PUBLISHED ON : பிப் 06, 2011

இந்த இதழில், மிக நீண்ட சப்ஜெக்ட்களுக்குப் பதில், சின்னச் சின்ன விஷயங்களாகப் பார்ப்போமா?
ராணுவத் தளபதியாக இருந்த ஜெனரல் கரியப்பா கூறுகிறார்:
நான் இந்திய ராணுவத்தின் தரை படைத் தலைவனாக இருந்த போது, ஒரு தமிழ் சோல்ஜரிடம்,
தமிழிலேயே பேச விரும்பினேன். அவனது தாய்மொழியிலேயே பேசினால் மகிழ்வானே என்று ஒரு ஆசை.
'உனக்கு சாப்பாடு எல்லாம் சரியாகக் கிடைக்கிறதா?' என்ற கேள்வியை, கஷ்டப்பட்டுத் தமிழில் கேட்டேன். முதலில் முழித்தான்; பதில் இல்லை.
இரண்டாவது தடவையும் நான் அதே கேள்வியைக் கேட்டேன்; அப்போதும் பதிலில்லை.
மூன்றாவது தடவையாக கோபமாக அதட்டிக் கேட்டேன்.
உடனே, அவன் மிகவும் பணிவுடன், 'எனக்கு ஆங்கிலம் தெரியாது!' என்றான்.
நான் பேசிய தமிழ் அந்த அழகில் இருந்தது.
***
மயிலின் அகவலில் ஸட்ஜமும் (ஸ)
காளையின் ஹூங்காரத்தில் ரிஷபமும் (ரி)
ஆட்டின் குரலில் காந்தாரமும் (க)
கொக்கினது சப்தத்தில் மத்தியமும் (ம)
குயிலின் குரலில் பஞ்சமமும் (ப)
குதிரையின் கனைப்பில் தைவதமும் (த)
யானையின் பிளிறளில் நிஷாதமும் (நி)
ஆகியவற்றிலிருந்து தோன்றியது தான், 'ஸரிகமபதநி!' என்றார் குப்பண்ணா. சரிதானா என, 'வெரிபை' செய்ய தோதான ஆள் கிடைக்கவில்லை.
***
புனாவில் மாநாடு ஒன்று நடந்தது. விஞ்ஞானி சர்.சி.வி.ராமனும் கலந்து கொண்டார். அதில், மத்திய அமைச்சர் ஒருவர் பேசும் போது, 'இந்த நாட்டில் இனிமேல் எவரையும் பட்டினியாலோ, பசியாலோ இறக்க விடமாட்டோம்...' என்று முழங்கினார்.
அவருக்கு பிறகு பேசிய டாக்டர் ஒருவர். 'இனி நாங்கள் நோயாலோ... நொடியாலோ எவரையும் இறக்க விட மாட்டோம்?' என்று கர்ஜித்தார்.
அடுத்துப் பேச எழுந்த சி.வி.ராமன், 'அமைச்சர், எவரையும் பசி பட்டினியால் சாக விட மாட்டோம் என்கிறார். டாக்டரோ யாரையும் நோயால் சாக விடமாட்டோம் என்கிறார். இவர்கள் இப்படிச் செய்து விட்டால், பிறகு நாம் எப்படித் தான் சாவதாம்?' எனக் கேட்டதும், 'குபீர்' என சிரிப்பலை எழுந்ததாம்.
***
சென்னை ஐகோர்ட் வாசலில் கேட்டது:
வக்கீல் : நான் சொல்லிக் கொடுத்ததை
அப்படியே சொல்லணும்.
கட்சிக்காரர் : சரிங்க.
வக்கீல் : மறக்கக் கூடாது.
கட்சிக்காரர் : சரிங்க.
வக்கீல் : மறந்து போனால் என்ன செய்வே?
கட்சிக்காரர் : நீங்கதான் கோர்ட்டிலே
இருப்பீங்களே... கேட்டுத் தெரிஞ்சுக்கறேன்.
***
கோர்ட்டுக்கு உள்ளே எட்டிப் பார்த்தபோது —
ஜட்ஜ் : அப்போ, மூன்று வருஷத்துக்குப் பிறகு, நேற்று நீ உன் கணவனை சந்தித்தாயாக்கும்?
பெண் : ஆமாங்க.
ஜட்ஜ் : அவன் என்ன சொன்னான்?
பெண் : நரகத்துக்கு தொலைஞ்சு போ...
- அப்படீன்னு சொன்னாருங்க.
ஜட்ஜ் : நீ என்ன பண்ணினே?
பெண் : உடனே உங்ககிட்டே வந்தேன்ங்க!
— 'அந்து... நீ எதுக்கு கோர்ட் பக்கம் போனே?'ன்னு மட்டும் கேட்காதீங்க...
***
குப்பண்ணா ஒரு கதை சொன்னார்:
சர்தார்ஜி ஒருவர் கடைக்கு வந்து, 'ஹாட் பேக்கில் வைக்கப்படும் உணவுப் பொருள் எவ்வளவு நேரம் சூடாக இருக்கும்?' என்று கேட்டார். கடைக்காரர், 'ஆறு மணி நேரம் சூடாக இருக்கும்!' என்றார்.
