sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

பிராயச்சித்தம்!

/

பிராயச்சித்தம்!

பிராயச்சித்தம்!

பிராயச்சித்தம்!


PUBLISHED ON : ஜூலை 19, 2020

Google News

PUBLISHED ON : ஜூலை 19, 2020


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''என்னப்பா, சொக்கலிங்கம்... நம் மூக்குப்பொடி, சத்தியமூர்த்திக்கு, ஏதோ அரசு விருதும், லட்ச ரூபாய் பரிசும் தரப்போறாங்கன்னு, 'டிவி' செய்தியில சொன்னாங்க, பார்க்கலையா நீ,'' என்று, எதிர் வீட்டு காளிதாசு, புன்னகையுடன் நின்றிருந்தான்.

குரல் கேட்டு திரும்பி பார்த்தான், தொழுவத்திலிருந்த, சொக்கலிங்கம்.

''என்னண்ணே சொல்ற, லட்ச ரூபாய் தர்றாங்களா... யாருக்கு, நம் மூக்குப்பொடி எழுத்தாளருக்கா... அப்படி என்னத்த சாதிச்சிட்டாப்ல பெருசு... நெசமாத்தான் சொல்றியா.''

''ஆமாய்யா... வேலையை விட்டுட்டு, ஓங்கிட்ட வந்து, பொய்ய சொல்லணும்ன்னு எனக்கென்ன தலையெழுத்தா... போயி, 'டிவி'ய போட்டு, செய்தி சேனலை பாரு...

''நம் ஊருக்கு, பொதுவான சாவடி கட்டுறதுக்கு, ரூபாய் பத்தலைன்னு, கிராம தலைவரு பொலம்பிட்டிருந்தாரே... அதுக்கு, சத்தியமூர்த்திக்கு கெடைக்க போற லட்சம் ரூபாவ கைப்பத்த ஏதாச்சும் வழியிருக்கான்னு யோசிப்பா... அவ்வளவு ரூபாய வெச்சு, அவரு என்ன செய்யப் போறாரு,'' என்றவாறு, அங்கிருந்து நகர்ந்தான், காளிதாசு.

அவனது யோசனை, மனதில் ஆழமாய் நங்கூரமிட, கால்களை வீசி, வீட்டுக்குள் போனவன், 'டிவி'யை, 'ஆன்' செய்து, செய்தியை பார்த்தான்.

அதில், 'எழுத்தாளர், சத்தியமூர்த்தியின் சிறுகதை நுால், விருதுக்கு தேர்வாகி உள்ளது. விருதுடன், ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பரிசும் வழங்கப்படுகிறது...' என்ற தகவலை கூறியது.

அச்செய்தி, பிசுபிசுத்து கிடந்த அவன் மனதை உசுப்பேற்றி உற்சாகமாக்கியது.

பள்ளிக்கூடம் அனுப்புவதற்காக, தன் ஐந்து வயது மகனை குளிப்பாட்டிக் கொண்டிருந்த மனைவி வீரம்மாளிடம், இந்த விஷயத்தை கூறினான்.

''இப்பவே போய் அவரை பார்க்கணும். இந்த பரிசு கிடைச்ச சங்கதி, கஷ்டப்படற யாருக்காச்சும் தெரிஞ்சு, அவங்க அவருகிட்ட போய் கண்ண கசக்கி நின்னாக்கா... மறுப்பு சொல்லாம, பரிசு கைக்கு வந்ததும், அப்படியே தந்திடறதா வாக்குறுதி கொடுத்துடுவாரு.

''சொன்ன சொல் மீறாத ஜென்மம். அதனால, அதுக்கு முன், அவரை பார்த்து, நம் ஊருக்கு பொதுவான சாவடி கட்டடம் கட்டறதுக்கு நிதியா, அந்த பரிசு பணத்தை தரச்சொல்லி உத்தரவாதம் வாங்கிடணும்,'' என்றவாறே, மோட்டார் சைக்கிளை உதைத்து, எழுத்தாளர் சத்தியமூர்த்தியை பார்க்க புறப்பட்டான்.

சத்தியமூர்த்தியை பற்றி சொல்ல வேண்டுமென்றால், ௬ அடிக்கு குறையாத உயரம்; மாநிறம். 10 ஆண்டுகளாகவே மூக்கில் தொங்கிக் கொண்டிருக்கிற துாரப் பார்வைக்கான மூக்கு கண்ணாடி. ஜிப்பா சட்டை, வேட்டி. பின்பக்கமாய் படிய வாரிய தலை.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, எப்போதும் சட்டை பையில் தவம் கிடக்கும், மூக்குப்பொடி டப்பா என, அவருக்கான அடையாளங்களாக இருந்தன.

