PUBLISHED ON : ஜூலை 16, 2023

ஸ்ரீ ஆண்டாளின் அவதார தினமான, ஆடிப்பூரத்தன்று, ஸ்ரீவில்லிபுத்துாரில், தேர் திருவிழா நடைபெறும். இத்தேரில் சுமார், 1000 தேவ - தேவியர், ரிஷிகள் ஆகியோரது உருவங்களும், ராமாயண, மகாபாரத காட்சிகளும் இடம்பெற்றிருக்கும். வடம் பிடித்து இழுக்க, 3,000 பேர் கூடுவர்.
ஆடிப்பூர விழாவின் முதல் நாள், 16 கால்கள் கொண்ட சப்பரத் தேர் பவனி வரும். பனை ஓலை குருத்துகளால் செய்யப்படும் இந்த தேர் தரிசனம் பார்ப்பவர்களுக்கு, 16 செல்வங்களை வழங்கும் என்பது நம்பிக்கை.
ஏழாம் நாளன்று, ஆண்டாளின் மடியில், ரங்கமன்னார் தலை சாய்த்து படுத்த நிலையில் தரிசனம் தருவார். 10ம் நாள் விழா அன்று, முத்துக்குளி எனப்படும் சிறப்பு நிகழ்ச்சியின்போது, ஆண்டாளின் பிறந்தநாள் பலன்களை சொல்வர்.
வளையல் அலங்காரம்!
பெருமாள் கோவில்களில் ஆடிப்பூரத்தை விமரிசையாக கொண்டாடுவர். சிவன் கோவில்களில், அம்பாளின் வளைகாப்பு விழாவாக கொண்டாடுகின்றனர்.
திருச்சி, கருமண்டபம் பகுதியிலுள்ள இளங்காட்டு மாரியம்மன் கோவிலில், ஆடிப்பூரத்தன்று, அம்மனுக்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வளையல்களால் அலங்காரம் செய்யப்படுகிறது. இந்த அலங்காரத்தில் அம்மன் மூன்று நாட்கள் காட்சி தருவார். பிறகு, அந்த வளையல்களை, கருவுற்ற பெண்களுக்கு பிரசாதமாக வழங்குவர். இதனால், சுகப்பிரசவம் நடக்கும் என்பது நம்பிக்கை.
