
மதுரை -
நண்பர் ஒருவரின் மகள் திருமணம்! வாசலிலேயே வரவேற்று, முதல் வரிசையில் அமர வைத்து விட்டார். அருகில், நாதஸ்வரம், கெட்டி மேளம்... இனிமையாக இருந்தாலும், காதை அடைத்தது!
மேடையில், மணமகளும் இல்லை, மணமகனும் இல்லை! திருமணத்திற்கு மந்திரம் சொல்லும் அந்தணரும் இல்லை!
சிறிது நேரத்திற்கு பிறகு, 10 இளம் பெண்கள், கைகளில் விளக்கு வைத்தபடி, மேடையில் இருந்து இறங்கிச் சென்றனர்.
10 நிமிடத்தில், விளக்கு ஏந்திய இளம் பெண்கள் புடைச்சூழ வந்தார், மாப்பிள்ளை!
மேடையில் ஏகப்பட்ட, குத்து விளக்குகள் ஏற்றப்பட்டிருந்தன.
மேடைக்கு, மாப்பிள்ளை வந்த பின், ஒரு சட்டியில், நெல் குவிக்கப்பட்டது. அதன் நடுவில் இருந்த, சோளக் கதிரின் இலைகள் பிரிக்கப்பட்டன.
இதன் பிறகு, மாப்பிள்ளையை அழைத்து வந்த அதே பாணியில், இளம் பெண்களால் அழைத்து வரப்பட்டார், மணமகள்!
மணமகள் கழுத்தில், ஒரு தங்க சங்கிலி போட்டார், மாப்பிள்ளை... மோதிரம் மாற்றிக் கொண்டனர்!
முன் வரிசையில் அமர்ந்திருந்தும், இக்காட்சிகளை, 'வீடியோ கிராபர்' மற்றும் 'போட்டோ கிராபர்' மறைத்திருந்தும் காண வேண்டியிருந்தது.
மொத்தமே, 10 நிமிடத்தில் திருமணம் முடிந்து விட்டது!
மணமகளின் தந்தை பெயர்: 'ஆட்டோ' கண்ணன்; பேருந்து, லாரி, கார் மற்றும் ஆட்டோக்களின் உதிரி பாகங்களை, தமிழகம் முழுவதும் விற்பனை செய்பவர். அதனால், அவர் பெயர், 'ஆட்டோ' கண்ணன் ஆகிவிட்டது!
மகள் கல்யாணத்தின் போது தான், அவர், மலையாள நாயர் என்பதை தெரிந்து கொண்டேன்!
இதே போன்று, நம்மூர் திருமணங்களும், 10 நிமிடத்தில் முடிந்தால் நன்றாக இருக்குமே என, நினைத்துக் கொண்டேன்!
'பீச் மீட்டிங்'குக்கு வந்திருந்த, 'திண்ணை' நாராயணன் சார், தன் ஜோல்னா பையிலிருந்து, டாக்டர் மாத்ருபூதம் எழுதிய, புன்னகை பூக்கள் புத்தகத்தை எடுத்து, ஒரு பக்கத்தை படிக்க ஆரம்பித்தார். அதில்:
'செக்ஸ் எஜுகேஷனல்' பற்றி, தொடர்ந்து சில ஆண்டுகள், தனியார், 'டிவி' சேனலில், நான் நிகழ்ச்சி நடத்தியது, தமிழறிந்த எல்லாருக்கும் தெரியும். அப்போது, சில விவகாரமான கேள்விகளை நேயர்கள் கேட்பர்.
ஒருவர், 'உங்களுக்கு கிட்டத்தட்ட, 60 வயதாகிறது. உங்களை நேர்காணல் செய்யும், பெண் மருத்துவர், அழகான இள வயது பெண்மணி. அவரை உடன் வைத்து, நீங்கள், 'செக்ஸ்' பற்றி பேசுவது, உங்களுக்கு நியாயமா இருக்கிறதா?' என, எழுதியிருந்தார்.
அதற்கு நான், 'இந்த வயதில் பேசத்தான் முடியும். வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்...' என்றேன்.
அந்த பதில் எல்லாருக்கும் பிடித்திருந்தது என்பது தான், இதில் உள்ள விஷயம்.
இதை கேட்டதும், வெடி சிரிப்பு சிரித்தனர், 60 வயதைத் தாண்டிய அனைவரும்.
அடுத்து, '1லிருந்து 0 வரை உள்ள எண்களை, தமிழில் எப்படி எழுதுவது; அதை எப்படி நினைவில் வைத்துக் கொள்வது...' என்று, 'திண்ணை' நாராயணன் சார் கேட்டார்.
யாருக்கும் தெரியவில்லை. அவரே சொல்ல ஆரம்பித்தார்:
அதாவது, '1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0' என்ற எண்ணுக்கு முறையே, 'க, உ, ங, ச, ரு, சா, எ, அ, கூ, 0!'
'இதை எப்படி மனப்பாடம் செய்தீர்கள்?' என்று கேட்டேன்.
