
சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே உள்ளது தம்பம்பட்டி. அங்கே, ஒரு காலத்தில், சர்க்கிள் இன்ஸ்பெக்டராக இருந்தார் நண்பர் ஒருவர்! ஆசாமிக்கு அப்போது, சுட்டுப் போட்டாலும் சட்டத்தில் ஒரு வரி கூடத் தெரியாது!
ஒருநாள், இவரது காவல் எல்லைக்கு உட்பட்ட சாலை ஒன்றில் விபத்து. மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை லாரியோ, பஸ்சோ, காரோ, ஜீப்போ அடித்துப் போட்டு, பறந்து விட்டது. பைக்கில் வந்தவர், தலத்திலேயே மரணமடைந்து விட்டார்.
தகவல் அறிந்து, விபத்து நடந்த இடத்தைப் பார்வையிடச் சென்றார், அந்த இன்ஸ்பெக்டர் நண்பர். உடன், நீண்ட காலமாக போலீசாக இருக்கும், சட்டம் தெரிந்த ஏட்டு ஒருவரும் சென்று உள்ளார்.
'இன்ஸ்பெக் ஷன்' முடியும் நேரத்தில், அந்த ஏட்டு, ஏதோ ஒரு சட்டப் பிரிவைச் சொல்லி, 'விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிளை, ஸ்டேஷனுக்கு எடுத்துச் செல்ல சட்டத்தில் இடமுள்ளது...' எனக் கூறியுள்ளார். 'பார்ட், பார்ட்டாக' கழற்றி பயன்படுத்திக் கொள்ளவோ, விற்கவோ செய்யலாமே!
நம் இன்ஸ்பெக்டர் நண்பர் தான், 'சட்டப் புலி' ஆயிற்றே... தன் அறியாமையை, ஏட்டின் முன் காண்பிக்க விரும்பாமல், ஜீப் டிரைவரைப் பார்த்து, 'வண்டியை எடுய்யா... வயிறே சரியில்லை... ஒரேயடியா கலக்குது... குவாட்டர்சுக்கு உடனே வண்டியை விடு...' எனக் கூறவும், 'ஐயா...' என்றபடியே, ஜீப்பை விரட்டியுள்ளார், டிரைவர்!
ஏட்டு கூறிய சட்டப் பிரிவை வழியெல்லாம் மனப்பாடம் செய்தபடியே, குவாட்டர்சை வந்தடைந்துள்ளார், இன்ஸ்பெக்டர்! வீட்டினுள் சென்று சட்டப் புத்தகங்களைப் புரட்டி, ஏட்டு சொன்ன பிரிவை கண்டுபிடித்து, அவர் சொன்னது சரி தான் என்பதை உறுதி செய்த பின், ஸ்டேஷனை அடைந்துள்ளார்.
பின், வயிற்றை தடவியபடி, 'ஓட்டல் சாப்பாடு வயித்துக்கு ஒத்துக்கல... இப்போ தான், 'ரிலாக்ஸ்ட்' ஆக இருக்கு...' எனக் கூறி, (இவரது குடும்பம் சென்னையில் இருந்ததால் ஓட்டல் சாப்பாடு...) ஏட்டிடம், 'அந்த சட்டப்பிரிவிலேயே போட்டுடுங்க... மோட்டார் பைக்கை கைப்பற்றி, ஸ்டேஷனுக்கு எடுத்து வர ஏற்பாடு செஞ்சுடுங்க...' என, பந்தாவாகக் கூறியுள்ளார்!
லஞ்சமே வாங்கத் தெரியாத இவருக்காக, இரண்டு முறை, உதவி செய்திருக்கிறேன்.
'மணி... தம்பம்பட்டி வந்து இரண்டு ஆண்டு ஆகிவிட்டது. குழந்தைகளையும், குடும்பத்தையும் பிரிந்து இருப்பது கஷ்டமாக இருக்கிறது. சென்னைக்கு மாற்றல் வாங்கிக் கொடேன்...' என்றார்; செய்தேன்!
அடுத்த முறை, ஒரு நாள், 'பீச் மீட்டிங்'கில் இருந்தபோது, திடுதிப்பென்று வந்து, என்னை தனியே அழைத்து, 'வருமானம் போதல... ராஜினாமா கடிதம் கொடுத்து விட்டேன். அமெரிக்கா போயி ஏதாவது வேல தேடிக்கப் போறேன்...' என்றாரே பார்க்கணும்!
'எலக்டிரிக் ஷாக்' அடித்தது போல இருந்தது எனக்கு!
'இருக்கறத விட்டு, பறக்கறதப் பிடிக்கணுமுன்னு நெனக்கிறீங்களே... அமெரிக்காவுல உங்க மாமனாரா, வேலய, தங்க தட்டுல வச்சு காத்துக்கிட்டு இருக்காரு... அது போக, மெட்ராசுல இருக்கிற, விசா குத்துற அமெரிக்காகாரங்க என்ன இளிச்சவாயர்களா... கண்ணுல வௌக்கெண்ணை விட்டு உட்காந்திருக்காங்க... உங்களுக்கெல்லாம் விசாவே தர மாட்டாங்க...' என, பலவாறாக கூறிய பின், போலீஸ் வேலையில் தொடர ஒப்புக் கொண்டார்!
