தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : செப் 16, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 16, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருச்சி தேசியக் கல்லுாரி முதல்வராக இருந்து ஓய்வு பெற்றவர் புரொபசர் எஸ்.கண்ணன். திறமையான கல்வியாளர். சிறந்த பண்பாளர், ஆன்மிகவாதி. அவர், சமீபத்தில் எனக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார். 'கொஞ்சம், கொஞ்சமாக நம் கலாசாரப் பண்பாடுகளை மறந்து வருகிறோம்...' என கவலை கொண்டு எழுதி உள்ளார்.

கடிதம் இதோ:

பிறருடைய கலாசாரங்களையே எப்போதும், நாம் போற்றிக் கொண்டிருப்போம். நம்முடைய கலாசாரம், வழிபாட்டு முறைகள் பற்றி தெரிந்துக் கொள்வதில் அக்கறை காட்டுவதில்லை; தெரிந்தாலும், அவற்றை கடைப்பிடிக்க முயற்சிப்பதுமில்லை.

கிறிஸ்துவர்களில் ஒரு சாரார், கல்லறைத் திருநாள் (மரித்தோர்க்குச் செய்யும் நேர்த்திக் கடன்) எப்படி கொண்டாடுகின்றனர் என்று வியந்து பாராட்டுவோம்.

இஸ்லாமியர் எப்படி நோன்பு மாதத்தை முறை வழுவாமல் பேணுகின்றனர் என்று எழுதியும், பாராட்டியும் வருகிறோம்.

'தியாகத் திருநாள்' என்று போற்றி, பெரிய, சிறிய இதழ்கள் யாவும் எழுதுவதன் பலனாக இஸ்லாமியர் மட்டுமின்றி, யாவர்க்கும் இதைப்பற்றி தெரிந்துக் கொள்ள வாய்ப்பு அமைந்துள்ளது, நல்லது தான்.

அதே சமயம் இந்து மதத்தில் இத்தகைய உன்னதமான கட்டுப்பாடுகள் உண்டா என்று நினைத்துப் பார்ப்பது கூட இல்லை.

சென்னையிலிருந்து வெளியாகும், 'ஸ்ரீ அகஸ்திய விஜயம்' என்ற பத்திரிகையின் செப்டம்பர் '98 இதழில், மகாளயபட்ச விரதத்தின் மகிமையைப் பற்றி விரிவாக எழுதப்பட்டிருந்தது.

அதில், நம் முன்னோர் எவ்வளவு பரந்த மனப்பான்மையுடன் இந்த நேர்த்திக் கடனை, 14 நாட்களான, 'பட்சம்' (மகாளயபட்சம்) என்று அமைத்திருக்கின்றனர் என வியந்து பாராட்ட தோன்றும்.

இந்த, 14 நாட்களும், தியாகத் திருநாட்கள் எனலாம். மனிதனிலிருந்து, மிருகம், புழு, பூச்சி, தாவரம் வரை யாவர்க்கும் நன்றிக்கடன் தெரிவிக்கும் வகையில் நேர்த்திக்கடன் இந்த நாட்களில் செய்யப்படுகிறது.

அனைத்து ஜாதியினரும், ஜாதிக்கேற்றபடி, புரிந்துக் கொள்ளக் கூடிய மொழியிலும் செய்து, இயன்ற தானங்களை வழங்குவதும் தான் இந்தத் தியாக திருநாட்களின் நோக்கம்.

விட்டுப் போன இந்த நோன்பை நாம் ஏன் பரப்ப முயலக் கூடாது... அனைத்து ஜாதிச் சங்கங்களும், இந்துமதத் தலைவர்களும் ஏன் இதைப் புனர் நிர்மாணம் செய்து, நமக்குப் பெருமையை -இழந்ததை அல்லது இழந்துக் கொண்டிருப்பதை தேடித் தர முயலக் கூடாது?

