
திடீரென உடல் நலக்கோளாறு ஏற்பட்டு டி.ஆர்.சுந்தரம் அமரராகி விட்டார், மேக்கப்பைக் கூடக் கலைக்காமல், டப்பிங் பேசிக் கொண்டிருந்த மனோரமாவுக்கு, இந்த செய்தி எட்டி, 'ஓ' ...வென்று அவர் அலறிய பின் தான், மற்றவர்களுக்கே விஷயம் தெரிந்தது. ஸ்டுடியோவின் அஸ்திவாரத்தையே தாங்கிக் கொண்டு இருந்த ஒரு தூண் சாய்ந்து விட்டது என்றால்... முதலில் யாரும் நம்பவே இல்லை. ஏனெனில், தனக்கு உடல் நலமில்லை என்று டி.ஆர்.சுந்தரம், எப்போதுமே படுக்கையில் படுத்தது இல்லை.
செய்தியை கேள்விப்பட்டவுடன் அவ்வளவு பேரும், டி.ஆர்.சுந்தரம் பங்களாவிற்கு வந்து விட்டனர். ராமகிருஷ்ணா ரோடு அல்லோகலப்பட்டது. சேலம், கண்டிராத மக்கள் கூட்டம் அவர் வீட்டு வாயிலின் முன்னே! சேலத்திற்கு பெருமை சேர்த்த அந்த நல்ல மனிதரின் இழப்பை, அம்மக்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. சேதி கேட்டவுடன், சென்னையில் இருந்து கருணாநிதி, எம்.ஜி.ஆர்., நம்பியார், தங்கவேலு போன்றோர் வந்து விட்டனர். எல்லாரும் மயானத்திற்கு வந்து, அந்த மாபெரும் சினிமா உலக மேதைக்கு, தங்களின் இறுதி மரியாதையை செலுத்தினர்.
'எங்களுக்கெல்லாம் உடம்புக்கு ஏதாவது நோய் வந்து விட்டால், டாக்டரை உடனே வரவழைத்துக் காட்டும் இந்த தெய்வம், தன் உடம்பை அவ்வப்போது பரிசோதித்துக் கொள்ளவில்லையே...' என்று தொழிலாளர்கள் கதறியது, கேட்போர் நெஞ்சைக் கரைத்தது.
தன் உடல்நலத்தின் மீது, டி.ஆர்.சுந்தரத்திற்கு அளவு கடந்த நம்பிக்கை. ஏனெனில், அவர் எந்த விஷயத்திலும் எல்லை மீறியது கிடையாது.
அலாரம் வைக்காமலேயே, காலை 5:30 மணிக்கு எழுந்து விடும் அவர், காலைக் கடன்களை முடித்த பின், எலுமிச்சை சாறு கலந்த, பிளாக் டீ குடிப்பார். அதைத் தொடர்ந்து, பங்களா பால்கனியில், 'வாக்கிங்'; 'வாக்' செய்யும் போது, கேட்டில் யாராவது வந்து நின்றால், அவர்களை விசாரித்து, ரிகர்சல் ஹாலுக்கு வரச் சொல்லி விடுவார். இந்த நேரம் தான், அவருடன் பேசுவதற்கு சரியான சந்தர்ப்பம் என்று, அங்கு வருவோருக்கு தெரியும். அத்துடன், அன்று என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி, முடிவு செய்வதும், மகனுடன், மனம் விட்டு பேசுவதும் இந்நேரத்தில் தான்.