போலீஸ் உயர் மட்டத்தில் கூறி, இவரது ராஜினாமாவை ஏற்காதிருக்கச் சொல்ல வேண்டுமே... அப்போது கமிஷனராக இருந்தவர் ஒரு, 'டப்' ஆசாமி! சந்தன வீரப்பனை பிடிக்கச் சென்ற அவரை, கமிஷனராகப் போட்டிருந்தார், அப்போதைய முதல்வர், ஜெ.,
கடைசியில், வீரப்பனின் சகாப்தம், இவரால் தான் முடிவுக்கு வந்தது. இவருக்கும், எனக்கும், ஏற்கனவே ஒரு விஷயத்தில், தொலைபேசி உரையாடல் தடித்துப் போனது உண்டு!
அதனால், நண்பரின் ராஜினாமா விஷயத்தில் நான் நேரடியாக இறங்கினால், எதிர் விளைவு உண்டாகி விடக்கூடாதே! கடைசியில் வேறு ஒருவர் உதவியுடன், வேலையை தக்க வைத்துக் கொடுத்தேன்!
அந்த அதிகாரியுடன் அதன் பின், சுமூக உறவு ஏற்பட்டது வேறு விஷயம்! தன் மகன் - மகள் திருமணத்திற்கு பத்திரிகை வைத்தார். ஆண்டு தவறாமல், புத்தாண்டு வாழ்த்தை, தன் கைபடவே எழுதி அனுப்பி வைக்கிறார்!
'கம்மிங் பேக் டு த பாயின்ட்...'
அந்த இன்ஸ்பெக்டர் நண்பர், இப்போது சட்டத்தைக் கரைத்து குடித்து விட்டார். சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் நடராஜின் பாணியில், விருமாண்டி கிருதா, மீசை வைத்து, அவரிடமே நேரடியாக, 'ரிப்போர்ட்' செய்யும் ஒரு பணியிலிருந்து, பணி ஓய்வு பெற்றார்.
தம்பம்பட்டியில், நண்பர் பணியில் இருந்தபோது, சேலம் செல்லும் வழியில், ஒருமுறை அவரை சந்தித்தேன். அப்போது, அருகில் இருக்கும் பச்சை மலைக்கு அழைத்துச் செல்வதாகவும், அங்குள்ள பள்ளியில் இரண்டு தினங்கள் தங்கி, காட்டைச் சுற்றிப் பார்க்கலாம் எனவும் கூறி இருந்தார்!
அப்போது, சந்தர்ப்பம் அமையாததால், அதன்பின், வேறொரு நாளில், 'ஸ்கார்ப்பியோ' ஜீப் ஒன்றில், லென்ஸ் மாமா, குப்பண்ணா, ஐ.ஏ.எஸ்., நண்பர் மற்றும் ஞானசேகரன் என, ஒரு கோஷ்டியாக, பச்சை மலைக்குக் கிளம்பினோம்.
மலை பற்றிய விபரங்கள் தெரிந்த ஒருவர் உதவிக்கு வேண்டுமே! போலீசுக்கு துப்பு சொல்லும், 'இன்பார்மர்' ஒருவரை ஏற்பாடு செய்து கொடுத்தனர் வேண்டியவர்கள்!
இட்லி, புரோட்டா, சிக்கன் குருமா மற்றும் தயிர் சாதம் ஆகியவை எடுத்து கிளம்பினோம். அன்றைய காலை நாளிதழ்கள் அனைத்தையும் வாங்கிக் கொண்டேன்.
மலை ஏறத் துவங்கியதும், 'பாரஸ்ட் செக்போஸ்ட்' தடுப்பு கம்பி, வண்டியை நிறுத்தியது. வனக் காவலர் ஒருவர் வந்து, 'எங்கிருந்து வர்றீங்க?' எனக் கேட்டார்.
டிரைவிங் சீட்டில் இருந்த நண்பர், 'சென்னை...' என்றார்.
'வாகன ஓட்டுனரே இங்கே வாருங்கள்...' என அழைத்து, 'உங்க பெயர் என்ன... வயது என்ன... தகப்பனார் பெயர், வயது என்ன... முகவரி என்ன?' என, பலவும் கேட்டார்.
எல்லாவற்றுக்கும் பதில் சொன்னார், நண்பர்!
'எங்கே போறீங்க... அருவிக்கா... காளி கோவிலுக்கா...'
ஒரு நிமிடம் தடுமாறிய நண்பர், சுதாரித்து, 'காளி கோவிலுக்கு...' என்றார்.
'எதற்கு?'
'தரிசனம் செய்ய...'
அதையும் எழுதிக் கொண்டவர், ஜீப் நுழைவு கட்டணமாக, 60 ரூபாய் கேட்டார்; அதற்கு ரசீதும் கொடுத்தார். 100 ரூபாயில் மீதம், 40ஐ அவரையே வைத்துக் கொள்ளச் சொன்னதும், வாயெல்லாம் சிரிப்பாக, பெரிய, 'சல்யூட்' அடித்து, 'நல்லபடியா போய் வாங்க சார்...' என, அனுப்பி வைத்தார்.

