sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 18, 2025 ,கார்த்திகை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பா.கே.ப.,

/

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : ஏப் 24, 2016

Google News

PUBLISHED ON : ஏப் 24, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'பத்திரிகைகளை நாளேடு, வார ஏடுன்னு சொல்கின்றனரே... 'ஏடு'ங்கிறது ஓலைச் சுவடியை குறிக்கும் சொல். அதன்பின், அச்சிடப்பட்ட இதழ்களையும் ஏடுன்னு சொல்றது வழக்கமாகி விட்டது. ஆனா, புத்தகத்தை மட்டும் நூல்ன்னு சொல்றோமே தவிர, ஏடுன்னு ஏன் சொல்றதில்ல?' என்று நடுத்தெரு நாராயணனிடம் கேட்டேன்.

'ஏடுங்கிறது புத்தகத்தையும் குறிக்கிற சொல் தான். 'ஏட்டு சுரைக்காய் கறிக்குதவாது'ன்னு சொல்றதில்லயா...' என்றார் நடுத்தெரு நாராயணன்.

'ஏட்டுச் சுரைக்காய் உதவாதுன்னா, கான்ஸ்டபிள் சுரைக்காய் மட்டும் உதவுமோ...' என்று கிண்டலடித்தேன்.

'ஏடுன்னு சொன்னதும், எனக்கொரு நிகழ்ச்சி ஞாபகத்துக்கு வருது. 50 வருஷத்துக்கு முன், என் நண்பரொருவர் ஏட்டுச் சுவடிகள் ஆராய்ச்சி செய்கிற ஏதோ ஒரு இலாகாவில் வேலை பார்த்து வந்தார்.

'அவரோட ஆபீசுக்கு ஒரு நாள், ஒரு கடிதம் வந்ததாம். யாரோ கிராமத்து ஆள் ஒருத்தன் எழுதியிருந்தானாம்...'

'எதைப் பற்றி?'

'தன்னிடம் கந்த புராண ஏட்டுச் சுவடிகள் முழுமையாக இருப்பதாகவும், அது அங்கிருந்து வீணாவதற்குப் பதில், உங்கள் ஆராய்ச்சி நிலையத்துக்கு தேவைப்பட்டால், நூறு ரூபாய் விலைக்கு அனுப்பி வைப்பதாகவும் எழுதியிருந்தானாம்...'

'அட பரவாயில்லயே...'

'அந்த சமயத்தில், ஏட்டுச் சுவடி ஆராய்ச்சி இலாகாவில், கந்த புராண ஆராய்ச்சி நடந்தது. பல ஏட்டுப் பிரதிகளை ஒப்பு நோக்கி, அசல் எது, இடைச் செருகல் எது என்று தெரியாமல் மண்டையை உடைத்துக் கொண்டிருந்தனர்...

'இப்படி ஒரு கடிதம் வந்ததும் ரொம்ப மகிழ்ச்சி அடைந்தனராம். கட்டாயம் இது, நம் குழப்பத்தைத் தீர்க்கப் போகிறதுன்னு நினைச்சு, அந்த ஏட்டுச் சுவடியை விலைக்கு வாங்க முடிவு செய்தார்களாம்.

'பணத்தை கொடுத்து வாங்கியும் விட்டனர்; பிரமாண்டமான பார்சலும் வந்து விட்டது...'

'சரி தான்... அந்தக் கட்டில் ஒன்றுமே இல்லயாக்கும்?'

'அப்படியெல்லாமில்ல, வந்தது கந்த புராணச் சுவடிகள் தான். ஆனா, அத்தனை பாட்டுகளும் மிகச் சாதாரணமாகவும், கொச்சையாகவும் இருந்தனவாம். இந்தப் புதுக் குழப்பம் வேணாமேன்னு அந்தச் சுவடிகளை ஒரு பக்கம் எடுத்து வைச்சுட்டாங்களாம். ரெண்டு மாசம் கழிச்சு, அதே கிராமத்திலிருந்து இன்னொருத்தர் கடிதம் எழுதியிருந்தாராம்.