மற்றவருக்கு உதவும் நல்ல மனது கொண்ட மனிதாபிமானி. பத்திரிகைகளில் வெளிவரும் தன் படைப்புகளுக்கு கிடைக்கும் சன்மானத்தில், பெரும் பகுதியை, இயலாதவர்களுக்கு தானமாக தந்துவிடுகிற, பரந்த மனசுக்காரர்.

அந்த காலத்து, எஸ்.எஸ்.எல்.சி., வரை படித்திருந்ததால், தொழில் நிறுவனங்களில், வரவு - செலவு கணக்குகளை பார்ப்பதில் புலியாக இருந்தார். இதனாலயே, 'கணக்குபிள்ளை' என்று அழைப்பதற்கு பதிலாக, இவர் வேலை பார்க்கும் நிறுவனத்தில், 'கணக்கு புலி' என்றே, முதலாளி உட்பட அனைவரும் அழைப்பர். அந்தளவுக்கு வரவு - செலவு கணக்கில் குழப்பம் வராத அளவுக்கு பார்த்துக் கொள்வார்.

ஊரின் கடைசி பகுதியில், தனக்கு சொந்தமான குடிசை வீட்டில் தங்கியவாறு, கமிஷன் மண்டி ஒன்றில், கணக்கு எழுதுகிற வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.

காலை, 9:00 மணிக்கு கிளம்பினால், மாலை, 6:00 மணிக்கு தான் வீட்டுக்கு வருவார். அதில் கிடைக்கிற, 5,000 ரூபாய் சம்பளத்தை, சாப்பாடு உள்ளிட்ட செலவுக்கு வைத்து, ஓய்வு கிடைக்கும்போது, சிரத்தையெடுத்து, கதைகள் எழுதி, பத்திரிகைகளுக்கு அனுப்புவார்.

ஒருநாள், வழக்கம்போல் வேலை முடிந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் ஒன்று, இவர் மீது மோதி, கால் பிசகி பெரிதாக வீங்கி விட்டது.

அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த, சொக்கலிங்கம், பதைபதைக்க, இவரை தன் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர வைத்து, வீட்டுக்கு அழைத்து போனான். சித்த மருத்துவர் ஒருவரை வரவழைத்து, மாவு கட்டு போடச் செய்தான்.

அத்துடன், 'இனி, நீ எங்க வீட்டுலயே இரு பெரிசு. நாங்க உனக்கு கஞ்சி ஊத்தறோம். எங்க பசுக்களுக்கு, நேரா நேரத்துக்கு தீவனம் போட்டு, அத பராமரிக்கிற வேலையை மட்டும் பாரு... எங்களுக்கும் உதவியா இருக்கும். இந்த வயசான காலத்துல, வேலைக்கு போய் வர்ற அலைச்சல் இருக்காது...' என்று கூறினான்.

சம்மதித்த, சத்தியமூர்த்தி, சொக்கலிங்கத்தின் வீட்டில் ஒருவராகவே ஐக்கியமாகி விட்டார்.

பொதுவாக, ஏதாவது ஒரு பழக்கத்துக்கு மனிதர்கள் அடிமையாவது சகஜமே. இவருக்கு, மூக்குப்பொடி பழக்கம். ரெண்டு நாளைக்கு சாப்பிடாமல் கூட இருந்து விடுவார். ஆனால், தினமும், 10 - 15 முறையாவது மூக்குப்பொடி போடுவதற்கு மறக்கவே மாட்டார்.

இப்படியாக வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்க, இந்த கிராமத்துக்கும், பக்கத்து கிராமமான ஓடைப்பட்டிக்கும் பொதுவான கண்மாய் இருந்தது. அதிலிருந்து விவசாய நிலங்களுக்கு, முறை வைத்து தண்ணீர் பாய்ச்சுகிற பல ஆண்டு பிரச்னை, பெரும் விவகாரமாகி, இரண்டு கிராமத்தை சேர்ந்தோரும், மோதிக் கொண்டனர்.

இக்கிராமத்தில், கோபக்கார இளைஞர்களில் ஒருவனான இருந்தான், சொக்கலிங்கம். அன்று இரவு, ஓடைப்பட்டியில், ௨ ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து, அறுவடைக்கு தயாராக இருந்த, ஏழை விவசாயி ஒருவரின் கரும்பு தோட்டத்திற்கு தீ வைத்து, சாம்பலாக்கி விட்டான்.

மறுநாளே, இந்த விஷயம், சத்தியமூர்த்தியின் காதுகளுக்கு வந்தது. அதிர்ச்சியில் உறைந்து போனார். அதுவரையில் அறிந்திராத, சொக்கலிங்கத்தின் வன்முறை குணம், உக்கிரமாய், அவனை வெறுக்க வைத்தது.

