sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 18, 2025 ,ஐப்பசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பா.கே.ப.,

/

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : மார் 20, 2016

Google News

PUBLISHED ON : மார் 20, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போலீசார் என்றாலே, லஞ்ச - லாவண்யத்தில் உழல்பவர்கள் என்ற, 'நல்ல' பெயரை மக்கள் மத்தியில் பெற்று விட்டனர்.

போலீஸ்காரர்கள், 'மாமூல்' வாங்குவது பற்றி, பத்திரிகைகளில் ஏராளமாக, 'ஜோக்'குகள் வெளியாகின்றன.

சாலை ஓரம் புல்லட்டில் நிற்கும், 'சார்ஜெண்டு'களை கண்டால், 'டேய், வசூல்படை, வேட்டையில் இறங்கி விட்டது...' என, பொது மக்கள் சாதாரணமாக பேசும் நிலையை இன்று காண முடிகிறது.

'கவுரவமான உத்தியோகம், கைநிறைய சம்பளம், குடியிருக்க வீடு, குறைந்த விலையில் அத்தியாவசிய உணவுப் பண்டங்களை அரசு வழங்கும் போது, இவர்கள் ஏன் இப்படி நடந்துகிறாங்க...' என, நான் எண்ணுவது உண்டு.

என்னுடைய இந்த குழப்பத்திற்கு விடை அளிப்பது போல, சில விஷயங்களை சமீபத்தில் கேட்க முடிந்தது.

நண்பர் ஒருவருக்கு சில மாதங்களுக்கு முன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு வேலை முடித்தாக வேண்டும். என்னையும், லென்ஸ் மாமாவையும் உடன் அழைத்துச் சென்றார்.

நண்பரும், லென்ஸ் மாமாவும் குறிப்பிட்ட செக் ஷன் கிளார்க்கிடம் பேசிக் கொண்டிருந்தனர். வெளியே, இரு போலீசார் பேசியபடி இருக்க, அவர்கள் அருகே சென்ற நான், காதை மட்டும் அவர்கள் திசையில் திருப்பி, அப்பாவி போல நின்று கொண்டேன்.

'மச்சான்... அந்தா வர்றான் பாரு திருட்டு கம்மனாட்டி... மூணு வருஷம் ஆச்சு... அந்தமானுக்கு ஒரு கேஸ் என்குயரிக்கு எங்கள கூட்டிட்டுப் போனான். போகும்போது தலைக்கு, 500 ரூபா கொடுத்தாங்க. போய் வந்து, பயணப்படி எழுதிக் குடுத்தோம். அவன் மட்டும், தன் பயணப்படியை வாங்கிக்கிட்டான்; இன்னும் எங்களுக்கு வந்து சேரல...' என்றார், ஒரு போலீஸ்காரர்.

அவர், தன் சகாவிடம், 'அந்தா வர்றான் பாரு...' என்றதுமே, அடிக்கண்ணால் நானும் பார்த்தேன். ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் வருவது தெரிந்தது. அவர், எங்களை நெருங்கும்போது, இரு போலீசாரும் தம் பேச்சை, 'டக்'கென நிறுத்தி, 'அட்டென்ஷன்'ல் நின்று, 'குட்மார்னிங் சார்!' என்றனர்.

அதைப் பார்த்ததும் எனக்கு சிரிப்பு வந்தது. அப்படியே நகர்ந்து, வேறு இரண்டு போலீஸ்காரர்கள் பேசுவதை கேட்டேன்...

'நாசமாப் போக... லீவு, 'சாங்ஷன்' பண்ண, 500 ரூபா கேக்குறான்; அழுது தொலைச்சேன். என்ன செய்யுறது... அவசரமா ஊருக்குப் போகணும். அம்மாவுக்கு ரொம்ப முடியலயாம்... போன் வந்தது...' என்றார், ஒரு போலீஸ்காரர்.

உடன் வந்த போலீசாருக்கு பயணப்படி வாங்கிக் கொடுக்காத உயர் அதிகாரிகளும், லீவு, 'சாங்ஷன்' செய்ய லஞ்சம் வாங்கும் போலீஸ் அலுவலர்களும் இருக்கும்போது, அவர்களுக்கு கீழ் உள்ளவர்களின் செய்கையை, ஓரளவு புரிந்து கொள்ள முடிந்தது.

இன்னும் இரு போலீசார் ஏதோ காரசாரமாக பேசுவதை அவர்கள் முகக் குறிப்பிலிருந்து அறிந்து, அருகே சென்று, காதைக் கொடுத்தேன்...

'அந்த ஏரியாவுல, கள்ளச் சாராயம், பிக்பாக்கெட், பிராத்தல் எல்லாத்திலேயும் கில்லாடிப்பா அவன்... அவனுக்கு பாராட்டு விழாவாம்... அவன் ஏதோ நன்கொடை கொடுக்கிறானாம்... அதுக்கு நம்ம அமைச்சர் (அமைச்சரின் பெயர்) தலைமை தாங்கி, 'கொடை வள்ளல்'ன்னு அவனைப் பாராட்டி பேசுறார். என்ன சொல்றது... நம்மை எப்படி மதிப்பான் அந்த கேடி...' என்றார்.