'க'டுகு - 1, 'உ'ளுந்து - 2,
'ங'னைச்சு - 3, 'ச'மைச்சு - 4, 'ரு'சிச்சு - 5,
'சா'ப்பிட்டேன் - 6, 'எ'ன - 7, 'அ'வன் - 8, 'கூ'றினான் - 9, 'ய' என்றேன் - 0 என, அத்தமிழ் எழுத்துக்களை வரிசைப்படுத்தி, வாக்கியமாக்கி, மனப்பாடம் செய்ததாக கூறினார்.
நம்மால் முடியுமா; முயற்சி செய்து பார்ப்போமே!
கடந்த, டிசம்பர் 29, 2019 இதழில் வெளியான ஒரு கேள்வி - பதில்:
என். பாலசந்திரன், திருப்பூர்:
அந்துமணி அண்ணா... ரொம்ப நாளா, எனக்கொரு சந்தேகம்ண்ணா... பொதுவா, தன் கணவரை, மனைவி கூப்பிடும்போது, ஏங்க, வாங்க, போங்கன்னு கூப்பிடுவதை தான் பார்த்திருக்கிறேன். ஆனால், பிராமண குடும்பத்தினர், 'ஏண்ணா, வாங்கண்ணா, போங்கண்ணா...' என்று கூப்பிடுகின்றனரே... கணவர், எப்படி அண்ணன் ஆவார். விளக்கமளிப்பீரா...
முன்பெல்லாம், கணவரை, 'கண்ணா, கண்ணா...' என்று தான் ஆசையாக அழைத்திருக்கின்றனர். வழி வழியாக வந்த இந்த பழக்கம், நடுவில், கண்ணா என்று அழைப்பது, யார் காதிலோ, அண்ணா என்று விழுந்துள்ளது. வேகமாக உச்சரிக்கும்போது, ஒரே மாதிரியான ஓசை தான் வெளிப்படும். முதல் எழுத்து, அந்த ஓசையில் மறைந்து விடும். அதிலிருந்து, கண்ணா என்பது, அண்ணா என்று மருவி விட்டது!
விஷயம் தெரியாமல், அதையே வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர், அடுத்தடுத்த தலைமுறையினர்.
பதில் உபயம்: குப்பண்ணா.
'குப்பண்ணா சொல்வது சரியில்லை...' என்று, இரண்டு, 'இ - மெயில்' கடிதங்கள் வந்துள்ளன. அவற்றை அப்படியே தருகிறேன்...
வி.லட்சுமி நரசிம்மன் அனுப்பிய,
'இ - மெயில்' கடிதம்...
அந்துமணி பதில்களில், பிராமணர்கள், கணவரை, அண்ணா என்று கூப்பிடுவது குறித்து விளக்கம் அளித்திருந்தார்... அது சரியல்ல. இது, 'அண்ணா' அல்ல... 'அன்னா...'
'வாங்கோன்னா... போங்கோன்னா...' என்பதே சரி... அன்னா என்றால், மரியாதைக்குரியவர் என்று அர்த்தம். எங்களில், வயதில் சிறியவராயிருந்தாலும், தகுதி அதிகமிருப்பவரின் பெயருடன், 'அன்னா' சேர்த்து அழைக்கும் பழக்கமும் உண்டு.
'அன்னா' என்பது, மரியாதைக்குரிய சொல் என்பதற்கு, உதாரணத்திற்கு ஒன்று...
ஒருவர், இறந்து விடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அப்போது, பத்திரிகை, போஸ்டர்கள் எல்லாவற்றிலும் இரங்கல் செய்தியை சொல்லும்போது, 'அன்னாரது' இறுதி சடங்குகள் இங்கே நடைபெறும் என்று குறிப்பிடுவது வழக்கில் உள்ளதல்லவா.
ஆதலால், 'அன்னா' என்கிற மரியாதை சொல்லையே, பிராமணர்கள் கையாளுகின்றனர். மூத்த சகோதரனைக் குறிக்கும், 'அண்ணா' இல்லை.
அடுத்து, சென்னையிலிருந்து,
ஜி.எம்.கே.ரங்காராவ் அனுப்பிய,
'இ - மெயில்' கடிதம்...
கணவரை, 'ஏங்க' என்று அழைக்கும்போது, பிராமண வீடுகளில், 'ஏண்ணா' என்று அழைப்பதாகவும், அதற்கான விளக்கம், 'அந்துமணியின் பதில்கள்' வாரமலர் இதழில் தவறாக வந்திருக்கிறது!
பிராமணாள் ஆத்துல, 'ஏன்னா' என்று அழைப்பார்களேயொழிய, 'ஏண்ணா' என்றல்ல! பிற இனத்தை சேர்ந்த மனைவியர், ஏன் + ங்க என்று அழைப்பதை, ஏன் + ஆ = ஏன்னா என்று, பிராமண மனைவியர் சொல்வர்.
ராமசுப்பையர் அகத்து பத்திரிகையில் வேலை செய்யும் அந்துமணிக்கு, எப்படி இது தெரியாமல் போயிற்று!
- நான் புரிந்து கொண்டேன்!