'இவ்ளோ மோசமான பயலா... இவன் ஊத்துற கஞ்சியவா நாம குடிச்சிட்டிருக்கோம்...' என்று குமுறிக் கொண்டிருந்தவர், வெளியில் சென்று, சிறிது நேரத்தில் வீட்டுக்குள் நுழைந்தார்.

'எதுக்குப்பா இப்படி பண்ணினே... ஓடைப்பட்டி விவசாயி ஒருத்தரோட கரும்பு தோட்டத்துக்கு, தீ வெச்சு அழிச்சுட்டியாமே... விவசாயத்த அழிச்சா, ஜனங்களுக்கு எப்படி சோறு கிடைக்கும். விவசாயந்தாப்பா ஒலகத்துக்கு ஆணி வேரு; மூச்சுக் காத்து...

'அதுமட்டுமில்லாம, கரும்பு அறுவடையில கெடைக்கிற வருமானத்த வெச்சு தான், அந்த விவசாயி, தன் மக கல்யாணத்த பண்ணணும்ன்னு இருந்தாராம்... உன் மூர்க்கத்தனத்தால, அதை தீ வெச்சு கொளுத்திட்டியே... இது உனக்கே நியாயமா தெரியுதா...' என்று, சொக்கலிங்கத்திடம் கேட்டார்.

'இது, நம் ஊரோட கவுரவப் பிரச்னை. நியாயம், அநியாயம் பத்தி பேச, இது நேரமில்ல. இப்படிதான் அவனுங்களுக்கு பயங் காட்டணும். நீங்க, நீதி, நேர்மை, நியாயம்ன்னு, கதைக்கு ஒதவாதத பேசிட்டு வாழ்ற ஜென்மம். இதையெல்லாம் கண்டுக்காதீங்க...' என்றான்.

அவனது தடாலடி வார்த்தைகள், தடியடி போல வலித்தன.

'எனக்கு இது, கொஞ்சங்கூட பிடிக்கலப்பா...' என்ற, அவரது தீர்க்கமான வார்த்தைகள், அவனை நோக்கி தார்க்குச்சியாய் நீண்டன.

கண்களை உருட்டி, கர்ண கொடூரமாக முழித்தவாறு, 'ஒங்களுக்கு பிடிக்கலேன்னா, வீட்டவுட்டு வெளியேறிக்கலாம். புடிக்காத எடத்துல, நீங்க இனி இருக்க வேண்டாம்...' என்றான்.

கொஞ்சமும் யோசிக்காத சத்தியமூர்த்தி, தன் மூன்று செட் ஜிப்பா, வேட்டி, எழுத்து அட்டை மற்றும் புத்தகங்களை, இரண்டு பெரிய துணி பையில் திணித்தார்.

அப்போதே அந்த வீட்டை விட்டு வெளியேறினார். நான்கு தெரு தள்ளி, ஊருக்கு கடைசியில் இருக்கும் அவருக்கு சொந்தமான, 10க்கு 10 அளவுள்ள குடிசை வீட்டில் தங்கி கொண்டார். அதே தெருவில் உள்ள, தெருவோர முத்தம்மாள் டிபன் கடையில், இட்லி, பணியாரம் என, வாங்கி சாப்பிட்டுக் கொள்வதாக தகவல் கிடைத்தது, சொக்கலிங்கத்துக்கு.

ஒரு மாசத்திற்கு மேல் ஆகியும், அவரை போய் இவன் பார்க்கவே இல்லை.

'மூக்குப்பொடி பெரிசுகிட்ட, எப்படியாவது பேசி சமரசம் பண்ணிடணும். அவருக்கு கிடைக்க போற, லட்ச ரூபா பரிசு தொகையை வேற யாருக்கும் அவரு தானம் பண்றதுக்குள்ளாற, கிராமத்துக்கு பொதுவான சாவடி கட்டுறதுக்கு, 'டொனேஷனா' குடுக்க சம்மதம் வாங்கிடணும்...' என்று சிந்தித்தபடி, அரக்க பரக்க, வேகமாய் மோட்டார் சைக்கிளில் விரைந்தான், சொக்கலிங்கம்.

ஈசி சேரில், அன்றைய செய்தி தாளை வாசித்தபடி இருந்தவரிடம், ''ஐயா... நல்லாயிருக்கீங்களா,'' என்று கேட்டபடியே உள்ளே நுழைந்தான், சொக்கலிங்கம்.

நிமிர்ந்தவர், 'ஆமாம்...' என்பது போல், மேலும் கீழும் தலையை ஆட்டினார்.

