PUBLISHED ON : அக் 23, 2011

நம்ம ஊரில் சில அம்மன் கோவில்களில், கரும்புத் தொட்டில் கட்டி, அதில் குழந்தை களை கொண்டு செல்லும் வழிபாடு, விமரிசையாக நடப்பதை பார்த்திருப்பீர்கள். ஜப்பானிலும், இதேபோல் ஒரு வழிபாடு நடக்கிறது. ஆனால், கரும்பு தொட்டில் எல்லாம் அங்கு இல்லை. ஜப்பானில் மிகவும் புகழ் பெற்ற சுமோ என்ற மல்யுத்தப் போட்டியை, மையமாக வைத்து, 'குழந்தைகளை அழ வைக்கும் சுமோ...' போட்டி, அங்கு நடக்கிறது.
குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக, இந்த வழிபாடு நடத்தப்படுகிறது. டோக்கியோவில் உள்ள புத்தர் கோவிலில், ஆண்டு தோறும் ஏப்ரல் மாதத்தில் இந்த விழா நடக்கிறது. ஆறு மாதத்தில் இருந்து, மூன்று வயது வரை உள்ள குழந்தைகள் மட்டுமே, இந்த போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப் படுவர்.
போட்டி நடக்கும் தினத்தன்று, ஏராளமான தாய்மார்கள், தங்கள் குழந்தைகளை கோவிலுக்கு அழைத்து வருகின்றனர். போட்டியில் பங்கேற்கும் அனைத்து குழந்தைகளுக்கும், கோவிலின் தலைமை புத்த துறவி, புனித நீர் தெளித்து, ஆசிர்வதிப்பார். இதன்பின், சுமோ போட்டிக்காக பயிற்சி பெறும், 'குண்டு' உருவம் உடைய மாணவர்கள், எதிரெதிர் திசையில் நின்று, குழந்தைகளை தூக்கி வைத்துக் கொள்வர்.
இதைத் தொடர்ந்து, குழந்தைகளை அழ வைப்பதற்கான முயற்சிகள் நடக்கும். குழந்தைகளை மேலும், கீழும் தூக்குவது, இடதும், வலதுமாக அசைப்பது போன்ற முயற்சிகள் நடக்கும். இவ்வளவு செய்தும், குழந்தைகள் அழவில்லை என்றால், புத்த துறவிகள், பயங்கர உருவம் பொறித்த முகமூடிகளை அணிந்து, குழந்தைகளின் முன் வந்து, அவற்றுக்கு பயம் காட்டுவர். இதில், குழந்தைகள் அழத் துவங்கி விடும். ஆனாலும், சில சமயங்களில், இந்த பயங்கர உருவங்களை பார்த்து, சில குறும்புக் கார குழந்தைகள் சிரிப்பதும் உண்டு. வேறு வழியில்லாமல், பேய் முக மூடியை அணிந்து, குழந்தைகளுக்கு பயம் காட்டுவர்.
எந்த குழந்தை முதலில் அழுகிறதோ, அந்த குழந்தை தான், போட்டியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். இரண்டு குழந்தைகள் ஒரே நேரத்தில் அழுதால், எந்த குழந்தை அதிக சப்தத்துடன் அழுகிறதோ, அந்த குழந்தை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும், வெற்றி பெற்ற குழந்தைக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப் படுவதோடு, அந்த குழந்தையின் பெயரில், கோவிலில் சிறப்பு வழிபாடும் நடத்தப் படும்.
இதுபோன்ற போட்டிகளில் பங்கேற்கும் குழந்தைகள், நோய் நொடி இல்லாமல், நீண்ட காலத்துக்கு ஆரோக்கியமாக இருப் பதாகவும், எதிர்காலத்தில், உறுதியான மனம் படைத்த குழந்தைகளாக விளங்கு வதாகவும், ஜப்பான் மக்கள் நம்புகின்றனர். நானூறு ஆண்டுகளுக்கும் மேலாக, இந்த விழா நடந்து வருகிறது.
***

