
பா - கே
அலுவலக நேரம் முடியும் மாலை வேளை...'மணி... வெயில் குறைந்துள்ளது. வாப்பா, காலாற நடந்துட்டு வரலாம்...' என்று வலுக்கட்டாயமாக என்னை அழைத்துச் சென்றார், லென்ஸ் மாமா.ஆசிரியரை சந்திக்க வந்த எழுத்தாள நண்பர் ஒருவரும், மனவள பயிற்சியாளர் ஒருவரும் எங்களுடன் இணைந்து கொண்டனர்.
அலுவலகம் முடிந்து செல்பவர்கள், கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் சீறி பாய்ந்து கொண்டிருந்தனர். பஸ்சிலும் கூட்டம் நிரம்பி வழிந்து, சென்று கொண்டிருந்தது.
தெரு முனையில் இருந்த போக்குவரத்து போலீஸ் பூத் ஒன்றில், இரண்டு மூன்று காவலர்கள், போக்குவரத்தை கண்காணித்துக் கொண்டிருந்தனர்.
'ஹெல்மெட்' அணியாத இரு சக்கர வாகன ஓட்டிகளை மடக்கி பிடித்து, அபராதம் வசூலித்துக் கொண்டிருந்தார், ஒரு காவலர்.அப்போது, 'ஹெல்மெட்' அணியாமல், முக்கால் பேன்ட், தொள தொள ஷர்ட் அணிந்து, கூடை மாதிரி சிகை அலங்காரத்துடன் இருந்த இரு, 'புள்ளீங்கோ'கள், ராயல் என்பீல்ட் பைக்கில், பெருத்த சத்தத்துடன், வேகமாக வந்தனர். போக்குவரத்து காவலரை பார்த்ததும், வாகனங்களுக்கிடையே புகுந்து, கண் இமைக்கும் நேரத்தில் சிட்டாக பறந்து விட்டனர்.
'இப்ப தப்பிச்சுட்டீங்க... பை - பாசில் மாட்டாமலா போயிடுவீங்க... அப்ப, 'லாடம்' கட்டறேன்டா...' என்று கவுண்டமணி ஸ்டைலில் கூவினார், காவலர்.'ஐயோ... இவ்வளவு வேகம் ஆகாதுப்பா... விபத்தில் சிக்கிக்க போறாங்க...' என்று மலைத்தார், எழுத்தாள நண்பர். 'ஆபத்து வரும்போது, அதிலிருந்து தப்பிக்க, மனித மூளை துரிதமா செயல்படும். அதே போல் தான் விலங்குகளும். ஆனா, மரம், செடி, கொடிகள் இருக்கே... அதுங்களுக்கு ஆபத்து வந்தா, உடனே அந்த இடத்திலேர்ந்து தப்பிச்சு ஓட முடியுமா?' என்று கேட்டு நிறுத்தினார், மனவள பயிற்சியாளர்.
'திண்ணை நாராயணன் மாதிரி நீங்களும் தகவல் சொல்ல ஆரம்பித்து விட்டீரா...' என்றார், லென்ஸ் மாமா.'அதில்லைப்பா... இது கொஞ்சம் வித்தியாசமானது...' என்று சொல்ல ஆரம்பித்தார், மனவள பயிற்சியாளர்:
தாவரங்களுக்கு ஏதாவது ஆபத்து வந்தா, அதிலேர்ந்து தப்பிக்கிறதுக்காக, சில யுக்திகளை செய்யறதா கண்டுபிடிச்சிருக்காங்க.தென்னாப்பிரிக்காவுலே பிரிட்டோரியான்னு ஓர் இடம். அங்கே வான்ஹோவர்ன்னு, ஒரு உயிரியல் ஆராய்ச்சியாளர். பல ஆராய்ச்சிகள் பண்ணி, தாவரங்கள் ஒன்றுக்கொன்று பேசிக் கொள்வதாக, ஒரு உண்மையை கண்டறிந்துள்ளார்.
தாவரங்கள், பேசுதுன்னு சொன்ன உடனே, எந்த பாஷையிலே பேசிக்குது, இங்கிலீஷா - தமிழான்னு கேட்கக் கூடாது. மொழி இல்லாமலேயே அதெல்லாம் செய்திகளை பரிமாறிக்கிறதா சொல்லியிருக்கார், அந்த ஆராய்ச்சியாளர்.ஒரு சமயம், தென்னாப்பிரிக்காவுலே கடுமையான வறட்சி ஏற்பட்டு, மேயறதுக்கு புல் கூட கிடைக்காத நிலைமை. அங்கே இருந்த காட்டு மான்களெல்லாம் வேற வழி இல்லாம, அக்கேஷிய இனத் தாவரத்தை திங்க வேண்டிய நிலைமை. அப்படி, அதை சாப்பிட்ட மான்களெல்லாம் கூட்டம் கூட்டமாக செத்து மடிந்தன.ஏன் இப்படி இதெல்லாம் செத்துப் போவுதுன்னு, ஆராய்ச்சி பண்ணினார், வான்ஹோவர். அக்கேஷிய தாவரத்துலே, 'டானிங்'ங்கிற நச்சுப் பொருள் உண்டு. இருந்தாலும், விலங்குகளை கொல்லக் கூடிய அளவுக்கு சக்தி கிடையாது.
