தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நாடு சுற்றலாம் வாங்க! (1)

நாடு சுற்றலாம் வாங்க! (1)

நாடு சுற்றலாம் வாங்க! (1)


PUBLISHED ON : ஏப் 05, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 05, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'குண்டு சட்டிக்குள்ளயே குதிரை ஓட்டிகிட்டிருக்காதே... வெளி உலகத்துல என்ன நடக்குதுங்கறதையும் தெரிஞ்சுக்க...' என்பார், என் ஆசான், அந்துமணி.

இப்படி சொல்லித்தான் திருநெல்வேலியிலிருந்து, சென்னைக்கு அழைத்து வந்து, எனக்கு ஒரு வளர்ச்சிப் பாதையை காட்டினார்.

சென்னையிலேயே, எத்தனை காலம் தான் குதிரை ஓட்டுவது... ஏதாவது ஒரு வெளிநாட்டுக்கு, குடும்பத்துடன் சென்று வரலாம் என, சில ஆண்டுகளுக்கு பின் முடிவு செய்தபோது, என் மனைவி, 'கடல் தாண்டி வர மாட்டேன்...' என்று சொல்லி விட்டாள்; மகளுக்கும் விடுமுறை கிடைக்கவில்லை.

நண்பர்களிடம் விசாரித்தபோது, எல்லாருமே நழுவிக் கொண்டனர். தனியாகவே போக வேண்டிய சூழல். எனவே, வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லும், தனியார் சுற்றுலா நிறுவனங்கள் பற்றி விசாரிக்க ஆரம்பித்தேன்.

மதுரையில் உள்ள ஒரு, 'டிராவல் ஏஜன்சி' சிங்கப்பூர், மலேஷியா, துபாய் மற்றும் இலங்கை போன்ற நாடுகளுக்கு, சுற்றுலா ஏற்பாடு செய்வது தெரிய வந்தது. குழு, குடும்பம்

மற்றும் தனி நபர், கட்டணம் செலுத்தி கலந்து கொள்ளலாம்.

அறிமுகம் இல்லாத நபர்களுடன் வெளிநாட்டு சுற்றுலா செல்வது, புதிய அனுபவமாக இருக்கும் என்ற எண்ணத்தில், நான், துபாய் செல்ல முடிவு எடுத்தேன்.

'டிராவல் ஏஜன்சி' ஏற்பாடு செய்யும் சுற்றுலா எனில், எங்கே தங்கலாம், பார்க்கக் கூடிய இடங்கள், அதற்கான முன் அனுமதி, வாகன வசதி, எங்கு சாப்பிடலாம் என்பதை பற்றி, நாம் கவலைப்பட தேவையில்லை. எல்லாம் அவர்கள் பார்த்துக் கொள்வர்; விசா ஏற்பாடு செய்வது உட்பட.

நாம் பெட்டியை துாக்கி, கிளம்ப வேண்டியது தான். என்ன... நமக்கு முற்றிலும் அறிமுகம் இல்லாத ஒரு குழுவோடு பயணிக்க வேண்டும்.

கட்டணத்தை செலுத்தி, திட்டமிட்ட நாளில், ஒரு பெட்டியில் துணிமணிகள், பாஸ்போர்ட் எடுத்து புறப்பட்டேன். மேலும், சுற்றி பார்க்க வெளியில் செல்லும்போது மாற்று உடை, தண்ணீர் பாட்டில், சிறு கை துண்டு, பாஸ்போர்ட், விசா, சிறிது பணம் ஆகியவற்றை வைத்துக் கொள்வதற்காக, முதுகில் மாட்டிக்கொள்ளும் வகையிலான சிறு பை ஒன்றையும் வைத்துக் கொண்டால், 'ப்ரீ'யாக இருக்கும்.

விமான நிலையம் செல்லும் வரை, என்னோடு சுற்றுலா வருபவர்கள் யார் என்பது தெரியவில்லை. அதிகாலை, 3:40 மணிக்கு விமானம் என்பதால், 1:00 மணிக்கெல்லாம், விமான நிலையத்திற்கு சென்றேன். வெளிநாடு புறப்பாடு பகுதியின், இரண்டாவது, 'கேட்' அருகில் கும்பலாய் நின்றிருந்தவர்களை அடையாளம் கண்டு, அவர்களோடு சேர்ந்து கொண்டேன்.

என்னை போலவே, தனியாளாய் இருவர் வந்ததில், ஒரு சந்தோஷம். அந்த இருவருக்கும் கூட, அதே நிலை தான். எனவே, நாங்கள் மூவரும், ஒரு தனி குழுவாக இணைந்து கொண்டோம். அனைவருமே புதியவர்கள் என்பதால், மையமாக ஒரு சிரிப்பு சிரித்து, அறிமுகத்துடன் விமானத்திற்குள் நுழைந்தோம்.

விமானம் பறக்க ஆரம்பித்ததும், தள்ளுவண்டியில் உணவு பொருட்களை விற்பனைக்கு எடுத்து வந்தனர், விமான பணிப்பெண்கள்.

