PUBLISHED ON : ஏப் 21, 2019

அப்பாவின் மறைவுக்கு பின், சகோதரர்களாகிய நாங்கள், தெலுங்கில் எடுத்த, புன்னமி நாகு படத்தின் வெற்றியால், மீண்டும் படத் தயாரிப்பில் ஈடுபடலாம் என்ற தைரியம் ஏற்பட்டது.
இந்த எண்ணத்தை, எங்களுடன் நெருக்கமானவரான, எஸ்.பி.முத்துராமனிடம் தெரிவித்து, ஆலோசனை செய்தோம்.
அவரது முயற்சியால், ரஜினிகாந்தை வைத்து படம் எடுக்க முடிவு செய்தோம். இரண்டு கதாநாயகிகள் தேர்வு செய்யப்பட்டனர். ஒருவர், புன்னமி நாகுவில் நடித்த, ரத்தி அக்னிஹோத்ரி, இன்னொருவர், சுமலதா. ஜெய்சங்கர், சுருளிராஜன் மற்றும் ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோரை ஒப்பந்தம் செய்தோம். அப்படி உருவான படம், முரட்டுக்காளை.
புதுமுக நடிகர்களின் வரவால் சில காலம் ஒதுங்கியிருந்த, ஜெய்சங்கர், இந்த படத்தின் மூலம் மறுபிரவேசம் செய்தார். அதுவரை கதாநாயகனாக நடித்து வந்த, ஜெய்சங்கர், எங்களுடன் கொண்டிருந்த நட்பின் காரணமாக, முதல் முறையாக வில்லனாகவும் நடிக்க ஒப்புக்கொண்டார்.
பஞ்சு அருணாசலம் கதை வசனத்தில், இளையராஜா இசை அமைக்க, எஸ்.பி.முத்துராமன் இயக்கினார்.
கதையில் வரும் காட்சிகளுக்கேற்ப, ஸ்டுடியோவிலேயே பிரமாண்டமான அரங்கம் அமைக்க ஆரம்பித்தார், சலம்.
பாடல், 'ரிக்கார்டிங்' பூஜை நடந்தது. ஆனால், அது நடந்த விதம் புதிராக இருந்தது. அதுவரை, எங்கள் தயாரிப்பில், பாடல், 'ரிக்கார்டிங்' என்றால், முதலிலேயே பாடல் பதிவு செய்து வைத்திருப்பர்.
ஆனால், அன்று, இசையமைப்பாளர் தனியாக அமர்ந்து, மெட்டு போட்டுக் கொண்டிருந்தார். பாடல் எழுதுவது யார் என்று தெரியவில்லை. இயக்குனர், முத்துராமனிடம் சென்று, இதுபற்றி கேட்டேன். 'பஞ்சு அருணாசலம் தான் எழுதுகிறார். ஆனால், அவர் ஊரில் இல்லை. வெளியூர் போயிருக்கிறார்...' என்றார்.
'பாடல் எழுதாமல் எப்படி பதிவு...' என்று, பதற்றத்துடன் கேட்டேன்.
'கொஞ்சம் பொறுங்க...' என்ற இயக்குனர், பஞ்சுவுக்கு போன் போட்டு, தன் கையில் வைத்திருந்த, 'டேப் ரிக்கார்டரில்' அந்த, 'ட்யூனை' அவர் கேட்கும்படி செய்தார்.
'கொஞ்ச நேரத்தில் பாடலை சொல்கிறேன்...' என்று, தொடர்பை துண்டித்தார், பஞ்சு. சிறிது நேரத்தில் போன் செய்தவர், இயக்குனரிடம், பாடல் வரிகளை கூறினார். அவர் சொல்ல சொல்ல, இவர் எழுதி வந்து, இசையமைப்பாளரிடம் கொடுத்தார்.
எந்தப் பூவுக்கும் வாசம் உண்டு, எந்தப் பாட்டிலும் ராகம் உண்டு, புது வரவு... புது உறவு என்பது தான் பல்லவி. பாடலை பாடினார், எஸ்.ஜானகி.
இதேபோன்ற முறையில் தான், அடுத்தடுத்த பாடல்களும் பதிவு செய்யப்பட்டன.
