PUBLISHED ON : ஜன 16, 2022

கே
வழக்கம்போல், தபால் அலுவலகத்தில் இருந்து, அன்றைய தபால்களை எடுத்துக் கொண்டு, அலுவலகத்துக்கு வந்தேன்.
உள்ளே நுழைந்ததுமே, 'மணி... அந்துமணி வாசகியாம்பா... உன்னைக் கேட்டு இரண்டு, மூன்று முறை போன் செஞ்சுட்டாங்க...' என்றார், டெலிபோன் ஆபரேட்டர்.
இப்ப வேலை இருக்கு... திரும்ப அவர் போன் செய்தால், 'லஞ்ச் டைம்'ல பேச சொல்லுங்க...' என்றேன்.
'லஞ்ச் ப்ரேக்'கின் போது சரியாக போன் செய்தார், அந்த வாசகி.
ஒரு சின்ன இடைசெருகல்:
இந்த வாசகியை, அவர் கல்லுாரியில் படிக்கும் போதிலிருந்தே தெரியும். வாரா வாரம், வாரமலர் இதழை படித்துவிட்டு, விமர்சனம் செய்வார். குறிப்பாக, பா.கே.ப., மற்றும் கேள்வி - பதில் பகுதியை அக்குவேறு ஆணி வேறாக அலசுவார்.
அவ்வப்போது, அலுவலகத்திற்கும் வந்து சந்திப்பார். ஏதாவது புதிர் கதை அல்லது 'க்விஸ்' சொல்லி, சரியான பதில் சொல்ல சொல்வார். லென்ஸ் மாமாவுக்கும் அறிமுகமானவர் தான்.
தற்சமயம், அரசு பணியில் வெளியூரில் இருக்கிறார். எப்பவாவது போன் செய்வார்.
கம்மிங் பேக் டு த பாயின்ட்.
'ஹாய், மணி... எப்படி இருக்கிற... ரொம்ப நாளாச்சு உன்னோடு பேசி. மாமா இல்லையா? சென்னை வந்துள்ளேன், வெளியே போய் சாப்பிடலாமா?' என்றார்.
'கொரோனா, ஒமைகிரான் என்று நாளுக்கொரு வைரஸ் பரவிக்கிட்டிருக்கு... அதெல்லாம் ஒண்ணும் வேணாம். என்ன விஷயம் திடீர்ன்னு சென்னை விஜயம்...' என்றேன்.
'பணி நிமித்தமான பயணம்பா. இன்று இரவே ஊர் திரும்புகிறேன். கொஞ்சம், 'ரிலாக்ஸ்' செய்துக்கலாமேன்னு தான் போன் செய்தேன். வழக்கம்போல புதிர் கதை ஒன்று சொல்கிறேன், விடை கண்டுபிடிக்க முடிகிறதா பார்...' என்றார்.
சரி என்றதும், சொல்ல ஆரம்பித்தார்:
ரயிலில், தன் மகனோடு பயணம் செய்து கொண்டிருந்தார், அப்பா. ஜன்னல் ஓர இருக்கையிலிருந்து வெளியே பார்த்துக் கொண்டிருந்த மகனுக்கு, 27 வயது இருக்கும். திடீரென அவர் மகன் கூச்சல் போட்டான்.
'அப்பா, இங்கே பாருங்க... பச்சை பசேலென்ற மரங்களெல்லாம் மிகவும் வேகமாக ரயிலுக்கு பின்னே ஓடுகின்றன...' என்று கூறி, மீண்டும் அந்த மரங்களை பார்த்து மகிழ்ந்தான்.
எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த வயதான பெரியவர் ஒருவர், இவனை ஒரு மாதிரியாக பார்த்தார். அதை புரிந்துகொண்டு, 'அசட்டு' சிரிப்பை உதிர்த்தார், அப்பா.
ரயில் வேகமாக சென்று கொண்டிருந்தது. திடீரென அந்த, 27 வயது இளைஞன் மீண்டும் மகிழ்ச்சியில் துள்ளினான்.
'அப்பா, இங்கே பாருங்கள்... மேக கூட்டம் எல்லாம் நம்முடனே ஓடி வருகின்றன...' என்றான்.
அப்பாவுக்கு ஒன்றும் சொல்ல முடியவில்லை.
எதிரே இருந்த வயதான பெரியவர், மீண்டும் ஒரு மாதிரியாக பார்த்தார். என்ன நினைத்தாரோ தெரியவில்லை, 'சார்... உங்க பையனை ஒரு நல்ல டாக்டரிடம் கூட்டிட்டு போனால் என்ன...' என்று நேரடியாகவே கேட்டார்.
வயதான பெரியவர் கேட்ட கேள்வியிலும் அர்த்தம் இருந்தது. '27 வயது இளைஞன், சாதாரண விஷயங்களை பார்த்து இப்படி ஆச்சரியப்படுகிறானே... இவன் மனநிலை பாதிக்கப்பட்டவனாக இருக்கலாம்...' என்று அந்த பெரியவர் எண்ணியிருக்கலாம்.