எல்லாமே விலை அதிகம் தான். இருப்பதிலேயே விலை குறைவான உணவு பொருள் எது என்று, விசாரித்தேன்.

எங்க தெரு அண்ணாச்சி கடையில், ஐந்து ரூபாய்க்கு விற்கிற குளுகோஸ் பிஸ்கட்டை காட்டி, 'இந்திய பணத்தில், 70 ரூபாய். இது தான் எங்களிடம் இருப்பதிலேயே விலை குறைவான பொருள். வாங்கிக் கொள்கிறீர்களா...' என்றார், விமான பணிப்பெண்.

'சும்மா தகவலுக்காக விசாரித்தேன்...' என்று சிரித்தேன்.

மொத்தம், 170 நிமிட பயணத்தில், ஷார்ஜா வந்தடைந்தோம். அப்போது, ஷார்ஜாவில், காலை, 6:30 மணி.

விமானத்திலிருந்து பார்த்தபோது, நீள நீளமாக, மஞ்சள் சர விளக்குகளை தரையில் போட்டு வைத்தது போல, ஷார்ஜாவில் சாலைகள் ஜொலித்தன. அந்த கண்கொள்ளா காட்சியை பார்த்து, ஆரம்பமே அமர்க்களமாக இருக்கிறதே என, மனம் குதுாகலித்தது.

ஷார்ஜாவில் இறங்கி, துபாய் சென்றதும், ஓட்டலில் குளித்து தயாராகலாம் என, எண்ணியிருந்தேன். ஆனால், எங்களை அழைத்து செல்ல வந்திருந்த சுற்றுலா நிறுவன ஊழியர், என் எண்ணத்தை தகர்த்தார்.

'துபாயில் தங்குவதற்காக, நட்சத்திர ஓட்டலில் அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மதியம், 2:00 மணியிலிருந்து, அடுத்த நாள் மதியம், 2:00 மணி வரை, ஒரு நாளாக கணக்கிடப்பட்டு, கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே, பகல், 2:00 மணி வரை, துபாயை சுற்றிப் பார்த்து, 2:00 மணிக்கு தான் அறைக்கு அழைத்துச் செல்வோம்...' என்று தெரிவித்தார்; வேறு வழியின்றி தலையசைத்தோம்.

ஷார்ஜா விமான நிலையத்திலிருந்து, துபாய் வரை, வாடகை காரில் பயணித்தோம். சாலையோரங்களில், பூக்களை கொட்டி வைத்தாற்போல பூச்செடிகளும், புல் தரைகளும் அமைக்கப்பட்டிருந்தன.

சாலையில், போக்குவரத்து நெரிசல் இருந்தது. ஆனாலும், சாலை விதிகளை கவனமுடன் கடைப்பிடித்தனர், வாகன ஓட்டுனர்கள். அதனால், அதிக அளவில் வாகனங்கள் இருந்தும், போக்குவரத்து தடை ஏதுமின்றி, நிற்காமல் நகர்ந்து கொண்டே இருந்தன. 'டொயோட்டா' கார்களே அதிக அளவில் காணப்பட்டன. பெரிய ரக கார்கள், குறிப்பாக, 'எஸ்யூவி' வகை வாகனங்கள் அங்கு அதிகம் காணப்பட்டது.

ஷார்ஜா விமான நிலையத்திலிருந்து, துபாய் சென்றடைய, ஒரு மணி நேரம் ஆனது.

ஓட்டல் ஆர்யாஸ், சரவண பவன், திண்டுக்கல் தலப்பாகட்டி, சங்கீதா ஓட்டல், நளாஸ் ஆப்பக்கடை போன்ற, நம் ஊர் உணவகங்கள் துபாயில் உள்ளன.

ஓட்டல் ஆர்யாசில், காலை உணவாக எங்களுக்கு, பொங்கல், இட்லி, தோசை, பில்டர் காபி என, நம் ஊர் சுவையிலேயே கிடைத்தது.

துபாயில், மால்கள் எனப்படும் மிகப்பெரிய வணிக வளாகங்கள் அதிகம் உள்ளன. சர்வதேச வர்த்தக நிறுவனங்கள், அங்கே தங்கள் கடைகளை அமைத்துள்ளன. எந்த பொருளையும் வாங்காமல், ஒரு வணிக வளாகத்தை சுற்றிப் பார்க்கவே, குறைந்தது, இரண்டு மணி நேரமாகிறது.

'ஷாப்பிங்' வளாகத்தை சுற்றிப் பார்த்து, பின், துபாயில் உள்ள, 'சிட்டி அவென்யூ' ஓட்டலுக்கு வந்தோம்.

அங்கு...

ஐக்கிய அரபின் ஏழு அமீரகங்களில், துபாயும் ஒன்று. அபுதாபி, அஜ்மான், புஜைரா, ரஸ் அல் கைமா, ஷார்ஜா, உம் அல் குவைன் ஆகியவை, பிற ஆறு அமீரகங்கள். இந்த ஏழு அமீரகங்களும் ஒரு கூட்டமைப்பாக செயல்படுகின்றன. இதன் தலைநகர், அபுதாபி.



— தொடரும்.

ஜே.டி.ஆர்.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us