சர்தார்ஜி கடை முழுவதும் அலசி, ஒரே அளவுள்ள நான்கு, 'ஹாட் பேக்'குகளை தேர்வு செய்து, பில் போடச் சொன்னார். பில் போட்டு பணத்தை வாங்கி, கல்லாவில் போட்டுக் கொண்ட கடைக்காரருக்கு, மனதில் சந்தேகம் எழுந்தது, சர்தார்ஜி எதற்காக ஒரே மாதிரி நான்கு, 'ஹாட் பேக்'குகளை வாங்குகிறார் என்று தெரிந்து கொள்ளாவிட்டால், பைத்தியமே பிடித்து விடும் போல இருந்தது. தாங்க முடியாமல் கேட்டே விட்டார்.
சர்தார்ஜி பொறுமையாகக் கூறினார்... 'பையா... நான் ட்ரெயின்லே ட்வென்டி போர் ஹவர்ஸ் டிராவல் பண்ணப் போகுது. வீட்டிலேயே சூடா கானா ( சாப்பாடு) தயார் பண்ணி ஒரு ஹாட் பேக்ல போட்டுக்குவேன். தென், ஒவ்வொரு சிக்ஸ் ஹவர்சுக்கும் அதை ஒவ்வொரு ஹாட்பேக்ல மாத்திருவேன். ஸோ... ட்வென்டிபோர் ஹவர்சும் கானா சூடாவே இருக்கும். எப்படி என் ஐடியா?'
கேள்வி கேட்ட கடைக்காரர் தலையைப் பிய்த்துக் கொள்ளத் துவங்கினார். அதே வேலையை என்னையும் செய்ய வைத்து விட்டார் குப்பண்ணா.
***
ஒரு விண்ணப்பத்தில் கேட்கப்பட்டிருந்த கேள்வி.
அப்பாவின் வயது? (உயிருடனிருந்தால்)
வந்த பதில் : 120 வயது (உயிருடனிருந்தால்)
***
குப்பண்ணாவும், நானும் பஸ் ஸ்டாப்பில் அரை மணி நேரமாக நின்றோம். ஆவடிக்கு பஸ் வரவில்லை.
'சாமி... தருமம் போடுங்க...' என்று ஒரு பிச்சைக்காரன் குப்பண்ணாவிடம் திருவோடை நீட்டினான்.
'என்னது, இப்போது தானே கால்மணி நேரத்துக்கு முன்னால் ஒரு ரூபாய் கொடுத்தேன்...' என்றார் குப்பண்ணா.
'ஹூம்... பழைய கதை பேசிப் பேசி தான் நம்ம சமுதாயமே கெட்டுப் போச்சு...' என்று முணுமுணுத்துக் கொண்டே அகன்றான் அவன்..
குப்பண்ணாவுக்கு முகம், குங்ஞா முங்ஞா என்று ஆயிற்று!
***
பழைய தமிழ் நூலொன்றில் படித்த கதை:
நான்கு வழிப்போக்கர்கள், ஒரு பாதையில் நடந்து கொண்டிருந்தனர். திடீரென்று மழை பிடித்துக் கொண்டது. பலத்த காற்று; பேய் மழை.
'ஒண்டுவதற்கு இடம் கிடைக்காதா?' என்று தவித்தனர் வழிப்போக்கர்கள்.
மின்னலின் வெளிச்சத்தில், தூரத்தில் ஒரு பாழடைந்த மண்டபம் அவர்கள் பார்வையில் பட்டது. நால்வரும் அங்கே ஓடி, ஒண்டினர்.
சற்று நேரத்தில் மண்டபம் கிடுகிடு என்று ஆடத் தொடங்கி விட்டது.
உடனே அவர்களுள் ஒருவன் சொன்னான்...
'நம்மில் யாரோ ஒரு பாவி இருக்கிறான். அதனால் தான் நாம் இங்கு வந்ததும் மண்டபம் ஆடத் தொடங்கி விட்டது. ஒவ்வொருவராக மண்டபத்திலிருந்து வெளியே செல்லுங்கள். எவன் சென்றதும் மண்டபம் ஆடுவது நிற்கிறதோ, அவன் தான் பாவி!'
- முதலில் ஒருவன் வெளியே சென்றான். மண்டபத்தின் ஆட்டம் நிற்கவில்லை.
- இரண்டாவமன் வெளியேறினான். அப்போதும் மண்டபம் ஆடிக் கொண்டிருந்தது.
- மூன்றாமவனும் வெளியே சென்றான். மண்டபத்தின் ஆட்டம் நிற்கவில்லை.
'சந்தேகமேயில்லை. நீ தான் பாவி!' என்று வெளியே நின்ற மூவரும் ஒரே குரலில் கத்தினர், மண்டபத்துக்குள் நின்ற நான்காமவனைப் பார்த்து.
அவன் தலை கவிழ்ந்தபடியே வெளியே வந்தான்.
அதுவரை ஆடிக் கொண்டிருந்த மண்டபம், தன் ஆட்டத்தை நிறுத்தவில்லை. மாறாக, 'திம்'மென்று இடிந்து விழுந்தது. அப்போது தான் மற்றவர்களுக்கு புரிந்தது, நால்வரில் அவன் ஒருவன் தான் புண்ணியவான். அவனுக்காகத் தான் இதுவரை மண்டபம் இடிந்து விழாமலிருந்தது என்ற உண்மை.
மூவரும் அவன் காலில் விழுந்து மன்னிக்குமாறு வேண்டினர்!
***
