sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பா.கே.ப.,

/

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : நவ 03, 2019

Google News

PUBLISHED ON : நவ 03, 2019


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பா - கே

லண்டனிலிருந்து, சென்னை வந்திருந்தார், நண்பரான, உளவியல் மருத்துவர். அவருடன் பேசிக் கொண்டிருந்த போது, செம, 'டென்ஷனில்' வந்தார், லென்ஸ் மாமா.

மேஜை மீதிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து, 'மடக் மடக்'கென்று குடித்தவர், 'இவனுக்கெல்லாம் எவன், 'லைசென்ஸ்' கொடுத்தான்னு தெரியலை... தாறுமாறா வண்டி ஓட்டி வந்து இடித்து, அலட்டிக்காமல், 'சாரி' சொல்லிட்டு போறாம்பா...

'இவனை சும்மா விடக்கூடாது. கார் நம்பர, 'நோட்' பண்ணிட்டு வந்திருக்கேன். அவனை உண்டு, இல்லைன்னு செய்யறேன் பார்...' என்று உறுமினார்.

அருகிலிருந்த நண்பர், 'மாமா... வண்டிக்கோ, உங்களுக்கோ, 'டேமேஜ்' இல்லை தானே... பெருந்தன்மையா, இதை சீரியசா எடுத்துக்காம விட்டுடுங்க... மன்னிப்பது, தெய்வ குணம்ன்னு சொல்வாங்களே... கேட்டதில்லையா... மன்னிப்பதால் என்ன நன்மை என்பதை ஆராய்ச்சி செய்து சொல்லியிருக்காங்க...' என்று சொல்ல ஆரம்பித்தார்:

நீங்கள் ஒரு நபர் மீது எரிச்சலும், கோபமும் கொள்ளும்போது, உங்கள் மூளையில் ஒரு வடிவம் உருவாகிறது. உங்கள் எரிச்சலும், கோபமும் அதிகரிக்க அதிகரிக்க, அந்த வடிவம் ரொம்ப வலுவாக மாறும். அதன்பின், கோபமும், எரிச்சலும் இல்லாமல் வாழ்வது, உங்களுக்கு குதிரைக் கொம்பாகி விடும்.

அதேசமயம், மன்னிக்கும் பழக்கமுடைய மனிதர்கள் ஆனந்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கின்றனர் என்கின்றன, பல்வேறு ஆராய்ச்சி முடிவுகள்.

'கேம்பைன் பார் பர்கிவ்னஸ் ரிசர்ச்' என்ற அமைப்பு, 48 ஆராய்ச்சிகளின் முடிவை விலாவரியாக எடுத்துரைக்கிறது. எல்லா ஆராய்ச்சிகளுமே, மன்னிக்கும் குணமுள்ள மனிதர்கள், உடலாலும், உள்ளத்தாலும் ஆரோக்கியமாகவும், ஆனந்தமாகவும் இருப்பதாக கூறுகின்றன.

'ஸ்டான்போர்ட்' பல்கலை கழக பேராசிரியர், தன், 'லேர்ன் டு பர்கிவ் - மன்னிக்க கற்றுக் கொள்ளுங்கள்' எனும் நுாலில், மன்னிப்பின் மகத்துவத்தையும், அது தரும் ஆரோக்கியமான வாழ்க்கையை பற்றியும், பிரமிப்பூட்டும் வகையில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.

மன்னிப்பவர்களுக்கு புற்றுநோய் வரும் வாய்ப்பும் குறைவு என்கிறது, அமெரிக்காவில் உள்ள, 'யேல்' மருத்துவ பல்கலை கழக ஆய்வு கட்டுரை.

மன்னிக்கும் மனம், நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்; மன அழுத்தத்தை குறைக்கும்; இதுவே நோய் வராமல் தடுக்கிறது.

மதங்களின் நாடு, இந்தியா. மதங்கள் எல்லாமே மன்னிப்பை பற்றி உயர்வாக பேசுகின்றன.

'ஒரு மனிதன், தேவ நிலையை அடைய வேண்டுமெனில், மன்னிப்பும் அவனிடம் இருக்க வேண்டும்...' என்கிறது, பகவத் கீதை.

கடவுளை, 'அல் கபிர்' என்கிறது, இஸ்லாம். முழுமையாக மன்னிப்பவர் என்பது, அதன் அர்த்தம்.

'மன்னிக்க மறுப்பவர்கள், சொர்க்கம் செல்ல முடியாது...' என்கிறது, கிறிஸ்தவம்.

மதங்களை பின்பற்றும் நம் நாட்டில், மன்னிப்பு எவ்வளவு துாரம் ஆரோக்கியமாக இருக்கிறது என்பதை, 'மீடியா'க்களில் இன்றைய நிகழ்வுகளை பார்த்தாலே தெரிந்து கொள்ள முடியும்.

