PUBLISHED ON : ஏப் 14, 2019

இங்கிலாந்தை சேர்ந்த, 'ஆல்பிரட் ஹிட்ச்காக்' இயக்கிய திரைப்படங்கள், ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பையும், எதிர்பார்ப்பையும் பெற்று வெற்றி நடைபோடும். அவரது படங்கள் மர்மங்கள் நிறைந்ததாக இருக்கும்.
தமிழில், அதே போன்ற ஒரு திரைப்படத்தை பிரமாண்ட முறையில் தயாரிக்கவும், கலரில் எடுக்கவும் முடிவு செய்தார், அப்பா.
அந்த நேரத்தில், இயக்குனர், ஏ.சி.திருலோகசந்தர், தான் ஒரு துப்பறியும் கதை வைத்திருப்பதாக தெரிவித்தார். அந்த கதையை படமாக, திறமையாக எடுத்து கொடுப்பார் என்ற நம்பிக்கையில், அதே கண்கள் என்ற பெயரில், திருலோகசந்தரே இயக்க சம்மதித்தார், அப்பா.
இருந்தாலும், படம் வெற்றியடைய வெறும், 'த்ரில்' மட்டும் போதாது என்று கருதினார்.
அப்போது, சென்னை, 'மிட்லண்ட்' தியேட்டரில், மனோஜ்குமார், நந்தா, பிரான் மற்றும் ஹெலன் ஆகியோர் நடித்த, துப்பறியும் படமான, கும்நாம் வெற்றிகரமாக ஓடியது. இது பற்றி கேள்விப்பட்டு, 'அதை பார்த்து, அதன் வெற்றிக்கு என்ன காரணம் என்பதை சொல்லுங்கள்...' என்று, எங்களை அனுப்பினார், அப்பா.
அதன்படி, அந்த படத்தை பார்த்து, 'பாடல்கள் எல்லாம் ரசிக்கும்படி இருக்கிறது. ஹெலன் டான்ஸ் அருமையாக இருக்கிறது. அதேசமயம், மக்களை கவரும் பொழுதுபோக்கு அம்சங்களோடு, 'சஸ்பென்ஸ், த்ரில்' காட்சிகளும் நிறைய இருக்கிறது. அது தான், அப்படத்தின் வெற்றிக்கு காரணம்...' என்றோம்.
'நீங்கள் சொன்ன இந்த அம்சங்களோடு, நகைச்சுவை, 'சென்டிமென்ட்' மற்றும் மர்மம் ஆகிய அனைத்தும் இருப்பது போல படத்தை எடுங்கள்...' என்றார்.
அப்பா கொடுத்த உற்சாகத்தில், முதலில் பாடல்கள் நன்றாக அமைய வேண்டும் என நினைத்தோம்.
அக்காலத்தில், ஆங்கில பட பாடல்களை தழுவி, புதுமையாக இசையமைத்து புகழ்பெற்ற, வேதாவை இப்படத்திற்கு, இசையமைக்க தேர்வு செய்தோம்.
ரவிச்சந்திரன், காஞ்சனா, நாகேஷ், எஸ்.ஏ.அசோகன், பாலாஜி, எஸ்.வி.ராமதாஸ், ஏ.கருணாநிதி, மாதவி மற்றும் எங்களின் எல்லா படங்களிலும் நடித்து வந்த குள்ள நடிகர், பி.டி.சம்மந்தம் ஆகியோரை, ஒப்பந்தம் செய்தோம். அதோடு, படத்தில் ஏதேனும் புதுமையாக ஒரு விஷயத்தை புகுத்த விரும்பினோம்.
வெளிநாட்டு சுற்றுப்பயணம் சென்றிருந்த போது, பிரான்ஸ் நாட்டின் தலைநகர், பாரிஸ் நகரில் நடந்த நடன நிகழ்ச்சியை கண்டோம். அங்கு, 'லிடோ' என்ற பிரமாண்டமான நடன அரங்கு இருந்தது. அதில், ஒரே நேரத்தில், 60 பெண் நடன கலைஞர்கள் பங்கேற்று, 'கேன்... கேன்...' என்ற பெயரில் நடன நிகழ்ச்சி நடத்துவது வழக்கம்.
