PUBLISHED ON : ஆக 06, 2017

தன் உறவினர் வீட்டில் ஏதோ விசேஷம் என்று, மாமியுடன் ஆம்பூர் போயிருந்தார், லென்ஸ் மாமா. மாமாவின், 'கம்பெனி' இல்லாமல், மாலை பொழுதை எப்படி கழிப்பது என்ற சிந்தனையில் இருந்த போது வந்து சேர்ந்தார், குப்பண்ணா.
'என்னப்பா... சோர்வா உக்காந்திருக்கே... உபன்யாசம் கேட்க, கவுடியா மடம் போறேன்... கூட வர்றியா?' எனக் கேட்டார். சரி என்று அவருடன் கிளம்பினேன்.
உபன்யாசகர் சொன்னார்:
தமிழ் மொழியில் உள்ள, 'அ' முதல் 'ஔ' வரையிலான உயிர் எழுத்துகள், மனித வாழ்வின் பல நிலைகளை உணர்த்துகின்றன.
முதல் இரண்டு எழுத்துகளான, அ, ஆ மனிதன் குழந்தையாகவும், பாலகனாகவும் உலகைப் புரிந்து கொள்ள முயன்று, 'அ, ஆ!' என்று வாய் பிளக்கும் காட்சியை குறிக்கிறது.
பாலகன், இளைஞனாகி வாலிபக் கிறுக்கில், பெண்ணின் மையலில் அசடாகி, 'இ,ஈ...' என்று இளிக்கிறான்.
தாம்பத்ய சுகத்தை அனுபவிக்கும் நிலையில், 'உ... ஊம்...' இதுதானா என்று 'அதன்' புதிரை புரிந்து கொள்கிறான். 'ஊ'வின் முதுகில் ஏறியிருக்கும், 'ள' குடும்பச் சுமை கூடியிருப்பதைக் காட்டும்.
அடுத்து, குடும்பத் தலைவனாக, 'எ, ஏய்...' என்று பிள்ளைகளையும், மற்றவரையும் ஆட்சி செலுத்துகிறான்.
மகனுக்கு, மனைவி வருகிறாள்; தந்தை, 'பெரியவர்' ஆகி, தன்னை சுருட்டி, 'ஐ' என்று உட்கார நேருகிறது.
மகன், இளம் மனைவியின் புது மயக்கத்தில் தலைகால் புரியாமல் ஆடுகிறான். பெரியவர், 'ஒ... ஓ... அந்த அளவுக்கு ஆயிட்டுதா...' என்று ஈனஸ்வரத்தில் அங்கலாய்க்கிறார்.
தாத்தாவாகிறார் பெரியவர்; வளைந்து, குடும்பத்தில் தனித்து, தேவையற்ற பொருளாகி விடுகிறார்; 'ஔ'வில் 'ள'வைப் போல!
எதையும் மும்முறை செய்து விட்டால் இறுதியாகச் செய்து விட்டதாக அர்த்தம். பிறப்பில் தொடங்கிய வாழ்க்கை, இறப்பில் இறுதி நிலை அடைந்து, 'முக்தி' பெறுவதற்கு, இந்தப் பிராயம், சாதனம் என்பதை மூன்று புள்ளியிட்ட ஆயுத எழுத்து உணர்த்தும்!
— என்றார்.
ஏதோ புரிந்த மாதிரி இருந்தது... இன்னும் வாழ்வில் படிக்க வேண்டிய விஷயங்கள் ஏகப்பட்டது உள்ளது என்பதும் தெரிந்தது. குப்பண்ணாவுக்கு, 'தேங்க்ஸ்' சொன்னேன்.