வாக்கிங் முடித்தவுடன், அன்றைய நாளிதழ்களை பார்ப்பார். முக்கிய செய்திகளை, மகனுடன் பகிர்ந்து கொள்வார். பின் சரியாக 8:15 மணிக்கு குளிக்கப் போனால், பத்து நிமிடம் தான்! 8:30 மணிக்கு டைனிங் டேபிளில் உட்காரும்போது, 'டிரிம்'மாக டிரஸ் செய்து கொண்டு இருப்பார். எல்லாமே, லேட்டஸ்ட் பேஷன் துணிகள். டிபன் சாப்பிடும் போதே மதியம் சாப்பாடு மற்றும் இரவு உணவு குறித்து, அவரிடம் கேட்டுக் கொண்டு அதன்படி சமைக்க வேண்டும். டிபன் முடிந்தவுடன், 8:40க்கு கார் சவாரி. காருக்குள் நுழையும் போது, அவரது செல்ல நாய் அவர் அருகே வந்து நிற்கும். (லேபரடார் இனத்தை சேர்ந்தது அது) அதைத் தட்டிக் கொடுத்து, அதனிடம் இரண்டு பிஸ்கட்டுகளை கொடுத்து விட்டு, காரில் பயணிப்பார்.
அவரது முதல் விஜயமே, அவர் நடத்தி வந்த கெஜலட்சுமி பவர் பிரஸ் ஆபீசுக்கு தான்! அங்கிருந்து தான், 'சண்டமாருதம்' பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது என்பதை, ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன். 'வேல்சாமி கவி, மேதாவி, கண்ணதாசன்' போன்றோர் அப்பத்திரிகையின் ஆசிரியராக இருந்திருக்கின்றனர்.
பிரஸ்சில் என்னென்ன வேலைகள் நடக்கின்றன என்பதை கவனித்து, தேவைப்பட்டால் சில ஆலோசனைகளையும் சொல்லி விட்டு, மாடர்ன் தியேட்டர்ஸ் ஆபீசுக்கு வருவார். முக்கியமான தபால்கள், அவரது உத்தரவுக்காக காத்துக் கொண்டு இருக்கும். தகுந்த யோசனைகளை சொல்லி விட்டு, 'ரிகர்சல் ஹால்' பக்கம் வருவார். மறுநாள், ஷூட்டிங்குக்கு தேவையான அனைத்து விஷயங்களையும், அங்கே டிஸ்கஸ் செய்து விட்டு, ஸ்டுடியோவிற்கு வந்து அனைத்து டிபார்ட்மென்டுகளையும் கவனிப்பார்.
அன்று அவருக்கு ஷூட்டிங் என்றால், படப்பிடிப்பில் கலந்து கொள்வார். வேறு டைரக்டர்கள், டைரக்ட் செய்கின்றனர் என்றால், ஓரிரு நிமிடங்கள் அதைப் பார்த்து விட்டு, அங்கிருந்து அகன்று விடுவார்.
படப்பிடிப்பு நடக்கிறது என்றால், சாப்பாடு அவருக்கு அங்கேயே வந்து விடும். சாப்பிட்டு முடித்தவுடன், அங்கே இருக்கும் அவரது பங்களாவில் ஒரு மணி நேரம் ஓய்வு எடுத்துக் கொள்வார். பின், சுறுசுறுப்பாக வெளிவந்தவுடன், படப்பிடிப்பு ஆரம்பமாகி விடும். படப்பிடிப்பு முடிந்தவுடன் மீண்டும் ரிகர்சல் ஹால். மறுநாளைக்கு தேவையானது என்ன என்பதை விளக்குவார்.
எது எப்படி என்றாலும், சரியாக இரவு 8:30 மணிக்கு பங்களா திரும்பி விடுவார். பெரிய வாயிலினுள் கார் நுழையும் போது, கேட் அருகில் அவரது வீரா என்னும் நாய் காத்துக் கொண்டு இருக்கும். இதில், ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால், அதுவரை அந்த நாய், வீட்டில் எங்காவது ஒரு மூலையில் படுத்துக் கொண்டிருக்கும். சரியாக, 8:30 மணிக்கு அது தானாகவே வந்து, கேட்டின் அருகில் நிற்கும். எஜமானர் மீது அப்படி ஒரு விசுவாசம். காரை ஷெட்டில் நிறுத்தி விட்டு, நாயை தட்டிக் கொடுத்து விட்டுத்தான், டி.ஆர்.சுந்தரம் பங்களாவிற்குள் நுழைவார். அதே நாய், அவர் படுக்கையில் வீழ்ந்த போது, கட்டிலின் அடியில் படுத்ததுதான். அவர் இறந்து பல தினங்கள் ஆன பின்பும், அந்த இடத்தை விட்டு நகராமல், எதுவும் சாப்பிடாமல் கிடந்து, உயிரை விட்டது.
