PUBLISHED ON : மே 08, 2011

கோவையிலிருந்து வாசகர், ஒருவர் சுவையான நிகழ்ச்சி ஒன்றை எழுதி இருந்தார். இதோ அவரது கடிதம்...
ஒரு நிகழ்ச்சி... நடந்து பல வருடங்கள் ஆகின்றன. இருந்தாலும், சுவாரசியம் குறையாத நிகழ்ச்சி என்பதால், உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
அப்போது நான் அரசு ஆலை ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். ஆலையில் பணியாற்றும் அலுவலர், பணியாளர், பொறியாளர், தொழிலாளர்களுக்கு ஆலையே, வீடு வசதி செய்து கொடுத்துஇருந்தது. வீடுகளின் பின்புறம் காலியாக உள்ள இடத்தில், மரம், செடி நட்டு பலனை குடியிருப்போர் அனுபவித்துக் கொள்வர்; இது, நடைமுறையில் இருந்த வழக்கம்.
இந்நிலையில், முதன்மை நிலை அதிகாரிகளுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளின் பின்புறம் நிறைய இடம் இருக்கும்; அதில், நிறைய மாமரங்கள் இருந்தன.
'விளையும் பழங்களை அதிகாரிகள் விற்கின்றனர்!' என்ற செய்தி மாவட்ட வருவாய் அலுவலர் அந்தஸ்தில் உள்ள முதன்மை நிர்வாகிக்கு சென்றது.
அவர், 'அதிகாரிகள் வீட்டில் விளையும் மாம்பழங்களை ஏலத்தில் விட்டு, கம்பெனிக்கு பணத்தை கட்டி விட வேண்டும்!' என்று, ஒரு உத்தரவு பிறப்பித்தார்.
இந்தச் செய்தி அதிகாரிகளை எட்டிய போது, அவர்கள் இதை ஒரு கவுரவ பிரச்னையாக எடுத்துக் கொண்டனர். ஒரு சிறிய விஷயத்தை பெரிதுபடுத்தி, தங்களை, டி.ஆர்.ஓ., அவமானப்படுத்தி விட்டதாக நினைத்தனர். அதிகாரிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து, பணியாளர் நல அதிகாரியை முற்றுகையிட்டு வாதாடினர்.
ஒரு வருடம் தாங்கள் கஷ்டப்பட்டு தண்ணீர் விட்டு வளர்த்த மரங்களை, பலன் வரும் போது நிர்வாகம் கையகப்படுத்தி, பழங்களை ஏலம் விடுவது சரியல்ல என்றும், இதே நிலை நீடித்தால், இனி, மரங்களை கவனிக்க மாட்டோம்; அடுத்த வருடம் பழமே அதிகம் இராது என்றெல்லாம் கூறினர்.
அரசியல் செல்வாக்கு உள்ளவர் பணியாளர் நல அதிகாரி; மதிநுட்பம் நிறைந்தவர். அவர் இரண்டாம் நிலை அதிகாரி என்றாலும், முதல் நிலை அதிகாரிகளுக்கெல்லாம் அதிகாரி போல் இருந்தவர். அவர், 'இது டி.ஆர்.ஓ., ஆர்டர். நான் ஒன்றும் செய்ய இயலாது. இந்த வருடம் விட்டு விடுங்கள். அடுத்த வருடம் பார்த்துக் கொள்ளலாம்!' என்று பொறுமையாக எடுத்துச் சொன்னார். அதிகாரிகள் ஏற்றுக் கொள்வதாக இல்லை; மீண்டும், மீண்டும் வாதிட்டனர்.
கோபமடைந்த அதிகாரி, 'ஆமாய்யா... ஒரு வருஷம் கஷ்டப்பட்டு வளத்தீங்க... பலனை அனுபவிக்கணும்; நீங்க சொல்றது நியாயம்தான். ஆனா, நீங்க, 20 வருஷம் கஷ்டப்பட்டு பொண்ணை வளக்கறீங்க... 'நாந்தான் கஷ்டப்பட்டு வளர்த்தேன்; அதனால, நான் தான் அவளை கட்டிக்குவேன்...'ன்னு உரிமை கொண்டாட முடியுமா? தளதளன்னு வளர்த்து, எவனோ அனுபவிக்கத்தான்யா கொடுக்கறீங்க. 20 வருஷம் வளர்த்த பொண்ணு மேல கொண்டாட முடியாத உரிமையை, 10 மாசம் தண்ணீர் விட்டு வளத்த மாமரத்துல கேக்கறீங்களாக்கும். போங்கய்யா, வேலையை பாத்துக்கிட்டு!' என்று ஒரே போடாகப் போட்டார்.
என்ன பேசுவது என்று தெரியாமல் வாயடைத்துப் போயினர் அதிகாரிகள். பிரச்னை முடிவுக்கு வந்தது. அந்த வருடம் மாம்பழ வருமானம் ஆலைக்கு கட்டப்பட்டு விட்டது.
***
ஆண்—பெண் இருவரிடையே, தங்களைப் பற்றிய எண்ணம் யாருக்கு அதிகம்? இதோ, 'ரீடர்ஸ் டைஜஸ்ட்' சொல்கிறது: (உ.ஆ., படித்து சொன்னது...)
உடல் சிறிது பாதிக்கப்பட்டாலும் அதை பெரிதுபடுத்துவதிலும், ஆர்ப்பாட்டம் செய்வதிலும் ஆண்களை மிஞ்சுவர் பெண்கள். இது உண்மையா?