'கடிதத்தில், 'உங்களுக்கு இங்கிருந்து வந்த கந்த புராணச் சுவடிகளை உடனே, திருப்பி அனுப்பவும். எவ்வளவு பணம் நீங்கள் கேட்டாலும் சரி. அந்தக் கந்த புராணம் எங்கள் கிராமத்து கோவில் சொத்து. எங்கள் பாட்டன் இயற்றிய அருமையான (!) பாடல்கள் அவை. நான் தான் கோவில் நிர்வாகி. என் தம்பி திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவன். ஆண்டுதோறும் கோவில் திருவிழாவில், அந்தக் கந்த புராணத்தை பூஜையில் வைத்து எடுத்து வாசிப்போம். என் தம்பி, இதை எதிர்த்து வந்தான். எங்களுக்குத் தெரியாமல் அந்த சுவடிகளை அனுப்பி விட்டான். தயவு செய்து உடனே, திருப்பி அனுப்புங்கள். இங்கே ஊரில் ஒரே பரபரப்பாக இருக்கிறது'ன்னு எழுதியிருந்தது...' என்றார் நடுத்தெரு நாராயணன்.

'பரவாயில்ல, 100 ரூபா திரும்பக் கிடைச்சிருக்கும்!' என்றேன் நான்.

'மதுரையில், மங்கம்மா சத்திரம்ன்னு பிரபலமான கட்டடம் ஒண்ணு உண்டு. நானும் பாத்திருக்கிறேன். ஆனா, யார் இந்த மங்கம்மான்னு தான் தெரியல...' என்று, தன் சந்தேகத்தை என்னிடம் கேட்டார், நண்பர் அன்வர் பாய்.

'தமிழகத்தில், மதுரையை தலைநகராகக் கொண்டு அரசாண்ட புகழ்பெற்ற அரசி தான் மங்கம்மாள். இவர், மதுரை நாயக்க மன்னரான, சொக்கநாத நாயக்கருடைய மனைவி.

'ஏழு வருஷம் ஆட்சி புரிந்தபின், நோய்வாய்ப்பட்டு, 1689ல் இறந்து போனார், சொக்கநாத நாயக்கர். இவரோட மகன் நான்காம் முத்து வீரப்பர்; அதற்குபின், தம் பேரனாகிய இரண்டாம் சொக்கநாதருக்கு காப்பாளராக இருந்து நிர்வாகத்தை நடத்தினார் மங்கம்மாள்.

'மங்கம்மாள் திறமை வாய்ந்தவர்; வள்ளல். இவருடைய முன்னோரான திருமலை நாயக்கருடைய ஆட்சி போன்று, இவருடைய ஆட்சியும் ரொம்ப சிறப்பா இருந்திருக்கு. 1693ல் அவுரங்கசீப்பின் படைத் தலைவர் சுல்பிகர் கானின் படையெடுப்பைத் தவிர்க்க, முகலாயருக்கு கப்பம் கட்ட இசைந்தார் மங்கம்மாள்.

'இவர் ஆட்சி செய்த, 17 ஆண்டுகளில் சாலைகள், சத்திரங்கள், குளங்கள் மற்றும் தங்கும் விடுதிகளை அமைத்தார்; கோவில் திருப்பணிகள் செய்தார். 1706ல், இரண்டாம் சொக்கநாதர் பட்டத்துக்குரிய வயதை அடைந்ததும் அவரிடம் ஆட்சியை ஒப்படைத்தவர், அதே வருஷம் காலமானார்...' என்றேன்.

எப்போதோ படித்த சரித்திரம், அன்வர் பாயின் சந்தேகத்தை போக்க உதவியது!

