PUBLISHED ON : ஜூலை 02, 2017

அந்த நடிகை, 'எக்ஸ்டிராடினரி பிரிலியன்ஸ்' உள்ளவர். எந்த சப்ஜெக்ட்டை எடுத்தாலும், அதில் பத்து நிமிடமாவது பேசும் திறமை கொண்டவர். நடிப்பை நிறுத்தி, திருமணம் புரிந்து, அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டவர்.
சின்னத் திரையில் சில நிகழ்ச்சிகள் நடத்திக் கொடுக்க, அவ்வப்போது சென்னை வந்து செல்கிறார்.
சமீபத்தில், சென்னை வந்திருந்தபோது எனக்கு போன் செய்தார். குசலம் விசாரித்தபின், 'நாளை மதியம் லஞ்ச்க்கு போகலாமா...' எனக் கேட்டார். நான், 'சரி' என்றதும், 'அந்த லொள்ளு பார்ட்டி, லென்சை, 'கட்' -செய்துட்டு வா... அது இருந்தால் நிம்மதியா பேச முடியாது...' என்றார்.
அடுத்த நாள், எதிர்பாராத விதமாக, லென்ஸ் மாமாவின் மைத்துனர், ஐதராபாத்தில் இருந்து வந்து விட, ஆபீசுக்கு லீவு போட்டு விட்டார், லென்ஸ் மாமா. அதனால், அவரிடம், 'டுபாக்கூர்' அடிக்கும் நிலை ஏற்படவில்லை.
குறிப்பிட்ட இடத்தில் காத்திருந்த நடிகை, 'ரெண்டு பேரும் ரெண்டு தனித்தனி கார்ல செல்ல வேண்டாமே...' என்றார்.
'அப்போ, பக்கத்துல இருக்கிற தாஜ் கன்னிமாரா ஓட்டல் பார்க்கிங்கில் உங்க வண்டிய நிறுத்திட்டுப் போயிடலாம்...' என்றேன்.
'சரி' என்றவர், ஸ்கூட்டர் ஓட்டுவது போல, ஒவ்வொரு டிராக்காக வளைந்து நெளிந்து படு ஸ்பீடில் காரை ஓட்டி, ஓட்டலை அடைந்து, 'பார்க்' செய்தார்.
என் வண்டியில் ஏறியவரிடம், 'என்ன மேடம் இந்த விரட்டு விரட்டுறீங்க... 'சல் சல்' என, டிராக் மாறுறீங்க... சின்ன வயசுல ஸ்கூட்டர் ஓட்டிய பழக்கமா?' என்றேன்.
'இன்பாக்ட் எனக்கு சைக்கிளே ஓட்டத் தெரியாது. இது, அமெரிக்க பழக்கம். நம்மூர் போல அங்கே காரில் ஹாரன் அடிக்கக் கூடாது; ஹாரன் அடிப்பதை அநாகரிகமாக கருதுவர். முன்னால் செல்லும் வண்டி ஸ்லோவாகச் சென்றால், ஹாரன் அடித்து துரிதப்படுத்தவோ அல்லது ஒதுங்கவோ கோரக்கூடாது... நாம் தான் டிராக் மாறி செல்ல வேண்டும்...' என்றார்.
நம்ம ஊரில் ஏர் -ஹாரன் அடித்தால் கூட, 'செவிடன் காதில் ஊதிய சங்கு தான்' என, நினைத்துக் கொண்டேன்.
என் வண்டி கண்ணாடிகளில் கறுப்பு பேப்பர் கிடையாது. உள்ளே அமர்ந்திருப்பது யார் என்பது வெட்ட வெளிச்சமாக வெளியில் இருப்பவர்களுக்கு தெரியும் என்பதால், ஒவ்வொரு சிக்னலில் நிற்கும் போதும், அருகே நிற்பவர்கள், நடிகையை உற்றுப் பார்ப்பதும், தம் அருகில் அமர்ந்திருப்பவரிடம் கிசுகிசுப்பதும், பின், என்னைப் பார்ப்பதுமாக இருந்ததால், கூச்சமாகிவிட்டது.
ஒரு வழியாக சோழாவை அடைந்து, சைனீஸ் உணவு விடுதிக்குள் நுழைந்தோம். 'பப்பே' வகை பரிமாற்றம் என்பதால், பிளேட்டில் உணவு வகைகளை எடுத்துக் கொண்டோம். வேக வைத்த காய்கறி, எள் உருண்டை போல இருந்த ஒரு ஸ்வீட் மட்டும் எடுத்துக் கொண்டார், நடிகை.
வேக வைத்த காய்கறியில், 'புரோக்கலி' தயார் செய்திருந்த விதம், நடிகைக்கு பிடித்துப் போகவே, அதை சமைத்த சீன சமையல்காரரை அழைத்து வரச் சொல்லி, அதன் பக்குவங்களை கேட்டார். உடைந்த ஆங்கிலத்தில், சைனீஸ், 'அக்சென்ட்'டில் விளக்கினார், சமையல்காரர்.
