PUBLISHED ON : மே 07, 2017

'வாய் உள்ள பிள்ளை பிழைக்கும்' என்பதை, சமீபத்தில், அனுபவப்பூர்வமாக நேரில் கண்டு உணர்ந்தேன்.
சென்னை வர, ஐதராபாத் விமான நிலையத்தில் காத்திருந்தேன். அதிகாலை, 5:00 மணிக்கே எழுந்து, அறையை காலி செய்து, ஆட்டோ பிடித்து, விமான நிலையம் வந்து சேர்ந்தால், 8:00 மணி விமானம், மதியம், 2:00 மணிக்குத்தான் புறப்படும் என, விமான நிலைய அதிகாரிகள் குண்டைத் தூக்கிப் போட்டனர்.
விமானத்தில், 'பிரேக் பாஸ்ட்' தருவர் என்ற நம்பிக்கையில் வந்த என் வயிறு, 'கப கப'வென பசிக்க ஆரம்பித்தது. வெயிட்டிங் அறையில் வந்து அமர்ந்தேன். அருகே, தமிழ் ஆசாமி போன்று ஒருவர் அமர்ந்து இருந்தார். இருந்தாலும் ஒரு சந்தேகம்; அதனால், இங்கிலீஷில், 'அடித்து' விட்டேன்...
'யூ தமிழ்நாடு... ஆர்...' என, அரைகுறையாக நிறுத்தினேன்.
அவர், இங்கிலீஷில் எனக்கு
அண்ணன் போலிருக்கு, 'எஸ்... தமிழ்நாடு... யூ!' என்றார்.
உடனே, 'அண்ணே...' என நான் அழைக்க, அவர், 'தம்பி...' என பாசத்தைப் பொழிய...
அண்ணன், சிவகாசியைச் சேர்ந்த பெரிய அச்சக அதிபர்களுள் ஒருவர் என்பது தெரிந்தது.
நீண்ட நேரம், 'விமான நிறுவனத்தைத் திட்டித் தீர்த்தோம்; பின், 'அண்ணே... பசிக்குது; வாங்க ஏதாவது சாப்பிட்டு வரலாம்...' என்றேன்.
'இரு தம்பி... காசு செலவில்லாம சாப்பிட முடியுமான்னு பாக்கலாம்...' என்றவர், என்னையும் உடன் அழைத்துச் சென்று, விமான நிலைய அதிகாரிகளிடம் இங்கிலீஷில் பொழிய ஆரம்பித்தார்...
'வி அங்கிரி... யூ மிஸ்டேக்... கிவ் புட்; வி நோ மணி... கிவ் பிரீ புட்...' என, என்னென்னமோ பேசினார்; அதற்கு நல்ல பலன்!
போர்டிங் கார்டை காட்டி, விமான நிலையத்தின் மேல் தளத்தில் உள்ள, 'ரெஸ்டரன்டில்' காலை உணவை முடித்துக் கொள்ள அனுமதி வாங்கி விட்டார்.
காலை உணவை முடித்துக் கொண்டோம்.
முற்பகல், 11:00 மணி அளவில், 'சென்னை செல்லும் பயணிகள், ரெஸ்டரன்டில் லைட் டிபன் இலவசமாக சாப்பிட்டுக் கொள்ளலாம்...' என்று அறிவிப்பு ஒலிபரப்பானது.
அண்ணாச்சி ஒரு ஐடியா செய்தார். 'தம்பி, திரும்பவும் அங்கே சென்றால் உதை விழும்; கீழே, 'ஸ்நாக் பார்' இருக்கு... அங்க போய் ஏதாவது ஓ.சி.,யிலே வாங்கி வெட்டலாம் வா...' என, அழைத்துச் சென்றார்.
அங்கே காபி, டீ அல்லது கூல்டிரிங்ஸ் உடன் நாலு பிஸ்கட் கொடுத்தனர். அண்ணாச்சி அவற்றை மறுத்து, 'வி... நோ காபி, டீ, பிஸ்கட்; யூ டேக்... கிவ் கட்லட் ஒன்லி...' எனக் கேட்டார்.
அவர்கள் மறுத்தனர்; பின், அண்ணனின் இங்கிலீஷை தாங்க முடியாமல், கட்லட் கொடுத்தனர்.
ஆக மொத்தம், காலையில் பிரட் டோஸ்ட், ஆம்லட், காபி.(நான் பிரட் மட்டும்.) 11:00 மணிக்கு, 'கட்லட்!' மற்ற பயணிகளுக்கு வெறும் டீ, பிஸ்கட்!
ஒரு வழியாக விமானத்தில் ஏறி, எங்களுக்கு ஒதுக்கப்பட்ட சீட்டைப் பார்த்தால், அதில் பிரெஞ்சுக்காரர்கள்!
'திஸ் அவர் சீட்...' என்றார் அண்ணாச்சி.
'நோ நோ... இண்டியா ஆல் பிரீ...' என்றனர் பிரெஞ்சுக்காரர்கள்; அவர்களும் ஆங்கிலத்தில் எங்கள் கேஸ்!
