PUBLISHED ON : அக் 17, 2010

எம்மாம் பெரிய முட்டைகோஸ்!
படத்தில் காணப்படும் முட்டைகோசைப் பார்த்தீர்களா? பிளாஸ்டிக்கில் செயற்கையாக தயாரிக்கப்பட்ட முட்டை கோஸ் என நினைக்க வேண்டாம். உண்மையில் வயலில் விளைந்த முட்டைகோஸ்தான் இது. லண்டன் அருகே சோமர்செட் என்ற ஊரில் வசிக்கும் ஜிம்மி கில் என்பவர் தான் இந்த முட்டைகோசை உருவாக்கியுள்ளார். மெக்கானிக்கான இவர், பொழுதுபோக்கிற்காக தன் பண்ணையில் விவசாயம் செய்து வருகிறார். பெரிய, பெரிய சைஸ் காய்கறிகளை உருவாக்குவதுதான் இவரது பொழுதுபோக்கு. மிகப்பெரிய வெங்காயம், கேரட், வெள்ளரிக்காய் போன்றவற்றை உருவாக்கி சாதனை படைத்த இவர், இப்போது மெகா சைஸ் முட்டைகோசை உருவாக்கியுள்ளார். இதன் அகலம் ஐந்து அடி; எடை 20 கிலோ. இவ்வளவு பெரிய முட்டைகோசை இவர் தன் மனைவி ஜாக்கியுடன் சேர்ந்து சமைத்தார். எல்லாவற்றையும் இவர்களே சாப்பிட முடியாது என்பதால், பக்கத்து வீட்டினருக்கும் அவற்றை கொடுத்தார். — ஜோல்னா பையன்.
துர்கா பூஜையும், பிறந்த வீடும்!
விஜயதசமி அன்று, திருமணமான பார்வதி, தன் புகுந்த வீடான கைலாயத்திலிருந்து, பிறந்த வீடான வங்காளத்திற்கு வருவதாக ஒரு ஐதீகம் கொல்கத்தாவில் உண்டு. எனவே, துர்கா பூஜை, வங்கப் பெண்களுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இப்பூஜையை ஒட்டி பெண்கள் தங்கள் தாய் வீடு செல்கின்றனர். புகுந்த வீட்டிலிருந்து பிறந்த வீடு வரும் மகளை தாய், தந்தையர் வரவேற்றுக் குங்குமம், வளையல், புடவை, இனிப்புகள் கொடுத்து மகிழ்கின்றனர். ***
மொபைல் பேசினால் அதிகம் பேசுவது யார் ?
இல்லத்தரசிகளும், குழந்தைகளும் அதிக நேரம் மொபைல் போனில் பேசுவதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.பிரபல ஆய்வு நிறுவனமான, 'ஜுக்ட் கன்சல்டன்ட்' என்ற நிறுவனம் மூலம், பான்- இந்தியா என்ற அமைப்பு, மொபைல் போன்களை அதிகமாக பயன்படுத்துவது யார் என்பது தொடர்பான ஆய்வை சமீபத்தில் நடத்தியது. இதில், சில ஆச்சரியமான தகவல்கள் தெரிய வந்துள்ளன. கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றுவோர், சொந்தமாக தொழில் செய்வோரை விட, இல்லத்தரசிகள் அதிக நேரம் மொபைல் போனில் பேசுகின்றனர். நகரங்களில் வசிக்கும் குழந்தைகள், மிக அதிகமான நேரம் மொபைல் போனில் பேசுகின்றனர். குறிப்பாக, 12 வயது வரை உள்ள குழந்தைகள் மொபைல் போன் பயன்படுத்துவது அதிகமாக உள்ளது. மொபைல் போன் இணைப்புகளில் பெரும்பாலானவை, 'ப்ரீபெய்டு' இணைப்புகளாகவே உள்ளன. வெறும் மூன்று சதவீதம் பேர் மட்டுமே, 'போஸ்ட்பெய்டு' இணைப்பு பெற்றவர்களாக உள்ளனர் எனவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. — ஜோல்னா பையன்.
கார் மாடலில் ஓட்டல் அறை!