ஆனா, குறிப்பிட்ட அந்த பஞ்ச காலத்துல இந்த விஷப் பொருள், அந்தத் தாவரங்கள்லே திடீர்ன்னு அதிகமாயிட்டுதாம். அதனால தான் மான்கள் செத்ததாக கண்டுபிடிச்சார்.சரி, அந்த தாவரத்துலே திடீர்னு விஷப்பொருள் அதிகமாப் போறதுக்கு என்ன காரணம்ன்னு, வான்ஹோவருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
தீவிரமா ஆராய்ச்சி பண்ணி, அந்த சந்தேகத்துக்கு விடையை கண்டுபிடிச்சார். ஏதாவது ஒரு விலங்கு, அக்கேஷிய தாவரத்தின் ஒரு பகுதியை கடிக்க ஆரம்பிக்குதுன்னு வச்சுக்குங்க... உடனே அந்த தாவரம், தாக்குதலை முறியடிக்க, 'எத்திலீன்'ங்கற வாயுவை உற்பத்தி பண்ணுமாம்.
இந்த வாயு உடனடியா சுற்றிலும் பரவ ஆரம்பித்து, 20 நிமிஷத்துக்குள்ள, 50 மீட்டர் சுற்றளவுக்கு அது பரவிடும். உடனே, மற்ற செடிகளெல்லாம், 'எதிரி வருகிறான். எச்சரிக்கையா இருக்கணும்'கிறதை இதுலேர்ந்து புரிஞ்சுக்குமாம்.
உடனடியா தனக்குள் இருக்கிற, 'டானின்'ங்கற நச்சு உற்பத்தியை அதிகரிச்சுடுமாம். விஷம் அதிகமாகி, அதைக் கடிக்கிற விலங்குகள் செத்துப் போவதை அறிந்தார்.
'ஷுகர் மேப்பிள்' அப்படின்னு ஒரு மரமாம். அதுவும் இதே பாணியிலே எதிரிகளை சமாளிப்பதாகவும் ஆய்வு செய்து கண்டுபிடிச்சார்.- என, கூறி முடித்தார்.
'ஆச்சர்யமா இருக்கே... நாம இனிமே மரங்கள்கிட்டேயும் ஜாக்கிரதையா பழகணும் போல இருக்கு...' என்றார், லென்ஸ் மாமா.'இயற்கை என்னெல்லாம் அற்புதம் செய்கிறது...' என்று ஆச்சரியமடைந்தேன், நான்.
போலீஸ் பூத் எதிரிலிருந்த டீ கடையில், சமோசா சாப்பிட்டு, டீயும் குடித்து விட்டு திரும்பினோம்.
ப
ஜேம்ஸ் ஜெப்ரீஸ் மற்றும் ஜேக் ஜான்சன் ஆகிய இருவரும், உலகின் முன்னணி குத்துச் சண்டை வீரர்கள்.அமெரிக்காவில், ஜன., 4, 1910ல், உலக குத்துச் சண்டை போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் யார் வெற்றி பெறுகின்றனரோ, அவர் தான் உலகின் முதல் குத்துச் சண்டை வீரர் என்ற பெருமையை பெறுவார்.
இந்த குத்துச் சண்டை போட்டியை, 15 வயது இளைஞன் ஒருவன் பார்த்துக் கொண்டிருந்தான். அவனது மனதில் உறுதியான ஒரு குறிக்கோள் தோன்றியது. 'இந்த இருவரில் யார் வெற்றி பெறுகின்றனரோ, குத்துச் சண்டையில் ஈடுபடும் தகுதி எனக்கு வருகிறபோது அவரை தோற்கடித்து, உலகின் முன்னணி குத்துச் சண்டை வீரனாக வருவேன்...' என்று, சபதம் செய்தான்.
குத்துச் சண்டை பயில்வதற்கான தலையணை போன்ற அந்த பையில் ஒரு பக்கம், ஜேம்ஸ் ஜெப்ரீஸ் மறுபக்கம் ஜேக் ஜான்சன் படங்களை ஒட்டி வைத்துக் கொண்டான். தன் ஒவ்வொரு நாள் பயிற்சியிலும் அதன் மீது பாய்ந்து பாய்ந்து குத்தி சண்டை போட்டான். இதை பார்த்த சிலர், இவனை பைத்தியம் என்று நகைத்தனர். அவன், அதுபற்றி கவலைப்படவில்லை. தன் குறிக்கோளில் நிலையாக முன்னேறி, தன்னை விட முந்தி நின்ற பலரை தோற்கடித்தான்.
சரியாக ஒன்பது ஆண்டுகள் கடந்தது. அந்த இளைஞன், ஒன்பது ஆண்டுகளுக்கு முன் வெற்றி பெற்ற ஜேக் ஜான்சனை தோற்கடித்தான். உறுதியோடு போராடி வென்ற அந்த வீரனின் பெயர், ஜேக் டெம்ப்ஸே. பல ஆண்டுகளாக, உலகின் முதல் நிலை குத்துச் சண்டை வீரனாக முன்னிலையில் நின்றான்.
எங்கோ, எதிலோ , எப்போதோ படித்தது!

