PUBLISHED ON : ஜூன் 17, 2018

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி, மட்டுவார் குழலம்மை கோவிலில் தனியாகக் குடிகொண்டிருக்கும் உச்சிப்பிள்ளையாரைத் தரிசித்திருப்பீர்கள். மூன்றாம் எண்ணுக்கும், இந்த விநாயகருக்கும் ஒரு தொடர்புண்டு!
இலங்கையில் இருந்து சீதையை மீட்டு, அயோத்தி திரும்பிய ராமபிரான், நன்றிக்கடனாக இலங்கை மன்னர் விபீஷணருக்கு, அயோத்தியில் இருந்த ஸ்ரீரங்கநாதர் விமானத்தை பரிசளித்தார். செல்லும் வழியில் அதை எங்கும் கீழே வைக்கக்கூடாது என, நிபந்தனையும் விதித்தார்.
வழியில், காவிரியில் வெள்ளம் பெருகி ஓடவே, நீச்சலில் ஆர்வம் கொண்ட விபீஷணர், தன் கையில் இருந்த விமானத்தை, ஒரு சிறுவனிடம் கொடுத்து, 'கீழே வைத்து விடாதே... குளித்து விட்டு வந்து பெற்றுக் கொள்கிறேன்...' என்றார்.
ஆனால், அந்த பையனோ கீழே வைத்து விட்டான். கோபம் கொண்ட விபீஷணர், அந்தச் சிறுவன் தலையில் குட்டினார். அந்தக் குட்டு உலகிலுள்ள அனைவர் தலையிலும் விழுந்தது. விபீஷணர் ஆச்சரியப்பட்ட போது, சிறுவன் மறைந்து, அங்கு காட்சியளித்தார், விநாயகர்.
ரங்கநாதர் ஸ்ரீரங்கத்திலேயே இருக்க வேண்டும் என்பது விநாயகப் பெருமான் திருவுளம் என அறிந்தார் விபீஷணர்.
இந்த விநாயகர், 'உச்சிப்பிள்ளையார்' என்னும் திருநாமத்துடன் உள்ளார். குழந்தை பாக்கியம் வேண்டுவோர், தாயுமான சுவாமி, மட்டுவார் குழலம்மை, உச்சிப்பிள்ளையார் சன்னிதிகளுக்கு சென்று,
ஹே சங்கர; ஸ்மரஹர; பிரமாதிநாத; மன்னாத;
ஸாம்ப; சசிசூட; ஹர; திரிசூலின்; சம்போ;
ஸீகப்ரசவக்ருத்; பவமே; தயாளோ; ஸ்ரீமாத்ருபூத;
சிவபாலயமாம்; நமஸ்தே
என்ற மந்திரத்தை மூன்று முறை சொல்ல வேண்டும். கர்ப்பமான பின், வீட்டில் இதே மந்திரத்தை, தினமும், 11 முறை ஜெபித்து வந்தால், பிரசவத்தில் சிரமம் இருக்காது.
மலையின் கீழ்புறம் விபீஷணர் பாதம் ஒரு பாறையின் மீது உள்ளது. உச்சிவிநாயகர் சன்னிதியும் படிகளின் தோற்றமும், யானையின் துதிக்கை போல இருக்கும்.
திருச்சியில் எங்கிருந்து நோக்கினாலும், இவரது சன்னிதி தெரியும் என்பதால் மானசீகமாக இவரை வணங்கினாலே ஆயிரம் கோடி பலன் கிடைக்கும். 273 அடி உயரத்தில் இருக்கிறது இவரது சன்னிதி; 417 படிகள் ஏற வேண்டும். இந்த எண்களைக் கூட்டினால், 'மூன்று' வரும்.இந்த எண் குருவுக்குரியது; குரு பார்வை இருந்தால் தான் திருமண பிராப்தி, புத்திர பாக்கியம் கிடைக்கும். ஜாதக ரீதியாக குருவருள் இல்லாதவர்களுக்கு பல விஷயங்களிலும் தடை ஏற்படும். அவர்களுக்கு குருவாய் இருந்து அருள் தரவே, குருவுக்குரிய எண் வரும்படியாக உச்சி விநாயகர் சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது.
இங்கிருந்து பார்த்தால் ஸ்ரீரங்கநாதர் கோவில் கோபுரமும், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் சமேத அகிலாண்டேஸ்வரி கோவில் கோபுரமும் தெரியும். விநாயகர் சதுர்த்தியன்று, உச்சிப்பிள்ளையாருக்கும், அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகருக்கும், 150 கிலோ எடையுள்ள இரண்டு பெரிய கொழுக்கட்டைகள் நைவேத்யம் செய்யப்படும்.
இவரைத் தரிசிக்க நாள், நட்சத்திரம் எதுவும் பார்க்க தேவையில்லை. எந்த நாளிலும் சென்று தரிசித்து வரலாம்.
என்றைக்கும் நமக்கு அருள காத்திருக்கிறார் இந்த மலைக்கோட்டை மாமன்னர்!
தி.செல்லப்பா