மன்னிக்கும் குணம், சட்ட திட்டங்களால் வருவதில்லை. மன்னிக்கும் மனதுடைய மக்களுடன் பழகும்போது, நம்மை அறியாமலேயே, அந்த நல்ல பழக்கமும் நம்முடன் வந்து ஒட்டிக்கொள்கிறது.

மன்னிக்கும் மனநிலை பெற்றோருக்கு இருந்தால், அவர்களை பார்த்து வளரும் குழந்தைகள், அதை எளிதாகவே பெற்று விடுவர். குழந்தைகளுக்கு, மன்னிக்கும் மனம் இயல்பாகும் போது, எதிர்கால சமூகம், வன்முறைகளின் வேர்களை அறுத்து விடும்.

அடுத்தவர்களுடைய மனநிலையில் இருந்து, நமக்கு நேர்ந்த கசப்பான நிகழ்வை யோசித்து பார்த்தால், பெரும்பாலான கோபங்கள் விலகி விடும். குறிப்பாக, கணவன் - மனைவி, குடும்பத்தினருக்கு இடையேயான பிணக்கு, எரிச்சல், வெறுப்பு போன்றவை, கதிரவன் கண்ட பனி போல விலகி விடும்.

பல வேளைகளில், நாம் கோபத்தை விட்டு விட ரொம்பவே தயங்குகிறோம். கோபம் என்பது, வீரத்தின் அடையாளம் என்று, போலியாக கற்பனை செய்து கொள்கிறோம். எதிர் நபர், மன்னிப்புக்கு தகுதியற்றவர் என்று முடிவு கட்டி விடுகிறோம்.

அப்படி நினைப்பதன் மூலம், நாம், பெரியவர்களாக முயலும் உளவியல் சிக்கலே இது.

கடந்த காலத்தின் நிகழ்வுகளை மாற்றாது, மன்னிப்பு; ஆனால், அது எதிர்காலத்தின் பாதைகளில் ஆனந்தமான பூக்களை சொரியும்.

பணத்தாலோ, செல்வத்தாலோ கட்டப்படுவதல்ல, வாழ்க்கை; அது, அன்பின் இழைகளால் பின்னப்படுவது.

உண்மையான அன்பு இருக்கும் இடத்தில், மன்னிக்கும் மனம், தானே முளை விடும்.

மன்னிப்பு கேட்கும் எவருக்கும், மன்னிக்க மறுக்காதீர்; மன்னிப்பு கேட்காதவர்களையும் மன்னிக்க மறவாதீர்; மன்னித்து, மகான் ஆகுங்கள்.

- இப்படி கூறி முடித்தார், நண்பர்.

லென்ஸ் மாமாவின் கோபம் சற்று

தணிந்திருப்பது போல் தோன்றியது. அவரை

சமாதானப்படுத்தும் விதத்தில், அருகிலிருக்கும், 'ஷாப்பிங் மாலு'க்கு அழைத்துச் சென்றார்,

நண்பர்.

நான், என் வேலையை தொடர்ந்தேன்.



இங்கிலாந்து நாட்டின் பிரதமராக இருந்த, வின்ஸ்டன் சர்ச்சில் பற்றிய புத்தகம் ஒன்றை படிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அதில்:

எந்த நேரமும், ஏதாவது, 'வளவள'வென்று பேசிக் கொண்டிருப்பவர், பிரிட்டிஷ் பிரதமர், சர் வின்ஸ்டன் சர்ச்சிலின் மருமகன்.

ஒரு சமயம், சர்ச்சில் ஒரு முக்கியமான அலுவலில் ஈடுபட்டிருந்த போது, அவரிடம், 'உலகிலேயே மிகப்பெரிய ராஜதந்திரி யார்...' என்றார், மருமகன்.

உடனே, 'ரஷ்ய அதிபர் முசோலினி...' என்றார், சர்ச்சில்.

அதைக்கேட்டு வியப்புற்ற சர்ச்சிலின் மருமகன், 'என்ன இவ்வாறு கூறுகிறீர்கள். அப்படியெனில், நீங்கள் என்ன, முசோலினியை விட தாழ்ந்தவரா...' என்று கேட்டார்.

அதற்கு, 'தொண தொண என்று பேசிக் கொண்டிருந்த, அவருடைய மருமகனை சுட்டுக் கொன்று விட்டார், முசோலினி. அவர் மாதிரி என்னால் செய்ய முடியவில்லை...' என்று அமைதியாக பதிலளித்தார், சர்ச்சில்.

கேட்ட மருமகன், இருந்த இடம் தெரியாமல் மறைந்தார் என்பதை சொல்லவும் வேண்டுமோ... பிறகு, சர்ச்சிலிடம், 'வளவள' என்று பேசுவதை குறைத்துக் கொண்டார்.

- இது, எப்படி இருக்கு!






      Dinamalar
      Follow us