படப்பிடிப்பு இல்லாத நாட்களில், தன் கார்டனில் அமர்ந்து டீ சாப்பிட்டு கொண்டே, செடிகளை வளர்ப்பது, பாதுகாப்பது பற்றித் தோட்டக்காரனுக்கு யோசனைகள் சொல்வார். ஸ்டுடியோவில் தன் நண்பர்களுடன் டென்னிஸ் விளையாடுவார். அதில் மிக முக்கியமானோர் சங்கர முதலியார், கே.என்.சீனிவாசன், என்.எஸ்.சுந்தரராஜன் போன் றோர்.
டி.ஆர்.சுந்தரத்திற்கு, மீன் பிடிப்பது மற்றுமொரு பொழுதுபோக்கு. ஏற்காடு பங்களாவில் இருந்தால், ஏற்காடு ஏரியில், படகில் ஒரு புத்தகத்துடன் அமர்ந்து கொண்டு மீன் பிடிப்பார். ஒகேனக்கல் போனால் சொல்லவே வேண்டாம். அதற்கென்று நேரத்தை அவரே ஒதுக்கிக் கொள்வார்.
ஸ்டுடியோவில் ஒரு புத்தக சாலையே இருந்தது. தொழிலுக்கு தேவையான அத்தனை புத்தகங்களும் அங்கே இருந்தன. கேமராமேன், சவுண்டு இன்ஜினியர், லேபாரடரியின் நிர்வாகிகள் என, அத்தனை பேர்களும் அந்தப் புத்தகங்களினால் பலனடைந்தனர்.
ஆங்கில நாவல்களை போலவே, டி.ஆர்.சுந்தரத்திற்கு ஆங்கில படங்களும் பிடிக்கும். ஸ்டுடியோவில் இருக்கும், மினி தியேட்டரில் வாரம், இரண்டு ஆங்கில படங்களையாவது பார்த்து விடுவார். படப்பிடிப்பு முடிந்தவுடன் ஏதாவது, நீண்ட இடைவெளி ஏற்பட்டால், வெளியூர் போய்விடுவது டி.ஆர்.சுந்தரத்தின் வழக்கம். குற்றாலத்தில் அப்போது சீசன் என்றால் அங்கே போய், பெரிய பங்களா ஒன்றில் தங்குவார். அவருடன் நாகிரெட்டியார், ஜெமினி, வாசன் போன்றோரும் இணைந்து கொள்வர்.
டி.ஆர்.சுந்தரம் இறந்த பின், ஸ்டுடியோ நிர்வாகத்தையும், படப்பிடிப்பு விஷயங்களையும் கவனித்துக் கொள்ள டைரக்டர்களின் போர்டு, மூவரை நியமித்தது. அவர்கள் பொறுப்பில் எடுத்த படங்கள், இரண்டே இரண்டு தான்.
அவை, சித்ராங்கி மற்றும் அம்மா எங்கே என்னும் படங்கள். இரண்டுமே நன்றாக போகவில்லை. காரணம், தொழில் தெரியாதவர்கள் கையில் பொறுப்பு கொடுக்கப்பட்டதன் விளைவு!
ஸ்டுடியோவில் இருந்த தொழிலாளர்களுக்கு, இது வாழ்க்கை பிரச்னை. தொடர்ந்து படங்கள் தோல்வி கண்டால், ஸ்டுடியோவின் நிலைமை என்னவாகும் என்று அவர்களுக்கு தெரியாதா?
அதனால், ஸ்டுடியோவில் இருந்த அனைத்து தொழிலாளர்களும் ஒரு மீட்டிங் போட்டனர். இதில் டெக்னீஷியன்களும் அடக்கம்.
— தொடரும்.
ரா. வேங்கடசாமி