PUBLISHED ON : ஜூன் 24, 2018

பி.எம்.ஜெ., - பிரிட்டிஷ் மெடிக்கல் ஜெர்னல்.. உலகின் பல நாட்டு மருத்துவர்களின், கீதை, குரான், பைபிள்! மருத்துவத் துறையின் புதிய கண்டுபிடிப்புகள், ஆய்வுகள், மருத்துவர்கள் சந்தித்த சவால்கள்... அவை எதிர்கொண்டு ஜெயித்த முறை என, மருத்துவர்களுக்கு தேவையான அனைத்தும் இந்த இதழில் இருக்கும்.
அதில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு சர்வே பற்றி விலாவாரியாக கூறினார் டாக்டர் நண்பர் ஒருவர்.
ஆய்வு நடத்தப்பட்ட 21 வயதுக்குட்பட்ட பெண்களில், பாதிக்கும் மேற்பட்ட பெண்கள், பருவமடைந்த பின், வெகு சீக்கிரத்திலேயே, தம் கன்னித்தன்மையை இழந்தது குறித்து வருந்துகின்றனர்.
இதில் 16 வயதுக்கு முன்பே கன்னித் தன்மையை இழந்ததால் வருந்துபவர்கள் மூன்றில் இரண்டு பங்கு. ஆனால், இதே காலகட்டத்தில் உள்ள ஆண்களில் ஆறு பேருக்கு ஒருவர் என்கிற விகிதத்தில் வருந்துகின்றனராம்!
'அது என்ன?' எனத் தெரிந்து கொள்வதில் இருந்த ஆர்வமே பொதுக்காரணமாக பெரும்பாலும் இருபாலரும் கூறியுள்ளனர்.
பெண்கள் தம் கன்னித் தன்மையைப் பெரும்பாலும் இழந்துள்ள வயது 16; ஆண்கள் 17!
மேலே சொன்ன கணக்குகள் எல்லாம் காதலர்களுடையது அல்ல; காதல் கீதல் எல்லாம் கிடையாது.. பள்ளித்தோழி, அடுத்த வீட்டுப் பெண், பக்கத்து வீட்டு சிறுவன்... இவர்களுடையது!
* நிஜமாகவே ஒருவரை ஒருவர் ஆழமாக காதலிப்பவர்களில், 16 சதவீதம் பெண்களும், 10 சதவீதம் ஆண்களும் காதலே எங்கள் கற்பு பறிபோனதற்கு காரணம் என்று கூறுகின்றனராம்.
* உணர்ச்சி மேலீட்டால், தப்பு செய்து விட்டோம் என, 13 சதவீதம் பெண்களும், ஆறு சதவீதம் ஆண்களும் கூறுயுள்ளனர்.
* கொஞ்சம் உ.பா., போட்டதுதான் முதன் முதலாக கன்னித்தன்மை இழந்ததற்கு காரணமாக அமைந்தது என 10 சதவீதம் இருபாலரும் கூறியுள்ளனர்.
* எதை இழக்கப் போகிறோம் என்பதை நன்கு அறிந்து, தம் சுய உணர்வுடன் கன்னித்தன்மையை இழந்ததாக, 14 சதவீதம் ஆண்களும், ஐந்து சதவீத பெண்களும் கூறியுள்ளனர்.
* ஆண்களை விட பெண்களே தம் தோழியரிடம் நடத்தையால் அதிக அளவு பாதிப்படைந்துள்ளனர். ஆறு சதவீத பெண்களும், மூன்று சதவீத ஆண்களும், தம் நண்பர்கள், இதில் ஈடுபடுகின்றனரே... நாம் ஏன் கூடாது என்ற எண்ணத்தில் விழுந்ததாகக் கூறியுள்ளனர்.
ஆய்வை லென்ஸ் மாமாவிடம் கூறி, நம் நாடு எவ்வளவோ பரவாயில்லை.. என்றேன்.