'வாட் பிரி... கோ கோ... யுவர் கன்ட்ரி ஐ கம்... நோ பிரி... திஸ் மை கன்ட்ரி... கோ கோ... யுவர் சீட்...' என, சத்தம் போட, சுற்றி அமர்ந்திருந்தவர்கள் அண்ணனின் ஆங்கிலப் புலமையை கேட்டு, நையாண்டி சிரிப்புடன் தலையை திருப்பிக் கொண்டனர்.
அண்ணன் போட்ட சத்தத்திற்கு பலன், எங்கள், 'சீட்' எங்களுக்கு கிடைத்தது.
சீட்டில் அமர்ந்ததும், விமான நிறுவன வெளியீடான, ஆங்கில புத்தகத்தை எடுத்து, ஆங்கிலக் கட்டுரையில் மூழ்கினார் அண்ணன்.
ஆச்சரியமாக அவரைப் பார்த்துக் கொண்டிருந்த என்னை நோக்கி, 'தம்பி... வாயுள்ள பிள்ளை பிழைக்கும்...' என்றார். 'ஆங்கிலம் சரளமாக பேசத் தெரியாவிட்டாலும்...' என்று, மனதிற்குள் சொல்லிக் கொண்டேன்.
'மக்களும் மரபுகளும்' என்ற நூலை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. அதில், குருவிக்காரர்கள் பற்றிய குறிப்புகள் படு சுவாரசியமாக இருந்தது. இதோ:
நரிக்குறவர்கள் அல்லது குருவிக்காரர்கள் என்று கூறப்படும் மக்கள், தென் மாநிலங்களை சேர்ந்த நாடோடி இனத்தவர். தென் மாநிலங்களில், சில நூற்றாண்டுகளாக வாழ்ந்து வந்தாலும், தங்கள் தனித்தன்மையைக் காப்பதில் மிகவும் கவனமாக இருந்து வரும் இவர்கள், வேறு எந்த இனத்துடனும் கலப்பதில்லை.
நரிக்குறவர்கள் அனைவரும் இந்துக்கள்; சமய உணர்ச்சி மிக்கவர்களான இவர்கள், தங்கள் கடவுள்களை தங்கள் இருப்பிடங்களிலேயே வணங்குகின்றனர். அக்கடவுள்களின் உருவங்கள், ஒரு துணி மூட்டையில் வைக்கப்பட்டு, அத்துணி மூட்டை, 'சாமி மூட்டை' என்று அழைக்கப்படுகிறது.
ஒவ்வொரு குடும்பத்தாருக்கும் ஒரு சாமி மூட்டை உண்டு; குடும்பத் தலைவரால் மரியாதையாகவும், கவனமாகவும் அம்மூட்டை கவனிக்கப்படுகிறது. சாமி மூட்டையிலுள்ள துணியில், பலி கொடுக்கப்பட்ட விலங்கின் ரத்தத்தில் தோய்க்கப்பட்ட துணியும் இருக்கும். இவற்றை, அவர்கள் பல பரம்பரையாக வைத்திருப்பதாக கூறிக் கொள்வர்.
ரத்தத்தில் தோய்க்கப்பட்ட பாவாடையை, 'சாமி பாவாடை' என்று கூறுகின்றனர். நரிக்குறவப் பெண்கள் சாமி மூட்டையை தொடுவதற்கு அனுமதியில்லை. அத்துடன், ஒரு பிரிவைச் சார்ந்தவர்களின் சாமி மூட்டையை, அடுத்த பிரிவைச் சார்ந்தவர்கள் தொடக் கூடாது. அடுத்தவர்களுக்கு, தங்கள் சாமி மூட்டையை பிரித்துக் காட்ட அவர்கள் விரும்புவதில்லை.
வழிபாடு செய்யும் போது தலையை விரித்துப் போட்டு, சாமி மூட்டையை திறப்பான், குடும்பத் தலைவன். பின், ரத்தம் தோய்ந்த பாவாடையை அணிந்து வழிபாடு செய்வான்.
பூவும், குங்குமமும், மஞ்சள் தூளும் பலி கொடுத்த மிருகத்தின் ரத்தமும், தேவதைகளின் முன் படைக்கப்படும். தேவதைகளின் முன் நடனமாடியபடி, அந்த ரத்தத்தில் புரள்வான் குடும்பத்தின் தலைவன்.
ஒரு குடும்பத்தில் மகன் மணம் புரிந்தால், தகப்பனின் சாமி மூட்டையில் ஒரு பகுதி, அவனுக்கு கொடுக்கப்படும்.
குடும்பத்தில் மூத்த மகன், தந்தையினுடைய சாமி மூட்டைக்கு வாரிசாகக் கருதப்படுகிறான். எனவே, அவனது சாமி மூட்டையில் உள்ள ரத்தம் தோய்ந்த துணி, ஏழு அல்லது எட்டுத் தலைமுறைகள் கடந்த, மிகப் பழைய துணியாக இருக்கும்.
எப்போதெல்லாம் பூஜை நடத்துகின்றனரோ, அப்போதெல்லாம் உறவினர்களையும், கோத்திரக்காரர்களையும் (தந்தை வழி உறவினர்கள்) அழைத்து, அவர்களுக்கு தலைக்கு ஐந்து ரூபாயும், சம்பந்திகளுக்கு இரண்டு ரூபாயும் அன்பளிப்பாகக் கொடுப்பர்.
- இப்படியாகச் சொல்கிறது புத்தகம்!
