தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : ஜூலை 23, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 23, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அழகான ஆங்கிலத்தில் கட்டுரைகள் எழுதுவதில் வல்லவர் என பெயர் பெற்றவர், ஷோபா டே என்ற பெண்மணி. ஐந்து குழந்தைகளின் தாய்; 70 வயதானாலும், அதை விடக் குறைந்த வயதுடையவர் போன்ற தோற்றம் கொண்டவர்; இதற்கு அவருடைய, 'மேக் - அப்'பும் ஒரு காரணம்.

அவரது எழுத்துகளில், 'செக்ஸ்' கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும். எதையும் தயங்காமல் எழுதி விடுவார்.

ஒருமுறை கொழும்பில், தாஜ் சத்திரா நட்சத்திர ஓட்டலின் ரெஸ்டரன்டில் இவரையும், இவர் மகளையும் பார்த்திருக்கிறேன்.

கம்மிங் பேக் டு த பாயின்ட்... அலுவலக நூலகத்தில் இருந்த பழைய, 'தி வீக்' என்ற ஆங்கில வார இதழில், 'தி செக்சஸ்' என, ஷோல்டர் லைன் போட்டு, 'இருட்டில் தடவும் இந்திய தந்திரம்' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி இருந்தார்.

ஆர்வம் மேலிட, கட்டுரையை படித்துக் காட்ட உதவி ஆசிரியர் உதவியை நாடினேன்.

விஷயம் இது தான்... அம்மணி, மும்பை நகரில் ஷாப்பிங் சென்றுள்ளார்; இரு கைகளும் கொள்ளாத அளவு பொருட்களை வாங்கி, தம் காருக்காக காத்திருக்கையில், அவ்வழியே சென்ற, 'ரோமியோ' ஒருவன், இவரது மார்பை தீண்டி, ஓடி விட்டிருக்கிறான்.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஷோபா டே, அதைப்பற்றி எழுதிக் குவித்து விட்டார். அவர் எழுதியிருந்தது இது தான்:

டிராபிக்கில், கை நிறைய பார்சல்களுடன் நின்றிருந்தேன். என் மீது அவன் உராய்ந்த போது, என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. பன்றிக்கு பிறந்தவன் அதற்குள், 10 மீட்டர் தூரம் ஓடி விட்டான்.

'இதில் என்ன குறைந்து போயிற்று...' என்று நீங்கள் கேட்கலாம். ஒரு வினாடி சம்பவம் தான்... ஆனால், விஷயம் என் உடல்; அது, எனக்கு மிகவும் முக்கியமானது. மற்றவர்கள் உடம்புகளை நான் மதிப்பது போல, என் உடலையும் மிகவும் மதிக்கிறேன். நான் விரும்பாதவர்களால், என் உடல் தொடப்படுவதை அறவே வெறுக்கிறேன்.

நான் பள்ளிச் சிறுமியாக இருந்தபோது, இது போல நடக்கும் நேரங்களில் கூக்குரலிட்டு, 'சீன் கிரியேட்' பண்ணுவேன்; உரசியவனை நாலு பேர் பிடித்து, நன்றாக மொத்துவர்.

ஒரு பெண்ணின் உடலை, திருட்டுத்தனமாக ஒரு செகண்ட் தொடுவதால் என்ன த்ரில், திருப்தி ஏற்படப் போகிறது... ஒருநாள் முழுவதும் இதே குஷியுடன் அலைந்து, இரவில் கணக்கெடுப்பானா -பத்து பின்புறம், ஐந்து மார்பு, நாலு தொடை என்று... என்ன கேவலம்!

அன்று முழுவதும் எனக்கு செம, 'மூட் அவுட்!'

கராத்தே கற்றுக் கொள்ள வேண்டும் என்கின்றனர், சில பெண்கள். இன்னும் சிலரோ, கையில் எப்போதும் சிறு ஆயுதம் மற்றும் மிளகாய் பொடி, பெப்பர் ஸ்ப்ரே வைத்துக் கொள்ள வேண்டும் என்கின்றனர். இதில் எனக்கு உடன்பாடு இல்லை. நான் இதற்காக கராத்தே வகுப்பில் சேரப்போவது இல்லை!