டில்லி, ஆக்ரா போன்ற இடங்களுக்கு முதன் முதலாகச் சென்று திரும்பி இருந்தார் நண்பர் ஒருவர். அவருடைய அனுபவத்தைக் கேட்டேன். அவர் சொன்னது:

தாஜ்மகாலின் அழகை வெகுநேரம் ரசித்தபின் வெளியே வந்தேன். அங்கு, பலர் சலவைக் கல்லால் செய்யப்பட்ட தாஜ்மகால் பொம்மைகளை விற்றுக் கொண்டிருந்தனர். ஓர் ஓரமாக நின்ற வயதான விற்பனையாளரிடம், தாஜ்மகால் பொம்மையின் விலை கேட்டேன்.

அவர், 'உனக்கு கல்யாணமாகி விட்டதா?' என, அமைதியாகக் கேட்டார்.

'தாஜ்மகால் பொம்மையின் விலை கேட்டால், அனாவசிய கேள்வி கேட்கிறீர்களே...' என்றேன்.

'நான் பிரம்மச்சாரிகளுக்கு தாஜ்மகால் பொம்மை விற்பதில்லை. அதனால் தான் கேட்டேன்...' என்றார்.

நான் மணமானவன் தான் என்பதை தெரிவித்து, அவரது விற்பனை முறைக்கு விளக்கம் கேட்டேன்.

அதற்கு அவர், 'முகலாய அரசர்களுக்கெல்லாம், 20 - 30 மனைவியர் இருந்தனர். ஆனால், தனிப்பட்ட முறையில் அவர்களுக்கு எந்த மனைவியிடமும் காதல் இருக்காது. அப்படிப்பட்ட வம்சத்தில் பிறந்தவன் ஷாஜகான். அவன், மும்தாஜ் மீது எவ்வளவு காதல் வைத்திருந்தால், இவ்வளவு பெரிய, நினைவுச் சின்னத்தை எழுப்பியிருப்பான். மணமாகாதவர்களுக்கு இதன் அருமை தெரியாது; புரியாது, 'பணத்தை வாரிக்கொட்டி பெருமைக்காகக் கட்டியிருக்கிறான்...' என்பர். அதனால்தான், மணமாகாதவர்களுக்கு நான் விற்பதில்லை...' என்றார். நான் நெகிழ்ந்து போனேன், என்று முடித்தார் நண்பர்.

வெயிலின் கொடுமையைப் பற்றி அங்கலாய்த்துக் கொண்டிருந்தேன்.

'சூரியனை ரொம்ப திட்டாதே... அப்புறம் அது தன், 12 ஆயிரம் டிகிரி பாரன்ஹீட் உஷ்ணத்தோடு ஒரு பெருமூச்சு விட்டதோ, நீ சாம்பலாகிடுவே...' என்ற லென்ஸ் மாமா, தொடந்து, 'பூமியை விட, 10 லட்சம் மடங்கு பெரிசா இருந்தாலும், மற்ற நட்சத்திரங்களோடு ஒப்பிட்டால், சூரியன் ரொம்ப அற்பமான நட்சத்திரம். பெட்டல் கியூஸ் என்ற நட்சத்திரம் தான், சூரியனைப் போல், 10 லட்சம் மடங்கு பெரிசு...' என்றார்.

'இந்த சின்ன சூரியனுக்கே நம்மால் பதில் சொல்ல முடியல... இன்னும் பெரிசா ஒண்ணு வந்து நின்னா அவ்வளவு தான்...' என்றேன்.

'அந்த பயம் வேண்டியதில்ல...' என்ற மாமா, 'சூரியனை விட்டால், அடுத்த ஸ்டார் ஸ்டாப் எவ்வளவு தூரத்தில் இருக்கு தெரியுமா? இப்போதுள்ள சூரிய தூரத்தைப் போல, 2 லட்சத்து, 65 ஆயிரம் மடங்கு அதிக தூரத்தில் இருக்கு...' என்றார்.

நிம்மதிப் பெருமூச்சு விட்டேன்.






      Dinamalar
      Follow us