அட போப்பா... நம் நாட்டில் இது போன்ற சர்வேகள் நடத்தப்படவில்லை! நடத்திப் பார்க்கட்டும்... அப்புறம் பரவாயில்லைன்னு சொல்ல எனக் கூறி என் வாயை மூடினார்.
ஆசிரியரை சந்திக்க வந்த நடுத்தெரு நாராயணனின் ஜோல்னாபையை ஆராய்ந்தேன். அதில் ஜெர்மனி நாட்டின் சர்வாதிகாரியாக இருந்த ஹிட்லர் பற்றிய ஒரு தமிழாக்கப் புத்தகம் இருந்தது. எடுத்துப் புரட்டினேன்.
அதில் இருந்த ஒரு விஷயம்....
ஹிட்லருக்கு ஜோதிடத்தில் மிகுந்த நம்பிக்கை உண்டு. ஒரு சமயம் பெரிய ஜோதிட வல்லனர் ஒருவரை அழைத்து வரச் சொன்னார். அவரிடம், என் ஆயுட்காலம் எப்போது முடிகிறது; நான் எப்போது சாவேன்? எனக் கேட்டார்.
ஹிட்லரின் ஜாதகத்தை மிகத் தீவிரமாக ஆராய்ந்த ஜோதிடர், யூதர்களின் பண்டிகையன்று நீங்கள் இறப்பீர்கள் என்று சொன்னார்.
யூதர்கள் தான் தம் நாட்டைச் சுரண்டியவர்கள்... அவர்களால் தான் ஜெர்மானியர்கள் வறுமையில் வாடுகின்றனர் என்ற எண்ணம் கொண்டிருந்தவர் ஹிட்லர். ஆயிரக்கணக்கான யூத இன மக்களை விஷ வாயு அறைகளில் அடைத்து மிகக் கோரமாகக் கொன்றவர்.
ஜோதிடரின் பதிலைக் கேட்ட ஹிட்லர் யூதர்களுக்குத் தான் பண்டிகைகள் ஆண்டு முழுவதும் வருகிறதே... எந்தப் பண்டிகையின் போத நான் இறப்பேன் என்பதை சரியாகச் சொல்லுங்கள் னெறார்.
நீங்கள் என்று இறக்கிறீர்களோ, அந்த நாள் யூதர்களின் பண்டிகை நாளாக நிச்சயம் கொண்டாடப்படும் என்றார் ஜோதிடர்.
அதன்பின் அந்த ஜோதிடரின் கதி என்னவாயிற்றோ என்று நினைத்துக் கொண்டேன்.
அவர் ஒரு மத்திய அரசு ஊழியர்; சிற்றிதழ்களின் சகவாசம் அதிகம் கொண்டவர்; எழுத்தாளர்; அவர் எழுதுவதும் யாருக்கும் புரியாது... (கையெழுத்தை சொல்லவில்லை...) எதிலுமே, எப்போதுமே மற்றவரில் இருந்து வித்தியாசமாக இருக்க வேண்டும் என எண்ணுபவர்.
கடந்த வாரத்தில், நண்பர் ஒருவர் வீட்டில் அவரை சந்தித்தேன்..
டேய் கண்ணா... அந்த கண்றாவி இருந்தா, கொண்டா... என நண்பரிடம் கூறினார்.
ஆச்சரியம் கலந்த பார்வையை அவர் மீது வீசிக் கொண்டிருந்த போது....
எங்க ஆபீசுல ஒரு லேடிப்பா... ரொம்ப, வெல் பிஹேவ்ட் லேடி... அப்பப்ப பாத்து சிரிக்கும்... என் எழுத்துக்கள விமர்சனம் செய்யும்... டீ குடிக்ககூட வரும்!
