தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : ஜன 15, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 15, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பா.கே.ப.,

அன்று, அலுவலகத்துக்குள் நுழைந்ததுமே, 'மணி... காலையிலேர்ந்து, ஒரு வாசகர் பலமுறை போன் செய்து, உன்னிடம் பேசணும்ன்னு சொன்னார். பேர் கேட்டால், சொல்ல மாட்டேங்கிறார்...' என்றார், டெலிபோன் ஆபரேட்டர்.

'சரி... அடுத்த முறை அவரிடமிருந்து போன் வந்தால், எனக்கு, 'த்ரு' செய்யுங்கள்...' என்று கூறி, என் கேபினுக்கு சென்றேன். சிறிது நேரத்தில், 'இன்டர்காம்' ஒலித்தது, எடுத்தேன்.

'மணி... அந்த வாசகர் தான்...' என்றார், டெலிபோன் ஆபரேட்டர்.

சிலர் வேண்டுமென்றே, கலாய்ப்பதற்காக, 'இந்த செய்தியை எப்படி போடலாம்?' என்றோ, கீழ்த்தரமாக திட்டுவதற்காகவோ, பேர், ஊர் சொல்லாமல் இப்படித்தான் போன் செய்வர். யார், என்ன விஷயம் என்று தெரிந்தால் தான் பேசுவது என்ற வழக்கத்தை வைத்துள்ளேன்.

'ஸ்பீக்கர் ஆன்' செய்து, அருகிலிருந்த உதவி ஆசிரியர் ஒருவரை பேச சொன்னேன்.

அவரும், 'ஹலோ' என்று கூற, 'அந்துமணி இருக்காரா, அவரிடம் பேசணும்...' என்றார், எதிர்பக்கம் இருந்தவர்.

அந்த குரலிலிருந்து யாரென்று அறிய முடியாததால், 'லைனை கட்' செய்ய சொன்னேன்.

இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சீனியர் செய்தியாளர் ஒருவர், 'இந்த மாதிரி பேசுபவரை பற்றி, அப்புசாமி - சீதா பாட்டி புகழ், பாக்கியம் ராமசாமி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார், மணி, சொல்லட்டுமா...' என்றார்.

'சரி...' என்றதும், சொல்ல ஆரம்பித்தார்:

டெலிபோனில் ஒருத்தரைக் கூப்பிட வேண்டி, போன் எண்ணைச் சுழற்றியோ, அழுத்தியோ, 'லைன்' கிடைத்ததும், எதிர் பக்கத்தார், 'ஹலோ...' என்றதும், இவர், 'நான் தான் பேசறேன்...' என்பார்.

அதாவது, அவரது குரலிலிருந்து மற்றவர் அவரைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.

ஒருநாள், டெலிபோன் மணி அடிக்கவே, என் மனைவி எடுத்தாள். உடனே நான், இரு பக்கத்தவரும் கேட்கும் வசதியுள்ள, 'கான்பிரன்ஸ்' விசையைத் தட்டிவிட்டு, அவர்கள் பேசுவதை கவனித்தேன் (ஒட்டுக் கேட்டேன் என்பது சரியல்ல. புள்ளி விபரத்துக்காகத் தகவல் சேகரித்தேன் என்று கொள்ளலாம்.)

ரிசீவரை எடுத்து, 'ஹலோ... யார் பேசறது?' என, கேட்டாள் மனைவி.

'நான் தான் மாமி பேசறேன்...'

'எந்த மாமி?' என்று, என் மனைவி சட்டென்று கேட்காமல், அடையாளம் ரொம்பத் தெரிந்து விட்டது போல, 'ஓஹோ மாமியா?' என்றாள்.

எந்த மாமி என்று கேட்பது மரியாதைக் குறைவு என்று நினைக்கிறாள் போலும்!

மாமியைச் சிறிது பேச விட்டு, யாரென்று ஊகிக்கலாமென்று நினைத்து, 'சவுக்கியமா மாமி?' என்று, முதல் பந்தைச் சாதாரணமாகப் போட்டு, 'பவுலிங்'கைத் துவக்கினாள், மனைவி.

போன் செய்த மாமி, தான் யார் என்று இன்னமும் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. தன் குரல் உலகப் பிரசித்தம் என்ற எண்ணமோ என்னவோ!

'சவுக்கியம் தான். என்ன, உன்கிட்டேயிருந்து போனே இல்ல. சவுக்கியம் தானே?' என்றாள், மாமி.

மனைவியின் மூளை துரிதமாக வேலை செய்வதை, என்னால் ஊகிக்க முடிந்தது.

நம் போனை எதிர்பார்க்கிற இந்த மாமி யாராக இருக்கும். உன்கிட்டேயிருந்து போனே காணோமே என்று இழுக்கிறாளே...

தான் கொஞ்சம் நாளாக பேசாமல் விட்டு விட்ட மாமிகளின் பட்டியலை, வேகமாக என் மனைவி மனதிற்குள் பரிசீலிப்பதும் எனக்கு தெரிந்தது.

அடுத்த பந்தை வீசினாள். 'போன் பண்ணணும் தான் நினைச்சுக்கறது, எங்கே முடிகிறது, பசங்களுக்குப் பரீட்சை டைமாச்சா...' என்றாள், என் மனைவி.

