தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : பிப் 14, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 14, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சு.சமுத்திரம் எழுதிய, 'எனது கதைகளின் கதைகள்' என்ற நூலை படிக்க நேர்ந்தது. அதில்: மதுரைக்கு அருகே, கிடாரிப்பட்டி என்று ஒரு கிராமம். அங்கே நிலச்சீர்திருத்தச் சட்டத்தால் கையகப்படுத்தப்பட்ட மிகுதி நில வினியோகம் பற்றி கண்டறிய, வானொலி சார்பாக சென்றிந்தபோது, ரசமான செய்தி ஒன்று கிடைத்தது.

அந்த கிராமத்திலும், அதன் சுற்று வட்டாரத்திலும், முக்குலத்தோரில், கள்ளர் பிரிவினர் அதிகம். இவர்களுக்கு அடுத்தப்படியாக முஸ்லிம்கள் உள்ளனர். நாடார்கள் மற்றும் மூப்பனார்களும் உண்டு. பொதுவாக, இப்பகுதியில் ஜாதிச் சண்டையோ, சமயச் சண்டையோ கிடையாது; அதுவும், இந்து -- முஸ்லிம் என்ற பேதம் எள்ளளவும் இல்லை.

காரணம், இப்பகுதிகளில், 'குடிகள்ளன்' என்ற முறைமை, இன்னமும் புழக்கத்தில் இருக்கிறது. அதாவது, சிறுபான்மையினரான ஒவ்வொரு முஸ்லிம் குடும்பத்திற்கும், ஒரு கள்ளர் குடும்பம், அதன் நல்லது, கெட்டதுகளை கவனித்துக் கொள்ளும். இதற்கு குடிகள்ளன் குடும்பம் என்று பெயர்.

இந்தக் குடும்பத்திற்கும், சம்பந்தப்பட்ட முஸ்லிம் குடும்பத்திற்கும் சகோதர பந்தம் உண்டு. இந்த முறை, இத்தகைய இரு குடும்பங்களுக்கிடையே காலங்காலமாக இருந்து வருகிறது. உதாரணமாக, ஒரு முஸ்லிம் குடும்பத்து பெண்ணை, வெளியூரில் கட்டிக் கொடுத்து, அங்கே அவள் பல இன்னல்களுக்கு ஆளானால், அவளுடைய சொந்த ஊர் குடிகள்ளன், தன் சகாக்களோடு அவளது புகுந்த வீட்டிற்குப் போய், அவளை துன்புறுத்தியவர்களை மரத்தில் கட்டி வைத்து விடுவார்.

ஒரு முஸ்லிமிற்கும், ஒரு கள்ளருக்கும் ஏதாவது தகராறு வந்தால், முஸ்லிம் பக்கமே நிற்பார் இந்த குடிகள்ளன். இவருடைய கல்யாணத்தில், அந்த முஸ்லிம் வீட்டிற்கு முதல் வெற்றிலை; அந்த முஸ்லிம் வீட்டுக் கல்யாணத்தில் இவருக்கு முதல் பாக்கு.

இச்செய்தி, தமிழகத்தில் பெரும்பாலோருக்கு, குறிப்பாக, நம் எழுத்தாளர்களுக்கு தெரியாது...

- இதைப் படித்த போது, இந்தியா முழுக்க, 'குடிகள்ளன்' முறைமை இருந்திருக்கக் கூடாதா என்று நினைத்தேன். போனது போகட்டும்... இப்போதாவது இந்த முறைமை தழைக்க, நாமெல்லாம் பாடுபடுவோமே என்று எண்ணினேன்!

சு.சமுத்திரம் எழுதிய அதே நூலின் இன்னொரு அத்தியாயத்தில், பலே பேர்வழி ஒருவர் பற்றி தமாஷ் குறிப்பு ஒன்று தருகிறார். இதோ, அது: கர்நாடக மாநிலம், பெங்களூரில், மத்திய அரசு விளம்பரத்துறை தலைமை அதிகாரியாக பணியாற்றும் போது, அங்குள்ள தலைமை கணக்காயர் அலுவலகத்தில் ஒரு சம்பவம் நடந்தது. அது...

மங்களூருக்கு, ஒரு ஆடிட்டரை, 'டூர்' அனுப்பினர். ஒரு வாரத்தில் வர வேண்டியவர் ஒரு மாதமாகியும் வரவில்லை.

அதிகாரிகள் குழம்பிப் போய் நின்றபோது, ஒருநாள், வந்து சேர்ந்தார் அந்த ஆடிட்டர். ஒரு வாரத்திற்குள் திரும்பாமல், ஒரு மாதத்திற்குப் பின் வந்ததற்கு அவரிடம், எழுத்து மூலம் விளக்கம் கேட்கப்பட்டது.

