PUBLISHED ON : மார் 03, 2019

விஜயபுரி வீரன் போன்ற கதையம்சம் உள்ள படத்தை இயக்க, நானும், என் சகோதரர்களும் ஆசைப்படுவதாக, அப்பாவிடம் தெரிவித்தோம். அவர் மறுக்கவே, வருத்தமடைந்த நாங்கள், இதுகுறித்து அம்மாவிடம் முறையிட்டோம். எங்களின் ஆர்வத்தை உணர்ந்த அம்மா, அவரிடம் எடுத்துரைத்தார்.
அம்மாவின் பரிந்துரையை மறுக்க முடியாத அப்பா, எங்களிடம், 'நாம இதுவரைக்கும், பாசப் போராட்டங்களை சித்தரிக்கும் நல்ல கதையம்சம் உள்ள குடும்ப படம், தேச பக்தியை துாண்டும் படங்களை தான் தயாரித்திருக்கிறோம். ராஜா, ராணி கதை மற்றும் கத்தி சண்டை போன்ற படங்கள் எடுத்ததில்லை.
'அதனால், 'த்ரீ மஸ்கிட்டீயர்ஸ்' போல, படம் எடுப்பதெல்லாம், ஏவி.எம்., பேனரில் வேண்டாம். வேண்டுமென்றால், 'முருகன் பிரதர்ஸ்' என்ற புது பேனரில், நீங்க விரும்புற மாதிரி படம் எடுத்துக்குங்க...' என்று, எங்கள் விருப்பத்துக்கு, சம்மதம் தந்தார்.
அன்று, அப்பாவிடம் பேசி, நாங்கள் படம் தயாரிக்க, அம்மா சம்மதம் பெற்றுத் தராமல் இருந்திருந்தால், சினிமா உலகில், நானும், என் சகோதரர்களும் நுழைந்திருக்க முடியாது; அப்பாவின் மறைவுக்கு பின், ஏவி.எம்., நிறுவனம் மூலம், பல வெற்றிப் படங்களை தயாரித்து, வெளியிட்டு, சிறந்த முறையில் நிர்வகித்திருக்க முடியாது; சகோதரர்களாகிய நாங்கள், வேறு தொழிலில் ஈடுபட்டிருப்போம்.
அந்த வகையில், எங்களின் திரையுலக பிரவேசத்துக்கும், இன்று வரை, ஏவி.எம்., நிறுவனம் நிலைத்த புகழோடு விளங்குவதற்கும், எங்களின் அம்மாவே முழு முதற்காரணம்.
அப்பாவின் அனுமதி கிடைத்ததும், 'முருகன் பிரதர்ஸ்' எனும் பேனரில், ஏ.சி.திருலோகசந்தர் இயக்கத்தில், வீரத்திருமகன் படத்தின் வேலைகளை ஆரம்பித்தோம். கதாநாயகனாக, சி.எல்.ஆனந்தன், குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த, குமாரி சச்சுவை, முதன் முதலாக கதாநாயகியாக, இப்படத்தில் அறிமுகம் செய்தோம்.
அன்று வரை, ஏவி.எம்., நிறுவனத்தின் நிரந்தர இசையமைப்பாளராக பணியாற்றி வந்தவர், ஆர்.சுதர்சனம் தான். ஆனால், நாங்கள், அன்று பிரபலமாக இருந்த, விஸ்வநாதன் - ராமமூர்த்தி என்ற இளைஞர்களை, முதன் முதலாக எங்கள் தயாரிப்பில், இசையமைக்க அழைத்து வந்தோம்.
'ரோஜா மலரே, ராஜகுமாரி ஆசைக் கிளியே, அழகிய ராணி அருகில் வரலாமா...' என்ற பாடலை தான், முதன்முதலில், 'ரிக்கார்டிங்' செய்து, படப்பிடிப்பில் இறங்கினோம். ஒரு வாரம் படப்பிடிப்பு நடத்திய காட்சிகளை, அப்பாவுக்கு போட்டு காட்டினோம்.
பார்த்து மகிழ்ந்த அவர், எங்களை ஊக்கப்படுத்தும் விதமாக, 'உங்கள் விருப்பப்படியே, படத்தை பிரமாண்டமாக எடுப்பதற்கு என்ன தேவையோ, அதை செய்யுங்கள்...' என்றார்.
அப்பா கொடுத்த உற்சாகத்தில், பாடல் காட்சியை எடுக்க, படப்பிடிப்பு குழுவினர், நடிகர் ஆனந்தன், குமாரி சச்சு, ராமதாஸ், ஈ.வி.சரோஜா மற்றும் அசோகன் ஆகியோருடன், ஐந்தாறு கார்களில் ஒகேனக்கல் சென்றோம். நாங்கள் வந்திருக்கும் செய்தி, அப்பகுதி முழுவதும் பரவி விட்டது.
ஒகேனக்கலை சுற்றியுள்ள ஊர்களிலிருந்து, படப்பிடிப்பை பார்க்க, மக்கள் குவிந்து விட்டனர். அதனால், அங்கு சிறு சிறு கடைகள் புதிதாக முளைக்க ஆரம்பித்தன. அப்பகுதியில் ஏதோ கண்காட்சி நடப்பது போல ஆகி விட்டது.