'ஐயா... நீங்கள் சொல்வதை போல, நாங்கள் டாக்டரை பார்த்து விட்டு இப்போதுதான் வருகிறோம்...' என்று பதில் சொன்னார், இளைஞனின் அப்பா.
பதிலை கேட்டதும், வயதான பெரியவர், 'டாக்டரை பார்த்து விட்டு சிகிச்சை பெற்று வந்த பின்னும் உங்கள் மகன் இப்படி நடந்து கொண்டால் எப்படி...' என்றார்.
கதையைக் கூறி முடித்ததும், 'அப்பா என்ன பதில் கூறியிருப்பார்...' என்று கேட்டார், வாசகி.
ஓரளவுக்கு ஊகிக்க முடிந்தாலும், 'சரியாக தெரியலை... நீங்களே சொல்லுங்க...' என்றேன்.
என்ன வாசகர்களே, புதிருக்கான விடை என்ன என்கிறீர்களா... கீழே பார்க்கவும்.
ப
மது அருந்துவதால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் தெரியுமா?
* காசநோய் வரலாம்
* சிறுநீரகங்கள் எளிதில் பழுதடையும்
* உயர் ரத்த அழுத்தம் ஏற்படும்
* ஊட்டச்சத்து குறைபாடு உண்டாகும்
* தசைகள் தளர்ச்சியடையும்
* உடல் உறுப்பு வளர்ச்சி பாதிக்கப்படும்
* நரம்பு மண்டலம் பலவீனமடைந்து, நரம்புத்தளர்ச்சி ஏற்படும்
* கை, கால்களில் நடுக்கம் இருக்கும்
* வலிப்பு நோய் ஏற்படும்
* புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம்
* கணையம் பாதிக்கப்படும். இன்சுலின் சுரப்பதில் குறைபாடு ஏற்பட்டு, நீரிழிவு நோய் வரும்
* ஹார்மோன் சுரப்பதில் குறைபாடு இருக்கும் என்பதால், ஆண்மைக் குறைவு ஏற்படும். உடல் உறவில் நாட்டம் குறையும்
* நுரையீரல் பாதிக்கப்பட்டு மூச்சுக் கோளாறுகள் வரும்
* இதய நோய்கள் வரும் வாய்ப்புகள் அதிகம். 'சைடு - டிஷ்' ஆக சாப்பிடும் உணவு வகைகள் அதிகம் பாதிப்பை ஏற்படுத்தும்
* பார்வை பறிபோகும் வாய்ப்புண்டு
* வயிறு தொடர்பான பிரச்னைகள் அதிகம் வரும். வயிறு வீக்கம், வலி, வயிற்றுப்புண் வரும்
* கல்லீரல் அதிகமாக பாதிக்கப்படும்
* மூளை வளர்ச்சி பாதிக்கப்படுவதுடன், மூளையில் ரத்தக்கசிவு ஏற்படும்
* சிந்திக்கும் ஆற்றல், நினைவாற்றல் குறையும். மனச்சிதைவு நோய் வரும். குழப்பமான மனநிலை இருக்கும். வார்த்தைகள் தெளிவின்றி பிறழும். எல்லாவற்றிற்கும் மேலாக குறைந்த ஆயுள் ஏற்பட்டு, மரணம் நேரிடும்.
ஆக, குடிப்பழக்கம் குடியைக் கெடுத்துவிடும். நாம் அதிலிருந்து பாதுகாத்துக் கொள்வது மிகவும் முக்கியம்.
இதை லென்ஸ் மாமாவிடம் சொன்னால், உதைக்க அல்லவா வருவார்!
விடை:
'அந்த இளைஞன், சிறு வயதிலேயே விபத்து ஒன்றில், பார்வை இழந்து விட்டான். இப்போதுதான் அவனுக்கு மாற்று அறுவை சிகிச்சை மூலம், கண் பார்வை திரும்ப கிடைத்துள்ளது. ஆபரேஷன் முடிந்து மருத்துவமனையிலிருந்து ஊரில் உள்ள வீட்டுக்கு திரும்புகின்றனர்.
'பல ஆண்டுகளாக இருட்டிலே பழகிய அவனுக்கு, தன் கண்களால் இந்த உலகத்தை பார்க்கும்போது, எல்லாமே ஆச்சரியமாக தெரிகிறது. இதனால் தான், இவன் இப்படி பேசுகிறான்.
'இதைக் கேட்டு, வயதான பெரியவர் மட்டுமா அதிர்ச்சியடைந்தார். விடை கண்டுபிடிக்க முடியாத பலருக்கும் இந்த நிலை தான்...' என்று கூறிய வாசகி, போனை, 'கட்' செய்தார்.