கண்களை கொள்ளை கொள்ளும் அந்த நடன காட்சியை காண, உலகம் முழுவதிலிருந்தும் ரசிகர்கள் திரண்டு வருவர். அந்த நடன நிகழ்ச்சியில், வாத்தியங்களின் இசை மட்டும் தான் இசைக்கப்படும். பாடல்கள் இருக்காது. அந்நிகழ்ச்சியின் இசைத்தட்டு மற்றும் புகைப்படங்களை வாங்கி வந்திருந்தேன்.
அந்த இசை நடன காட்சியை, அதே கண்கள் படத்தில் வைக்கலாம்; புதுமையாக இருக்கும் என்று, இசைத்தட்டை, இசையமைப்பாளர் வேதாவுக்கு போட்டுக் காட்டினோம். அதைக் கேட்டு பிரமித்தவர், அதை போலவே மூன்று நிமிடத்திற்கு அற்புதமாக, 'ரிக்கார்டிங்' செய்து தந்தார்.
பிரமாண்ட அரங்கம் அமைத்து, நடன குழுவினருடன், கதாநாயகன் ரவிச்சந்திரன், கதாநாயகி காஞ்சனா இருவரையும் பங்கேற்க வைத்து, இசை நடன காட்சியை மூன்று நிமிடத்திற்கு படமாக்கி, அப்பாவுக்கு போட்டு காட்டினோம்.
'என்னப்பா இது... நடன காட்சி, 'பொசுக்'கென்று முடிந்து விட்டது... மிகவும் அருமையாக இருக்கிறது. அதனால், இந்த இசையை, ஆறு நிமிடத்திற்கு, 'ரிக்கார்டிங்' செய்து, படப்பிடிப்பை திரும்ப நடத்துங்கள். அப்போது தான், ரசிகர்கள் மனதில் நன்றாக பதியும்...' என்றார்.
அதனால், திரும்பவும், அந்த நடன இசை காட்சியை, ஆறு நிமிடத்திற்கு மறு ஒலிப்பதிவு செய்து, ஏராளமான பொருட் செலவில், 15 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி, எடுத்து முடித்தோம்.
அப்பா சொன்னது போலவே, படம் வெளியான போது, நடன இசை காட்சியை பார்த்த ரசிகர்கள் எழுந்து, 'ஒன்ஸ்மோர்' என்று ஆரவாரம் செய்து, காட்சியை திரும்ப பார்த்து ரசித்தனர்.
அதே கண்கள் படத்தின் வெற்றிக்கு, இந்த காட்சியும் பெருமளவில் உறுதுணையாக இருந்தது. படத்தின் வெளிப்புற படப்பிடிப்பிற்காக, ஊட்டி, மைசூர் சென்று பாடல் காட்சிகளை படமாக்கினோம்.
வாலி எழுதிய, எத்தனை அழகு... இருபது வயதினிலே... என்ற பாடலை, மைசூர் பிருந்தாவன் கார்டனுக்குள் படம் பிடித்தோம். கதாநாயகன், கதாநாயகி இருவரும் ஆடி வரும் காட்சியில், நீரூற்றிலிருந்து வரும் தண்ணீர் கலர் கலராக மாறுவது போல் எடுத்தால், நன்றாக இருக்கும் என்று நினைத்தோம்.
'இரவில் அப்படி கலர் மாறும். அதற்கேற்ப விளக்கு வசதியும் உண்டு...' என்றனர். ஆனால், பகல் நேரத்தில் அக்காட்சியை எடுக்கும்போது, நாங்கள் நினைத்த, 'எபெக்ட்' வேண்டும் என்பதற்காக, கர்நாடக மாநில சுற்றுலா துறை அமைச்சகத்தின் அனுமதியை பெற்று வந்தோம்.
