
** ஆர்.பாஸ்கரன், கோத்தகிரி: அதிக அதிகாரம் கொண்டது நீதிமன்றமா, சட்டமன்றமா?
சுதந்திரம் அடைந்ததிலிருந்து விடை தெரியாத கேள்வியாகவே இருந்து வருகிறது இது! நீதிமன்றங்கள், தாமே உயர்ந்த பீடம் என்பதும், சட்டமன்றங்கள், நாங்களே நம்பர் ஒன் என்பதும் தொடர்கதையாகவே உள்ளது. இந்த மெகா சீரியலை எப்போது, எவர் முடித்து வைக்கப் போகின்றனரோ!
***
*கே.ராஜேந்திரன், ராமநாதபுரம்: 'சொர்க்கம் - நரகம்' என்றெல்லாம் சொல்கின்றனரே... அவை எங்குள்ளன?
சொர்க்கம் - நரகம் எல்லாம் ஒவ்வொரு தனி மனிதனுக்குள்தான் இருக்கிறது. அவரவர் நட வடிக்கைப்படி சொர்க்கத்திலும் வாசம் செய்யலாம், நரகத்தில் விழுந்து, உழலவும் செய்யலாம்!
***
*ஏ.அர்ஜுன், காஞ்சிபுரம்: கற்பனை வளம் நிறைய இருக்கிறது... எழுத உட்கார்ந்தால் உதைக்கிறதே...
கற்பனை வளம் உள்ள பலரிடம் இருக்கும் பிரச்னைதான் இது... தப்பாகவோ, அபத்தமாகவோ இருந்து விட்டுப் போகட்டும்... பேனா பிடித்து எழுதி விடுங்கள். 'ஸ்டார்ட்டிங் டிரபிள்' மறந்து போய் விடும்... அப்புறம் ஜமாய்க் கலாம்!
***
*ஆர்.சுந்தரராஜன், மதுரை: இங்கிலாந்தில் வாழும் இந்தியர்கள், பொருளாதாரத்தில் எப்படி உள்ளனர்?
மிக நல்ல நிலையிலேயே இருக்கின்றனர். அநேகமாக அனைவருக்கும் சொந்த வீடு உள்ளது. தென் மாநிலத்தவர் பலரும் பணியில் உள்ளனர். வட மாநிலத்தவர் சுய தொழில் செய்கின்றனர். இங்கு பெட்டிக் கடை என்று சொல்வோமே, அது போல (சிகரெட், பேப்பர், மிட்டாய் விற்கும் கடைகள்... ஆனால், பெரிய அளவிலானவை) கடைகள், 75 சதவீதம் இவர்கள் கையில் தான்!
***
*எஸ்.முத்து பாலகிருஷ்ணன், திருப்பூர்: 'செக்ஸ்' பற்றி தற்கால பெண்கள் வெகு சகஜமாக பேசுகின்றனரே...
பெண்கள்ன்னா செக்ஸ் பேசக் கூடாதா... எந்த ஊர் நியாயமய்யா இது? வெளிப்படையாக இதுபற்றி பேசிக் கொள்வது பெண்களிடையே விழிப்புணர்ச்சி யைத் தான் ஏற்படுத்துமே தவிர, பாதகமான சூழலை ஏற்படுத்தாது!
***
**எம்.ஆரோக்கியநாதன், சென்னை: ஒரு மனிதனின் ஆபத்தான காலம் எது என்று சொல்வீர்கள்?
காலண்டரில், 20ம் தேதி துவங்கி, அடுத்து கிழிக்கும், 10 நாட்களும் ஆபத்தான நாட்கள் தான். சிக்கனம் தெரியாத அத்தனை பேருக்கும், அவர்களின் வருமானம், மாதத் தின் முதல், 20 நாட்களுக்குத் தானே போதுமானதாக இருக்கிறது.
***
*எம்.லோகநாதன், பழனி: சினிமாவை அதிகம் விரும்பி பார்ப்பவர்கள், வாழ்க்கையை அனுவிக்கத் தெரிந்தவர்களா அல்லது காலத்தின் அருமையை உணராதவர்களா?
தம்மைத் தாமே அழித்து, கறுப்புப் பணம் ஒரு சாராரை மீண்டும், மீண்டும் அதிக அளவில் சென்றடைய கருவியாக இருப்பார்.
***
** என்.நாகராஜன், பாலகிருஷ்ணாபுரம் புதூர்: இளம் விதவைப் பெண்கள் பூவும், பொட்டும் வைத்துக் கொள்ளலாமா? சடங்கு, சாஸ்திரம், சம்பிரதாயப்படி விட்டு விடுவது நலமா?
ஓநாய்கள் சுற்றும் உலகம் இது. கணவனை இழந்த பெண் ஒருத்தி, நீங்கள் முதலில் கூறியவற்றை விட்டொழித்தால், பெரிய ஆபத்து அவளை சூழ்ந்து விடும். மேலும், பூவையும் பொட்டையும் துறந்து விடுவதால் மட்டும், இறந்த கணவன் திரும்பி வந்து விடப் போகிறானா என்ன?
***