லவ் மேரேஜ் செஞ்சுக்கிட்ட லேடி... ஒண்ணோ, ரெண்டோ கொழந்தைங்க இருக்கு. வயசென்ன இன்னிக்கெல்லாம் மிஞ்சி போனா, 30 அல்லது 32 இருக்கும்... என்று இவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, இவர் கேட்ட, கண்றாவி வந்தது... உ.பா., தான்!
என்னங்க சார்... நீங்களே இதக் கண்றாவின்றீங்க... அப்பாலே அத ஏன் சாப்பிடுறீங்க? எனக் கேட்டேன்.
உனக்கு இதப்பத்தி எல்லாம் தெரியாது... விஷயத்தைக் கேளு... என்றவர் சரக்கை பக்குவமாகக் கலந்து கொண்டே தொடர்ந்தார்....
லவ் மேரேஜூன்னு தான் பேரு.. லவ்வே இல்லைன்னு இப்போ புலம்பறாங்க அந்த லேடி! அவங்க ஹஸ்பண்டு நல்ல பதவியில தான் இருக்காரு... நல்லா சம்பாதிக்கிறாரு... வொய்ப்பை மிஷின் மாதிரி தான் நினைக்கிறாராம்... நடத்துறாராம்... ஆறுதலா, அன்பாக, காதலா ஒரு வார்த்தை கூட பேசறது இல்லியாம்...
நானும் ஆபீஸ் போயி மாடா ஒழச்சு, பஸ்சில் இடிபட்டு, மிதிபட்டத்தானே வீடு வந்து சேருகிறேன்... என்ன, கண்ணா டயர்டா இருக்கான்னு ஒரு வார்த்தை, ஒரே ஒரு வார்த்தை கூட கேட்க மாட்டேங்கறாரு எனப் புலம்புகிறார் அந்த லேடி... கண்ணே மணியே என்று கொஞ்சியது எல்லாம் காதலிச்சுகிட்டு இருந்த காலத்தோட போச்சு...
'சரி போகட்டு, வேலை முடிஞ்சு நேரத்தோட வீடு வந்து சேந்தா என்னவாம்? ராத்திரி, 10.00 மணி, 11:00 மணி வரை பிரண்ட்ஸோட ஆட்டம் போட்டுட்டு வர்றாரு.. இங்கே நானும், குழந்தைகளும் அவரை எதிர்பார்த்துட்டே காத்துக் கிடக்கோம்ன்னு ஏன் அவருக்கு புரிய மாட்டேங்குதுன்னு கேக்குறாங்கப்பா அந்த லேடி' என்றவர், தன் ஜோல்னாபையைத் திறந்து, அதிலிருந்த மிக்ஸர் பொட்டலத்தைப் பிரித்து, வாய் கொள்ளாத அளவு உள்ளே தள்ளி கரக், முறுக் என்ற சப்தமாக அரைத்தார்.
இதனிடையே, நண்பர் வீட்டு சமையல்காரம்மா, எக் ஸ்கிரம்பிள் சுட, சுட எடுத்து வந்தார், அதையும், ஸ்பூனால் அள்ளி, இரண்டு, மூன்று வாய் போட்டுக் கொண்டு பூப்போட்ட கண்ணாடி கிளாசில் இருந்ததை அப்படியே உள்ளே தள்ளினார்.
அவரே தொடர்ந்தார்... இதுக்கெல்லாம் மேலே ஒரு விஷயம்ப்பா... லேடீசை பூ போல, ஹாண்டில் பண்ணனும்ப்பா... ஆனா, இந்த ஆளு முரடனாம்... அதையும் சொல்லி வருத்தப்படுதப்பா... என்றார்..
சரி... நீங்க என்ன ஆறுதல் குடுத்தீங்க? என்றேன்.
அதை விவரித்தார்..
பின், இது பற்றி தனிமையில் ஒரே யோசனை... காதலித்து கல்யாணம் செஞ்சுகிட்டவங்க கூட ஏன் இப்படி நடந்துக்கிறாங்க என்று!
