PUBLISHED ON : செப் 28, 2014

நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போது, வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்களாவது, யானைக் கூட்டத்தை சந்திக்க நேரிடும். சீக்கிரம் அந்த இடத்தைத் தாண்டி விட மாட்டோமா என்று, மனசு படபடக்கும். அந்த யானைகளை, ஞானசம்பந்தன் என்ற சிறுவன், என் வகுப்பின் மீது ஏவி விடுவான். இத்தனை யானை எதற்கு என்று பயப்படுவேன். ஆசிரியர் கேட்டவுடன், ஒரு யானையைக்கூட விட்டுவிடாமல், அத்தனையையும் கொண்டு சென்று ஒப்படைக்க வேண்டும். ஓரிரு யானை விட்டிருந்தால், சரியான பிரம்படி கிடைக்கும். எனக்கு இன்றளவும் யானைகள் மீது பயம் ஏற்பட காரணம், திருஞானசம்பந்தரின் அந்த அழகிய தேவாரப் பாடல் தான். ஆறாம் வகுப்பில், அதன் அருமையும், நயமும் எனக்குத் தெரியவில்லை. பாடல் வருமாறு:
நன்றுடையானை தீயதில்லானை
நரை வெள்ளேறு ஒன்றுடையானை
சென்றடையாத திருவுடையானை சீராப் பள்ளிக்
குன்றுடையானைக் கூறவென்னும் குளிருமே.
அடேயப்பா எத்தனை யானை! சின்னப் பையனுக்குப் பயமாயிருக்காதா... ஆனால், செய்யுளை இயற்றியதே, ஏழுவயதான திருஞானசம்பந்தன் என்ற ஒரு சின்னப் பையன் தானே!
— பாக்கியம் ராமசாமி.
