தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : ஜன 23, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 23, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பா - கே

மாலை நேரம்...

'மணி... அக்கா டீ கடையில் இருக்கிறேன்... உடனே வா, உன்னை சந்திக்கணும்ன்னு உன் நண்பர் ஒருவர் காத்திருக்கிறார்...' என்றார், லென்ஸ் மாமா.

வீட்டுக்கு கிளம்பிக் கொண்டிருந்த நான், அக்கா டீ கடை பக்கம், சைக்கிளை திருப்பினேன்.

டீ கடையை நெருங்கியதும், 'ஹாய் மணி... எப்படி இருக்கிறாய்?' என்றார், நண்பர்.

அவர், போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தவர். நீண்ட கால நண்பர்; துணிச்சலும், நேர்மையும் உள்ளவர்.

நேர்மையானவராக இருந்ததாலேயே உயரதிகாரிகளாலும், லோக்கல் கரை வேட்டிகளாலும் பந்தாடப்பட்டவர்; டீ குடித்தபடி பல விஷயங்களை வருத்தத்துடன் கூறினார்.

'நடப்பதை எல்லாம் பார்க்கும்போது, நான் கல்லுாரியில் படிக்கும்போது, பேராசிரியர் ஒருவர் கூறிய கதை தான் நினைவுக்கு வருகிறது...' என்றார்.

'தற்கால நிகழ்வுகளுக்கும், கதைக்கும் என்னப்பா சம்பந்தம்?' என்றார், லென்ஸ் மாமா.

'நான் அந்த கதையை சொல்கிறேன்... அப்புறம் சம்பந்தம் இருக்கிறதா, இல்லையா என்று முடிவு செய்யுங்கள்...' என்றார், நண்பர்.

ஆர்வத்துடன் அவர் சொல்வதை கேட்கலானோம்.

அது ஒரு வித்தியாசமான நாடு. அந்த நாட்டில் மன்னருக்கு கூட கட்டுப்பாடு விதித்திருந்தனர்.

நாட்டு மக்கள் யார் வேண்டுமானாலும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து, மன்னர் பதவியை வகிக்கலாம். ஆனால், அந்த மன்னரது ஆட்சிக்காலம் ஐந்து ஆண்டுகள் தான். ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு, அந்த மன்னரை பக்கத்திலுள்ள பெரிய காடுகள் நிறைந்த தீவுக்கு அனுப்பி விட வேண்டும்; இது தான், அந்த நாட்டின் சட்டம் அந்த தீவு, கொடிய விலங்குகள் நிறைந்தது. அங்கு சென்றவர்கள் யாரும் உயிரோடு திரும்பியதில்லை. இதனால், மன்னர் பதவியை ஏற்க தயங்கினர்.

'நாட்டின் மன்னராக வேண்டும்' என்று ஆசைப்படுபவர்கள் கூட, ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு, தங்களது உயிர் போய் விடும் என்பதால், தங்கள் ஆசைகளை அடக்கிக் கொண்டனர்.

இந்நிலையில், அந்த நாட்டை ஆண்ட மன்னரின் ஆட்சிக் காலம் முடிவடைந்தது. ஐந்து ஆண்டுகள் முடிந்த கடைசி நாளில், நெடுந்துாரத்தில் இருக்கும் அந்த தீவுக்கு மன்னரை வழியனுப்ப, நாட்டு மக்கள் அனைவரும் கடற்கரையில் கூடினர்.

புத்தம் புதிய ஆடைகளை அணிந்து, கம்பீரமாக சிரித்த முகத்தோடு கடற்கரைக்கு வந்தார், மன்னர். அவரை அந்த தீவுக்கு அழைத்துச் செல்ல அலங்கரிக்கப்பட்ட படகு, தயார் நிலையில் இருந்தது. அனைவருக்கும், வணக்கம் தெரிவித்து விடை பெற்று, படகில் ஏறினார், மன்னர்.

வழக்கமாக பதவிக்காலம் முடிந்த மன்னர்களை கொடிய தீவில் இறக்கி விடும் அந்த படகோட்டிக்கு இவரைப் பார்த்ததும் ஆச்சரியமாக இருந்தது.

'மன்னா... நீங்கள் எந்த கவலையும் இல்லாமல் இருக்கிறீர்களே... இதற்கு முன் இருந்த மன்னர்கள் கவலையோடு இருந்ததைத் தான் பார்த்துள்ளேன். தீவுக்கு சென்றதும், உங்களை கொடிய விலங்குகள் கொன்று விடும் என்று தெரிந்தும், நீங்கள் கொஞ்சம் கூட பயம் இல்லாமல் சிரித்துக் கொண்டிருக்கிறீர்களே...' என்று கேட்டான், படகோட்டி.

'நான் ஏன் கவலைப்பட வேண்டும். அந்த தீவை கண்டு எனக்கு பயம் இல்லை. நான் அங்கு சந்தோஷமாக வாழப் போகிறேன்...' என்றார், மன்னர்.

'எப்படி...' என்றான், படகோட்டி.