''கவர்மென்டு, ஒங்க புஸ்தகத்துக்கு விருதும், லட்சம் ரூபா பரிசும் குடுக்கப் போறதா, 'டிவி'யில செய்தி பார்த்தேன். ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு... நம்ப ஊருக்கே பெரிய பெருமையை சேர்த்திருக்கீங்க... அழுக்கு சட்டை, வேட்டி எல்லாத்தையும் எடுத்து போடுங்க. லாண்டரி கடையில போட்டு நல்லா சலவை செஞ்சு வாங்கிக்கலாம்.

''இனிமே நீங்க அழுக்கு டிரஸ் போடக் கூடாது. வெள்ளையுஞ் சொள்ளையுமா இருக்கணும். அப்பதானே நம்ம ஊருக்கும் மரியாதை, ஒங்களுக்கும் மரியாதை,'' என்று சொல்லியபடியே, அழுக்கு துணிகளை பெரிய பை ஒன்றில் திணித்தான்.

கத்தியின் கூர்மையுடன் காரமாய் நீளுகிற அவனது சொல்லாடல், தித்திப்பும், ஈரமுமாய் வெளிவந்ததில், அப்பட்டமாய் பச்சோந்தி தன்மை இருப்பதுபோல் தெரிந்தது. புகழ்ச்சியில் மனம் ஒன்றாமல், விரக்தியாய் முகம் சுளித்தார், சத்தியமூர்த்தி.

அப்போது, மோட்டார் சைக்கிளிலிருந்து இறங்கி, உள்ளே வந்த ஒருவர், ''ஐயா, எம் பேரு கணபதி. இந்த ஊரு தாசில்தாரா இருக்கேன். ஒங்களுக்கு, அரசாங்கத்தோட இலக்கிய விருது கிடைச்சிருக்கிறதா செய்தி படிச்சேன். ரொம்ப மகிழ்ச்சி, வாழ்த்துக்கள்,'' என்றபடியே, சால்வை ஒன்றை போர்த்தினார்.

அதற்குள், ஆண்கள், பெண்கள், தீவிர வாசகர்கள் மற்றும் உள்ளூர் இலக்கிய அமைப்பை சேர்ந்தோரும் கூட்டமாக வந்து, பாராட்டு தெரிவித்தனர்.

அந்த குடிசையின் முன் கார் ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து கேமராவுடன் இறங்கிய இருவரில் ஒருவர், ''ஒங்களுக்கு அரசாங்கத்தோட விருது கிடைச்சதுக்கு, வாழ்த்துக்கள் ஐயா...'' என்றார்.

கதை எழுத துவங்கிய வயது, முதல் கதை பிரசுரமாவதற்கு காத்துக் கிடந்த போராட்ட நாட்கள், இளமை நாட்கள் என, எழுத்து சார்ந்த பல்வேறு கேள்விகளை கேட்டார்.

''ஒங்களோட படைப்புகளுக்காக கிடைக்கிற சன்மானத்துல பாதிய, ரொம்ப கஷ்டப்படறவங்களுக்கு கொடுத்து உதவறதா கேள்விப்பட்டோம். இப்போ கிடைச்சிருக்கிற, ஒரு லட்சம் ரூபாயில், பாதியை தானமா கொடுக்க போறதா திட்டம் வெச்சிருக்கீங்களா,'' என்றார்.

''பாதி இல்ல, முழுசையும்.''

''அப்படியா... யாருக்கு தரப்போறீங்க...''

''பக்கத்து கிராமம் ஓடைப்பட்டிக்கும், எங்க கிராமத்துக்கும், கண்மாய் தண்ணிய விவசாயத்துக்கு முறை வெச்சு பாய்ச்சுகிற பிரச்னையில, பகை உண்டானது. அந்த கிராமத்து குறு விவசாயி ஒருத்தரின் கரும்பு தோட்டத்துக்கு, எங்க கிராமத்தை சேர்ந்த ஒருத்தன், தீ வெச்சு எரிச்சு சாம்பலாக்கிட்டான்.

''அதனால, அந்த கரும்பு விளைச்சல நம்பி, நிச்சயம் பண்ணின அந்த விவசாயியோட பொண்ணு கல்யாணம் நின்னு போச்சு. எனக்கு கிடைக்கப்போற ஒரு லட்சம் ரூபாயை, அவங்களுக்கு தந்து, நின்னு போன, அந்த பொண்ணு கல்யாணத்தை ஜாம் ஜாம்ன்னு நடத்தச் சொல்லி, எங்க ஊர்காரன் செஞ்ச பாவத்துக்கு, பிராயச்சித்தம் தேடப் போறேன்,'' என, கடைக்கண்ணால், சொக்கலிங்கத்தை பார்த்தபடி கூறினார், சத்தியமூர்த்தி.

அதைக் கேட்டு ஆடிப்போன, சொக்கலிங்கம், முகமெங்கும் அவமானம் படர, வெளியேறினான்.

தாமோதரன்






      Dinamalar
      Follow us