உடனே அந்த சூரர், தனக்கு இலாகாவிலிருந்து, 'டூர் அட்வான்ஸ்' எனப்படும் முன்பணம் அனுப்பப்படவில்லை என்றும், கையில் காசில்லாததால், ஒரு வாரகாலப் பணியை முடித்து, மங்களூருக்கும், பெங்களூருக்கும் இடையேயுள்ள, 300 கி.மீ., தூரத்தை, 22 நாட்களாக நடந்து வந்ததாக எழுதிக் கொடுத்தார்.

இதற்கு தனக்கு, 'நடை அலவன்ஸ்' கொடுக்க வேண்டும் என்றும், ஒரு சட்ட விதியையும் குறிப்பிட்டார். அதிகாரிகளால் அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை. அவர் கையைக் காலைப் பிடித்து, ஐந்து நாட்கள் நடந்ததாகவும், எஞ்சிய நாட்களில் விடுமுறையில் இருந்ததாகவும் எழுதித் தரும்படி கேட்டனர்.

அவரும் போனால் போகட்டும் என்பது போல் எழுதிக் கொடுத்தார். இதை, 'நடந்தது' என்ற தலைப்பில், கல்கியில் சிறுகதையாக எழுதினேன். அரசாங்க ஊழியர்கள் பலே பேர்வழிகள் என்பதற்கு, இது இன்னொரு உதாரணம்!

வாசகர் ஒருவர், 'ஆப்கன், நம் பாரத நாட்டின் ஒரு பகுதி தான்; அதற்கு இலக்கிய ஆதாரம் உள்ளது...' எனக் குறிப்பிட்டு ஒரு கடிதம் எழுதியுள்ளார். கடிதம் இதோ: முற்காலத்தில், பாரதத்தின் ஒரு பகுதியாக ஆப்கானிஸ்தான் இருந்தது. ஆப்கானிஸ்தானிலுள்ள முக்கிய நகரங்களில் ஒன்றான காந்தகார் நாட்டு மன்னரின் மகளான காந்தாரியைத்தான் மகாபாரதத்தில் வரும் திருதராட்டிர மன்னர் மணந்தார்.

தங்கை காந்தாரியுடன் ஹஸ்தினாபுரம் வந்தவன் தான் சகுனி. இவன் செய்த சூழ்ச்சிகளின் காரணமாகத் தான் பாரதப் போரே நடந்தது.

இப்போர் துவங்குவதற்கு முன், மதி மந்திரியும், தம்பி முறையும் உடைய விதுரன், அண்ணன் திருதராட்டிரனுக்கு அறிவுரை கூறி, 'சகுனி, அருகில் வைக்க தகுதியுள்ளவன் அல்ல; அவனை அனுப்பி விடுக...' என்றார்.

அறிவுரை ஏற்கப்படவில்லை. அதனால், பாரதப் போர் நடந்து, சகுனியும், அவன் மருமகன்களாகிய துரியோதனனும், அவனின், 99 சகோதரர்களும், பல்லாயிரக்கணக்கான வீரர்களும் மாண்டனர்.

இதுபோல், ஆப்கானிஸ்தானிலுள்ள காந்தகாரில் பதுங்கியிருந்த பின்லேடனின் சூழ்ச்சியால் தான், அங்கு பெரும் போர் துவங்கி, நூற்றுக்கணக்கான மக்கள் மடிந்தனர் என்று கூறுவதுண்டு.

இப்போர் துவங்குவதற்கு முன், பாகிஸ்தான் அதிபர், ஆப்கானிஸ்தான் அதிபரிடம் தீவிரவாதியான பின்லேடனை நாட்டை விட்டு அனுப்பி விடுமாறு அறிவுரை கூறினார்; அதை அவர் ஏற்கவில்லை. விளைவு: பெரும் போர்!

வியாச முனிவர் எழுதிய மகாபாரதத்தில் வரும் சூதாட்டத்தை மையமாக வைத்து பாரதியார் எழுதிய, 'பாஞ்சாலி சபதம்' கவிதை நூலில், கீழே குறிப்பிட்டுள்ள வரிகளை நோக்குக:

திருகு நெஞ்சச் சகுனி ஒருவன்.

செப்பு மந்தரஞ் சொல்லுவதில் நன்றே!

அருகு வைக்கத் தகுதியுள்ளனோ...

அவனை வெற்புடைப் போக்குதி அண்ணே!

'வெற்புடை போக்குதி' - என்ற பதத்திற்கு, 'வெற்புடை போக்குதி' -- காந்தாரத்து மலை நாட்டிலிருந்து வந்தவனாதலால், சகுனியை மீண்டும் அவனது மலை நாட்டுக்கு அனுப்பி விடுக...' என்று பொருள் விளக்கியுள்ளார் பாரதியார்.

அன்றும், இன்றும் ஒரு சில கெட்டவர்களால் நாட்டிற்கு பேரழிவு உண்டாகிறது என்பது தெரிகிறது.

- தூர்தர்ஷனில் ஒரு காலத்தில் ஒளிபரப்பான, 'மகாபாரதம்' தொடரில் நடித்த சகுனியின் முகம் நினைவுக்கு வருகிறதா?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us