'மன்னர் பதவி ஏற்றபின், முதல் ஆண்டு முடிந்ததும், இந்த தீவிலுள்ள காட்டு மரங்களை எல்லாம் வெட்டுவதற்கு நுாற்றுக்கணக்கானோரை அனுப்பி வைத்தேன். இரண்டாம் ஆண்டு முடிந்ததும், ஆயிரக்கணக்கான விவசாயிகளை இந்த தீவுக்கு அனுப்பி, பயிர் செய்யச் சொன்னேன்.

'என் பதவி காலத்தின் மூன்றாவது ஆண்டு முடிந்ததும், ஏராளமான கட்டட தொழிலாளர்களை இந்த தீவுக்கு அனுப்பி, கட்டடங்களை கட்டுவதற்கு ஏற்பாடு செய்தேன்.

'நான்காவது ஆண்டு முடிவில், இந்த நாட்டிலுள்ள சிறந்த அதிகாரிகளையும், ஆட்சிப் பொறுப்பாளர்களையும் தேர்ந்தெடுத்து, இந்த தீவுக்கு அனுப்பி வைத்து, தேவையான பணிகளை செய்வதற்கு ஆணையிட்டேன்.

'இப்போது, ஐந்தாவது ஆண்டும் முடிந்து விட்டது. நான் சாகப் போகிறேன் என்று, இந்த நாட்டு மக்கள் நினைக்கின்றனர். ஆனால், நான் அந்த தீவை ஆளப்போகிறேன்...' என்றார்.

திகைத்துப் போனான், படகோட்டி.

வாழ்நாளில், மன்னராக ஐந்து ஆண்டுகள் தான் பதவி வகிக்க முடியும் என்று உறுதியாக தெரிந்த பின்னரும், அதை ஏற்றுக்கொண்ட இந்த மன்னர் புத்திசாலித்தானே...

என, கதையை அவர் கூறி முடித்ததும், என்ன சொல்ல வருகிறார் என்று புரிந்தது.

'எப்போது, எதற்காக இக்கதை சொல்லப்பட்டிருந்தாலும், இக்காலத்துக்கு பொருத்தமான, அருமையான கதைபா. ஐந்தாண்டு காலத்துக்கு கிடைத்த வாய்ப்பை முன் இருந்தவர்களும் நழுவவிடவில்லை; இப்போது இருப்பவர்களும் விட்டு விட தயாராயில்லை...' என்று, பூடகமாக கூறினார், லென்ஸ் மாமா.

நமுட்டு சிரிப்பை உதிர்த்தார், நண்பர்.

கதையையும், ஆட்சியாளர்களின் தற்போதைய நிலையையும் ஒப்பிட்டு பார்த்தபடி, அங்கிருந்து கிளம்பினோம்.



அக்பர் அரசராக இருந்தபோது, அவரது அமைச்சரவையில் நுண்மதி படைத்த பீர்பால் இருந்தார்.

ஒரு சமயம் அரசரிடம் பேசும்போது, 'இந்த உலகில் கண் தெரியாதவர்கள் தான் அதிகமாக உள்ளனர்...' என்று கூறினார், பீர்பால்.

இதை ஏற்காத அக்பர், 'எனக்கு இதை நிரூபித்துக் காட்ட வேண்டும்...' என்றார்.

மறுநாள் அரண்மனைக்கு வரவில்லை, பீர்பால். தன் வீட்டிற்கு வெளியே உட்கார்ந்து, மரக்கட்டில் கயிறை பின்னிக் கொண்டிருந்தார்.

அவ்வழியே வந்த ஒருவர், 'பீர்பால் என்ன செய்கிறீர்...' என்று கேட்டார்.

பதில் சொல்லவில்லை, பீர்பால்.

மாலை, பீர்பால் வீட்டுப் பக்கம் வந்த அக்பர், 'பீர்பால் என்ன செய்து கொண்டிருக்கிறீர்...' என்று கேட்டார்.

அப்போதும், கட்டில் கயிறை பின்னிக் கொண்டிருந்த பீர்பால், 'அரசரே, நான் இந்த ஊரில் கண் தெரியாதவர்கள் எத்தனை பேர் என்று கணக்கு எடுத்துக் கொண்டிருக்கிறேன். காலையிலிருந்து இந்த பக்கம், 150 பேர் வந்தனர். இவர்களில், 120 பேருக்கு கண் தெரியவில்லை...' என்றார்.

'அப்படியா... எப்படி இப்படி சொல்கிறீர்...' என்று கேட்டார், அரசர்.

'ஆமாம் அரசரே... நான் காலை முதல் கயிறு பின்னிக் கொண்டிருக்கிறேன். ஆனால், அதை பார்த்த பலரும் என்னிடம், 'பீர்பால் என்ன செய்கிறீர்...' என்று கேட்கின்றனர். இதில் நீங்களும் அடக்கம்...' என்று கூறினார், பீர்பால்.

பீர்பாலின் நுண்ணறிவை புரிந்து கொண்டார், அக்பர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us