PUBLISHED ON : நவ 21, 2010
மகாதீபம்!
திருவண்ணாமலை மீது ஏற்றப்படும் தீபம், 'மகாதீபம்!' சிவனுக்குரிய மகா தீப விழாவை, உமாதேவியே தொடங்கி வைத்ததாக புராணங்கள் கூறுகின்றன. மகாதீபம், மூவாயிரம் கிலோ பசு நெய், ஏழு அடி உயரம் கொண்ட செப்புக் கொப்பரை, திரியாக பயன்படுத்த சுமார் 1000 மீட்டர் காடா துணி மற்றும் இரண்டு கிலோ கற்பூரம் பயன்படுத்துகின்றனர். தொடர்ந்து 11 நாட்கள் இந்த மகாதீபம் மலை மீது ஒளி வழங்கும். திருவண்ணாமலை மட்டுமல்ல, மலை மீது கோவில் கொண்டுள்ள அனைத்து முருகன் ஆலயங்களிலும் கூட மகாதீப விழா நடைபெறும். இந்த மகா தீப ஒளிக் காட்சியை காணும் மக்கள் வாழ்வில், வளமும், நலமும் தழைப்பது உறுதி. திருவண்ணாமலை கார்த்திகை தீப நாள் அன்று அதிகாலை 4 மணி அளவில் மலை அடிவாரத்தில், 'பரணிதீபம்' ஏற்றப்படும். மாலை 6 மணிக்கு மலை மீது, 'மகாதீபம்' ஏற்றும் விழா நடைபெறும். ***
மகர விளக்கு - மகர ஜோதி!
'மகர விளக்கு' என்பது, ஐயப்பன் பந்தள மன்னனிடம் வளர்ந்த காலத்தில் அணிந்த அணிகலன்களை, மகர சங்கராந்தி தினத்தன்று, சபரிமலைக்குக் கொண்டு வந்து, ஸ்ரீஐயப்பனுக்கு அணிவித்து, பூஜை செய்கின்றனர். இதைத்தான் மகர விளக்கு என்று சொல்கின்றனர். அதே சமயம், அந்த ஆலயத்தின் எதிர் திசையில் உள்ள பொன்னம்பல மேடு என்ற மலையில் ஜோதி தெரிகிறது. இதுவே, மகரஜோதி. அங்கு, தேவர்களும் ஐயப்பனை பூஜை செய்வதாக ஐதீகம். ***
இறைவனும் - அம்பாளும் கிரிவலம் வரும் நாள்!
திருவண்ணாமலையில், ஆண்டிற்கு இருமுறை, அண்ணாமலையாரும் - அம்பாளும் கிரிவலம் வருவர். தீபத் திருநாள் 13 நாள் விழாவில், 12வது நாள், அதாவது, கார்த்திகை தீபத்தின் மூன்றாவது நாளும், அடுத்து தை மாதம் மாட்டுப் பொங்கல் அன்று நடைபெறும் திருவூடல் உற்சவத்தின் போதும் இறைவனும், அம்பாளும் கிரிவலம் வருவர். ***
நேர் அண்ணாமலையார்!
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில், நேர் அண்ணாமலையார் கோவில் இருக்கிறது. மலையில் மகாதீபம் ஏற்றும் வேளையில், இங்குள்ள சிவன் சன்னிதியிலும் ஒரு தீபம் ஏற்றுவர். அந்த தீபத்தை சிவனுக்கும், மலையிலுள்ள ஜோதிக்கும் காட்டி, ஆராதனை செய்வர். ***
