/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
உடல் ஊனமுற்றவர்களின் முன் மாதிரி பூவரசு!
/
உடல் ஊனமுற்றவர்களின் முன் மாதிரி பூவரசு!
PUBLISHED ON : பிப் 23, 2014

ஒரு காலத்தில், 'சப்பைக்காலன்' என்ற பட்டப் பெயருடன் உதாசீனப்படுத்தப்பட்டவர் இன்று, ஊரே போற்றும் மதுரா டிராவல்சின் இயக்குனர்களில் ஒருவராக உயர்ந்து இருக்கிறார். அவர் பெயர், பூவரசு. இது, எப்படி சாத்தியமானது என்பதை, அவரே கூறுகிறார்:
வேலூர் மாவட்டத்தில் உள்ள, வேடந்தாங்கல் என்ற கிராமத்தைச் சேர்ந்தவன் நான், போலியோவால் பாதிக்கப்பட்டு, ஒரு கையும், காலும் செயல்படாத நிலையில் வளர்ந்தேன். அத்துடன், சரளமாக பேச்சும் வராது. எனக்கு விவரம் தெரியும் வயதில், குடும்பத்தில் வறுமை தாண்டவமாடியது. அரிசி மில்லில் எஞ்சிவிழும் கருப்பு அரிசியை, கஞ்சிகாய்ச்சி குடிக்கும் நிலைமை.
பிளஸ் டூவிற்கு மேல் படிக்கமுடிய வில்லை. நடமாட முடியாமல், சரியாக பேச்சும் வராமல், ஊராரின் கேலிக்கும், கிண்டலுக்கும் உள்ளான நிலையில், யாருக்கும் பாரமாக இல்லாமல், எங்காவது போய் என்னை நிரூபிக்கவேண்டிய சூழ்நிலை. அப்போதுதான், சென்னையில் உள்ள மதுரா டிராவல்ஸ் நிறுவனத்தில், ஏர் டிக்கெட்டிங் படிப்பு, ஊனமுற்றவர்களுக்கு இலவசம் என்ற, விளம்பரம் கண்ணில்பட்டது. அதே போல, கிண்டியில், இலவச லெதர் கோர்ஸ் படிப்பு குறித்த விளம்பரத்தையும் பார்த்தேன்.
இரண்டுக்குமே விண்ணப்பித்தேன்; இரு பக்கத்திலும் இருந்து அழைப்பு வந்தது.நேரம் இருந்ததால், இரண்டிலும் சேர்ந்து படித்தேன்; தேர்ச்சி பெற்றேன். அதிலும், இந்தியாவிலேயே டிராவல்ஸ் படிப்பை, படித்து முடித்து தேறிய, முதல் உடல் ஊனமுற்றவன் என்ற பெருமையையும் பெற்றேன்.
'விருப்பம் இருந்தால், மதுரா டிராவல்சிலேயே பணியாற்றலாம்...' என்று, நிர்வாக இயக்குனர் வி.கே.டி.பாலன் கூறினார். எனக்கும் டிராவல்சில் பணியாற்றவேண்டும் என்பது, விருப்பமாக இருந்தது. மாதம் ஆயிரம் ரூபாய் சம்பளத்தில், வேலைக்கு சேர்ந்தேன். மாலை, 6:00 மணி முதல் காலை, 6:00 மணி வரை, அலுவலக பணி. பகலில் இது தொடர்பான படிப்பு,தேடல் என்று, கடினமாக உழைத்தேன். பனிரெண்டு வருடமாகிவிட்டது. என்னுடைய கடின உழைப்பு மற்றும் வி.கே.டி.பாலன் சாரின் கருணையினால், இப்போது, இந்த டிராவல்சின் இயக்குனர்களில் நானும் ஒருவன். கை நிறைய சம்பாதிக்கிறேன். எந்த கிராமம் என்னை கேலி செய்ததோ அந்த கிராமத்தில் வீடு, நிலம் வாங்கி, 'பூவரசு எங்க ஊருக்காரன்ல' என்று, ஊர்க்காரார்கள் பெருமைப்படும் நிலைக்கு உயர்ந்துள்ளேன்.
ஊரில் இருந்த அப்பா, அம்மாவை அழைத்து வந்து, என்னுடன் வைத்துக் கொண்டதுடன், என் தம்பி உள்ளிட்ட உறவுகளின் வாழ்வாதாரத்திற்கு வழி செய்துள்ளேன். சிங்கப்பூர், இலங்கை என்று சுற்றி வந்துள்ளேன். சுற்றுலா என்பது, அனைவருக்கும் சந்தோஷம்தரும் விஷயம் என்பதால், அதை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளேன், என்றார்.
உடல் ஊனமுற்றவர்களுக்காக மத்திய, மாநில அரசுகள் எவ்வளவோ சலுகைகள் வழங்கி வரும் நிலையில், அந்த சலுகைகள் எதையுமே விரும்பாதது குறித்து கேட்டபோது, 'நான்தான் கை நிறைய சம்பாதிக்கிறேனே பிறகு எதற்கு அரசின் சலுகை...' என்று கேட்கிறார் பூவரசு. இவருடன் தொடர்பு கொள்ள :9841973331.
-எல்.செண்பகா

