PUBLISHED ON : டிச 26, 2010

பிரான்ஸ் புத்தாண்டு!
ஜனவரி 1ம் தேதி புத்தாண்டை கோலாகலமாக வரவேற்கும் பிரான்ஸ் மக்களுக்கு, ஆறு நாள் விடுமுறை அளிக்கப்படுகிறது. ஆறாவது நாளில், ஸ்பெஷல் புத்தாண்டு கேக் வெட்டும் நிகழ்ச்சியோடு, புத்தாண்டு நிகழ்ச்சி முடியும். பிரான்ஸ் புத்தாண்டு கொண்டாட்டத்தில் முக்கிய இடம்பிடிப்பது ஊர்வலம்தான். ஆயிரக்கணக்கான பாடகர்களும், நடனக் கலைஞர்களும் அந்த ஊர்வலத்தில் உற்சாகமாக பங்கெடுப்பர். இந்த ஊர்வலம், 31ம் தேதி துவங்கி, ஜனவரி 1ம் தேதி ஈபிள் டவர் பகுதியில் நிறைவடையும். ***
சுவிட்சர்லாந்து புத்தாண்டு!
சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமியான சுவிட்சர்லாந்தில் கொண்டாடப்படும் ஆங்கிலப் புத்தாண்டு மிகப் பிரபலமானது. ஆங்கிலப் புத்தாண்டு தினத்தை ஒட்டி பல நாடுகளில் இருந்தும் பயணிகள் சுவிஸ் நாட்டுக்கு வந்து குவிந்து விடுவர். ஜூலியன் காலண்டர்படி சுவிசின் புத்தாண்டு ஜனவரி 13ம் தேதி கொண்டாடப்படுகிறது. தங்கள் புத்தாண்டை ஓல்ட் சில்வஸ்டர்ஸ் டே என்றும் அழைக்கின்றனர். புத்தாண்டு பிறப்பின் போது, சுவிஸ் மக்கள் வித்தியாசமாக, சிறிதளவு பாலேடை தரையில் கொட்டுகின்றனர். இதன் மூலம் அமைதியான, வளமான எதிர்காலத்தில் காலெடுத்து வைக்க முடியும் என்றும் கருதுகின்றனர். ***
