sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பா.கே.ப.,

/

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : நவ 15, 2015

Google News

PUBLISHED ON : நவ 15, 2015


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அந்தப் பெண், தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்; கல்லூரியில் பணியாற்றுகிறார். சமீபத்தில் சென்னை வந்திருந்த போது, என்னை சந்திக்க விருப்பம் தெரிவித்து போன் செய்தார். வரச் சொன்னேன்.

தன் தந்தையுடன் வந்திருந்தார். பரஸ்பர அறிமுகம், நல விசாரிப்புகளுக்குப் பின், தன் தந்தையிடம், 'அப்பா... நான் கொஞ்சம் தனியாகப் பேசணும்... நீங்க வெளியே வெயிட் பண்றீங்களா?' எனக் கேட்கவும், 'ஏதோ காதல் பிரச்னையில் மாட்டி இருக்கிறார் போல... பஞ்சாயத்துக்கு நம்ம துணையை நாடி வந்திருக்காங்க...' என நினைத்தேன்.

தந்தை, மிக இணக்கமாக தலை அசைத்து வெளியே சென்றார்.

'சார்... இந்தக் கால இளம் பெண்கள், சினிமா, தொலைக்காட்சியின் தாக்கத்தால், பலத்த மனச்சிதைவுக்கு உள்ளாகியுள்ளனர். என் அனுபவம் பற்றி சொல்றேன்... கண்டிப்பாக இதை நீங்க எழுதி, இளம் பெண்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தணும்...' என்றார்.

'கண்டிப்பா எழுதுறேன்... சொல்லுங்க...' என்றேன்.

சொல்ல ஆரம்பித்தார்:

ஒரு தேர்வு எழுதுவதற்காக, 'அந்த' பல்கலைக் கழகத்திற்கு சென்றிருந்தேன். தேர்வு மையத்தில் அறிமுகமான ஒரு சிநேகிதி, அவள் தோழியை சந்திப்பதற்காக, விடுதிக்கு அழைத்துச் சென்றாள். நெருங்கிய சிநேகிதிகளான அவர்கள், மனம் விட்டு பல விஷயங்கள் பேசலாம் அல்லது பேசப் பிரியப்படலாம்... நான் இருப்பது தர்மசங்கடமாக இருக்கும் எனக் கருதி, விடுதி வளாகத்தில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.

அருகில் சில பெண்கள் அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் விடுதியில் தங்கிப் படிக்கும் பெண்களாய்த் தான் இருக்க வேண்டும். அவர்கள் அணிந்திருந்த உடை, 'சினிமா நடிகைகள் பரவாயில்லை...' என்று சொல்வது போல் இருந்தது.

அவர்கள் உடையை விட, அவர்கள் பேச்சு ரொம்ப ஆபாசமாக இருந்தது. அஜித், விஜய், தனுஷ் என்று, ஒவ்வொரு நடிகரையும் அங்கம், அங்கமாக வர்ணித்து, 'என் ஆள்... உன் ஆள்...' என்று கூறி, கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர். எனக்கு இந்த மாதிரி பேச்சுகள் புதிது என்பதால், அருவருப்பாக இருந்தது.

என்னே கேவலம்! எவனோ ஒரு நடிகன், கொடுத்த பணத்துக்கு திரையில் கூத்தடிக்கிறான். அவனைப் போய் அங்கம், அங்கமாக வர்ணித்து, 'என் ஆள்... உன் ஆள்' என்று கூச்சலிடுகின்றனரே... என்ன பெண்கள் இவர்கள் என்று இருந்தது.

அடுத்து, அவர்களுடைய பேச்சு, அவர்களுடைய ஆண் நண்பர்களைப் பற்றி திரும்பியது. 'உன் ஆள் எப்படி? என் ஆள் இப்படி'ன்னு (இங்கே சினிமா நடிகனும் என் ஆள், ஆண் நண்பனும் என் ஆள், கணவனும் என் ஆள் தானா? பாவம், இவர்களை மணக்கப் போகும் புண்ணியவான்கள்.) கொச்சையாக பேசி சிரித்தனர்.

அதில் ஒரு பெண், விடுமுறையில் இருந்து விடுதிக்கு வந்த பெண்ணா அல்லது வீட்டிலிருந்து, பல்கலைக்கழகத்துக்கு வரும் பெண்ணா என்று தெரியவில்லை... 'அடியே... இன்னைக்கு பஸ்சுல ஒரு ஜோக் நடந்தது. ஒருத்தன் நான் ஏறினதிலிருந்து என்னையே உத்து உத்துப் பாத்துகிட்டு வந்தான். நானும் கண்ண எடுக்காம, அவனையே பார்த்தேனா... அவன் அப்பவும் அந்தப் பக்கம், இந்தப் பக்கம் திரும்பல! படக்கென்று கண் அடித்து, வாயைக் குவித்தேன் பாரு... அவ்வளவு தான்! ஆளு அரண்டுட்டான். இன்னைக்கு நைட் இத நினைச்சு நினைச்சு பாயைப் பிராண்டிக்கிட்டு இருப்பான்...' என்று சொல்லி, கெக்கேபிக்கே என சிரிக்க, அவள் தோழியரும் கோரசாக ஓவென்று கத்தி, அந்த கட்டடமே அதிரும் அளவுக்கு பலமாக சிரித்தனர்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த என் மனநிலையை விளக்க, ஒரு குயர் பேப்பர் பத்தாது. அவர்கள் சிரிப்புக்கு பொருள், உங்களுக்கு விளங்கி இருக்கும் என்றே நினைக்கிறேன். பெண்களின் இத்தகைய முன்னேற்றம், சினிமா, தொலைக்காட்சிகளின் தாக்கத்தின் விளைவு.

