
ப
சனிக்கிழமை மாலை, அலுவலக வேலைகளை முடித்து, நேராக வீட்டுக்கு சென்று விட்டேன். இரவு, 'திண்ணை' நாராயணன் சார் கொடுத்த, 'இந்திய சமஸ்தானங்களின் வரலாறு' என்ற புத்தகத்தை படிக்க எடுத்தேன்.
ராஜபுத்திர சமஸ்தானம் அல்வார் பகுதியை ஆண்ட, ஜெய்சிங் பற்றிய கட்டுரை கண்ணில் பட, படிக்க ஆரம்பித்தேன்.
அதில்:
அல்வார் சமஸ்தானத்து மகாராஜா, ஜெய்சிங், ஒரு உல்லாச விரும்பி. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கண்ணில், விரல் விட்டு ஆட்டியவர். பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் மனைவியருக்கு, விலை உயர்ந்த பொருட்களை, பரிசாக அளித்து, தன் அந்தப்புரத்துக்கு வரவழைத்தவர்...
'அரச பரம்பரையில் பிறந்ததே, தங்கத்திலும், வைரத்திலும் புரண்டு, வாழ்க்கையை அணு அணுவாக அனுபவிப்பதற்கு தான்...' என்ற எண்ணம் உடையவர்.
தன் அரசவையில் இருக்கும் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளும் அவ்வாறே இருக்க வேண்டும் என்று எண்ணுவார். அதற்காக, அடிக்கடி விருந்து, கேளிக்கைகளை ஏற்பாடு செய்வார். தன் பட்டத்து மகாராணியை தவிர, மற்ற அந்தப்புரத்து ராணிகளை, மற்றவர்களுக்கு விருந்தாக்கவும் முன் வருவார்.
எனவே, விருந்து என்றவுடன், அமைச்சர்கள் உட்பட, தளபதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் தவறாமல் ஆஜராகி விடுவர். இதில், நிதி அமைச்சராக இருந்த, கசன்பர் அலிகான், சற்று அதிகமாக உரிமை எடுத்து, அந்தப்புர அழகிகளுடன், கூடி களிப்பார்.
இது, மற்ற அமைச்சர்களுக்கு சற்று எரிச்சலை தரும். அவரை கவிழ்க்க சந்தர்ப்பம் பார்த்திருந்தனர். அப்படியொரு சந்தர்ப்பமும் அமைந்தது.
ஒரே மாதிரியாக நடந்த விருந்து களியாட்டங்களில் சலிப்பு ஏற்பட, ஏதாவது புதிதாக செய்ய யோசித்தார், மன்னர், ஜெய்சிங்.
அச்சமயத்தில், தீபாவளி வரவே, ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதாவது, தீபாவளி அன்று நடைபெறும் விருந்தின் போது, எல்லா அமைச்சர்களும், உயர் அதிகாரிகளும், தத்தம் மனைவியுடன் கலந்து கொள்ள வேண்டும் என்று கட்டளையிட்டார்.
அமைச்சர்கள் மற்றும் உடன் இருந்தவர்களுக்கு, இது சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும், 'மன்னர் கட்டளையாயிற்றே... இதற்கு கட்டுப்பட்டு தான் ஆக வேண்டும்...' என்று நினைத்தனர்.
ஜெய்சிங்கிடம் சென்று, 'மன்னரே.... எங்கள் மத விதிமுறைப்படி, மனைவியை வெளியாட்கள் முன், அழைத்து வர இயலாது...' என்று மெதுவாக கூறினார், நிதி அமைச்சர், அலிகான்.
மன்னரும் ஆரம்பத்தில், 'சரி...' என, அவருக்கு மட்டும் விலக்கு அளித்தார்.
இதை அறிந்த மற்ற அமைச்சர்கள் சும்மா இருப்பரா...
'அதெப்படி மன்னா... தங்கள் அந்தப்புரத்து ராணிகளையே, தாங்கள் அழைத்து வரும்போது, அவருக்கு மட்டும் சலுகை காட்டலாமா...' என, மாட்டி விட்டனர்.
மன்னரும், 'கண்டிப்பாக மனைவியுடன் கலந்து கொள்ள வேண்டும்...' என, அலிகானுக்கு உத்தரவு பிறப்பித்து விட்டார். இனி, தப்ப முடியாது என்று நினைத்த அலிகான், தன் நண்பரிடம் ஆலோசனை செய்தார்.