ஆனால், ஒன்று நிச்சயம்... என்னால் குறி பார்த்து உதைக்க முடியும். அடுத்த முறை எவனாவது என்னிடம் வாலாட்டினால், பர்பெக்ட் உதை தான்; - என் காலால் அவன் மர்ம உறுப்பில்! 'அது' நசுங்கிப் போய் விடும்.

— ஷோபா டேக்கு ஏற்பட்டுள்ள அனுபவம், பெண்கள் பலருக்கும் ஏற்பட்டிருக்கலாம்; குறி பார்த்து உதைக்கத் தெரியுமா உங்களுக்கு?

உயர் நீதி மன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர், பின்னாளில் சட்ட மொழி பெயர்ப்பு துறை தலைவராக பதவி வகித்தார். அப்போது அவர் சொன்னது:

ஷேக்ஸ்பியரின், 'கிங்கிலியர்' என்ற நூலை மொழி பெயர்க்கும் போது, விசித்திரமான அனுபவம் ஏற்பட்டது. இளவரசி கார்டீலியா இறந்து விட்டாள். அவளுடைய பிரேதத்தை தூக்கியபடி ஓடுகிறான், அரசன், லியர். தன் அருமை மகள் இறந்திருக்க மாட்டாள் என்ற சந்தேகம், அவன் உள் மனத்தில் எழுகிறது.

அதனால், 'ஒரு கண்ணாடியைக் கொண்டு வாருங்கள்; அவள் மூக்குக்கு எதிரே அதைப் பிடித்தால், சுவாசம் இருக்கிறதா, இல்லையா என்று தெரிந்து விடும்...' என்று கூறுகிறான்.

It with mist the Mirror என்பது ஆங்கில வாக்கியம்; - அதை எப்படி தமிழில் மொழி பெயர்ப்பது...

பத்து நாட்கள் ஆகியும் பொருத்தமான தமிழ் சொல் கிடைக்கவில்லை. ஒருநாள், சமையலறையில் என் மனைவி இட்லி தயார் செய்வதை பார்த்தவுடன், 'கொப்பரையின் மூடியில் ஆவி படிகிறபோது அதற்கு என்ன சொல்லுவது வழக்கம்?' என்று கேட்டேன்.

அவள், 'வேர்த்து விடறதைக் கேட்கிறீர்களா?' என்றாள்.

கண்ணாடியை மூக்குக்கு எதிரே கொண்டு போனால், 'கண்ணாடி வேர்த்து விடும்' என்று மொழி பெயர்த்தால், எவ்வளவு பொருத்தமாக இருக்கும்... Mist என்ற வார்த்தைக்கு அப்படியே பொருள் கொண்டேன்.

சற்றே சிரமம் எடுத்துக் கொண்டால், எந்த ஓர் ஆங்கிலச் சொல்லுக்கும் பொருத்தமான தமிழ்ச்சொல், புழக்கத்திலுள்ள தமிழிலேயே இருப்பதைக் காணலாம்.

மூலத்தினுடைய அந்தராத்மாவை எப்படியாவது சொல்லி தீர்த்து விட வேண்டும் என்பதே நம் உயர்ந்த நோக்கமாக இருக்க வேண்டும். இந்த நோக்கத்திற்கு புறம்பான எந்தக் கருத்தையும் புறக்கணிக்க வேண்டியது, மொழி பெயர்ப்பாளர்களுடைய கடமை.

ஒரு குறிப்பிட்ட சொல், சுயம்பான தமிழ் சொல்லா, பிற மொழி சொல்லா என்பது அல்ல பிரச்னை. அது, உயிருள்ள சொல்லா, செத்த சொல்லா, மூல நூலின் சுவையையும், மணத்தையும் தமிழில் தரவல்ல சொல்லா, இல்லையா என்பதுதான் பிரச்னை.

தமிழோடு சமபந்தி போஜனம் செய்யும் உயிருள்ள சொல்லானால், அதை விட்டுக் கொடுக்கக் கூடாது.