இந்த படத்தில் வரும் ஜல்லிக்கட்டு காட்சிக்காக, மாடு பிடிக்கும் நிகழ்ச்சியில் புகழ்பெற்ற, மதுரை, அலங்காநல்லுாருக்கு, விழா நடக்கும் தருணத்திலேயே சென்று படம் பிடித்தோம். அதுவரை, யாரும் கண்டிராத அளவுக்கு மூன்று கேமரா வைத்து, மூன்று கோணங்களில் பிரமாண்டமாக எடுத்தோம்.
மாடு பிடிக்கும் காட்சியில், 'டூப்' இல்லாமல், ரஜினியை வைத்தே படமாக்கினார், முத்துராமன். ரஜினியும் எந்த தயக்கமும் இல்லாமல் ஆர்வத்தோடு நடித்தார்.
இப்படத்தில், ரயில் ஓடிக் கொண்டிருக்கும்போதே நடக்கும் சண்டை காட்சிக்காக, ரயில்வே துறையிடம் சிறப்பு அனுமதி வாங்கி, ஐந்து மணி நேரத்துக்கு, 'கூட்ஸ்' ரயிலை வாடகைக்கு எடுத்தோம். நான்கு கேமராக்கள் மூலம், பிரமாண்டமாக எடுத்தோம்.
படம் ரிக்கார்டிங்கிற்கு வந்தபோது, மற்ற காட்சிகளுக்கு இசை அமைத்தது போல், ரயில் சண்டை காட்சிக்கு, பின்னணி இசையமைக்க மறுத்து விட்டார், இளையராஜா.
விறுவிறுப்பான சண்டை காட்சிக்கு, பின்னணி இசை இருந்தே ஆகவேண்டும் என்ற நிர்பந்தம், எனக்கு. அதனால், இந்த படத்தின் வேறு காட்சிகளுக்கு, இளையராஜா வாசித்த, 'மியூசிக் ட்ராக்'கை எடுத்து, சண்டை காட்சியில் தேவையானதை சேர்க்க சொன்னேன்.
நல்லமுறையில் படப்பிடிப்பை முடித்து, முரட்டுக்காளை படத்தை வெளியிட்டோம். படம், பிரமாண்ட வெற்றி அடைந்தது.
தலைப்பிலிருந்து, சுபம் போடுகிற வரை, கதை, பாடல் என, அனைத்தையும் தயார் செய்து, முடிவு செய்யப்பட்ட காட்சிகளுக்கு தான், நடிகர் - நடிகையரிடம், 'கால்ஷீட்' வாங்கி படம் எடுப்பது, எங்கள் வழக்கம். இந்த ஒழுங்குமுறையை தான் அப்பா, எங்களுக்கு கற்றுத் தந்திருந்தார்.
அந்த பாடத்தின்படி நடந்து பழக்கப்பட்ட எனக்கு, முரட்டுக்காளை திரைப்படம் அமோக வெற்றி அடைந்திருந்தாலும், தயாரிப்பாளர் என்ற முறையில், திருப்தி அளிக்கவில்லை.
முரட்டுக்காளை படத்தின் வெற்றியை தொடர்ந்து, கமலஹாசன் நடிக்க, ஒரு படம் தயாரிக்கலாம் என்று, விரும்பினோம். எங்களின் விருப்பத்திற்கு இசைந்து, ஏவி.எம்., நிறுவனத்திற்கு படம் செய்து தர, கமலஹாசனும் ஒப்புக்கொண்டார்.
கதாநாயகியாக, அம்பிகா மற்றும் சில்க் ஸ்மிதா, துளசி, ரவீந்திரன், வி.கே.ராமசாமி, தேங்காய் சீனிவாசன் மற்றும் ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோர், இந்த படத்தில் நடித்தனர். பஞ்சு அருணாசலம், கதை வசனம் எழுத, இளையராஜா இசையில், எஸ்.பி.முத்துராமன் இயக்கினார்.
நான்கு வயது சிறுவனாக வந்து, அப்பா முன் நடித்து காட்டி, களத்துார் கண்ணம்மா படத்தில், எங்களால் அறிமுகப்படுத்தப்பட்டவர், கமலஹாசன். இன்று, பெரிய நடிகனாக வளர்ந்த நிலையில், கதாநாயகனாக, எங்கள் தயாரிப்பில் நடிக்க வந்தது, எங்களுக்கெல்லாம், 'த்ரில்லிங்' ஆக இருந்தது; அவரும் எங்களிடம் சகஜமாக பழகினார்.
எப்போதும் வெற்றிபெறக் கூடிய கருத்தை மையமாக கொண்டிருந்த, சகலகலா வல்லவன் படக்கதைக்கு, பாடல்கள் எல்லாமே சிறப்பாக அமைந்திருந்தன.
