PUBLISHED ON : டிச 23, 2018

சினிமாவில், பல புதுப்புது யுக்திகளை கையாண்டு, மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருந்தார், என் தந்தை. பொதுவாக, சினிமாவில் சண்டை காட்சிகளில் நடிக்கும், நடிகர் - நடிகையருக்கு காயம் பட்டது போல் அமைக்கப்படும் காட்சியில், அந்த நடிகரின் காயத்தின் மேல் ரத்த நிற கலவையை பயன்படுத்துவர். அப்போது, சென்னையில் படப்பிடிப்புகளில் பயன்படுத்தப்பட்ட நிற கலவை, கருப்பு வெள்ளையில் படமாக்கும்போது, ரத்த நிறத் தன்மை படத்தில் அமையவில்லை.
ரத்த நிறம், தத்ரூபமாக திரையில் தோன்ற வேண்டும் என்பதற்காக, ஹாலிவுட்டிலிருந்து பல ரத்த நிறக் கலவை சாம்பிள்களை வரவழைத்தார், என் தந்தை. அவற்றை குளிரூட்டப்பட்ட அறையில் பாதுகாப்பாக வைத்திருந்து உபயோகப்படுத்த வேண்டும்.
மக்களை சென்றடையும் சினிமாவின் சக்தி மகத்தானது என்பதை எப்போதும் உணர்ந்திருந்த தந்தை, அதற்காக, அதன் ஒவ்வொரு துறையிலும் தன் உழைப்பை ஆர்வத்துடன் அர்ப்பணித்தார்.
மேலும், அக்காலத்தில் நேரடி ஒலி அமைப்புடனேயே திரைப்படங்கள் உருவாக்கப் பட்டதால், காட்சியில் பங்குபெறும் நடிகர் - நடிகையருக்கு, அக்காட்சியின் வசனங்கள் மறந்து விட்டாலும், படப்பிடிப்பு தடை படாமலிருக்க, ஒரு சிறப்பு யுக்தியை கையாண்டார்.
நடிப்பவர்கள் பேச வேண்டிய வசனத்தை, அவர்கள் பார்க்கும் வகையில், அவரவர் மொழியில் கேமராவின் பின்னால் ஒரு கரும்பலகையில் எழுதி வைக்கப்படும். இதுபோல், திரைப்பட தொழில் மேம்பட, தன்னாலான பல முயற்சிகளை தன் வாழ்நாள் முழுவதும் செய்து கொண்டே இருந்தார். அதுமட்டுமா...
அன்று, ஒளிப்பதிவாளர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்த விஷயம், ஒரு காட்சியை படமாக்கும்போது, அவர்கள் பயன்படுத்தும் லைட்டுகள் மற்றும் ஒளிப்பதிவு கருவிகள், படத்தில் நடிக்கும், நடிகர் - நடிகையரின் கண் கண்ணாடியில் பிம்பங்கள் பிரதிபலித்தன. அன்றைய கால கட்டத்தில் ஒளிப்பதிவு செய்ய, நாலா பக்கங்களிலிருந்தும் ஒளியை பாய்ச்சி படம்பிடிக்க வேண்டியிருந்தது. அதனால், கேமரா ஆங்கிள்களை எப்படி மாற்றி அமைத்தாலும், பிம்பம் அவர்களது கண்ணாடியில் பிரதிபலிப்பு இருந்தது.
இந்த பிரச்னையை போக்க, தொழில் நுட்ப அறிவால், ஒரு எளிமையான தீர்வை கண்டார். அதாவது, நடிகர்கள் கண் கண்ணாடி உபயோகிக்க வேண்டிய காட்சிகளில் அவர்களை கண்ணாடி இல்லாத வெறும் பிரேம் மட்டுமே அணிய செய்வார். இவ்வளவு எளிதான இந்த யோசனை, அன்று ஒளிப்பதிவாளர்களுக்கு மிகுந்த பலனை அளித்தது.
தென்னிந்திய மொழிகளில் அப்போதெல்லாம் வண்ணப் படம் எடுப்பதென்பது குதிரைக் கொம்பாக இருந்தது. அந்த நிலையை மாற்றியவர், அப்பா.
இரண்டாம் உலகப் போருக்கு பின், ஜெர்மனி, இரண்டாக பிரிக்கப்பட்டது. அதில், மேற்கு ஜெர்மனி, ஜனநாயகத்தை பின்பற்றும் அரசியலமைப்பை கொண்டிருந்தது. கிழக்கு ஜெர்மனி, கம்யூனிச கொள்கையின் அடிப்படையில் ஆட்சியமைத்தது.