'ஆமாம், பிள்ளைகளுக்குப் பரீட்சை என்றாலே, பெற்றவர்களுக்கும் பரீட்சை மாதிரி...' என்று அந்த மாமி சொன்ன இந்த பதில் பொதுவானது. இதிலிருந்து அவள் யார் என்று ஊகிக்க முடியாமல் தடுமாறினாள், மனைவி.

சில வினாடி யோசித்து, அடுத்த பந்தை, கொஞ்சம், 'ஸ்பின்' வைத்து, வீசினாள்.

'அவருக்கும் ஆபீஸ் வேலை சரியாக இருக்கு. கூடமாட உதவறதுக்கு ஆளே இல்லை...'

இப்படிச் சொன்னால் அந்த மாமி, தன் கணவனைப் பற்றி ஏதாவது சொல்வாள். அந்த 'க்ளூ'வை வைத்து, அவள் யாரென்று ஊகித்துக் கொள்ளலாம் என்று பார்த்தால், வெறுமே ஒரு சிரிப்பு தான் வந்தது மாமியிடமிருந்து.

'தொண்டை என்னவோ போலிருக்கே, மாமிக்கு ஜலதோஷமா?' என்று அடுத்த கேள்வி.

'அதை ஏன் கேட்கிறே, நாலு நாளாக கமறிண்டிருக்கு. மிளகாப் பொடிக்கு, மிளகா வறுத்தது ஆகலையோ என்னவோ!' என்றாள், மாமி.

'அப்பாடி...' என்று மனைவிக்கு சற்று ஆறுதல். ஒரு, 'க்ளூ' கிடைத்திருக்கிறது; யோசித்தாள்.

தனக்குத் தெரிந்த மாமிகளில் யார் யார், கடையில், ரெடிமேட் மிளகாப் பொடியாக வாங்காமல், வீட்டில் மிளகாய் வறுத்து, அரைத்துக் கொள்வர். மனைவியின் மூளையில் பல கம்ப்யூட்டரின் பாகங்களையும், 'கர்ஸர்' தொட்டுத் திரும்புகிறது.

ஆனால், யோசித்துக் கொண்டே தாமதிக்க முடியாது. ஆகவே, சப்ளிமென்ட்டரியாக, 'குண்டு மிளகாயா, ஊசி மிளகாயா?' என்று, ஒரு குட்டிக் கேள்வி கேட்டு வைத்தாள்.

'நான் ரெண்டுமே போட்டு அரைக்கிறது...'

இந்தப் பதிலை வைத்து, சாட்சாத் ஷெர்லக் ஹோம்ஸ் கூட, அந்த ஆளை ஊகிக்க முடியாது.

'நன்றாயிருக்கிறதோ...' ஏதோ கேட்கணுமே என்று கேட்டாள், மனைவி.

'உனக்கு ஒண்ணு சொல்றேன், கேட்டுக்கோ... ஒரு ஸ்பூன் மசாலாப் பொடியையும் சேர்த்து அரைச்சுப் பாரேன். அப்புறம் நீங்களே சொல்லுவீங்க...'

மனைவி யோசித்தாள்.

அந்த மாமி திடீர்னு, 'நீ' போடுகிறாள். மறுபடி, 'நீங்க' போடுகிறாள்.

ஓ... அந்த நீலாங்கரை சம்பூர்ண மாமி தான், ஒருதரம், 'நீ' என்பாள். அப்புறம், 'நீங்க' என்பாள். மறுபடி, நீ போடுவாள்.

மனைவி குரலில் தெம்பு. புதிரில் ஜெயித்துவிட்ட திருப்தி. டெலிபோன் வாயை மூடி, என்னிடம், 'அந்த நீலாங்கரை மாமி... சேலத்திலிருந்து சில்க் புடவைகளை வரவழைத்து, தெரிந்தவர்களுக்கு விற்பாளே, அந்த மாமி...' என்றவள், அடுத்து, நேராக சப்ஜெக்ட்டில் புகுந்தாள்.

'உங்க புடவை வியாபாரமெல்லாம் எப்படி இருக்கு?'

'ஏதோ ஓடிண்டிருக்கு. புதுசா ஒரு ரகம் வரவழைச்சிருக்கேன். சேது மாதவிப் புடவைன்னு பேரு. நன்னாப் போறது...'

'போகட்டும் மாமி, நன்னா போகட்டும். போன தடவை நீங்க கொடுத்த புடவை கூட நன்னாத்தான் போயிண்டிருக்கு, சாயம்...'

மறு முனையில் அதிர்ச்சி. பின், 'என் புடவை சாயம் போகாதே. வேறு எங்கேயாவது வாங்கிய புடவையா இருக்கும். சரி, போனை வெச்சுடட்டுமா?' என்று, சடாரென்று பேச்சை முடித்துக் கொண்டாள், மாமி!

மனைவியிடம், 'ஏன் மூஞ்சிலடித்தாப்ல சொல்லிட்ட. புடவை நல்லாத்தானே இருந்தது...' என்றேன்.

'பெயரை சொல்லாம, என் பிராணனை எடுத்து, 'பிபி' ஏத்தி விட்டாள். இனி, அவகிட்ட பிசினசே வேணாம்...' என்றாள், என் மனைவி.

- இப்படி எழுதியுள்ளார், என்று கூறி முடித்தார், சீனியர் செய்தியாளர்.

உங்களுக்கும் இதுபோன்ற அனுபவம் ஏற்பட்டிருக்குமே!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us