திருச்சி தேசியக் கல்லூரி முதல்வராக இருந்து ஓய்வு பெற்றவர் பேராசிரியர், எஸ்.கண்ணன். திறமையான கல்வியாளர், சிறந்த பண்பாளர், ஆன்மீகவாதி. அவர், சமீபத்தில் எனக்கு எழுதிய கடிதத்தில், 'மெல்ல நம் பண்பாடுகளை மறந்து வருகிறோம்...' என, கவலையுடன் குறிப்பிட்டிருந்தார். கடிதம் இதோ:
எப்போதும் நாம், பிற நாட்டின் கலாசாரங்களையே போற்றி, நம் கலாசாரம், வழிபாட்டு முறைகள் பற்றி தெரிந்து கொள்வதில் அக்கறை காட்டுவதில்லை; தெரிந்தாலும் அவற்றை கடைப்பிடிக்க முயற்சிப்பது இல்லை.
கிறிஸ்துவர்களில் ஒரு சாரார், மரித்தோர்க்கு செய்யும் நேர்த்திக் கடனான, கல்லறை திருநாளை எப்படி கொண்டாடுகின்றனர் என்று வியந்து பாராட்டுவோம்; இஸ்லாமியர் எப்படி நோன்பு மாதத்தை முறை வழுவாமல் பேணுகின்றனர் என்று எழுதியும், பாராட்டியும் வருகிறோம். 'தியாகத் திருநாள்' என்று போற்றி, பெரிய, சிறிய நிகழ்வுகளை எழுதுவதன் பலனாக யாவர்க்கும் இதைப்பற்றி தெரிந்து
கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது; நல்லதுதான். ஆனால், அதே சமயம் இந்து மதத்தில் இத்தகைய உன்னதமான கட்டுப்பாடுகள் உண்டா என்று நினைத்துப் பார்ப்பது இல்லை.
சென்னையிலிருந்து வெளியாகும், 'ஸ்ரீ அகஸ்திய விஜயம்' என்ற இதழில், 'மாளயபட்ச' விரதத்தின் மகிமையைப் பற்றி விரிவாக எழுதப்பட்டிருப் பதைப் பார்த்தால், நம் முன்னோர் எவ்வளவு பரந்த மனப்பான்மையுடன் இந்த நேர்த்திக் கடனை, 14 நாட்களான, 'பட்சம்' (மகாளயபட்சம்) என்று அமைத்திருக்கின்றனர் என, வியந்து பாராட்ட தோன்றும்.
இந்த பதினான்கு நாட்களையும், தியாகத் திருநாட்கள் எனலாம். மனிதனிலிருந்து, மிருகம், புழு, பூச்சி, தாவரம் வரை யாவர்க்கும் நன்றிக்கடன் தெரிவிக்கும் வகையில், இந்த நாட்களில் நேர்த்திக்கடன் செய்யப்படுகிறது. அனைத்து ஜாதியினரும், ஜாதிக்கேற்றபடி, புரிந்து கொள்ளக் கூடிய மொழியில் செய்து, இயன்ற தானங்களை வழங்குவது தான், இந்தத் தியாகத் திருநாட்களின் நோக்கம்.
விட்டுப்போன இந்த நோன்பை நாம் ஏன் பரப்ப முயலக் கூடாது... அனைத்து ஜாதிச் சங்கங்களும், இந்து மதத் தலைவர்களும் ஏன் இதைப் புனர் நிர்மாணம் செய்து, நமக்குப் பெருமை (இழந்ததை அல்லது இழந்து கொண்டிருப்பதை) தேடித் தர முயலக் கூடாது!
மொழி, ஜாதி முதலிய தடங்களினால் இந்துக்கள் பலவற்றை மறந்தும், மறுபக்கம் அர்த்தம் தெரியாது பல பண்டிகைகளைக் கொண்டாடியும் வருகின்றனர். உயர்ந்த நோக்கோடு செயல்பட வேண்டிய, 14 தியாகத் திருநாட்களான, 'மாளய பட்சத்தை' இனிமேலாவது யாவர்க்கும் உணர்த்த முயலலாமே...