உண்மை... 'என் கணவருக்கு ஜலதோஷம் பிடிக்கும் போது, அவரைப் பார்க்க வேண்டுமே...' என்று அங்கலாய்க்கும் பெண்களை, ஆண்கள் மிஞ்ச முடியாது தான்!
பெண்களை விட, ஆண்களுக்குத் தான் எப்போதும் தங்களைப் பற்றிய எண்ணம்...
தவறு...பெண்களுக்குத் தங்களைப் பற்றிய பிரச்னைகளே பெரிதாகத் தெரியும். வெளி விஷயங்
களில் அவர்களுக்கு அதிகம் அக்கறை கிடையாது.
பெண்களைப் பற்றி ஆண்கள் பேசுவதை விட, ஆண்களைப் பற்றி பெண்கள்தான் அதிகம் பேசி விவாதிப்பர்.
உண்மை... பல்கலைக்கழக ஆராய்ச்சிகள் மூலம், தங்கள் நேரத்தில் பெருமளவு ஆண்களைப் பற்றிய விவாதத்தில் பெண்கள் ஈடுபடுகின்றனர் என அறிந்துள்ளனர். அத்தோடு, ஆண்களைப் பற்றிய விஷயங்களைத் தவிர, வேறு விஷயங்களில் கவனம் செலுத்துவதில்லை - மற்ற பெண்களின் வம்புப் பேச்சுக்களைத் தவிர! ஆண்கள் பேச்சுக்களில் பெரும்பாலும் பிசினஸ், பணம், மற்ற ஆண்கள், கடைசியில் தான் பெண்கள்!
பெண்களை விட, ஆண்கள் நேர்மையானவர்கள்; உண்மையா?
தத்துவ ஆராய்ச்சியின்படி பார்த்ததில், விஷயங்களை மறைத்துப் பேசுவதில் ஆண்களை விட, பெண்கள் தேர்ந்தவர்கள். ஆனால், பச்சையாக, அப்பட்டமான பொய்களைச் சொல்லும் சாமர்த்தியத்தில் ஆண்களே வல்லவர்.
ஆண்களை விட, நேரத்தைக் கழிக்க சிரமப்படுவர் பெண்கள். அலுப்பு சீக்கிரமே தோன்றி
விடும்; இது சரியா?
ஆண்களுக்குத் தான் வெகு எளிதில் போரடிக்கத் தொடங்கும்; தொடர்ந்து ஒரு வேலை செய்தால், அசதி அதிகம் ஏற்படும். ஒரே வேலையைத் தொடர்ந்து அலுக்காமல் பெண்கள் செய்ய முடிவதன் காரணம், பகற்கனவு காண்பதும், வாய்ப்பேச்சும் தான்.
ஆண்களை விட அதிகம் மகிழும் சுபாவமும், தன்னம்பிக்கையும் பெண்களுக்கு உண்டு...
தவறு... மனத்தளர்ச்சியோ, மனச் சோர்வோ, எதுவானாலும் பெண்களுக்கு சீக்கிரமே ஏற்படும். வாழ்க்கையின் மேடு, பள்ளங்களைத் தாங்கும் சக்தி குறைவு.
மனைவியை கணவன் புரிந்து கொள்வதை விட, மனைவி, கணவனை நன்கு புரிந்து கொள்வாள். இது சரியா?
தவறு... சில தத்துவ நிபுணர்கள் ஒரு ஆராய்ச்சி நடத்தினர். திருமணமான பல ஜோடிகளை அழைத்
தனர். முதலில் கணவன்மார்களைத் தனியே கூப்பிட்டு, அவரவர் மனைவியைப் பற்றிய அபிப்பிராயங்களைச் சொல்லச் செய்தனர். முடிவில் தெரிந்தது... கணவனே தன் மனைவியை நன்கு புரிந்து கொண்டிருக்கிறான் என்று! எந்தெந்த நேரத்தில் எப்படி, எப்படி மனம் மாறுவாள் மனைவி என்பதை, கணவனால் நன்கு யூகிக்க முடிகிறது என்பதை கண்டறிந்தனர்.
துன்பங்களும், இடையூறுகளும் வரும் போது, பெண்கள் அதிகம் மனம் உடைந்து போவர். இது சரியா?
தவறு. சிறு தொல்லைகள் வரும் போது கலங்கினாலும், பெரிய இடையூறுகள் நெருங்கும் போது சராசரி ஆண்களை விட, பெண்களே உறுதியுடன் இருப்பர். இது, மனோத்தத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்த உண்மை.
ஆபத்து வரும் சமயத்தில், பெண்களைக் காட்டிலும் ஆண்கள் உஷாரானவர்கள். இது சரியா?
சரியே... ஆபத்து எதிர்நோக்கி வருவதைக் குறிப்பால் உணர்ந்து கொள்வதிலும், அதற்காகத் தன்னைத் தயார்படுத்திக் கொள்வதிலும், பெண்களை மிஞ்சியவர்கள் ஆண்கள். ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்த உண்மை இது.
பேச்சுத் திறனில் பெண்களே வல்லவர்கள்.
உண்மையா?
பால பருவம் தாண்டியதுமே ஆண்களின் பேசும் சக்தியை விட அதிக சக்தியைப் பெற்று, விரைவில் சுலபமாகவும், வேகமாகவும், நீண்ட நேரமும் பேசும் தனித் தன்மையை பெண்கள் பெற்று விடுகின்றனர். ஆனாலும், மற்றவர்கள் பேசுவதைக் கிரகிக்கும் தன்மை, ஆண்களை விட பெண்களுக்குச் சற்று குறைவு தான்.
***