மொழி, ஜாதி முதலிய தடங்கல்களினால் இந்துக்கள் பலவற்றை மறந்து, மறுபக்கம் அர்த்தம் தெரியாது, பல பண்டிகைகளைக் கொண்டாடுகின்றனர். உயர்ந்த நோக்கோடு செயல்பட வேண்டிய, 14 தியாகத் திருநாட்களான, 'மகாளய பட்சத்தை' இனிமேலாவது யாவர்க்கும் உணர்த்த முயலலாமே!

புதிதை நாம் ஏற்றுக் கொள்வதற்கு தயங்கவில்லை. வட மாநில பழக்கமான, விநாயகர் ஊர்வலத்தை வெறும் கொண்டாட்டத்திற்காக ஏற்றுக்கொள்ள முயன்று, வெற்றியும் காண்கிறோம், ஆனால், உன்னதமான இந்த நோன்பைப் பரப்பி, யாவரையும் உய்விக்க முயற்சியும் செய்யலாம்.

மற்ற மதத்தினர், பெரிய புள்ளிகளை அழைத்து, கவுரவித்து தங்களின் உயரிய பண்புகளைப் பரப்புவது போல், இந்து சங்கங்களும், கூட்டு நோன்பாக ஆரம்பம் - முடிவு போன்றவைகளைக் கொண்டாடலாம்.

இந்து மதத்தின் புனர் வாழ்வு இதன் மூலம் ஆரம்பமாகும்.

கலாசார சீரழிவு நடைபெற்று வரும் இந்நாளில், தொடர்புடைய பெரியவர்களின் காதில், புரொபசரின் இவ்வேண்டுகோள் விழுமா?

'கையில் காசில்லாமல், 12 வயசுல, மெட்ராஸ் வந்தேன்னு சொல்வீங்களே, அண்ணாச்சி... இன்னைக்கு காரு, பங்களா, பத்து, பதினைஞ்சு லாரி, பேக்டரின்னு இருக்கீங்க... இதுக்கு அடிப்படையா சேமிப்பும் இருந்திருக்கணும்... எவ்ளோ சம்பாதிச்சாலும் துட்ட சேக்க முடியலியே... என்கின்றனரே...' எனக் கேட்டேன் அண்ணாச்சியிடம்!

'அட போப்பா... நாலஞ்சு, 'டிப்ரன்ஸ்' தர்றேன்; கேட்டுக்க...'

'டிப்ரன்ஸ்' என்பதை 'டிப்ஸ்' என, நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்... நல்ல வேளை அன்று லென்ஸ் மாமா உடன் இல்லை; இருந்திருந்தால், அண்ணாச்சியை உண்டு, இல்லை என, செய்திருப்பார்.

அண்ணாச்சி கொடுத்த டிப்ஸ் இதோ:

* கடன் வாங்கு; ஆனால், யாருக்கும் கடன் கொடுக்காதே...

* சொந்தக் காசில் சிகரெட் பிடிக்காதே... இதை ஏன் என்னிடம் சொன்னார் என தெரியவில்லை... என்னிடம் தான் அந்தப் பழக்கமே கிடையாதே! உன் வீட்டுப் பக்கம் உள்ள கடை வாசலில் நின்றுக் கொண்டிரு... உனக்குத் தெரிந்தவர் யாராவது சிகரெட் வாங்க அங்கே வருவார்; உனக்கும் ஒரு சிகரெட் கிடைக்கும்!

* எந்த பொருளையும், தேவையான அளவை விட குறைவாகவே உபயோகி. உதாரணமாக, ஒரு கப் காபிக்கு, ஒரு கரண்டி காபி பொடி உபயோகிக்க வேண்டும் என, காபி பொடி டப்பாவில் குறிப்பு இருந்தால், முக்கால் கரண்டி மட்டுமே உபயோகி... காபி கொஞ்சமாக இருந்தாலும், பொடி மிச்சம் அல்லவா?

* நாய், பூனை, கிளி போன்றவற்றை வளர்க்காதே... தெண்டச் செலவு...

- இப்படி, இன்னும், ஐந்தாறு குறிப்புகளைக் கொடுத்திருந்தார்...

நீங்கள் யாராவது பின்பற்றி விட்டு, பலனைச் சொல்லுங்களேன்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us