நாங்கள் அனைவரும், ஒகேனக்கலில் இருந்த அரசினர் விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தோம். வந்திருந்த ரசிகர்களில் பெரும்பாலோர், ஈ.வி.சரோஜாவையும், அசோகனையும் பார்க்க ஆர்வமாக இருந்தனர்.
பகல் முழுதும் படப்பிடிப்பில் இருக்கும் நாங்கள், மாலை, 5:00 மணிக்கு அதிக வெளிச்சம் இருக்காது என்பதால், அறைக்கு வந்து, இயக்குனர், உதவி இயக்குனர், கேமராமேன்களுடன், அடுத்த நாள் எடுக்கப் போகும் காட்சிகள், அதற்குண்டான ஆயத்த பணிகள் குறித்தும் பேசுவோம்.
அப்போது, இயக்குனர், ஏ.சி.திருலோகசந்தர், 'எம்.ஜி.ஆர்., படம், தர்மபுரியில் வெளியாகி இருக்கிறது. இங்கிருந்து ஒரு மணி நேர பயணம். நாம் எல்லாரும் அந்த படத்தை பார்த்து வரலாம்...' என்றார்.
ஆனால், உடன் இருந்த உதவியாளர்கள் மற்றும் சிலர், 'நாங்கள் வரவில்லை. ஒகேனக்கல் நீர் வீழ்ச்சியில் குளிக்க போகிறோம்...' என்றனர்.
'சரி... நாம் போய் வருவோம்...' என்று சொல்லி, இயக்குனர், தன் அறைக்கு சென்று திரும்பி, 'புறப்படலாமா... காரை எடுக்க சொல்லுங்கள்...' என்றார்.
அருவியில் குளிக்க சென்றவர்களோடு, டிரைவரும் சென்று விட்ட விபரத்தை, மேனேஜர் சொன்னார். மணி, மாலை, 5:30 ஆகிவிட்டது. இப்போது புறப்பட்டால் தான், காட்சி ஆரம்பிக்கும், 6:30 மணிக்கு தர்மபுரி போய் சேர முடியும்.
என்ன செய்வதென்று புரியாமல் திகைத்தபோது, 'வேண்டுமானால் நான் வர்றேன் சார்... நான் வண்டி ஓட்டுவேன்...' என்றார், மேனேஜர்.
நாங்கள் தயங்கினோம்.
'என்னை நம்பி வாங்க சார்... நான் நல்லா வண்டி ஓட்டுவேன்... 'லைசென்சை' பாருங்க...' என்று காட்டினார்.
மேனேஜர் முகைதீன், டிரைவர் சீட்டில் அமர, அவருக்கு பக்கத்தில், இயக்குனர், பின் சீட்டில் நான் அமர்ந்தேன். அவசரமாக போக வேண்டும் என்பதால், வண்டியை விரைவாக ஓட்டினார், மேனேஜர்.
எங்கள் காருக்கு முன், பள்ளி மாணவர்கள் இருவர், சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். கார் வருவதை திரும்பி பார்த்த மாணவர்கள், சாலையிலிருந்து ஒதுங்காமல், நடு ரோட்டுக்கு வந்து சைக்கிளை மெதுவாக மிதிக்க ஆரம்பித்தனர். அது, ஒருவழிப்பாதை. அந்த மாணவர்களை ஒதுக்கி செல்ல முடியாது.
நாங்கள் சென்ற காரில் தான், முதல் நாள், நடிகர் அசோகனும், ஈ.வி.சரோஜாவும் வந்திருந்தனர். அவர்கள் தான் அந்த காரில் வருகின்றனர்; மெல்ல சென்றால், காரை நிறுத்துவர், ஓடிச்சென்று அவர்களை பார்க்கலாம் என நினைத்து, மாணவர்கள் அப்படி செய்திருக்கின்றனர். இது, பின்னர் தான் தெரிந்தது.
மாணவர்கள் ஒதுங்கி விடுவர் என நினைத்து, காரின் வேகத்தை குறைக்காமல், 'ஹாரன்' அடித்தபடியே சென்றார், முகைதீன். அவர்கள் நகரவில்லை. 'சடன் பிரேக்' போட்டு நிறுத்தினாலும், அவர்கள் மீது கார் மோதி விபத்தை ஏற்படுத்தி விடும்.
எனவே, இயக்குனர் திருலோகசந்தர், சட்டென்று காரின், 'ஸ்டியரிங்'கை பிடித்து, சரசரவென்று சுழற்றினார். அவ்வளவு தான்... கார் தடதடவென பள்ளத்தில் விழுந்து உருண்டு, அப்பளம் போல் நசுங்கியது. இயக்குனர், முன் சீட்டில் இருந்ததால், மெதுவாக கதவை திறந்து வெளியே வந்தார். அவரது விரலில் அடிப்பட்டு, ரத்தம் கொட்டியது.
பயந்து ஓடிய மாணவர்களை பார்த்து, 'அவனுங்கள பிடிங்க... பிடிங்க...' என, விரட்டினார், இயக்குனர்.
காரின் இரு பக்க கதவுகளும் நசுங்கி போனதால், நான் வெளியில் வர முடியாமல் அதிர்ச்சியில் இருந்தேன். வெளியில் பெட்ரோல், 'டேங்க்' உடைந்து, பெட்ரோல் கொட்டிக் கொண்டிருந்தது, மேலும் என்னை திகிலடையச் செய்தது.
— தொடரும்
ஏவி.எம்.குமரன்