வட மாநில பழக்கமான, விநாயகர் ஊர்வலத்தை வெறும் கொண்டாட்டத்திற்காக ஏற்றுக் கொள்ள முயன்று, வெற்றியும் காணும் போது, உன்னதமான இந்த நோன்பைப் பரப்பி, யாவரையும் உய்விக்க முயற்சியும் செய்யலாம். மற்ற மதத்தினர், பெரிய புள்ளிகளை அழைத்து, கவுரவித்து தங்களின் உயரிய பண்புகளை பரப்புவது போல், நம் சங்கங்களும், கூட்டு நோன்பாக கொண்டாடலாம். இந்து மதத்தின் புனர் வாழ்வு இதன் மூலம் ஆரம்பமாகும்.
— கலாசார சீரழிவு நடைபெற்று வரும் இந்நாளில், இது தொடர்புடைய பெரியவர்களின் காதில், பேராசிரியரின் இவ்வேண்டுகோள் விழுமா?
பெண் சிசுக் கொலைக்கு எதிரான குரல் பலமாக ஒலித்து கொண்டிருக்கிறது. கருவிலேயே ஆணா, பெண்ணா என்று விஞ்ஞான முறையில் கண்டறிந்து சொல்லவும் தடை!
ஆனால்,பெண்ணடிமைத் தனத்திற்கு பெரிதும் காரணம், இந்து மதத் தத்துவ கோட்பாடுகளே என்று தர்க்கிக்கிறது, 'பெண்ணீயம் - தோற்றமும், வளர்ச்சியும்' என்ற தமிழ் நூல். அதிலிருந்து சில பகுதிகள்:
இந்து குடும்பங்களில் ஆண் குழந்தைகளுக்குத்தான் மதிப்பு அதிகம்; இதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், அடிப்படைக் காரணம், இந்து மதக் கோட்பாடுகள் தான். இந்தியக் குடும்பங்களில் பெற்றோர் இறந்தவுடன், அவர்களுக்கு இறுதிக் கடன்களை ஆற்றவும், பின், அவர்கள் ஆத்மா சாந்தியடைய ஒவ்வொரு ஆண்டும் கிரியைகள் புரியவும் ஆண் மக்களே தகுதி உள்ளவர்களாக கருதப்படுகின்றனர்.
தந்தை வழிக் குடும்பங்களில் குடும்பப் பெயரும், சொத்துரிமை களும் ஆண் மக்கள் கால் வழியே சென்றடையும். அதனால், குடும்பம் வழி வழி தழைத்தோங்க ஆண் மக்களே தேவைப்பட்டனர்.
ஆண் மக்கள் பிறந்தது முதல் இறப்பது வரை பெற்றோருடன் வாழ்ந்து வந்ததால், வயதான பெற்றோரைப் பேணிக் காப்பதும் அவர்கள் பொறுப்பாயிற்று. இதற்கு மாறாக, பெண் குழந்தைகள் திருமணமான பின், பெற்றோரைப் பிரிந்து கணவன் வீடு சென்று வாழ்ந்து வருகின்றனர்.
பெண் குழந்தைகளை வளர்த்து ஆளாக்கி, திருமணம் செய்து கொடுப்பதும் பெற்றோருக்கு சுமையான பொறுப்பாகி விட்டது.
கணவன் இறந்தாலோ, அவனால் கைவிடப்பட்டாலோ அவர்களை காப்பாற்றும் பொறுப்பு பெற்றோரை சேர்கிறது.
அதிக பெண்களை பெற்ற தந்தையை சமூகம் தாழ்வாகக் கருதுகிறது.
ஆண், தாழ்ந்த ஜாதி என, சிலரால் கூறப்படும் இனத்தில் மணம் புரிந்தால், அவனை, அவன் குடும்பம் ஏற்றுக் கொள்கிறது. இதையே, பெண் செய்தால், குடும்பம் அவளை புறக்கணித்து ஏற்பதில்லை.
— இப்படி இந்துமதக் கோட்பாடுகளே பெண் சிசுக் கொலைக்கு காரணமாகிறது என்கிறது, இந்நூல். மத சீர்திருத்தவாதிகள் இது குறித்து சிந்தித்தால் என்ன!