'எங்க ஏரியாவுலே, ரவுடிகளோட அட்டகாசத்தை அடியோட நிறுத்திட்டார் புதுசா வந்த இன்ஸ்பெக்டர்... (இன்ஸ்பெக்டரின் பெயர்) பதவி ஏத்து ஒரு வாரத்தில, எல்லா ரவுடிகளையும் வரவழைச்சு, 'நான் இந்த ஸ்டேஷன்ல இருக்கிற வரை, வாலச் சுருட்டிட்டு இருக்கணும்...' என, மிரட்டியிருக்கார். அதுல ஒரு ரவுடி, கட்சிக்காரன்; திமிரா பேசினான்... 'நல்லவிதமா சொல்றேன்... கேக்காம வேலையக் காட்டுனே, அடிச்சு ரயில்வே தண்டவாளத்துல தூக்கி வீசிருவேன்; ஜாக்கிரதை! மேக்சிமம் உங்க கட்சிக்காரங்க என்ன செஞ்சிரப் போறாங்க, எனக்கு, 'டிரான்ஸ்பர்' போடுவாங்க... ஆனா, உனக்கு உயிர் இருக்காது...' என மிரட்டிய பின், இப்ப ரவுடிகளின் அட்டகாசம் சுத்தமா இல்ல...' என்றார்.

போலீஸ் துறையின், வெவ்வேறு முகங்களை அன்று காண முடிந்தது.

தென் அமெரிக்க நாடான பிரேசிலில், சவாபோ நகரில் வசிக்கும் அன்பர் ஒருவரை, அறிமுகம் செய்தார் நண்பர் ஒருவர். அவர் தமிழர் தான், இருந்தாலும், தமிழில் சரளமாகப் பேசத் தெரியவில்லை. அவரது மூதாதையர் டிரினிடாட் டுபாக்கோ என்ற நாட்டுக்கு, கரும்பு வெட்டும் தொழிலாளியாக தமிழகத்தில் இருந்து வெள்ளையர்களால் அழைத்துச் செல்லப்பட்டவர்களாம்.

தென் அமெரிக்க நாடுகள் பற்றிய சுவையான பல விஷயங்களைக் கூறினார். ஓட்டல்களில் பண்டங்கள், எடைக்கு ஏற்ப தான் விலையாம்! அதாவது, பொங்கல், வடை, நாலு இட்லி, ஒரு மசால் தோசை சாப்பிடுகிறோம் என்றால், அவற்றை ஒரு தட்டில் வைத்து எடை போட வேண்டும். 500 கிராம் இருந்தால் ஒரு விலை, 650 கிராம் இருந்தால் ஒரு விலையாம்... ஆச்சரியமாக இருந்தது.

'தென் அமெரிக்க நாடுகள் சர்வாதிகார ஆட்சிக்குப் பெயர் பெற்றவை. 10 ஆண்டுகள் சர்வாதிகார ஆட்சி நடத்தி, கோடி கோடியாய் கொள்ளையடிப்பர்; நாட்டில் எதிர்ப்பு கிளம்பும். உடனே, சேர்த்த பணத்துடன், ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுந்து விடுவர். இதுதான், காலம் காலமாக இந்த நாடுகளில் நடந்து வருகிறது...' எனக் கூறியவர், சற்று இடைவெளி விட்டு மீண்டும் தொடர்ந்தார்...

'அப்படிப்பட்ட ஒரு சர்வாதிகாரி தான் மார்கோஸ் பெரஸ்; இவர், தென் அமெரிக்காவில் உள்ள வெனிசுலா நாட்டை, 10 ஆண்டுகள் சுரண்டி, ஸ்பெயின் நாட்டுக்கு ஓடிப் போனவர்.

'மற்றொரு தென் அமெரிக்க நாடு பெரு; அதன் ஜனாதிபதி புஜிமோரி. இவரது பெற்றோர் ஜப்பானியர்; பெருவில் குடியேறியவர்கள். புஜிமோரி, பெருவிலேயே பிறந்து, வளர்ந்து ஆட்சியை பிடித்த பின், பெருந்தொகையை சுருட்டி, ஜப்பானுக்கே ஓடிப் போனார். இருவரும் சுருட்டியது, 1,000 கோடி ரூபாய்...' என்றார்.

'ப்பூ... இதென்ன பிரமாதம்... இங்க, ஆயிரம் கோடியெல்லாம் ஸ்டேட் லெவல்லயே முடிச்சிருவோம். ஆல் இண்டியா லெவல்ன்னா ஆயிரம் கோடிங்கறது ஆறுமாச வசூல்...' என்றேன் அவரிடம்!






      Dinamalar
      Follow us