PUBLISHED ON : அக் 12, 2014

ஸ்ரீராமபிரானுக்கு உதவி செய்த குரங்கு தளபதிகளில், முக்கியமானவர் நளன். அவர் ஒரு முனிவரால், ஒரு விசித்திர சாபம் பெற்றிருந்தார். அது, 'நீரில் அவர் எதைப் போட்டாலும், மூழ்கக்கூடாது' என்பதுதான் அந்த சாபம். அதற்கு என்ன காரணம்...
குறிப்பிட்ட முனிவர் பூஜை செய்துகொண்டிருந்த போது, பூஜைக்குரிய சாளக்கிராகல்லை நளனிடம் கொடுத்து, நன்கு துடைக்கச் சொன்னார். நளன் அஜாக்கிரதையாக அதைக் கீழே நழுவவிட, அது சமுத்திரத்தில் விழுந்து, மூழ்கிவிட்டது. கோபமுற்ற முனிவர், 'இனிமேல் நீ நீரில் எதைப் போட்டாலும், அது முழுகாமல் இருக்கக்கடவது...' என்று சாபம் கொடுத்து விட்டார்.
சேது பாலம் கட்டுவதற்கு, ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி முயன்றபோது, நளன் தான் வந்து கல் போட வேண்டும். நளன் தொட்ட கற்களைக் கொண்டுதான், பாலம் போட வேண்டும் என்று கூறினார் ஸ்ரீராமர். முனிவரின் சாபமே, ஒரு லாபமாயிற்று. நளன் போட்ட கற்கள் எல்லாம் மிதந்து, பாலம் கட்ட உதவியாயிற்று. இப்போதும்கூட, சொல் வழக்கில், 'உன் கோபம், என் லாபம்...' என்று சொல்வதை கேட்கலாம்.
— பாக்கியம் ராமசாமி.