மிக சிறப்பான அம்சமாக, இளமை இதோ இதோ என்ற பாடல். இந்த பாடலுக்காக, பிரமாண்டமான அரங்கம் அமைக்கப்பட்டு, ஏவி.எம்., ஸ்டுடியோவில் படப்பிடிப்பு நடந்தது. அப்போது, கமலஹாசனுக்கு கண்ணில் அடிபட்டு விட்டது. காயம் ஆற, இரண்டு நாட்கள் ஆகும் என்பதால், படப்பிடிப்பை நிறுத்தி விட்டோம்.
படப்பிடிப்பு ரத்தானதை கேள்விப்பட்ட, கமலஹாசன், இயக்குனர், முத்துராமனை தொடர்பு கொண்டு, 'ஏன் சார், படப்பிடிப்பை ரத்து செஞ்சீங்க... எனக்கு ஒண்ணுமில்ல... நல்லாதான் இருக்கேன்... முகத்துல உள்ள காயத்தின் தையல் தெரியாம, இரண்டு நாள், 'லாங்' மற்றும் 'மிட் ஷாட்' வச்சு படப்பிடிப்பை நடந்துங்க... 'க்ளோசப் ஷாட்' வேணும்னா, மூணாவது நாள் எடுத்துக்கங்க...' என்று, ஆர்வத்தோடு கூறியுள்ளார்.
அவர் சொன்னபடியே, மூன்று நாட்கள் படப்பிடிப்பு நடத்தி, இளமை இதோ இதோ... பாடலை மிகச்சிறப்பாக எடுத்து முடித்தோம்.
ஒவ்வொரு புத்தாண்டின்போதும், இந்த பாடலை ஒலி - ஒளிபரப்பாத வானொலி, 'டிவி' சேனல்கள் இருக்கவே முடியாது. புத்தாண்டை கொண்டாடும் விழாக்களும், இந்த பாடலை தவற விடுவதில்லை. அந்த அளவுக்கு இந்த படம் வெளியானதிலிருந்து இன்று வரை, மறக்க முடியாத பாடலாக திகழ்ந்து வருகிறது.
கடைசியாக, 'கிளைமாக்ஸ்' காட்சியை எடுத்தோம். 'த்ரில்லிங்' ஆன சண்டை. இதற்கு, 'டூப்' நடிகரை பயன்படுத்தாமல், தானே, 'ரிஸ்க்' எடுத்து பிரமாதமாக சண்டை காட்சியில் நடித்து கொடுத்தார், கமல்.
படப்பிடிப்பு முடிந்து, பின்னணி இசை சேர்க்கப்பட்டு, முதல் காப்பி தயார் ஆனது. எங்களுக்கு மிகவும் வேண்டியவர்கள், வங்கி நண்பர்கள் என்று முக்கியமான பிரபலங்களுக்காக, ஒரு சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்தோம்.
படம் பார்த்தவர்கள், 'கமலஹாசனை வைத்து, 16 வயதினிலே, மூன்றாம் பிறை மற்றும் சிவப்பு ரோஜாக்கள் என்றெல்லாம், தரமான படங்களை தயாரித்துள்ளனர். அப்படிப்பட்ட நடிகரை வைத்து, ஏவி.எம்.,மில் இப்படி ஒரு படம் எடுத்திருக்கிறீர்களே...' என்றனர்.
அவர்கள் அப்படி கூறியது, எங்களுக்கு கொஞ்சம் நெருடலாக இருந்தாலும், படத்தை வெளியிட்டோம்.
வெளியான அன்று, விசில் பறக்க, கை தட்டல்களால் தியேட்டர் அதிர்ந்தது. படம் பார்த்த ரசிகர்கள் மத்தியில், உற்சாகம் கரைபுரண்டு ஓடியது.
கண்டிப்பாக, இது ஒரு வெற்றி படம் தான் என்று கணித்தோம். எங்களின் கணிப்பையும் மீறி, சகலகலா வல்லவன் படம், 175 நாட்கள், அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி, மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.
எது எப்படியோ, காரில் வந்து படம் பார்த்து செல்வோரின் ரசனை வேறு. சாதாரண பாமர மக்களின் ரசனை வேறு என்பதையும், இந்த படத்தின் மூலம் தெரிந்து கொண்டோம்.
— தொடரும்.
ஏவி.எம்.குமரன்