தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : ஜன 02, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 02, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நம் இந்திய மக்களில் பெரும்பாலானவர்களுக்கு கல்வி அறிவு இல்லை; அவர்களை கல்வி அறிவு பெற்றவர்களாக்க நம் அரசு பெரும் முயற்சி எடுத்து வருவது நாம் அறிந்ததே!

முதியோர் கல்வி, கரும்பலகை என பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறோம். இந்தியாவிலேயே கேரள மாநிலம் தான் முழுமையான கல்வி அறிவு பெற்ற மாநிலம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில், கன்னியாகுமரி மாவட்ட மக்கள் முழுமையான கல்வி அறிவு பெற்றவர்கள். நம் நாட்டுக் கதை இப்படி இருக்க, முன்னேறிய நாடுகளின் வரிசையில் நிற்கும் கனடா நாட்டின் கதையைக் கேளுங்கள்... கனடா நாட்டு அரசில் பணியாற்றும் தமிழ் அன்பர் ஒருவரை சமீபத்தில் சந்தித்தபோது, அவர் கூறக் கேட்ட சமாச்சாரம் இது!

'வேர்ல்ட் லிட்டரசி ஆப் கனடா' என்ற அமைப்பில் பணியாற்றுகிறார் அந்த தமிழ் அன்பர். கனடா நாட்டு மக்களில் 50 லட்சம் பேருக்கு எழுத, படிக்கத் தெரியாது. (கனடாவின் மொத்த மக்கள் தொகை இரண்டு கோடி 70 லட்சம். இவர்களில் படிக்கத் தெரியாதவர்களின் சதவீதம்: 19) கல்வி அறிவு இல்லாத கனடாகாரர்களில் 15 லட்சம் பேருக்கு, தம் கார் டிரைவிங் லைசென்ஸ் எப்போது காலாவதியாகிறது என்பதை, லைசென்ஸ் புத்தகத்தைப் பார்த்து அறிந்து கொள்ளும் திறமை கிடையாது. இவர்களில் 26 லட்சம் பேருக்கு, மருந்து - மாத்திரை பாட்டில்களில், அவற்றை எவ்வாறு உட்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளதை அறிந்து கொள்ளும் திறன் கிடையாது.

ரோடில் உள்ள வழிகாட்டும் சின்னங்களில் எழுதப்பட்ட எழுத்துக்களைப் படித்து அறியும் திறன் 28 லட்சம் பேரிடம் இல்லை. இன்னும் சில லட்சம் பேருக்கு டெலிபோன் பில்லைப் பார்த்து, அதில் எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என்பதை அறிந்து கொள்ளும் திறன் கிடையாது. இதே போல, இன்கம்டாக்ஸ் பாக்கி அறிதல், டெலிபோன் டைரக்டரியில், 'எல்லோ பேஜ்' பார்த்து, முகவரி அறிதல் போன்றவை தெரியாது என்றார். (என்னடா இது... எழுதப் படிக்கத் தெரியாதவர் எண்ணிக்கை 50 லட்சம் தான் என்றார். இவர் சொல்லும் 26 லட்சம், 28 லட்சம் இன்னும் சில லட்சம் என லட்சக்கணக்கில் சொல்லிக் கொண்டே போகிறாரே... அப்படியானால் கனடா நாட்டு மக்கள் எவருக்குமே கல்வி அறிவு இல்லையா அல்லது அந்துமணி, 'டுபாக்கூர்' அடிக்கிறாரா என நினைக்கிறீர்கள் தானே... சிறு விளக்கம்: எழுத்து அறிவு இல்லாத 50 லட்சம் பேரில், இந்த இந்தத் தொகுதிகளில், அதாவது, சாலை விதி அறிவிப்புப் பலகை படிக்கத் தெரியாதவர், மருந்து பாட்டில்களில் எழுதியுள்ளதைப் படிக்கத் தெரியாதவர்... என இவை கணக்கிடப்பட்டுள்ளது. ஆக மொத்தம் படிப்பறிவில்லாதவர் எண்ணிக்கை 50 லட்சம் தான்!)

