
கேரள நாளிதழ் ஒன்றின், செய்தியாளராக பணியாற்றும் நண்பர் அவர்; தமிழர் தான். ஆனால், அவரது தாத்தா காலத்திலேயே கேரளாவில் குடியேறி விட்டனர் என்பதால், மலையாளி போன்றே தோற்றமளிப்பார், அவர்கள் போலவே பேசுவார்.
அவரது, தாய் - தந்தைக்கு, காசிக்கு போய், கங்கா ஸ்நானம் செய்யும் ஆசை வரவே, என்னிடம், ரயில் டிக்கெட், தங்கல் போன்றவற்றுக்கு உதவி செய்ய கேட்டுக் கொண்டார்.
சென்னையில் இருக்கும் அவரது உறவினர் வீட்டில், நான்கு நாட்கள் தங்கிய பின், காசி செல்லத் திட்டமிட்டு இருந்தனர். வாரணாசி எக்ஸ்பிரசில், 'ஏசி டூ டயர்' இரண்டு டிக்கெட் முன்பதிவு செய்து, அதைக் கொடுக்கச் சென்று இருந்தேன்.
நண்பரின் தகப்பனாருக்கு, 80 வயது இருக்கும். ஆயுள் காப்பீடு கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஏராளமான விஷயங்கள் தெரிந்து வைத்திருக்கிறார்.
மலையாளம் கலந்த தமிழில், என்னுடன் பேசினார்...
'தம்பி... கேரள மாநிலத்தில் படித்தவர்கள் எண்ணிக்கை, நுாற்றுக்கு நுாறை நோக்கி நெருங்கிய சமயம், எல்லா மட்டத்திலும், 'தலைவலிகள்' தலை துாக்கி உலுக்கிக் கொண்டிருக்கின்றன!
'அமைச்சரவை, அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், அதிகாரிகள் மற்றும் மதத் தலைவர்கள் என, எவ்வளவு உயர்ந்தவர்களாக இருந்தாலும், நியாயமான, 'தலைவலிகள்' தலை துாக்கி, ஒரு ஆட்டம் ஆடி, ஜனநாயக வெற்றியை சாத்தி, ஓய்ந்து விடுகின்றன!
'கேரள முன்னாள் காங்கிரஸ் முதல்வரும், சாந்த மூர்த்தியுமான,
ஏ.ஜே.ஜான், சட்டசபையில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் தோல்வி
அடைந்ததும், முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். பத்திரிகை நிருபர்களிடையே பேசுகையில், இந்தப் புரட்சிகரமான, 'தலைவலிகள்' பற்றி, முதன் முதலாகக் குறிப்பிட்டார்.
'நிருபர்களும் மடக்கி மடக்கி, எதிரும் புதிருமான கேள்விக் கணைகளைத் தொடுத்தனர். 'நியாயமான விவகாரங்களில் தலைவலி வரவேற்கத்தக்கது தான்; அப்போது தான் எல்லா மட்டத்திலும் எச்சரிக்கை நிலை ஏற்படும்...' என்று விரிவாக விளக்கினார்.
'மேலும், 'ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, இப்போது மனிதனையும் கடிக்க ஆரம்பித்து விட்டது' என்ற சொலவடை, தமிழில் உண்டு அல்லவா... அதே போல், அமைச்சர்களையும், உயர் அதிகாரிகளையும், கட்சி தலைவர்களையும் தாக்கி குதறிய, 'தலைவலிகள்' இப்போது, கேரள உயர் நீதிமன்றத்திலும் கை வைக்க ஆரம்பித்து விட்டன.
'சில ஆண்டுகளுக்கு முன், கேரள உயர் நீதிமன்றத்திற்கு, ருசிகரமான வழக்கு வந்தது. சட்டத்தின் நேர்மையையும், தர்ம நியாயத்தையும், மனித உரிமையையும் தட்டி எழுப்பும் அம்சங்களை, இந்த வழக்கு சுமந்து கொண்டிருந்தது.
'முதுமையின் கொடுமைகளுக்கு பயந்து, 75 வயது முதியவர் ஒருவர், தன் உயிரை மாய்த்துக் கொள்ள விரும்பினார். அவரது பெயர்,
பி.கே.பிள்ளை. கேரள மாநிலத்தில் மிகவும் பிரபலமான, வைக்கம் என்ற இடத்தைச் சார்ந்தவர். ஒரு பிரபல கம்பெனியில் பணிபுரிந்து, ஓய்வு பெற்றவர். வைக்கம் என்ற இடம், வரலாற்று முக்கியத்துவம் பெற்றது. ஈ.வெ.ரா.,வுக்கு, 'வைக்கம் வீரர்' என்ற, சிறப்பு உண்டு அல்லவா!
'கதாநாயகர், பி.கே.பிள்ளை, கேரள உயர் நீதிமன்றத்தில், ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், 'நான் உயிர் வாழ விரும்பவில்லை. எந்த பாதுகாப்பும், நிம்மதியும் இல்லாமல் ஊசலாடிக் கொண்டிருக்கிறேன். தற்கொலை செய்து கொள்ளலாம் என்றால், மத சம்பிரதாயங்களும், தற்கொலை பற்றிய நிலைபாடும், இடம் கொடுக்கவில்லை. எனவே, இந்த நீதிமன்றமே, அரசுக்கு கட்டளையிட்டு, என் உயிரை, நிபுணர்கள் மூலம் எடுத்து விட வேண்டும்...' என, அந்த முதியவர் கூறியிருந்தார்.