பின்னர், பேசிக் கொண்டிருந்தபோது, 'உங்களுக்கு ஒரு ஹாலிவுட் பட வாய்ப்பு கிடைச்சுதுன்னு கேள்விப் பட்டேனே...' என்று கேட்டேன்.
'உண்மை தான்; அருமையான வேடம். அமெரிக்கர்களைப் போல், 'கொழ கொழா'ன்னு பேச, அங்கே விசேஷ பயிற்சி எடுத்துக்கிட்டேன். அதனால என் ஆங்கில உச்சரிப்பு அவர்களுக்கு படுதிருப்தி.
'அதோட, அவர்களுடைய முக பாவங்கள், சைகைகளை கூட கத்துகிட்டேன். உதாரணத்துக்கு, ஆச்சர்யம் ஏற்படும் போது, ஆசிய கண்டத்தை சேர்ந்தவர்களாகிய நாம், ஒரு வித முக பாவத்தைக் காட்டி, ஒலி எழுப்புவோம். இதுவே, கண்டத்துக்கு கண்டம் மாறுபடும்.
'அமெரிக்கர்கள் ஆச்சர்யம் அடைந்தனர் என்றால், நம்மிலிருந்து முற்றிலும் மாறுபட்ட முக பாவத்தையும், ஒலியையும் எழுப்புவர். இதுபோலவே, ஒவ்வொரு செயலுக்கும் வித்தியாசம் இருக்கும்... அதையெல்லாம் கூட கத்துகிட்டேன். ஆனா, திடீரென்னு ஏனோ அந்தப் படப்பிடிப்பு நடக்கல...' என்று வருத்தப்பட்டார்.
'வருத்தப்படாதீங்க... அடுத்த சான்ஸ் கிடைக்காமலா போகும்...' என தேற்றி, 'உங்க ஹஸ்பெண்ட், அமெரிக்காவுலேயே படிச்சு, அங்கேயே வளர்ந்தவராச்சே... என்ன பாஷையில பேசிக்கிறீங்க?' என்றேன்.
'பேஸிக்கா அவங்க, 'பேரண்ட்ஸ்' தமிழர்கள்ன்னாலும், இவர் தமிழ் பேச சிரமப்படுவார்; அதனால, இங்கிலீஷ்ல தான் பேசிக்கிறோம்...' என்றவரிடம், 'ஒரு கேள்வி கேட்டா தப்பா நெனக்க மாட்டீங்களே...' என, பீடிகை போட்டேன்.
ஊடுருவலாக என்னை பார்த்தபடி, 'ம்... கேளேன்...' என்றார்.
'அந்தரங்கமாக உங்கள எந்த மொழியில் கொஞ்சுவார்...' என கேட்டு, தலையை திருப்பிக் கொண்டேன். இதை கேட்டதும், 'கொல்' என, வெடிச் சிரிப்பு சிரித்த நடிகை, 'தமிழில் கொஞ்சினால் தான் சுவாரஸ்யம் இருக்கும்; ஆனாலும், ஆங்கிலத்தில் தான் இந்த வேலை நடக்கிறது. என் ரொம்ப நாள் வற்புறுத்தலுக்கு பின், தமிழில் ஒரே ஒரு கொஞ்சல் வார்த்தைய தெரிஞ்சு வச்சுருக்கார்...' என்று கூறி, வெட்கச் சிரிப்பு சிரித்தார்.
வேறு சில விஷயங்களும் பேசி, பின் கிளம்பும் போது, 'நாளைக்கு படத்துக்கு போகலாமா?' எனக் கேட்டார்.
நான், 'சரி' என்று தலையசைத்தேன்.
அடுத்தநாள் இரவு, 9:30 மணியளவில் அவரது வீட்டுக்குச் சென்றேன், இரண்டு டிக்கெட்டுகளுடன்! போகுமுன் நான் வரும் தகவலை போனில் சொல்லி விட்டதால், தயாராக வெளியே நின்றிருந்தார்.
கிராமத்து பெண்டிர், வழிய வழிய தலை நிறைய வேப்பெண்ணை தடவி ஒழுக விட்டிருப்பரே... அதுபோல தேங்காய் எண்ணெய் தடவி, அகலமான பற்களுடைய, சீப்பால் தலைசீவி கொண்டை போட்டிருந்தார்.
தொளதொள என பைஜாமாவும், லூசான டி - ஷர்ட்டும் அணிந்திருந்தார். அவரை வழியனுப்ப வந்த அவரது தந்தை, 'ஓ ஜீனியஸ்! இன்று தான் உங்க தரிசனத்திற்கு நாள் கிடைத்தது போலும்... எவ்வளவு நாள் உங்கள வீட்டிற்கு வரச் சொல்லி, 'இன்வைட்' செய்திருக்கேன்; உள்ளே வாங்களேன்... காபி சாப்பிட்டு போகலாம்...' என, அழைத்தார்.