தமிழ் அன்பர் தொடர்ந்தார்... இன்னொரு ஆச்சரியமான கணக்கெடுப்பு பாருங்கள் அந்துமணி... கனடாவில் குடியேறிய இங்கிலாந்து நாட்டு மக்களை விட, கனடாவில் வசிக்கும் தெற்கு ஆசிய மக்கள் கல்வியில் சிறந்தவர்களாகவும், முன்னேறியவர்களாகவும் உள்ளனர். கனடாவில் வசிக்கும் தெற்கு ஆசிய மக்களில், 51 சதவீதத்தினர் பட்டப்படிப்பும், பட்ட மேற்படிப்பும், 78 சதவீதத்தினர் பள்ளி இறுதிப் படிப்பும் படித்தவர்கள். ஆனால், இங்கிலாந்தில் இருந்து கனடாவில் குடியேறியவர்களில் 17 சதவீதத்தினர் மட்டுமே பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு படித்தவர்கள். தெற்கு ஆசிய மக்களில், இந்தியர்கள் சிறப்பான இடத்தை வகிக்கின்றனர். கல்வி அறிவு அற்ற கனடா நாட்டு மக்களால் கனடா அரசுக்கும், வியாபாரிகளுக்கும் தினமும் பல லட்சம் பொருள் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது... கல்வி அறிவை இவர்களிடம் வளர்க்க பெரும் பொருட்செலவு செய்து வருகிறது கனடா அரசு என முடித்தார்.

'கனடாவிலேயே இந்த நிலை தானே...' என நாம் சட்டைக் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ள வேண்டாம். கல்வி அறிவு அற்றவர்களால் கனடாவுக்கு பல லட்சக்கணக்கில் இழப்பு என்றால், வளர்ந்து வரும் நம் இழப்பு - பல விதங்களிலும் எவ்வளவு என நினைத்துப் பாருங்கள்.

டெயீல் பீஸ்: அமெரிக்காவில், லாஸ் ஏஞ்சல்சில் ஒரு முறை நானும், லென்ஸ் மாமாவும், டாக்சி ஒன்றில் பயணம் செய்த பின், பணத்தை எடுத்துக் கொடுத்தார் மாமா. அங்கு, மீட்டர் கட்டணத்திற்கு மேல் சட்டப்பூர்வமாகவே, ஓட்டுனருக்கு, 10 சதவீதம், 'டிப்ஸ்' கொடுக்க வேண்டும். டாக்சி கட்டணம் 15 டாலர் வந்தது. அதற்கு மேல் 10 சதவீதம் வைத்து, மனக்கணக்கால் மொத்த பணத்தைக் கொடுத்தார் லென்ஸ் மாமா. அந்த ஓட்டுனர் பேனாவையும், பேப்பரையும் வைத்து, கை விரல்களையும் கூட்டிக் கழிக்கப் பயன்படுத்தி, பத்து நிமிடங்களுக்குப் பின், வாங்கிக் கொள்ள வேண்டிய தொகைக்கு குறைவான தொகையைக் கணக்கிட்டுக் கூறினார். ஐயா... கணக்கு இது தான் என அவருக்குப் புரியும்படி பேப்பரில் கணக்குப் போட்டுக் காட்டியதும், 'இந்தியாக்காரங்க, கணக்கிலே புலிதான்யா!' என பாராட்டி விட்டுச் சென்றார். 'ஆமா... எஸ்.எஸ்.எல்.சி.,யில் கணக்கு பாடத்தில் நான், 'பெயில்' என்பது இவனுக்கு எப்படித் தெரியப் போகிறது...' என, அங்கலாய்த்தபடி நடந்தார் லென்ஸ் மாமா. ***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us