அத்துடன், பெற்றோரின் வளர்ப்பு முறை மற்றும் பெற்றோரே பிள்ளைகளுக்கு முன்னுதாரணமாய் இருக்கத் தவறுவது, தெளிவான சிந்தனை இல்லாதவர்களுடைய தோழமை... இன்னும் பிற காரணங்களால், இளவயதிலே சில பெண்கள் இத்தகைய மனச்சிதைவுக்கு ஆளாகின்றனர்.

பெண்களின் பருவ வயதில் உடல், மனம் என்று பலவித குழப்பங்கள். இதில், சினிமாக்காரர்கள் வேறு கண்டதும் காதல், காணாமலே காதல், சொல்லாமலே காதல், சொன்னால் தான் காதலா என்று, காதலை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

அவர்கள் படத்து கதாநாயகிகள், ஆடை எங்கே என்று தேடுவது போல், ஆடை அணிந்து நடப்பர். அதைப் பார்த்து சின்னப் பையன் முதல், 90 வயது முதியவர் வரை, 'ஆ'வென்று பார்ப்பர். இந்த கதாநாயகி, அவர்களைப் பார்த்து கண்களை சிமிட்டியும், கன்னத்தை தட்டியும் ஒய்யாரமாக நடந்து செல்வார்.

இந்த இயக்குனர்கள், எந்த நாட்டில் தான் வாழ்கின்றனரோ! இவர்கள் வீட்டுப் பெண்கள், ஒரு வேளை, இப்படித்தான் ஆடை அணிந்து காட்சி அளிப்பரோ என்னவோ! இந்த சினிமா, தொலைக் காட்சிகளின் தாக்கம்தான், நான் பல்கலைக்கழகத்தில் கேட்டது.

படிக்க வேண்டிய வயதில், தம்மை நிலை நிறுத்திக் கொள்ள, கல்வி கற்கும் வயதில் உள்ள பெண்கள், எவ்வளவோ உயரத்திற்கு செல்ல வேண்டிய இளம் மொட்டுகள், கருகி விடாமல் இருக்க, நீங்களும், உங்களைப் போன்றவர்களும் தொடர்ந்து எழுதிக்கிட்டே இருக்கணும்... எனக் கூறி விடைபெற்று எழுந்தார். காபி கொடுத்து வழி அனுப்பினேன்!

கோவையிலிருந்து வாசகர் எஸ்.பாலசுப்ரமணியம் எழுதிய கடிதம்:

இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்கும், ஒரு பொதுப் பிரச்னையில், தங்களது கவனம் ஈர்க்க வேண்டி இக்கடிதம் எழுதுகிறேன்.

தமிழகத்தில், 1.7 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் இருப்பதாக, 'சர்வே' சொல்கிறது. இதில், 1 சதவீதத்திற்கும் குறைவானவர்கள் தான், 'மானியம் வேண்டாம்...' என்று எழுதிக் கொடுத்துள்ளனர். ஆனால், உண்மையில் குறைந்தது, 20 சதவீதம் பேராவது, மானியம் பெற தகுதி இல்லாதவர்களாக இருப்பர்.

கோடிக்கணக்கான பணம், மானியம் என்ற பெயரில் வீணாகிக் கொண்டிருக்கிறது. 'சும்மா வரும் பணத்தை எதற்கு விட வேண்டும்...' என்று, பெரிய கோடீஸ்வரன் கூட நினைப்பதால் தான் இந்நிலை! பூனைக்கு யார் மணி கட்டுவது என்று, எல்லாரும் நினைத்து, அவரவர் வேலையை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

'தினமலர்' இதழுக்கென்று ஒரு பாரம்பரியம் உள்ளது. எத்தனையோ சமூக சேவைகளை சத்தமில்லாமல் செய்து வருவதை அறிவேன். அதிலும், அந்துமணிக்கென்று ஒரு பெரிய வாசகர் வட்டம் உள்ளது. நீங்கள், வாரமலர் இதழ் மூலமாக வாசகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தால், நிச்சயம் ஆயிரக்கணக்கான பேர், ஏன் லட்சங்களில் கூட, 'மானியம் வேண்டாம்...' என்று எழுதிக் கொடுக்கலாம். அப்படி மானியம் வேண்டாம் என்று எழுதிக் கொடுப்போருக்கு பிரதி உபகாரமாக அல்லது மரியாதை செய்யும் பொருட்டு, தாங்கள் கையெழுத்திட்ட நன்றி கார்டு (வழக்கம் போல் முகமூடி அணிந்த புகைப்படத்துடன்) அனுப்பி வைத்தால், தங்களது வாசகர்கள் மனம் குளிர்ந்து போவர்.

உங்களது பலம் முழுமையாக உங்களால் அறியப்படாமல் இருக்கலாம் அல்லது நீங்கள் அறிய விரும்பாமல் இருக்கலாம். உங்களது வார்த்தைக்கு, தமிழகத்தில் ஒரு பெரிய மரியாதை உள்ளது. அதைப் பயன்படுத்தி, மக்களின் வரிப்பணம் வீணாகாமல், சேமிக்க உதவலாமே!

பின்குறிப்பு: என் வீட்டில் வைத்திருக்கும் சமையல் எரிவாயு இணைப்பிற்கு, மானியம் வேண்டாமென்று எழுதிக் கொடுத்து, சில மாதங்கள் ஆகின்றன.






      Dinamalar
      Follow us