பிறகு பாடலை படமாக்கும்போது, நாங்கள் விரும்பும் கலர் பொடிகளை, 'பம்பிங்' மூலம் துாவினோம். கதாநாயகி ஆடியபடியே வந்து நீர் பீறிட்டு வரும் இடத்தில் கையை காட்டியதும், மஞ்சள், சிகப்பு மற்றும் பச்சை நிறங்களில் தண்ணீர் மாறி மாறி வருவது போல், அழகாக படம் பிடித்து வந்தோம்.
பூம் பூம் பூம் மாட்டுக்காரன் தெருவில் வந்தான்டி... டும் டும் டும் மேளம் கொட்டி சேதி சொன்னான்டி... மற்றும் பொம்பளை ஒருத்தி இருந்தாளாம்... பூதத்தை பார்த்து பயந்தாளாம்... ஆம்பிள ஒருத்தன் இருந்தானாம்... அவளுக்கு துணையா நடந்தானாம்... போன்ற ரசிக்கும்படியான பாடல்கள். நாகேஷ், மாதவி சம்பந்தப்பட்ட நகைச்சுவை காட்சிகளும், பிரமாண்டமான நடன காட்சிகளும், குடும்ப பகைக்கு காரணமான உணர்ச்சிப்பூர்வ காட்சிகளும் அமையும்படி, மிகுந்த கவனத்துடன் எடுக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும், அதே கண்கள் படம், 1967ல் வெளியானதும், பரபரப்பாக பேசப்பட்டு, மாபெரும் வெற்றி கண்டது.
படம் வெளியானபோது, எனக்கு வேண்டிய நண்பர் ஒருவர், தியேட்டரில் படம் பார்த்து கொண்டிருந்தார். அப்போது, படத்தில், முதல் கொலை நடந்து முடிந்து, அடுத்த கொலை நடக்கும். அந்நேரத்தில், மற்ற கதாபாத்திரங்கள், 'இறந்தது யார்...' என, காண ஓடி வருவர்.
இந்த காட்சி திரையில் ஓடிக் கொண்டிருந்த போது, படத்தை இரண்டாவது முறையாக பார்த்துக் கொண்டிருந்த ரசிகர் ஒருவர், பக்கத்தில் இருந்தவரிடம், வைத்தியர் கேரக்டரை காட்டி, 'இந்த கிழவன் தான் கொலை செஞ்சானப்பா...' என கூறியுள்ளார். படத்தை பார்த்துக் கொண்டிருந்த நண்பர், அவரை, 'பளார்' என்று கன்னத்தில் ஒரு அறை விட்டார்.
'அடப்பாவி... யார் கொலை செய்யிறது என்பதை யூகித்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தில், படம் பார்த்துகிட்டிருக்கிற எனக்கு கேட்கும்படி ஏன்டா சொன்னே... உன்னை நான் கேட்டேனா... நீ முன்னாடியே படம் பார்த்துட்டேங்கிற பெருமையை எங்ககிட்டே காட்டணுமா...' என்று உணர்ச்சிவசப்பட, இருவருக்கும் மோதல் உருவாகி விட்டது.
இப்படியெல்லாம் நடக்கும் என்று முன் கூட்டியே அப்பா எதிர்பார்த்தாரோ என்னவோ, படம் ஆரம்பிக்கும் முன், 'இந்த படத்தை பார்த்து செல்லும் ரசிகர்கள், படத்தின் முடிவை, புதிதாக படம் பார்க்க வரும் யாரிடமும் தயவுசெய்து சொல்ல வேண்டாம்...' என்று எழுத்து வடிவமாக திரையில் காட்டியும், வாய்மொழியாகவும் பேச வைத்திருந்தார்.
— தொடரும்.
ஏவி.எம்.குமரன்