'இந்த மனுவை விசாரித்து, 'உயிரை காப்பதற்கு தான் சட்டங்களும், நீதிமன்றங்களும் இருக்கின்றன; உயிரை எடுப்பதற்கு, யாருக்கும், எந்தவித உரிமையும் கிடையாது...' என்று கூறி, தள்ளுபடி செய்தார், நீதிபதி கோஷி.
'கேரள உயர் நீதிமன்றத்தில், இப்படி ஒரு மனு தாக்கலானது முதல் முறையல்ல. ஏற்கனவே இரண்டு முதியோர், இது போன்ற மனுக்களை, இதே உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்தும், அவை நிராகரிக்கப்பட்டதும் நினைவு கூரத்தக்கது. கேரள உயர்நீதிமன்றத்திற்கு, முதியோர் பிரச்னை, ஒரு பெரிய தலைவலி என்பதை, இந்த மனுக்கள் புலப்படுத்துகின்றன.
'முதியோர் பிரச்னை, பரிசீலிக்கப்பட வேண்டியது. பெரும்பாலான குடும்பங்களில், முதியோருக்கு மரியாதையே இல்லாமல் போய் விட்டது. அதனால் அவர்கள் வெளியேறி, முதியோர் இல்லங்களில் அடைக்கலமாகின்றனர்.
'எவ்வளவோ பொறுமையாக இருந்தும், அங்கும் அவர்களுக்கு மரியாதை இல்லை; அவமானப் படுத்தப் படுகின்றனர். இதனால், அவர்களுக்கு நீதிமன்றம் ஒன்றே தஞ்சம்.
'இந்நிலையில், '75 வயது முதியவர், பி.கே.பிள்ளைக்கு, கேரள உயர்நீதிமன்றம், ஒரு நல்ல பரிகாரம் காண தவறி விட்டது...' என்று பழுத்த சட்ட நிபுணர் ஒருவர், கருத்து தெரிவித்தது மிகவும் பொருத்தமாகவே படுகிறது.
'சட்டம் ஒன்று தான்; நீதிபதிகள் தான் வெவ்வேறானவர்கள்; அவர்கள் தீர்ப்புகளும் வித்தியாசமாக இருக்கின்றன. இதனால், மக்கள் பெரிதும் குழம்புகின்றனர்.
'நீதி அடிப்படையில், பாண்டிய மன்னர் ஒரு உத்தரவு பிறப்பித்தால், மறுபரிசீலனையே கிடையாது; அந்த அளவுக்கு அந்த உத்தரவு, நடுநிலையுடன் இருக்கும். மக்களும், மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தனர்.
'குமரி மாவட்டத்தில், சத்திய நேசன் என்ற, நீதி சக்ரவர்த்தி இருந்தார். அவரது பெயருக்கேற்ப நீதிமானாகவும், சத்திய வந்தனாகவும் இருந்தார். தன் பதவி காலத்தில், அவரது நெருங்கிய உறவினர்களின் திருமணங்களில் கூட கலந்து கொள்ளவில்லை. திறப்பு விழா போன்ற எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கு பெறவே மாட்டார். அவர், தன் இல்லத்தில், ஒரு மவுன ஞானியாகவே வாழ்ந்தார்.
'அவர் முன் விசாரணைக்கு வரும் வக்கீல்களுக்கு, அதிக வேலை
இருக்காது. அவரே விசாரணை, குறுக்கு விசாரணை அனைத்தையும் மேற்கொள்வார். தர்ம நியாயத்தின் அடிப்படையிலேயே, அவரது தீர்ப்புகள் பெரிதும் அமைந்திருக்கும். மேல் நீதிமன்றங்களும், அவரது தீர்ப்பை ரத்து செய்ததில்லை; ஊர்ஜிதமே செய்தன. அவரது தீர்ப்புகள் அலாதியான வைகளாகவும், சிந்திக்கத் தக்கவைகளாகவும் இருந்தன.
'குழந்தைகள் காப்பகங்களிலும், அனாதை இல்லங்களிலும் தேய்ந்து கொண்டிருக்கும் குழந்தைகளை, பல்லாயிரம் ரூபாய் கொடுத்து, தத்து எடுத்து வளர்க்கின்றனர், குழந்தை இல்லாதோர். இதனால், அக்குழந்தைகள் செல்லமாய் வளர்கின்றன.
'இதே போன்று, முதியோர் இல்லங்களிலும், நிம்மதியற்று வாழும் வயோதிகர்களை, முதியோர் இல்லாத குடும்பங்களில் தத்தெடுத்து, பேணலாம்.
'அவர்கள் அனுபவசாலிகள்; குடும்பங்களுக்கு ஆலோசகர்களாகவும், காவலாளியாகவும் இருப்பர் அல்லவா... இத்திட்டத்தை சேவை இயக்கமாக உருவாக்கி பரப்பலாமே...' என, நீண்ட உரை நிகழ்த்தினார்.
சிந்திக்க வேண்டிய சமாசாரம் தான் என, நினைத்த அதே வேளை, இவர் மகன், அதாவது, என் நண்பர், நல்ல விதமாகத்தான் தன் பெற்றோரை நடத்துகிறார்... அதனால் தானே, அன்பாக காசிக்கு அனுப்பி வைக்கிறார் என, எண்ணி மகிழ்ந்தேன்!

