தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/வைராக்கியம் உள்ளவரா நீங்கள்?

வைராக்கியம் உள்ளவரா நீங்கள்?

வைராக்கியம் உள்ளவரா நீங்கள்?


PUBLISHED ON : டிச 09, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 09, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மனிதர்களுக்கு மிகவும் துன்பமானது எது என்று கேட்டால், பிறப்பும், இறப்பும் தான்.

பல பிறவிகள் எடுப்பதால், பலமுறை இந்த துன்பங்களை ஜீவன் அனுபவிக்கிறது. அதேபோல் இறக்கும்போதும் துன்பம் தான். நோய்வாய்பட்டு படுத்து விடுகிறான். அப்போது அவனுக்கு, 'நோயும், பாயும்' தான் துணை.

'பாயும்தான் துணை' என்பதன் கருத்து என்னவெனில், வயதான காலத்தில், இனி பிழைக்க மாட்டான் என்ற நிலை வரும்போது, இவனை மெத்தையிலா படுக்க வைப்பர்? ஒரு பாயை விரித்து, அதுவும் கூட, பழைய பாயாக இருக்கும்; அதில் படுக்க வைத்து விடுவர். அந்த பாய்தான் இவனுக்குத் துணை.

அந்த நேரம், கண் பஞ்சடைத்து விடும்; காது கேட்காது. உடலில் வலிமை இராது. கஞ்சி குடித்தால் கூட ஜீரணமாவது கஷ்டம். வைத்தியர் வந்து கையைப் பிடித்துப் பார்த்து, 'அக்னி மந்தம்' என்பார். அதாவது, வயிற்றில் ஜடராக்னியின் உஷ்ணம் குறைந்து விட்டது என்று பொருள்.

இப்படி அக்னி மந்தம் ஏற்பட்டு விட்டால், எதை சாப்பிட்டாலும் அது ஜீரணமாகாது.

அந்த நேரம்தான் பலவித எண்ணங்கள் தோன்றும். 'அடடா... வீட்டை யாருக்கு எழுதி வைப்பது? நிலம் யாருக்கு? நகை, பணத்தை யாருக்குக் கொடுப்பது?' என்றெல்லாம் எண்ணம் வரும்.

கடைசியில் எதையும் சரிவர செய்யாமல், போய் விடுகிறான்.

இந்த பிறப்பு, நோய்கள், மூப்பு, இறப்பு எல்லாமே மனிதனின் பாவங்களின் பலன் தான். ஒரு வீடு கட்டப்படுகிறது. அது தான் பிறப்பு. அந்த வீடு பிறகு பழுதடைந்து விடுகிறது; அது தான் நோய். உடனே, பழுது பார்க்கப்படுகிறது. இதுதான் சிகிச்சை. அப்படியும் அது நாளடைவில் ஒவ்வொரு இடமாக இடிந்து விழுகிறது. இது தான் அதன் மூப்பு. பிறகு, பழுது பார்த்தும் பயனில்லாமல் இடிந்து விழுந்து விடுகிறது. இதுதான் அதன் இறப்பு.

எந்த பொருளுக்கும், எந்த மனிதனுக்கும் இது போன்ற பிறப்பு, நோய்கள், மூப்பு, இறப்பு என்பவை உண்டு. ஆகவே, கடைசியில் இறப்பு என்பது நிச்சயமானது. அப்படி இறந்த பின், மீண்டும் பிறக்காமலிருந்தால், மேலும் மேலும் துன்பங்களை அனுபவிக்க வேண்டியிராது.

பிறவி ஏன் ஏற்படுகிறது? பாவ புண்ணியங்களின் பலன்களை அனுபவிக்க வேண்டிதான் பிறவி ஏற்படுகிறது. சரி... ¬முன் ஜென்ம பாவங்களின் பலன்களை அனுபவித்து விட்டால் மட்டும் போதுமா? இந்த ஜென்மங்களில் எந்த பாவமும் செய்யாமலிருக்க வேண்டுமே! அது ¬முடியுமா? ¬முடியும்.

அகிம்சாவாதியாக இருந்து, தர்ம சாஸ்திரப்படி வாழ்க்கை நடத்தி, பகவானையே வழிபட்டு, பந்த பாசங்களை விட்டொழித்து மரணமடைந்தால் மறுபிறவி இருக்காது.

எதை விட்டாலும், பந்த பாசங்களை விட முடியுமா? அது இருந்தால் மறு பிறவிதான். பந்த பாசங்களை விட வேண்டுமானால், அதற்கு வைராக்கியம் வேண்டும். அது எங்கே கிடைக்கும் என்று தேட வேண்டாம்; மனதிலேயே தான் இருக்கிறது!

***

ஆன்மிக வினா-விடை!



ஐயப்பனை காண, நெய் கொண்டு செல்வது ஏன்?

ஐயப்பனின் வளர்ப்பு தந்தையான பந்தள மகாராஜா, ஆண்டுக்கு ஒரு முறை, மணிகண்டனை காண மலையேறும் போது, அவருக்கு பிடித்த பலகாரங்களை கொண்டு சென்றார். சபரிமலை உச்சிக்கு, கால் நடையாக செல்ல, பல நாட்கள் ஆகும் என்பதால், எளிதில் கெட்டுப் போகாத நெய்யில் அவற்றை செய்து எடுத்துச் சென்றார். அத்துடன், தேங்காய்க்குள் தனியாகவும், நெய்யை ஊற்றி கொண்டு சென்றார். இதன் காரணமாகவே, இன்றும் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள், தேங்காய்க்குள் நெய்யை ஊற்றி எடுத்துச் செல்கின்றனர்.

***

வைரம் ராஜகோபால்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us