கிழக்கு ஜெர்மனி, 'ஆர்வோ' எனும் கலர் பிலிம் தயாரித்தது. 'ஒரிஜினல் வுல்பென்' என்பதன் சுருக்கமே, 'ஆர்வோ' எனப்படும். கம்யூனிச நாடென்பதால், அதிக அளவில் படம் தயாரிக்கும் ஜனநாயக நாடுகள் அதனுடன் வியாபாரம் செய்ய முன் வரவில்லை.
ஈஸ்ட்மென் கலர் பிலிம் வாங்க வேண்டுமென்றால், அதற்கு கடுமையான விதிமுறைகள் இருந்தன. அமெரிக்க, 'டாலர்' கொடுத்து தான் அதை வாங்க முடியும். அந்நிய செலாவணி செய்ய முடிந்தவர்கள் தான், அமெரிக்க டாலர் கொடுத்து வாங்க முடியும்.
தென்னிந்திய திரைப்பட நிறுவனங்கள் பலவும் கலரில் படம் எடுக்கும் ஆவலில் இருந்தும், அவற்றால் படம் எடுக்க முடியாத நிலை இருந்தது. இந்த காரணங்களையெல்லாம் ஆராய்ந்த, 'ஆர்வோ பிலிம்' நிறுவனம், தென்னிந்தியாவில் புகழ்பெற்று விளங்கிய, 'ஏவி.எம்.,' நிறுவன அதிபரான அப்பாவை தொடர்பு கொண்டனர்.
'கம்பெனிக்கு பிலிம் பெறும்போது, டாலர் கொடுத்து வாங்க வேண்டியதில்லை. உங்கள் நாட்டு பணத்தை கொடுத்தே பெற்றுக் கொள்ளலாம். மேலும், சில சலுகைகளை அளிக்கிறோம். தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகம் மற்றும் வங்காளம் ஆகிய பகுதிகளின் ஏஜென்ட்டாகவும் நீங்கள் இருந்து எங்கள் நிறுவன, 'ஆர்வோ பிலிம்' வியாபாரத்திற்கு உதவுங்கள்...' என, கேட்டனர். அதற்கு சம்மதித்தார், அப்பா.
அதனால், தென் மாநில பகுதியின் பிலிம் மார்க்கெட் உரிமையை, அப்பாவிடம் தந்தது, 'ஆர்வோ' பிலிம் கம்பெனி. இந்திய அரசின் அனுமதியுடன், 'ஆர்வோ பிலிம்' விற்பனை ஏஜென்ட்டாக அப்பா பொறுப்பேற்றதும், தென்னிந்தியாவில் கலர் படங்கள் எடுக்க, படத்தயாரிப்பு நிறுவனங்கள் அதிகளவில் முன் வந்தன.
உலக புகழ்பெற்ற மலையாள திரைப்படமான, செம்மீன் படம், முதல் முதலாக, 'ஆர்வோ பிலிமில்' தான் எடுக்கப்பட்டது. தமிழில், பாரதிராஜா முதல் முதலாக இயக்கிய, 16 வயதினிலே படமும், 'ஆர்வோ' கலரில் எடுக்கப்பட்டது தான்.
தொடர்ந்து, நிவாஸ், பாலுமகேந்திரா, மகேந்திரன், ஜாக்பாட் சீனிவாசன், ஒளிப்பதிவாளர்கள், இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அனைவரும், 'ஆர்வோ' கலரிலேயே படம் எடுக்க ஆரம்பித்தனர். பல வெற்றிப் படங்கள், 'ஆர்வோ' கலரிலேயே எடுக்கப்பட்டதால், கருப்பு - வெள்ளையில் படம் எடுத்து வந்த தென்னிந்திய திரை உலகம், 1965லிருந்து 1980ம் ஆண்டிற்குள், முழுக்க முழுக்க கலர் படங்களுக்கு மாறியது. இப்படி ஒரு வண்ணமயமான மாற்றத்திற்கு காரணமாக இருந்தவர், என் அப்பா.
வாழ்நாள் சாதனையாளராக திகழ்ந்த அப்பா, தேசப் பற்றும், தெய்வ பக்தியும் கொண்டவர். காந்திய கொள்கைகளில் மிகுந்த நம்பிக்கை உடையவர். கை ராட்டையில் நுாற்கப்பட்ட நுாலில் நெய்த கதராடையை தான் கடைசி வரை உடுத்தி, எளிமையாக வாழ்ந்தார். சைவ உணவு தான் உட்கொண்டார். எங்களையும் சைவ உணவிற்கே பழக்கினார். இன்று வரை, நாங்கள் எல்லாரும் சைவ உணவினராக தான் இருந்து வருகிறோம்.
— தொடரும்.
ஏவி.எம்.குமரன்