'இதற்கு முன், மன்னரோ, அங்கு இருக்கும் மற்றவர்களோ, உங்கள் மனைவியை பார்த்ததே இல்லை. எனவே, உல்லாச விடுதியில் உள்ள அழகி ஒருவரை வரவழைத்து, உங்கள் மனைவியாக நடிக்க சொல்லலாம்...' என்று யோசனை கூற, ஏற்றுக் கொண்டார், அலிகான்.
ஜெய்சிங்கிடம், 'மன்னரே... என் மனைவிக்கு விலை உயர்ந்த துணிமணிகள் வாங்க வேண்டும்...' என்று கூறி, டில்லி சென்றார். அங்கு, உல்லாச விடுதி ஒன்றுக்கு சென்று, அழகி ஒருவரை தேர்ந்தெடுத்தார். அரண்மனையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என, அழகிக்கு பயிற்சி அளித்தனர், அலிகானும், அவர் நண்பர்களும்.
கற்பூர புத்தி கொண்ட அப்பெண்ணும், அவர்கள் சொல்லி தந்ததை கருத்தாக கேட்டுக் கொண்டார்.
விருந்து நடைபெறும் நாளும் வந்தது. எங்கேயாவது அப்பெண் சொதப்பி வைத்து, தன் குட்டு வெளிப்பட்டு விடுமோ என்று பயத்துடனே, ரயிலில் அப்பெண்ணுடன் கிளம்பினார், அலிகான்.
ரயில் நிலையத்துக்கே வந்து, அலிகான் தம்பதியரை வரவேற்றார், மன்னர், ஜெய்சிங். கண்கள் தவிர, தலை முதல் பாதம் வரை, பர்தா அணிந்திருந்தாலும், அவளது கண்ணழகில் சொக்கி விழுந்தனர், மன்னரும், அமைச்சர்களும்.
தீபாவளி விருந்து, களை கட்டியது. பிரான்ஸ் நாட்டிலிருந்து, வரவழைக்கப்பட்ட மது வகைகள் ஆறாக ஓடின. அனைவரிடமும் சகஜமாக பழகி, அவர்களுக்கு போதையூட்டி மகிழ்வித்தாள், அப்பெண். அவளுக்கு ஏராளமான பொன்னையும், பொருளையும் வாரி இறைத்தார், மன்னர், ஜெய்சிங்.
அனைவருமே, அப்பெண்ணை, அலிகானின் மனைவி என்றே நம்பி விட்டனர்.
விருந்து முடிந்த மறுநாள், அலிகானை அழைத்த ஜெய்சிங், 'இந்த அரண்மனையில் நடைபெறும் ஒவ்வொரு விருந்திலும், இனி, உன் மனைவியுடன் தான் கலந்து கொள்ள வேண்டும்...' என்று கட்டளையிட்டார்.
அலிகான் அதிர்ந்தாலும், உடனே சமாளித்தபடி, 'மன்னரே.... விருந்தில் கலந்து கொள்ள வேண்டுமென்றால், அவருக்கு நிறைய உடைகள் வாங்க வேண்டும். எனவே, பிரான்சுக்கு போய் வருகிறேன்...' என்றார்.
அப்பெண்ணின் அழகில் மயங்கி கிடந்த மன்னரும், உடனடியாக, 50 ஆயிரம் மதிப்புள்ள பொற்காசுகளை கொடுத்து, 'உடனே பிரான்சுக்கு போய் வா...' என்று வழி அனுப்பி வைத்தார்.
இந்த இக்கட்டிலிருந்து தப்பிக்க, வழி தேடினார், அலிகான். அப்பெண்ணை, உடனடியாக பழைய இடத்துக்கு அனுப்பாமல், சிறிது காலம் தலைமறைவாக இருக்க வைத்தார்.
சிறிது காலத்துக்கு பின், சோகமே உருவாக வந்து, 'மன்னா... பிரான்சிலிருந்து திரும்பி வரும்போது, என் மனைவி கடலில் மூழ்கி இறந்து விட்டார்...' என்று, அலிகான் கதை கட்டிவிட, மன்னரும், மற்றவர்களும் நம்பி, அவள் மீது அனுதாபப்பட்டனர்.
'எத்தனுக்கு எத்தன் வையகத்தில் உண்டு தானே... சமஸ்தானத்து மன்னர்களின் லீலைகளை என்னவென்று சொல்வது...' என்று நினைத்தவாறே, துாங்கி போனேன்.