தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : ஏப் 17, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 17, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தஞ்சை மாவட்ட வாசகி அவர்; கணவர் விவசாயி... ஒரு குழந்தை உண்டு! படிப்பதில், எழுதுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இவரது சிறுகதைகள் பல இதழ்களில் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. சென்னையில் இவர் வசிப்பவராக இருந்தால், இந்நேரம் பிரபலமான எழுத்தாளர்களில் ஒருவராகி இருப்பாரோ என, இவரைப் பற்றி நான் நினைப்பதுண்டு.

தன் உறவினர் ஒருவரது வீட்டு விசேஷத்தில் கலந்து கொள்ள, சென்ற வாரம் சென்னை வந்தவர், என்னை சந்திக்க அலுவலகம் வந்தார். வழக்கமான நல விசாரிப்புகள், உபசாரமான காபி அருந்துதலுக்குப் பின், 'என் கனவுகள், உள்ளுணர்வு கூறும் முன் எச்சரிக்கைகள் பற்றி சொல்ல விரும்புகிறேன்...' என்றார்.

எழுத, 'மேட்டர்' கிடைக்கப் போகிறது என்ற குஷியில், 'சொல்லுங்க மேடம்... சொல்லுங்க...' என்றேன் ஆவலாக!

நான் நன்றாகத் தூங்குவேன்... தினமும் குறைந்த பட்சம், 8 முதல், 9 மணி நேரத் தூக்கம் வேண்டும் எனக்கு. எல்லா நாளும் எனக்கு கனவு வராது. ஏதாவது சம்பவம் நடக்கப் போவதாக இருந்தாலோ, ஏதோ வரப்போவதாக இருந்தாலோ, அது, கனவில் தோன்றி விடும். இது குறித்த விஞ்ஞான விளக்கங்கள் எனக்குத் தெரியவில்லை.

நாமகிரித்தாயார், கணித மேதை ராமானுஜருக்கு, சூத்திரங்களை கனவில் தோன்றி சொல்வாராம்... தூக்கத்திலிருந்து எழுந்து, பெட்ரூம் விளக்கொளியில் சாக்பீசால் தரையில் அவற்றை எழுதி வைத்து விட்டு, காலையில் நோட்-புக்கில் பதிவு செய்து கொள்வாராம் ராமானுஜர். அவருடைய வாழ்க்கை சரித்திர நூலில் நான் படித்த விஷயம் இது!

நானும் ஒரு ஜீனியசாக இருந்திருந்தால், சாதனைகள் பல படைத்திருப்பேனோ, என்னவோ... சிற்சில நிகழ்வுகள் வரப்போகின்றன என்பதை, எனக்கு முன் கூட்டியே கனவுகள் உணர்த்தி விடும்...

உதாரணமாக, என் அம்மா இறந்து போவதற்கு ஒரு வாரத்திற்கு முன், இறந்து போன என் உறவினர் ஒருவர், என் கனவில் தோன்றி சிரித்தார் - அவர் இறந்து, அப்போது ஒரு வருடம் முடிந்திருக்கவில்லை.

வேலை தேடி டில்லி போனேன்... அங்கு பல இன்னல்கள்! ஸ்ரீ ராகவேந்திரரை அறிமுகம் செய்தார் நண்பர் ஒருவர். கனவில் நான் நமஸ்கரிக்க, நமஸ்கரிக்க, தன் இரு கரங்களாலும் என்னைத் தூக்கி விட்டார் ராகவேந்திரர்; அதன் பிறகு, கஷ்டங்கள், கஷ்டங்களாக இல்லை.

டில்லியில்பஸ் விபத்து ஒன்றில் சிக்கிக் கொண்டேன்; இன்னொருவராக இருந்திருந்தால் பிழைத்திருக்கவே முடியாது. விபத்திலிருந்து என் கை தப்பிப் பிழைத்ததே ராகவேந்திரர் அருளால் தான். அன்று இரவு, ராகவேந்திரர், தன் கையில் இருந்த பஞ்சபாத்திர தீர்த்தம் முழுவதையும் என் கையில் வார்ப்பது போல - அதாவது, அவர் தவ வலிமை முழுவதையும் தருவது போல கனவு வந்தது...

கை குணமாக ஆறு மாதங்களுக்கு மேலாகும் என மருத்துவர்கள் கூறி இருந்தும், ஒரே மாதத்தில் கை சரியாகி, அலுவலகம் செல்ல ஆரம்பித்து விட்டேன்.

