பணம்; என் படிப்புக்கு என்ன உதவி தேவைன்னாலும் செய்றதா சொல்லியிருக்கார். இத்தொழில்ல வர்ற லாபத்துல கடனை அடைச்சுடலாம்ன்னு நம்பிக்கையா சொல்றாரு,'' என்றான் தயாளன்.

மகனின் தேனான பேச்சை கேட்டு, பெருமிதத்தோடு மகனை தழுவிக் கொண்டான் கோவிந்தன். இதன்மூலம் கோவிந்தனின் சகாக்களுக்கும் ஒரு தேனான தெளிவு பிறந்திருக்க வேண்டும்.

- அகிலா கார்த்திகேயன்






      Dinamalar
      Follow us