சிலருக்கு காரில் நீண்ட தூரம் பயணம் செய்து கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆசை உண்டு. அப்படிப்பட்டவர்களுக்கு இரவில் தங்கும் போது கூட காரிலேயே இருக்கும் உணர்வு இருக்க வேண்டும் என்பதற்காக, புதுமையான ஓட்டல் ஒன்று கட்டப்பட்டுள்ளது. ஜெர்மன் நாட்டில் கார் விற்பனைக்கு புகழ் பெற்ற நகரம் ஸ்டட்கார்ட் மிலன்வர்க். இந்த நகரில், 'வி8' என்ற இந்த ஓட்டல் கட்டப்பட்டுள்ளது.ஓட்டலின் லாபியிலேயே அழ கான கார், பைக்குகள் நிறுத்தப் பட்டுள்ளன. ஓட்டலில் உள்ள ஒவ்வொரு அறையும், ஒவ்வொரு வித கார் மாடலில் தயாரிக்கப் பட்டுள்ளது. மோரிஸ் மைனர் முதல், பென்ஸ் கார்கள் போல் ஓட்டலில் படுக்கைகள் உள்ளன. 'இந்த ஓட்டலுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை, இந்த அறைகளை விரும்புகின்றனர். யார், யாருக்கு எந்த வகை கார் பிடிக்குமோ, அதற்கு ஏற்றார் போல் ரூம்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன!' என்கிறார் இந்த ஓட்டல் உரிமையாளர். — ஜோல்னா பையன்
உலக மகா குள்ளனும், குண்டனும் சந்திப்பு!
உலக மகா குள்ளர் என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற வாய்ப்பு கிடைத்துள்ள கஜேந்திர தாபா மகர் என்பவரது உயரம் வெறும் 22 அங்குலம் தான். சமீபத்தில், லண்டன் நகரில் நடந்த நம்பினால் நம்புங்கள் என்ற சாதனை நிகழ்ச்சி ஒன்றில் கஜேந்திர தாபா பங்கேற்றார். அதே விழாவில், உலக மெகா பாடி பில்டர் டினி ஐயன் என்பவரும் கலந்து கொண்டார். கஜேந் திராவை டினி ஐயன் தூக்கி போஸ் கொடுத்த காட்சிதான் இது.கின்னஸ் புத்தகத் தில் இப்போது இடம் பெற்றுள்ள உலகமகா குள்ளன் கொலம்பியா நாட்டைச் சேர்ந்தவர். அவர் பெயர் எட்வர்ட் நினோ. 24 வயதான அவர் உயரம் வெறும் 27அங்குலம். அந்த சாதனையை 18 வயதான கஜேந்திரா முறியடித்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுவாரா என்பது விரைவில் தெரிந்து விடும்.
— ஜோல்னா பையன்.
1500 கோடி ரூபாய்க்கு அடுக்குமாடி குடியிருப்பு!
உலகிலேயே மிக அதிக விலைக்கு ஒரு அடுக்குமாடி குடியிருப்பு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது நம் நாட்டில் அல்ல.மொனாக்கோ நாட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு தான் அது. அதன் விலை, 1500 கோடி ரூபாய். உயரமான கட்டடத்தில் மொட்டை மாடி பகுதியுடன் கூடிய இரண்டு மாடிகளைக் கொண்ட இந்த குடியிருப்பில் பெரிய நூலகமும் உள்ளது. வரவேற்பு அறையில் 15 அடி உயரம் வரை வளர்ந்த மரம் ஒன்றும் உள்ளது. 97 ஆண்டு லீசுக்கு இந்த வீட்டை அரபு நாட்டைச் சேர்ந்த ஷேக் ஒருவர் வாங்கியுள்ளார். இந்த வீட்டில் எல்லாமே எலக்ட்ரானிக் மயம் தான். பாதுகாப்பு கேமராக்கள், சினிமா பார்க்க அகன்ற திரை, வீடியோ கேம்ஸ், ஜக்குசி, ஸ்பா என, எல்லா வசதிகளும் உள்ளன. இந்த வீட்டை யார் வாங்கியுள்ளார் என்ற விபரத்தை வெளியிட அதன் விற்பனையாளர் மறுத்து விட்டார்.
— ஜோல்னா பையன்.