கத்தரிக்காயை எடுத்துக் கொள்ளுங்கள்... கதே என்பது சீன மொழி சொல். அதை, தமிழில் கத்தரிக்காய் என்று புழக்கத்தில் கொண்டு வந்து விட்டோம். கத்தரிக்காய்க்குள் சீன மொழி இருக்கிறது. அதனால், கத்தரிக்காய்க்கு வேறு சொல்லையா கண்டுபிடிக்க வேண்டும்!

அதேபோன்று, 'கஷ்டம்' என்பதும் சமஸ்கிருதச் சொல் தான். ஆயினும், பல ஆயிரம் ஆண்டுகளாக, தமிழில் அதை ஏற்றுக் கொண்டு விட்டோம்.

பிரெஞ்சு மொழியில், 'டாய்லெட்' என்பதை, 'துவாலே' என்று உச்சரிக்க வேண்டும். நாம் குளிப்பதற்கு உபயோகப்படுத்துகிற, 'துவாலைத் துண்டு' என்கிற தமிழ் சொல், இந்த பிரெஞ்சு சொல்லிலிருந்து தான் நம்முடைய புழக்கத்திற்கு வந்திருக்கிறது.

மயில் தோகையில் உள்ள, 'தோகை' என்கிற சொல்லையே, ரோமில், 'தோகா' என்று குறிப்பிடுகின்றனர். 'தோகை' என்ற சொல், தமிழிலிருந்து ரோமுக்கு போயிருக்கிறது.

துருக்கி மொழியில், 'கூலி' என்கிற சொல்லை பயன்படுத்துகின்றனர். துருக்கி யிலிருந்து வந்திருந்த தூது கோஷ்டி, நம் ஊர், 'ஹார்பரில்' பேசப்படுகிற, 'கூலி' என்கிற வார்த்தையை கேட்டு, 'இந்தச் சொல்லை எப்படி நீங்கள் பயன்படுத்துகிறீர்கள்?' என்று கேட்டார்களாம்.

அப்போது, ரா.பி. சேதுபிள்ளை, 'எவ்வளவு ஆண்களாக துருக்கி இலக்கியத்தில் இந்தச் சொல் பயன்படுகிறது?' என்று கேட்டுள்ளார். 'துருக்கி இலக்கியம் பிறந்தே ஆயிரம் ஆண்டுகளுக்குள் தான் இருக்கும்...' என்று சொல்லியுள்ளனர்.

'மெய் வருத்தக் கூலி தரும் என்று, திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தச் சொல்லைப் பயன்படுத்தி யிருக்கிறார்...' என்று சேதுப் பிள்ளை விளக்கம் தந்த போது, 'கூலி' என்பது தமிழ் சொல் தான் என்று ஒப்புக் கொண்டனர்.

ஆகவே, தாராள மனப்பான்மையுடன் கொடுக்கல் -- வாங்கல் செய்ய வேண்டும்.

Unless the context other wise required என்று சட்ட சம்பந்தமான ஆங்கிலச் சொற்றொடர் உண்டு. இதை, 'தருவாயின் தேவை வேறானால் அன்றி' என்று மொழி பெயர்த்திருக்கின்றனர். 'சூழ்நிலை வேறு; பொருள் குறித்தாலன்றி' என்று புரிந்து கொள்ளும் விதமாக மொழி பெயர்க்கலாமே!

In any othercase என்பதை, 'பிற எந்த நேர்விலும்' என்று மொழி பெயர்த்து வந்திருக்கின்றனர். 'பிற தருணம் எதிலும்' என்று மாற்றியமைக்கலாம். இதை விட நல்ல சொற்களை மற்றவர்கள் சொல்லக் கூடும்.

விஞ்ஞானம், பொறியியல், மருத்துவம், பொருளாதாரம் ஆகியவைகளை தமிழில் படிக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் நம்மில் பலரிடையே உண்டு. அவற்றை, தமிழில் மாற்றும் போது எவ்வளவு சிரமம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை யோசித்துப் பாருங்கள்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us