சி.ஏ., இன்டர், இரண்டு குரூப்பும் எழுதினேன்; 'கிளியர்' ஆயிருமா என்று புரியவில்லை. உடையாளூரில் இருக்கும் என் அக்கா, அவள் ஊர் செல்வமாகாளி அம்மனிடம் எனக்காக வேண்டிக் கொள்ள, என் கனவில் செல்வமாகாளி அம்மன் வந்து, 'ம்...' என்று ஜாடை காட்டினாள் பூசாரியிடம். தட்டிலிருந்த இரு வாழைப்பழங்களில் ஒன்றைப் பிய்த்து என்னிடம் பூசாரி தர, ஒரு குரூப் மட்டும் பாசானேன்.

காஞ்சிப் பெரியவரை நான் தரிசித்ததில்லை. பரணிதரன் எழுதிய, 'அன்பே அருளே' என்ற நூலை படித்துக் கொண்டிருந்த போது, 'அவரை தரிசிக்கும் பாக்கியம் கிட்டாமல் போய் விட்டதே...' என்ற வருத்தத்துடன், இரண்டே, இரண்டு நிமிடம் தூங்கி விட்டேன் நெகிழ்ச்சியுடன் - அதுவும் பகலில்! காஞ்சிப் பெரியவர் அமர்ந்திருக்கிறார்... எதிரில் பால பெரியவர். பால பெரியவருக்குத் தீர்த்தம் கொடுத்து விட்டு, எனக்கும் கொடுக்கிறார். மறுபடியும் பால பெரியவர் கை நீட்ட, அவருக்கு மறுத்து விட்டு, நான் நீட்டிய என் கையில் ஏதோ தர, திறந்து பார்த்தால், உலர்ந்த பழங்கள்! கனவும் - தூக்கமும் ஒரு சேர கலைந்து எழுந்தேன். அது, பெரியவர் மஹாசமாதியான வருடம்! கனவு கண்ட அடுத்த நாலு மாதத்தில் எனக்குத் திருமணம்; அது, பால பெரியவருக்கு வேண்டாம் தானே!

அடுத்து, பாண்டிச்சேரி மதர் அறிமுகம்! எது ஒன்று செய்வதானாலும், அவர் உத்தரவின்றி செய்வதில்லை. அவர் அருளை எழுத வார்த்தையில்லை!

சிக்கலான ஒரு விஷயம் குறித்து, கனவில் வந்த மதரிடம் முறையிட்டேன்... அவர் என் கையைப் பிடித்து, 'ஏறு; தைரியமாய் ஏறு... நான் பார்த்துக் கொள்கிறேன்...' என்று சொல்லி, கீழ் தள சேரில் அமர்ந்து கொள்ள, நான் மட்டும் படி ஏறுகிறேன்...

மறுநாளே அந்த சிக்கல் தீர்ந்தது... அந்த சிக்கலால், இதுவரை எந்தத் தாழ்வையும் நான் அனுபவிக்கவில்லை!

தினமும் இரவு, படுக்க போகுமுன் அன்னையைத் தியானிப்பேன். ஒருநாள், அதிக வேலையால் தியானிக்கத் தவறி விட்டேன். கனவில் வந்த அன்னை, 'உனக்காகக் காத்திருக்கிறேன்!' என்றார்.

பணத்தையோ, பல்லக்கையோ கனவில் கண்டால், நெருங்கியவருக்கு மரணம் சம்பவிக்கும் என்பர்; அது, பலமுறை நடந்திருக்கிறது எனக்கு. அதே போல, மலத்தை கனவில் கண்டால், பணம் வரும் என்பர்; அதுவும் நடந்திருக்கிறது எனக்கு!

சொன்னால் நம்ப மாட்டாய்... சமீபத்திய கனவில், நிறைய சாமி பல்லக்கை கண்டேன். ஆனால், பல்லக்கை நகர விடாமல் யானைகள் மறித்தன; பயந்து போனேன்... யாரோ, 'போக'ப் போகின்றனர் என்று... மறுநாள் போன் வருகிறது... 82 வயதான என் தந்தையை தேள் கொட்டி, பிழைப்பாரா என ஆகி விட்டதாம்; பிழைத்து விட்டார் - பல்லக்கை யானைகள் தடுத்ததே... அதுதான்!

புது குக்கர் ஒன்று வாங்க வேண்டுமென உள் மனம் இரண்டு நாட்களாக அடித்துக் கொண்டிருக்க, எங்கள் ஊர் அருகே பெண்கள் இதழ் ஒன்று நடத்திய விழாவில் கலந்து கொண்டேன். அதில், போட்டி ஒன்றில் வெற்றி பெற்று, குக்கர் பரிசு பெற்றேன்...

— இப்படி, கனவுகள், உள்மன உணர்வுகள் பற்றி வாசகி கூறிக் கொண்டே இருக்க, மீண்டும் ஒரு காபி கொடுத்து அனுப்பி வைத்தேன் அவரை!

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us