படத்துக்கு நேரமாகி விட்டதால், அவரது அழைப்பை நாசுக்காக மறுத்து, கிளம்பினோம். வண்டி மெயின் ரோட்டை அடைந்ததும், 'மணி... டிக்கெட் வாங்கிட்டியா?' என கேட்டார், நடிகை. சட்டை பையில் இருந்த டிக்கெட்டை எடுத்துக் காட்டினேன்.
'அய்யய்யோ...' என்றவர், 'நாளை நைட் அமெரிக்கா போறேன்... டிக்கெட் வாங்கலன்னா, 'பீச்'ல உன்னோட உட்கார்ந்து, ரெண்டு மணி நேரம் பேசலாம்ன்னு நினைச்சேன். ஏன்னா உன்னோட, 'டைம்' கிடைக்கிறது ரொம்ப அபூர்வம்...' என்றவர், 'டிக்கெட் வேஸ்ட் ஆவதைப் பத்தி உனக்கு ஆட்சேபனை இல்லன்னா பீச்சில போய் உட்கார்ந்து பேசலாமா...' என்றார்.
'இரண்டு நாள் சம்பளம் அம்போ!' என, மனதில் நினைத்து, 'அதுக்கென்ன போகலாமே...' என, பவ்யமாக சொன்னேன்.
சென்னை பெசன்ட் நகர் பீச்சில் அமர்ந்தோம். எங்களின் - பேச்சு எங்கெங்கோ சென்று இந்திய மக்களின் கல்வித்தரம், கல்லாமை குறித்து திரும்பியது.
'இந்தியாவிலேயே கேரள மாநிலத்தவர் கல்விக்கு கொடுக்கும் முக்கியத்துவம் போல் வேறு எந்த மாநிலத்தவரும் கொடுப்பதில்லை. உதாரணத்திற்கு சொல்லணும்ன்னா கேரளத்துக் காரரான ஒரு பல் டாக்டர், புதுச்சேரியில் ரொம்ப வருஷமாக, 'பிராக்டீஸ்' செய்து வருகிறார். தன் திருமணமான மகளை மேற்படிப்பிற்காக இங்கிலாந்து அனுப்பியிருந்தார். மாப்பிள்ளையும் அங்கேயே படித்து வருகிறார்.
'அங்கேயே மகளுக்கு குழந்தை பிறக்க, டாக்டர் தம்பதியர் இங்கிலாந்து சென்று மகள், மாப்பிள்ளை படிப்புக்கு, குழந்தை இடையூறாக இருக்கக் கூடாது எனக்கருதி, பத்து நாட்களே ஆன கைக்குழந்தையை, புதுச்சேரி எடுத்து வந்து வளர்க்கின்றனர்.
கல்விக்கு எவ்வளவு தூரம் முக்கியத்துவம் கொடுக்கின்றனர் பாருங்களேன்...' என்றேன்.
'கல்விக்கு கொடுக்கும் முக்கியத்துவம் போலவே, உழைப்பிற்கும் அவர்களைப் போல வேறு எந்த மாநிலத்தவரும் முக்கியத்துவம் கொடுத்து விட முடியாது...' என்றார் நடிகை.
மேற்கொண்டு அவர் என்ன சொல்லப் போகிறார் என, அவரையே பார்த்தபடி அமர்ந்திருந்தேன். அவரே தொடர்ந்தார்...
'வளைகுடா நாடுகளில் வேலை செய்யும் கேரள நர்சுகளுக்கு ஆண்டில் இரண்டு மாதங்கள் மட்டுமே விடுப்பு உண்டு. அங்கே வேலைபார்க்கும் போது, 'கரு' உண்டாகி விட்டால், ஏழாம் மாதமே விடுப்பு எடுத்து, கேரளா வந்து விடுவர். எட்டு மாதத்தை எட்டிய கருவுற்ற பெண்களை விமானத்தில் ஏற்றிச் செல்வதில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு.
'ஒன்பதாவது மாத இறுதியில், பிரசவித்த மூன்றாம் நாளே, கைக்குழந்தையை தாய் வீட்டிலோ, புகுந்த வீட்டிலோ விட்டு, மீண்டும், தாம் வேலை பார்க்கும் வளைகுடா நாட்டிற்கு சென்று விடுகின்றனர். ஒரு பக்கம் இது கொடுமையாகத் தெரிந்தாலும், குடும்பத்திற்காக உழைக்கும் அவர்களது பொறுப்பை பாராட்டித்தான் ஆக வேண்டும்...' என்றார்.
இரவு மணி, 12:00 நெருங்கவும், 'போகலாமா?' என்றேன். நடிகையை அவரது இல்லத்தில், 'டிராப்' செய்து விடைபெற்றேன்!
